திங்கள், 4 மே, 2020

கவிஞராய் வாழ்வதன் துயரம் – மனுஷி


கவிஞராய் வாழ்வதன் துயரம் மனுஷி

இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார்.
பொதுவாக ட்விட்டரில் யாரேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. காரணம், ட்விட்டரில் 90% ஐடிக்கள் சொந்தப் புகைப்படம் வைப்பதில்லை. சொந்தப் பெயரில் இருப்பதில்லை. முகத்தையும் பெயரையும் மறைத்துக் கொண்டு மாயாவி மனிதர்களைப்போல உலாவரும் மர்மம் எனக்கு விளங்கவில்லை. விளங்கிக் கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.
சொந்தப் பெயரில் இருப்பதில்லை என்பது ஒருபுறம் என்றால் வைத்துக்கொள்கின்ற பெயர்கள் கூட வித்தியாசமாக இருக்கும். அதில் சமீபத்தில் எனக்கு ஒரு ஐடியில் இருந்து ஒருவர் பின்தொடர்ந்தார். அந்த ஐடியின் பெயர்கொரானா அத்தைமகன்’. பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?
மேலும், முகநூல் பதிவர்கள் போல அல்ல ட்விட்டர் பதிவர்கள். முகநூல் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது ட்விட்டரில் இருப்பவர்களின் செயல்பாடுகள். சகட்டுமேனிக்குக் கெட்டவார்த்தைகள் புழங்குகின்ற இடமாக ட்விட்டர் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.கருத்து சொல்வார்கள். தத்துவங்களை அள்ளி வழங்குவார்கள். ஆனால் ஆரோக்கியமான வாதங்களுக்கு அங்கே இடமில்லை. பெண்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் அடங்கிய ஐடிக்கள் இருப்பதிலேயே பெரும் அசூயை.
ட்விட்டர் மீதான ஒவ்வாமை ஒருபுறம் என்றாலும், இந்தப் புத்தகக் கண்காட்சியில் என்னை வந்து சந்தித்த பெரும்பாலா இளைஞர்கள், பெண்கள் ட்விட்டரில் என் கவிதைகளைப் பின் தொடர்வதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார்கள். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். என்ன புத்தமெல்லாம் வாங்கி வாசிக்கலாம் என ஆலோசனைகளும் கேட்டுக்கொண்டார்கள். அந்தக் கணம் சிறு நம்பிக்கை துளிர்த்த்து. என் தலைமுறை அவ்வளவு ஒன்றும் பாதாளத்திற்குள் விழுந்துவிடவில்லை. புத்தகங்களைத் தேடி வாசிக்கின்ற, கவிதைகளை நேசிக்கின்ற பண்பை அவர்கள் கைவிட்டுவிடவில்லை என்பது பெரும் ஆறுதல்.
இருக்கட்டும்.
இங்கே பேச வந்தது வேறொரு விஷயத்தைப் பற்றி.
கொரானா எனும் நோய் மனித சமூகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான காலத்தில் முகநூல், ட்விட்டர் மாதிரியான சமூக வலைதளங்கள் பெரிய வடிகால்களாக  இருக்கின்றன. கட்டாயத் தனிமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நமது எல்லோருடைய மனநிலையும், வாழ்க்கைப்பாடுகளும் என்ன என்பதை அவர்கள் பதிவிடும் பதிவுகள் வெளிப்படுத்திவிடுகின்றன.
இந்தச் சமயத்தில் யாரேனும் நலம் விசாரித்துக் குறுஞ்செய்தி அனுப்பினால் பதில் சொல்கிறேன். பார்த்தப் படங்கள் குறித்து, வாசித்த நூல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தால் அவர்களோடு பேசுகிறேன். புத்தகங்கள் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்பவர்களுக்குச் சமீபத்தில் வாசித்த புத்தகங்கள் குறித்தும், என் வாசிப்பு அனுபவத்திலிருந்து வாசிக்க வேண்டிய நூல்களையும் அவர்களுக்குச் சொல்கிறேன்.
ஒருமுறை கணேஷ் பாலா வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், அவருடைய கணிணியில் இருந்து மொபைலுக்கு அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகத்தின் பிடிஎஃப் காப்பியை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அதில் சில ஏற்கனவே வாசித்தவை என்றாலும் அடிக்கடி வாசிக்கத் தூண்டுபவை. எனது பயணங்களின் போது வாசிக்க ஏதுவாக இந்த பிடிஎஃப் புத்தகங்கள் எனக்குத் துணையாக இருக்கின்றன.
இந்தக் கொரானா காலத்தில் புத்தகம் வாசிக்க விருப்பமுள்ள நபர்களுக்கு பிடிஎஃப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன்.
