தேவனின் வாசகத்திற்குக் கீழே ஒரு புல்
காதலின் தனிமையில்
மனம் வறண்டிருக்கிறேன் மாயா.
எனது தனிப்பயணத்தின் இடையில்
சொர்க்கத்தின் சாயல் கொண்ட
கடற்கரை ஒன்றின் மடியில் அமர்ந்து
என் வாழ்வை நிறைக்கும் ஒரு காதலை
என்னிடம் கொண்டுவந்து சேர்க்கும்படிக்
கடலிடம் கேட்டேன்.
கடல்
தனது நீல மௌனத்தை என்னிடம்
விட்டுவிட்டுத் திரும்பியது.
நான் யாரிடம் பிரார்த்திப்பது மாயா?
கடல்தானே என் கடவுள்
என் பிரார்த்தனைகளை
அலைகளாகத் திருப்பியனுப்பும்
எனது நீலத் தேவாலயம்.
திரும்பும் வழியில்
காரை பெயர்ந்த வீட்டின் சுவரில் எழுதப்பட்டிருந்தது,
‘உன் தேவனைச் சந்திக்க
ஆயத்தமாயிரு.’
சிதைந்த சுவரின் வெடிப்புகளிலிருந்து
என்னை ஆசீர்வதித்தாய் மாயா.
காதலைக் கேட்டுச் சென்ற பாதையில்
மரணத்தின் வாசகத்தை வாசித்துவிட்டேன்.
வாழ்வை வேண்டி அமர்ந்த கடற்கரையில்
முடிவற்ற காலத்தின் ஓசையைக் கேட்டுவிட்டேன்.
இனி
எந்தச் சுவரில் என் பெயரை எழுதுவது?
எந்தக் கடலிடம் என் தாகத்தைச் சொல்வது?
எந்தப் பிரார்த்தனையில்
உன் முகத்தைக் கொண்டு கண்களை மூடுவது?
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில்
நான் தேவனைச் சந்தித்தேன்.
அந்த நாளில்
வழக்கம்போலவே சூரியன் உதித்திருந்தது.
கடல் அதன் பழைய துயரங்களை
அலைகளாகக் கரையில் ஒதுக்கிக்கொண்டிருந்தது.
மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள்
பிரிவுக்கான சாட்சியுமின்றி
மண்ணில் கிடந்தன.
நிலம் தனது வெடிப்புகளுக்குள்
கடைசியாகப் பெய்த மழையின்
ஈரத்தைத் தேடிக் கொண்டிருந்தது.
எனக்குள்
ஒரு பழைய காலம்
முடிவடையாமல் கிடந்தது.
எனது உதடுகளில் ஒட்டியிருந்த காதலின் பெயரை
யாரும் கேட்காதபடி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.
எனது தாகத்தை,
காலியாகிக் கிடக்கும் அன்பின் கோப்பையை,
தேவனின் காலடிச் சத்தத்திற்காக
விழித்திருக்கும் தனிமையின் வீட்டை
தேவன் அறியத் தருகிறேன்.
இப்போது சொல் மாயா,
தேவனைச் சந்தித்தபின்
எந்தத் திசையில் பயணிப்பது?
செப்டம்பர் மாதத்தின் மழை
எங்கே பெய்துகொண்டிருக்கிறது?
என் பாதங்களுக்குக் கீழே
இன்னும் தூசி பறக்கிறது.
எனக்கான காதல்
எந்தப் பருவத்தில் பூக்கும்?.
ஆனால்
அந்தச் சிதைந்த வீட்டின் சுவரில்
இப்போதும் அழியாமல் இருக்கிறது
தேவனின் வாசகம்.
அதன் கீழே
யாரும் கவனிக்காதபடி
ஒரு சிறிய புல் முளைத்திருக்கிறது.
அதைப் பார்த்தபடி
கடந்து செல்கிறேன.
என் செப்டம்பர் மாதத்தின் வானம்
இன்னும் திறக்கவில்லை.
- மனுஷி