தொடக்கத்தில் நான் சொன்ன ட்விட்டர் ஐடியின் மெசேஜை முதலில் அப்படித்தான் பார்த்தேன்.
அக்கா, எனக்கொரு உதவி. செய்ய முடியுமா?
இதுதான் அந்த மெசேஜ்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றால் நிச்சயமாக இந்த மெசேஜை அப்படியே கடந்து போயிருப்பேன். உதவி எனக் கேட்கும் காலகட்டம் அப்படிக் கடந்துபோக முடியவில்லை.
என்ன, சொல்லுங்க என்று பதில் அளித்தேன்.
அரை மணி நேரத்திற்குப்பிறகு, நான் என் லவ்வரை ரொம்ப மிஸ் பண்றேன். அவளுக்கு அனுப்ப ஒரு கவிதை வேண்டும். எனக்கு எழுதித்தர முடியுமா என்று மெசேஜ் வந்தது.
நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது எனும் 23ம் புலிகேசியின் துயரம் தோய்ந்த குரல் எனக்குள் கேட்டது.
முதல் வேலையாக அந்த உதவி கேட்டத் தம்பியின் ஐடியை ப்ளாக் செய்தேன்.
கவிஞர் என்றால் இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் கேள்விக்குள் உடனே செல்லவில்லை.
ஒரேயொரு கேள்வி தான். காதலிக்கத் தெரிகிறவர்களுக்குத் தன் நேசத்திற்குரியவர்களுக்கு மனசுக்குள்ளிருந்து நான்கு வரி எழுதத் தெரியாதா? தெரியவில்லை என்றால் அப்புறம் என்னத்துக்கு கவிதை கேட்கிறது?
எங்க ஏரியாவில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், தேர்வுகளுக்காகவோ, போட்டிகளுக்காகவோ கவிதை எழுதிக் கொடுங்க அக்கா என்று சில தலைப்புகளோடு வருவார்கள். எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதில் சிலர் பரிசும் வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் காதலியின் பிறந்தநாள் வருகிறது, அவளுக்குச் சொல்ல ஒரு கவிதை வேண்டும், காதலியைப் பிரிந்திருக்கிறேன் அவளைச் சமாதானம் செய்வது போல ஒரு எழுதிக் கொடுங்க, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் அவளை ப்ரோபொஸ் பண்ண ஒரு கவிதை கொடுங்க, தங்கச்சிக்குப் பிறந்தநாள் வருது ஒரு கவிதை கொடுங்க, அண்ணனுடைய பிறந்தநாளுக்குக் கவிதை வேண்டும், காலேஜ் ஃபேர்வெல் டே வருது அதுல ஃப்ரண்ட்ஸ்க்குச் சொல்றபோல கவிதை வேண்டும்…. இப்படி கவிதை வேண்டும்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
காதலிப்பவர்கள், காதலின் உன்மத்தத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னாலும் அது கவிதையாகத்தானே இருக்கும். பிரிவின் துயரத்தில் இருப்பவர்களுக்கு மனதின் கண்ணீரிலிருந்து சொல்லும் எந்த ஒரு சொல்லும் காதலை வலுப்படுத்தும் தானே. இருந்தும் இவர்களது உணர்வுகளுக்கு இன்னொருவரைச் சிந்திக்கச் சொல்லிக் கேட்கும் அபத்தம் ஏன் இங்கே நிகழ்கிறது? நமக்கு என்ன வருமோ அதைச் செய்யலாமே. கவிதையில் சொன்னால் தான் சொன்னதாகுமா?  
இது போதாதென்று என் பள்ளிக்கல்லூரித் தோழிகள் ஏய் நீ கவிஞர்னு சொல்ற என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்லு என்பார்கள். 96 படத்தில் ராமிடம் ஜானு கேட்பது போல செல்லச் சிணுங்களோடு இல்லாமல், நீ என்னைப் பற்றிக் கவிதை சொன்னால் தான் நீ கவிஞர் என நாங்க நம்புவோம் என்பதாகத்தான் இருக்கும்.
எனக்கு அப்படியெல்லாம் கவிதை எழுத வராதும்மா என்று சொன்னால், அப்போ நீயெல்லாம் என்ன கவிஞர் என்று நக்கலடிப்பார்கள். கவிதை என்பது உணர்வும் அனுபவமும் சார்ந்தது, தனிப்பட்ட நபரைப் புகழ்ந்து போற்றித் துதிபாடும் கவிதைகளை நான் எழுதுவதில்லை என்று சொன்னால் அவர்களுக்குப் புரியவில்லை. கவிஞர் என்றால் சொன்னால் எழுதனும் என்ற அந்தக் கோட்டிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.
இவர்கள் மத்தியில் தான் கவிதைக்கென வாழ்க்கையை ஒப்புக் கொடுத்துவிட்டு வாழவேண்டியும் இருக்கிறது.
நா. முத்துக்குமாரின் கவிதை ஒன்று உண்டு.
காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்.
-       நா. முத்துக்குமார்
இந்த வரிகளை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

என் ஆகச் சிறந்த துயரம், கவிதை.
பெரும் சாபம் கவிஞராய் வாழ்தல்.

ஞாயிறு, 3 மே, 2020

போதும் லாக் டவுன் நாட்கள் - மனுஷி

மொபைல் சார்ஜர் மற்றும் பென் ட்ரைவ் வாங்குவதற்காக ராஜா தியேட்டர் சிக்னல் வரை சென்றேன். தெரிந்த மொபைல் கடை என்பதால் நேற்றே கடை திறப்பார்களா எனக் கேட்டுக் கொண்டேன். சில நாட்களாக காலை 10 மணி முதல் 1 மணி வரை கடை திறந்திருக்கும் என்றதால் சென்றேன். 
கிளம்புவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை போனில் அழைத்து கடை திறந்திருக்கிறதா என உறுதிப் படுத்திக் கொண்டேன். 
பதினோரு மணிக்கே வெயில் பல்லை இளித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது. 
இன்றைக்கு வெளியில் செல்ல ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு கிளம்பினேன். 
ஆரோவில் பஸ் ஸ்டாப் அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்த காவல்துறை நண்பர்கள் என் வண்டியைப் பார்த்ததும் புன்னகையோடு கையசைத்தார்கள். நானும் வணக்கம் சொன்னேன். 
வழக்கத்திற்கு மாறாக சாலையில் பைக்குள் அதிகமாகவே போவதும் வருவதுமாக இருந்தன. 
பேருந்துகள், லாரிகள், கார்கள் செல்லாத ஈசிஆர் சாலையை ரசித்தபடியே போய்க் கொண்டிருந்தேன். 
சிவாஜி சிலை சிக்னல் அருகில் இருந்த காவல் நண்பர்களும் பெரிதாக வண்டிகளை நிறுத்தவில்லை. உட்கார்ந்தபடியே எங்கே என்றார்கள். வண்டியின் வேகத்தைக் குறைத்து மொபைல் ஷாப் என்றேன். சரி சரி என்றபடி அனுப்பி வைத்தார்கள். 
ஒன்றரை மாதத்திற்குப் பிறகு சிவாஜி சிலை தாண்டி முத்தியால்பேட்டை வழியாகச் சென்றேன். 
அங்கிருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரையிலும் ஏராளமான பைக்குகள். ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியிருக்கும் பாண்டிச்சேரியின் சாலைகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதா பதற்றம் கொள்வதா எனத் தெரியவில்லை. அஜந்தா சிக்னலில் காத்திருந்து சிக்னலைக் கடக்கும் அளவுக்கு பைக்குகள். 
எப்பொழுதும் பளபளப்பான உடைகள் தொங்கிக் கொண்டிருக்கும் மேக்ஸ் ஷோரூம் பூட்டியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காந்தி வீதியின் சில கடைகள் திறந்திருந்தன. முக்கியமாக, பெட்டிக்கடைகள். 
கந்தன் காப்ளக்ஸ் சிக்னல் அருகில் தடுப்பு போடப்பட்டதால் பைக்குகள் பாரதி வீதி வழியாகச் செல்ல திருப்பி விடப்பட்டன. 
பாரதி வீதியில் இருக்கும் பழக்கடைகள், மளிகைக் கடைகள், சாலையோரத்தில் கீரை, முருங்கைக்காய் முதலிய பொருட்கள் விற்கும் கடைகள் பரப்பான விற்பனையில் இருந்தன. கடைகளில் நின்று பொருட்கள் வாங்கப்படுவதால் வாகன நெரிசலில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று மொபைல் ஷாப்பை அடைய மணி பன்னிரண்டைத் தொட்டிருந்தது. 
கடையைப் பாதியாக இழுத்து மூடியிருந்தார்கள். கடையின் வெளியில் நின்றிருந்த ஒருவர் என்ன வேண்டும் எனக் கேட்டு கடையிலிருந்து ஒருவர் வெளியேறிய பின் மற்றொருவரை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். 
கடையில் வாங்க வேண்டிய பொருட்களுக்குப் பில் போடும்போதுதான் கவனித்தேன். 
கடையில் மொபைல் ரிப்பேர் செய்யும் மணி அண்ணா மும்முரமாக ஒரு மொபைலைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். இந்த லாக்டவுன் நாட்களில் கூட இவ்வளவு மொபைல்கள் பழுது பார்க்கவென கொண்டு வருகிறார்களா என ஆச்சரியமாக இருந்தது. 
கடையிலிருந்து வெளியே வரும்போது சின்னதாக ஒரு பேராசை. ஏதாவது ஒரு டீ கடை திறந்திருக்கிறதா எனத். தேடினேன். ஒன்று கூட இல்லை. ஜூஸ் கடையும் இல்லை. 
இவ்வளவு தூரம் வந்தபிறகு ஒரு சுற்று சுற்றி விடலாம் என நேரு வீதி வழியாக மிஸ்ஸன் வீதி வரை போய் செஞ்சி சாலையில் இணைந்து அஜந்தா சிக்னலைப் பிடித்து, வீடு வந்து சேர்ந்தேன். 
இனியும், கையைக் கழுவு, வீட்டுக்குள் இரு என்று சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. வயிற்றுப் பாட்டுக்கு வெளியில் வந்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இன்று உணர்ந்தேன். 
சமூக இடைவெளியைப் பின்பற்றி அவரவர் வேலையைச் செய்தாக வேண்டும் வழக்கம் போல. சுத்தமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேசமயம், 
வயிறு என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது.

புதன், 25 மார்ச், 2020

தனித்திருத்தலின் காலம் - மனுஷி

#தனித்திருத்தலின்_காலம் 
நாம் தனித்திருக்க வேண்டிய காலத்தில், தனியாக வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு இது புதியதாகத் தெரியவில்லை. 
ஆனால் வெளியில் செல்ல முடியாது என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் கடினமான விடயம் தான். சூழலைப் புரிந்து கொண்டு வெளியில் செல்வதைத் தவிர்த்து விட்டேன்.

வெளியூர்களுக்குச் செல்ல முடியாத நாட்களில் கூட குறைந்த பட்சம் பாண்டிச்சேரி கடற்கரை, ஆரோவில் காடு, ஈசிஆர் சாலை எனச் சுற்றியலைந்த கால்கள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது புதிதாக இருக்கிறது. 

இந்த நாட்களில் என் பூனைக்குட்டிகளோடு நிறைய நேரம் செலவிட முடிகிறது. அவர்கள் நிச்சயம் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் இருப்பார்கள். இருக்கிறார்கள்.

என்னோடு உரையாடிக் கொள்ள முயற்சிக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பிரியத்தை முழுதாக உணர்கிறேன். 

வழக்கமாக மதிய நேரங்களில் மீன் குழம்பு மீன் வருவலுடன் சாப்பாடு கடை நடத்தி வரும் அம்மா, நேற்று கடையில் காய்கறி வாங்கும்போது, "பாப்பா வெளியில வரக் கூடாதாம் ஏதோ ஒரு காய்ச்ச நோய் வருதாம்.. எதுக்கும் வெளிய வராத. பசிச்சா யாருக்கும் தெரியாமல் இங்க வந்து சாப்ட்டு போய்டு பட்டினி கிடக்காத என்றார். 

மீனம்மா, அம்மா பாரதி மீன் கிடைக்கல இன்னும் உன் பூனைகளுக்கும் உனக்கும் சாப்பாடு பண்ணி கொண்டு வரட்டா என்று போன் பண்ணி அக்கறையாகக் கேட்கிறார். 

காலையில் நண்பர் செல்போனில் அழைத்து, நான் சிலிண்டர் எடுக்கப் பாண்டிக்குப் போறேன் வீட்டுல சமைக்க என்னலாம் இல்லனு சொல்லு வாங்கிட்டு வந்து தருகிறேன் என்றார். வேண்டாம் என்று தவிர்த்த போதும், நீ அப்படித்தான் சொல்வ இருப்பதை வாங்கி வருகிறேன் என்று சொல்லி, அரிசி காய்கறிகள் வாங்கி வந்து வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். 

நெருங்கிய நண்பர்களும் தோழிகளும், கவிதை மூலமாக மட்டுமே என்னை அறிந்த நண்பர்களும் முகநூலில், வாட்சப்பில் தொடர்பு கொண்டு  எங்கயும் சுத்த வேண்டாம். கொஞ்ச வீட்ல பத்திரமா இருங்க என்று அன்பாகக் கடிந்து கொள்கிறார்கள். 

எப்படி உன்னால தனியா இருக்க முடியுது என ஆச்சரியத்தோடு பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பழகிவிட்டது என்று சொல்லி மழுப்பி இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் பெரிய காரணங்கள் இருந்ததில்லை.
 
எனக்காக நான் மட்டுமே இருக்கிறேன், என்னை நான் எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால் தனியாக உணர்ந்ததில்லை. 

ஆனால் நேற்றும் இன்றும் வேறொரு விடை கிடைத்திருக்கிறது. என்னை நேசிக்கும் இத்தனை பிரியமானவர்களின் அன்பு தான் நான் தனித்து இல்லை எனும் நம்பிக்கையை என்னுள் விதைத்துக் கொண்டே இருக்கிறது. 

குடும்பத்தோடு வாழ்வதைப் போலத்தான் மனிதர்களோடு வாழ்வதும். 

சின்னஞ்சிறு வாழ்க்கையில் எளிய மனிதர்களின் அன்பு யாரையும் தனித்திருக்க விடுவதில்லை.

ஞாயிறு, 15 மார்ச், 2020

அரண்மனை_நகரத்தில்_ஒரு_காஃபி - மனுஷி


#கானாடுகாத்தான்_அரண்மனை

புதுக்கோட்டை பக்கத்தில் கானாடுகாத்தான் எனும் ஊர் இருக்கு. அங்கே ஒரு அரண்மனை இருக்கு. அவசியம் போய் பாரு என்று நண்பர் சொல்லி இருந்தார். 

ஊருக்குக் கிளம்பும் முன் அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினேன். உடன் முகநூல் தோழி அபியும் இணைந்து கொண்டார். இருவருமாகக் காரில் கிளம்பினோம். 
பாதி தூரம் சென்றபிறகு தான் தெரிந்தது அரண்மனை பார்வையிட முன் அனுமதி வாங்க வேண்டுமென. 

அரண்மனை இருக்கு போய் பாரு என ஆர்வத்தைத் தூண்டிவிட்ட நண்பர், அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பதைச் சொல்லவே இல்லை. உள்ளே செல்ல எப்படியும் முயற்சிக்கலாம் வழி கிட்டும் எனப் பயணத்தைத் தொடர்ந்தோம். 

கோல்சப் விளம்பரத்திற்குப் புன்னகைப்பதைப் போல வெண்ணிற மாளிகை பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து கம்பீரமாய் காட்சியளித்தது. 
ஏற்கனவே அங்கே சிலர், உள்ளே செல்ல விரும்பி, அரண்மனை உள்ளே இருந்த சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். 

உள்ளிருந்த இருவரும், செக்யூரிட்டியும் நாம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தார்கள். 
அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் வெளிப்புறத்தில் இருந்தபடியே அரண்மனையைச் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அப்படியே அரண்மனையை வெளிப்புறமாகச் சுற்றி வந்தோம். 

சுற்றிப் பார்ப்பது என முடிவு செய்து விட்டபின் உள்ளே என்ன வெளியே என்ன? 

அரண்மனையைச் சுற்றி வரும்போது தான் கவனித்தேன். அந்த அரண்மனை மட்டுமல்ல. அந்த ஊரே அரண்மனை போன்ற வீடுகளால் ஆனது என. வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனாலும் நான் ஆவலோடு காண வந்த அரண்மனையின் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை எனும் ஏமாற்றத்தை ஒரு காஃபி குடித்து ஆற்றிக் கொள்ளலாம் அங்கே கடைகள் ஏதேனும் இருக்கிறதா என விசாரித்தோம். 

பக்கத்தில் ஓர் அரண்மனையை ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். 
#செட்டிநாடு_நாரயணா_விலாஸ் ஹோட்டல்.  உணவகம் மற்றும் தங்குவதற்கான ஹோட்டலும் கூட. பாரம்பரியக் கட்டிடத்திற்குள் பழமையின் சுவடுகள் புதுப் பொலிவு பெற்று வசீகரித்தது

வழக்கமாக ஹோட்டல்களில் இருக்கும் டேபிள் சேர்கள் தவிரவும் ஷோஃபாக்கள், சாய்வு நாற்காலி வசதியுடன் இருந்தன. அபிக்கும் எனக்குமாக காஃபி ஆர்டர் சொல்லிவிட்டுச் சாய்ந்து படுத்துவிட்டேன். 
சற்றே ஆசுவாசமாக இருந்தது.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

நேத்ரா எனும் குட்டி இளவரசி - மனுஷி


ஆரோவில்லில் மாரத்தானில் கலந்து கொள்வதற்காகச சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சாரதாம்மா வந்திருந்தார். அவரோடு இன்னும் இரண்டு சினேகிதிகளும். அவர்களைச் சந்தித்து ஹாய் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். 

க்ரீன் ஹவுஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரோடு வந்திருந்த நேத்ரா குட்டிப் பாப்பாவைச் சந்தித்தேன். எனது அந்த இரவைக் கூடுதல் அழகாக்கிடும் குட்டி தேவதை அவள் என்பதை அவளது முதல் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன். 

சாரதா அந்தக் குட்டிப் பாப்பாவிடம் என்னை அறிமுகம் செய்யும்போது, இவங்க பேரு மனுஷி... இவங்க கதைலாம் சொல்வாங்க. நாய்க்குட்டி கூட, பூனைக்குட்டி கூடலாம் பேசுவாங்க என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். இதுவரை இப்படி க்யூட்டாக யாரும் என்னை அறிமுகம் செய்ததில்லை. 

அக்கா, நிஜமாவே நீங்க நாய்க்குட்டி கூட பேசுவிங்களா... ஆச்சரியம் அவள் கண்களில் தெரிந்தது. பேசுவேனே என்றேன். அப்படினா இந்த நாய் கிட்ட பேசுங்க பார்ப்போம் என்றாள் அங்கே உணவகத்தில் இருந்த ஒரு வெள்ளை நாயைக் காட்டி. 

இது எனக்கு வைக்கப்பட்ட சின்ன டெஸ்ட். சாரதாம்மா அறிமுகம் செய்யும்போது இருந்த குஷி இப்போது கொஞ்சமா ஜர்க் வாங்கியது. ஒருவேளை நம் குரலுக்கு அந்த வெள்ளையன் மதிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? நேத்ராவிடம் பங்கமாக மாட்டிக் கொள்வோம். ஆனாலும் மனம் தளராமல் ஹேய்... இங்க வா என்று கை நீட்டி அழைத்தேன். அந்த வெள்ளையன் அருகில் வந்துவிட்டான். கொஞ்சமாய் அவன் காது மடல்களை, கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே என்ன டா பண்ற இங்க... சாப்பிட்டியா என்றேன். என்ன புரிந்து கொண்டானோ... என் கையை நக்கிக் கொடுத்தான். என் கால் முட்டியில் தலையை முட்டி மீண்டும் தடவிக் கொடுக்கச் சொன்னான்.

நேத்ராவின் முன்பு என் கெத்தைக் காப்பாத்திட்டடா தம்பி என்று நெற்றியில் முத்தமிட்டேன். நேத்ராவுக்கோ குரலில் ஆச்சரியம்... அக்கா நிஜமாவே சூப்பர்க்கா என்று என்னோடு ஒட்டிக் கொண்டாள். 

அதன் பிறகு, நாய்க்குட்டி, நக்கி கொடுத்தால் என்ன அர்த்தம், வாலை ஆட்டினால் என்ன அர்த்தம், பூனைக்குட்டி பசி எடுப்பதை எப்படிச் சொல்லும், மிஸ் பண்ணால் என்ன செய்யும் என்றெல்லாம் சொல்லச் சொல்ல அவளுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம். 

அக்கா... நீங்க எங்க கூடவே இன்னைக்கு நைட் வந்து தங்கிடுங்க. கதை சொல்லுங்க என்றாள். இல்லடா மா நான் நாளைக்கு வந்து சொல்றேன். என் வீட்ல பூனைக்குட்டிக்குச் சாப்பாடு வைக்கனும் என்று சொல்லிக் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டேன். 

என்னை அனுப்பவே மனசில்லை.

அடுத்த நாள் சாரதாம்மாவும் அவரோடு வந்த தோழிகளும் மாரத்தானில் ஓட வேண்டும். நேத்ராவை எங்கே விட்டுச் செல்வது என்ற யோசனையில் இருந்தபோது என்னோடு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். அடுத்த நாள் முழுக்க என்னோடு இருக்கப் போகிறோம் என்பதால் என்னை வழியனுப்பி வைத்தாள். 

அடுத்த நாள் மாரத்தான் தொடங்கும் இடத்திற்கு நண்பரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, ஒரு சூடான காபியைக் குடித்துவிட்டு அவரை அழைத்துக் கொண்டு விசிட்டர் செண்டர் சென்றேன். அங்கே அவரை இறக்கிவிட்ட பின் சாரதாம்மாவிற்கு அழைத்தால் சிக்னல் கிடைக்கவில்லை. ஆறரை மணிக்கு ஓடிக் கொண்டே வாட்ஸ் அப் காலில், நேத்ரா குட்டியும் எங்களோடு மாரத்தான் ஓடிட்டு இருக்கா... நாங்க முடிச்சிட்டு கால் பண்றோம் என்றார். 

வேறென்ன செய்ய. வீட்டுக்குக் கிளம்பினேன்.

சொன்னபடியே மாரத்தான் ஓடி முடித்து, காலை உணவும் முடித்துவிட்டு எனக்கு அழைத்தார்கள். குட்டி மாரத்தான் ஓட்டக்காரியைச் சந்திக்கும் ஆவலில் விரைவாகச் சென்றேன்.. இல்லை.. ஸ்கூட்டியில் பறந்தேன். 

அவளைப் பார்த்ததும் அள்ளிக் கட்டிக் கொண்டேன். இந்தச் சின்ன வயதில் நான்கு கிலோ மீட்டர் வரை ஓடியிருக்கிறாள். பெரிய விஷயம். அவள் முகத்தில் ஓடிய களைப்பு எதுவும் இல்லை. அன்று காலை பூத்த சின்னஞ்சிறு பூ போலத்தான் இருந்தாள். 

அக்கா நீங்க கதை சொல்றேன்னு சொன்னிங்க சொல்லவே இல்லை.. இப்ப சொல்லுங்க வாங்க என்று கையைப் பிடித்து இழுத்தாள். சொல்றேன் டா. உனக்குச் சொல்லாமல் இருப்பேனா என்று சொல்லிக் கொண்டிருக்கு போதே... நேத்ராவின் அம்மா, முதலில் ரூம் போய் குளிச்சிட்டு, ட்ரெஸ் மாத்திட்டு பிறகு கதை கேட்கலாம். அக்கா கதை சொல்வாங்க என்றார். சென்னை திரும்ப வேண்டிய அவசரம் அவர் குரலில் இருந்தது. 

அவளுக்கு அதெல்லாம் ஒரு விஷயமாகவே இல்லை.. அவள் வைத்திருந்த சுனாமிகா பொம்மையை வைத்துக் கதை சொல்ல சொன்னாள். அவள் அம்மாவிற்கோ கிளம்ப வேண்டிய அவசரம்.

அதைப் புரிந்து கொண்டு, ஆமா நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகு அக்கா வந்து கதை சொல்றேன் என்றேன். இல்ல நீங்க வாங்க என்று அடம் பிடித்தாள். நிஜமா நான் வந்து கதை சொல்வேன்.. நீ இப்போ அம்மா கூட போ என்றேன். 

ப்ராமிஸா..... என்றாள் கையை நீட்டியபடி.

பிராமிஸ் என்றேன் அவள் கை மேல் கை வைத்து.

காட் பிராமிஸா...

காட் பிராமிஸ்...

மதர் பிராமிஸா...

மதர் பிராமிஸ்...

டெட் பிராமிஸா..

டெட் பிராமிஸ்...

அவள் கேட்ட எல்லாவற்றின் மீதும் ப்ராமிஸ் செய்து கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன். 

ஆனால், அவளைப் பஸ் ஸ்டாப் வரை சென்று வழியனுப்பி வைக்க முடியவில்லை. ஆரோவில்லில் அன்றைய தினம் அவ்வளவு பரபரப்பாக இருந்தது எனக்கு. 

அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியம் அப்படியே என்னிடம் இருக்கிறது. 

அவளுக்கென தினம் ஒரு கதையைச் சொல்வது எனத் தீர்மானித்து விட்டேன்.

அவள் முகம் பார்த்துக் கொண்டே கதை சொல்லும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். 

என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது அவள் அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா, இந்த அக்காவை நம்ம கூடவே கூட்டிட்டுப் போய்டலாம்மா... 

என் உலகத்திற்குள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்ட குட்டி இளவரசியின் பேரன்பின் பெருநிழல் தான் அந்த வார்த்தை. 





சனி, 1 பிப்ரவரி, 2020

கோனேரியும் குருவம்மா அக்காவும்

கழுகுமலை பயணம் முடித்து அடுத்த நாள் மடவார் வளாகம் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை - இரண்டு இடங்களுக்கும் செல்வதென முடிவு செய்தோம். 

திருவண்ணாமலை என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் நெருப்பு வடிவமாக நின்று, மலையாகக் குளிர்ந்த திருவண்ணாமலையைத்தான் சொல்வார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலையா? அதிலும் பெருமாள் கோவிலா? ஆச்சரியத்தோடு கிளம்பினேன்.
நானும் சங்கீதாவும் ஸ்கூட்டியில் பறந்தோம் என்று சொல்ல முடியாது. மிதமான வேகத்தில் திருவண்ணாமலை கிராமத்தை நெருங்கியதும் பிரம்மாண்டமான யானை ஒன்று கால் நீட்டிப் படுத்திருப்பது போல இருந்தது அம்மலை. மலையை நோக்கி ஸ்கூட்டி விரைந்து செல்ல, மலை பின்னோக்கி நகர்வது போலிருந்தது. சென்ற வருடத்தில் திருச்சி சென்றிருந்தபோது, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு ஸ்கூட்டியில் சென்றிருந்தேன். அப்போதும் அப்படித்தான். மலையை நோக்கி ஸ்கூட்டி பயணம் செய்ய, மலை பின்னோக்கி நகர்ந்து விளையாட்டுக் காட்டுவது போலிருந்தது. சங்கீதாவிடம் அதைச் சொன்னேன். நான் சொன்னதை அவரும் ஒப்புக் கொண்டார். 

திருவண்ணாமலை கோவிலில் கோனேரி என்றொரு ஏரி உள்ளது. குலசேகராழ்வார் அந்த ஏரியைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்று சொன்னார். ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் அளவுக்கு யாரும் என்னை அவ்வளவு ஈர்த்ததில்லை. ஆண்டாளுக்குப் பெருமாளின் மேல் காதல் என்றால் எனக்கு ஆண்டாளின் மேல் மாளாக்காதல். ஆண்டாளின் கவிதைகளின் மேல் தீராக் காதல். 
கோயிலை நெருங்கியதும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அதனருகில் செருப்பைக் கழற்றிவிட்டு நடக்கத் தொடங்கினோம். மொட்டை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் கோயில் வளாகம் குளிர்ந்திருந்தது. கிளை பரப்பி, அசைந்து கொண்டிருந்த மரத்தின் குளுமை தரையெங்கும் படர்ந்திருந்தது. 

கோயிலுக்குப் படியேறிச் செல்வதற்கு முன், வலது புறம் திரும்பி கோனெரியைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என அங்கே சென்றோம். 

செக்கச் சிவந்திருந்த கோனேரியின் படிக்கட்டுகளில் இரண்டு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். 
காற்றின் தீராத பேச்சுகள் ஏரியில் நீர் வளையங்களாய் நெளிந்து கொண்டிருந்தன. ஏரியின் கரையைச் சுற்றிலும் மரங்கள். ஏரியின் நீரைக் கவ்விக் குடிப்பது போல ஏரி நீரை நோக்கித் தாழ்ந்திருந்தன. வெள்ளை வெள்ளையாய் இலைகளுக்கு நடுவில் பூக்கள். அவ்வப்போது பூக்கள் பறந்தன. உற்றுக் கவனித்தபோது தான் தெரிந்தது. பூக்கள் அல்ல. நாரைகள். 

மரத்தில் அமர்ந்திருந்த நாரைகளையும், ஏரியையும் செல்போனில் படம் பிடித்தேன். படிக்கட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரும் துணி துவைப்பதை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். நம்ம ஃபோக்கஸ் ஏரியும் நாரையும் தான் என்பது போல நான் க்ளிக் செய்து கொண்டிருந்தேன். எம்மா நீ இவங்களை போட்டோ எடுக்கறனு அவங்க போஸ் கொடுக்கறாங்க பாரு என்றார் சங்கீதா. 

சாரி அக்கா, கவனிக்கல என்று சொல்லிவிட்டு அவர்களைப் படம் பிடித்தேன். இடுப்பளவு நீரில் அமர்ந்தபடி ஈரப்புடவையுடன்  முகமெல்லாம் புன்னகையாக போஸ் கொடுத்தார்கள். 

ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என நினைத்துத்தான் ஏரியின் பக்கம் காலடி எடுத்து வைத்தோம். முதலில் படிக்கட்டில் அமர்ந்தோம். இரண்டு மூன்று செல்ஃபிக்களுக்குப் பிறகு ஏரி, உள்ளே இறங்கி வா வா எனக் கூப்பிட, ஜீன்ஸைக் கொஞ்சம் மேலே தூக்கி விட்டு கடகடவென ஏறி நீரில் கால் வைத்தேன். அடுத்து இரண்டாம் படிக்கட்டு, அடுத்து முன்று, அடுத்து நான்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கினேன். இடுப்பு வரை நனைந்து விட்டேன். நான் கால் வைத்த முதல் படிக்கட்டில் இருந்த நீரின் குளிர்ச்சிக்கும் ஐந்தாவது ஆறாவது படிக்கட்டில் இருந்த குளிர்ச்சிக்கும் வித்தியாசம் இருந்தது. படிக்கட்டின் உள்ளே இறங்க இறங்க சில்லிட்ட நீரின் அதீத குளிர்ச்சி உடலெங்கும் பரவியது. 
போட்டோவுக்கு போஸ் கொடுத்த இரண்டு அக்காக்களும் எங்கள் இருவரைப் பற்றி விசாரித்தார்கள். நான் பாண்டிச்சேரியில் இருந்து வருகிறேன் என்றதும் அவர்களுக்கு ஆச்சரியம். சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வந்திருக்கிறேன் என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கம் போலவே எனது ஒற்றைக்கால் கொலுசைப் பார்த்து, மா, இன்னொரு கால் கொலுசைக் காணோம் என்றார். இல்லக்கா இது ஸ்டைல் என்றேன் சிரித்துக் கொண்டே.  அவர்களும் சிரித்தார்கள்.

துணி துவைக்கும் சத்தத்திற்கு இடையில் செல்ஃபோனில் கானா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. துணி துவைத்துப் பிழிந்து ஏரிக்குள் தான் அழுக்கு நீரை ஊற்றினார்கள். சிவந்த நீரில் சோப்பு நுரை கலந்த அழுக்கு நீர் கலந்தாலும் அப்படியே இருந்தது. சிவந்த நீரில் அலசிய துணி சுத்தமாகவே இருந்தது. 

ஏரியின் இடதுபுறம் நான்கைந்து பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கும் ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி இரண்டு மாடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. 

துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரின் அருகில் இடுப்பு வரை நனைய இறங்கி, சங்கீதாவை போட்டோ எடுக்கச் சொன்னேன். விதவிதமாகப் போட்டோ எடுத்துத் தள்ளினார். இதற்கிடையில் அந்த அக்காக்களோடு பேச்சு வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களோடு தேநீருக்குச் சியர்ஸ் சொல்கிற அளவுக்கு... 
கோயிலுக்குப் போயிட்டு வரும்போது வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும் என அழைத்தார்கள். வீட்டின் அடையாளம் சொன்னார்கள். வர்றோம்க்கா என்று பேச்சுக்கு வாக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வெறும் பேச்சுக்கு அழைத்தார்கள் எனச் சொல்ல முடியவில்லை. வாஞ்சையான அழைப்பு தான். 

அக்கா உங்க பேரு என்னக்கா என்றேன். ஊதப்புடவை அணிந்த அக்கா, என் பேரு குருவம்மா. இவங்க பேரு முனீஸ்வரி என்றார். குருவம்மா அக்கா உங்க பேருல ஒரு பாட்டு இருக்கு. இருங்க யூடியூபில் போடறேன் என்று சொல்லி, தேடி "குறுக்குப் பாறையிலே மறிச்சு வழியில் நின்னு... பார்க்காமல் போறியே நீ குருவம்மா..." பாடலை ஒலிக்கச் செய்ததும் குருவம்மா அக்கா முகத்தில் அடக்க முடியாத வெள்ளந்தி சிரிப்பு. 

கோனேரியில் ஐந்து நிமிடம் என்பது குருவம்மா அக்காவுடனான தேநீர் உரையாடலில் ஒரு மணி நேரமாக நீண்டிருந்தது. எங்களின் உரையாடலை படித்துரையில் அமர்ந்து ஒரு குருகும் கேட்டுக் கொண்டிருந்தது.
கோனேரி வாழ் குருகாய்ப் பிறப்பேனே என்ற குலசேகராழ்வாரின் குரலை அங்கே உணர்ந்தேன். 

கோனேரியின் ஈரம் என்பது எளிய மனிதர்களின் வெள்ளந்தி அன்பினால் துளிர்த்துக் கொண்டிருக்கிறது எப்போதும்.

புதன், 29 ஜனவரி, 2020

பசி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது

#கழுகுமலை_பயணம் 
கழுகுமலையில் சமண சிற்பங்களையும் வெட்டுவான் கோயிலையும் பார்த்து முடித்த பின் சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலுக்குச் சென்றோம். சங்கர நாராயணன் கோவில் செல்வது எனது திட்டத்தில் இல்லை. உடன் வந்த தோழிகள் விருப்பம். எனவே அவர்களோடு நானும் சென்றேன். 

மிகப் பழமையான கோவில். எப்போதும் போல கோவிலில் சிற்பங்களையும் அதன் குளுமையையும் ரசித்தபடி இருந்தேன். 

நாக தோஷம் நீங்க பால் வாங்கி அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்திச் செய்து கொள்வார்கள் என அங்கே சென்ற பின் அறிந்தேன். என்னோடு வந்த தோழிகள் பாலும் பூ மாலையும் வாங்கிக் கொண்டு சென்றனர். 

கருவரையில் இருந்த சிவ லிங்கத்தைப் பார்த்துவிட்டு, பால் அபிஷேகம் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றோம். நாக தோஷப் பரிகாரம் செய்யும் இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பிள்ளையாரை வணங்கிவிட்டு, அக்கோவிலைச் சுற்றிச் செல்லும்போது, சுவர் ஓரமாக சாம்பல் நிற குட்டிப் பூனை ஒன்று படுத்திருந்தது. உடலைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்ததைப் பார்த்ததும் குரல் கொடுத்தேன். 

பூனைகள் அசந்து தூங்கும்போது சிறு சத்தம் கேட்டால் கூட உடனே தலை தூக்கிப் பார்க்கும். நான் குரல் கொடுத்தும் கூட அதனிடம் அசைவில்லை. தலையில் கை வைத்துத் தடவிக் கொடுத்தேன். அப்போது கூட அசையாமல் படுத்திருந்தது. 

பசியில் மெலிந்த உடல். தூங்கவில்லை. நினைவு தப்பிக் கொண்டிருந்தது. தோழிகளிடம் இருந்த பாலைத் தர முடியுமா எனக் கேட்டேன். அவர்கள் அபிஷேகம் செய்வதற்கான பால், வேண்டுமெனில் போய் வாங்கி வா என சங்கீதா சொன்னார். அவரிடம் இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு வாசலுக்கு ஓடினேன். பிளாஸ்டிக் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்த பால் இருபது ரூபாய். வாங்கிக் கொண்டு கூடவே பாலை ஊற்றி வைக்க ஒரு சிறிய தொன்னையைக் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தேன். 

அதே இடத்தில் அசைவின்றி படுத்திருந்தது அந்தக் குட்டிப் பூனை. 

அதன் அருகில் அமர்ந்து கவரில் சுற்றப்பட்டிருந்த நூலைக் கழற்றினேன். அநியாயத்துக்கு நூலைச் சுற்றோ சுற்றென சுற்றி இருந்தார்கள். நூலைப் பிரித்துப் பாலைத் தொன்னையில் ஊற்றிய சத்தம் கேட்டு சட்டென்று எழுந்து கொண்டது பூனை. அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அது எழுந்து கொண்டதே தவிர நிற்க முடியவில்லை. தடுமாறியது. தள்ளாட்டத்துடன் இருந்த பூனைக்கு அருகில் பால் ஊற்றி நிரப்பப்பட்ட தொன்னையை நகர்த்தி வைத்தேன். அதனால் குனிந்து குடிக்க முடியவில்லை. தலையை மெல்ல அழுத்தினேன். அப்போதும் குடிக்கவில்லை.

தொன்னையைக் கையிலெடுத்து அதன் வாயருகில் வைத்தேன். நக்கிக் குடித்தது. கொஞ்சம் தான் குடித்திருக்கும். பிறகு தலையை எடுத்துக் கொண்டது. மீண்டும் அதன் வாயருகில் பாலைத் தூக்கிப் பிடித்தேன். இன்னும் கொஞ்சம் குடித்தது. 

அப்போது தான் கவனித்தேன். அதன் பின்னங்காலில் லேசாக அடிபட்டிருந்தது. மேலும் அதற்கு வயிற்றுப்போக்கு வேறு. அருகில் இருந்த பேப்பரைக் கொண்டு பின்பக்கத்தைத் துடைத்து விட்டேன். லேசாக வலியில் முனகியது. மீண்டும் கொஞ்சம் பாலைக் குடித்தபின் தெம்பு வந்திருக்கும் போல. என் கையைத் தலையால் உரசியது. பின்பு நடந்து என் மடிமீது ஏறிக் கொண்டது. மடிமீது ஏறுவதும், கையைத் தலையால் உரசுவதும், மடியில் இருந்து இறங்குவதும், மீண்டும் கையை உடலால் உரசிக் கொண்டு மடியில் ஏறுவதுமாக இருந்தது. 

என்னை உன்னோடு அழைத்துச் சென்று விடு என்று கெஞ்சுவது போல இருந்தது அதன் செய்கை. என்னோடு அழைத்துச் செல்ல முடியாத குற்றவுணர்வு எனக்குள். 

பாண்டிச்சேரி என்றால் நீ கேட்காமலேயே எடுத்துச் சென்று விடுவேன், இப்பொழுது முடியாது, என்னை மன்னித்து விடு என அந்தக் குட்டியிடம் சொல்லி, தலையை வருடிக் கொடுத்தேன். சூழலைப் புரிந்து கொண்டது போல எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டது. 

மிச்சப் பாலையும் தொன்னையில் ஊற்றி, சுவர் அருகில் அதன் பார்வையில் படும்படி வைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து கொண்டேன். 

பக்கத்தில் நாக சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.  நேர்த்திக்கடன் எனும் பெயரில் தரையில் அவ்வளவு பாலும் வீணாக வழிந்தோடியது. இன்னும் அபிஷேகம் செய்வதற்கான பாலைக் கையில் ஏந்தியபடி நிறைய பேர் மனம் நிறைய வேண்டுதல்களுடன், பக்தியோடு போய்க் கொண்டிருந்தார்கள். அதன் அருகில் தான் பசியில் உடல் மெலிந்த பூனைக்குட்டி சுருண்டு கிடந்தது. நேர்த்திக் கடன் செய்ய வந்த யாருடைய கண்களுக்கும் பூனையின் பசி தெரியவேயில்லை. பாவம், பக்தி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டிருந்தது போல.

பசி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. 
இந்த உலகம் எல்லோருக்குமானது. பசித்திருக்கும் ஜீவன்களுக்கு உணவளிப்பதும் கூட ஆன்மீகம் தானே.