ஒவ்வொரு முறையும்
‘நீ என்னை நேசிக்கிறாயா?’
ஒரு நாளில்
பத்து முறையாவது கேட்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
எந்தத் தயக்கமுமின்றி
‘ஆம்’ என்கிறாய்.
உன் குரலில்
அன்பின் கதகதப்பு இருக்கிறது.
என் பெயரைச் செல்லமாய்
நீ உச்சரிக்கும் கணத்தில்
நான் பேசிக் கொள்ளாத தருணங்களில்
என்னைச் சுற்றிக் காத்திருக்கும் மௌனத்தில்
அது தன் இருப்பைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும்,
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
என் கேள்வி
உன் காதலின்மீதான சந்தேகம் அல்ல.
உன் பதிலைத் தெரிந்து கொள்ளவும் அல்ல.
என் மீதான உன் அன்பை
இன்னொரு முறை
உன் குரலில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
நீ ‘ஆம்’ எனும் அந்தக் கணத்தில்
நாம் இன்னுமே கொஞ்சம்
அன்புக்குள் நெருங்கிவிடுகிறோம் என்பதற்காகவே
கேட்கிறேன்.
.
நீ ‘ஆம்’ எனும் ஒவ்வொரு முறையும்
எனக்குள் ஏதோ ஒன்று
முதன்முறையாக நிகழ்கிறது.
என் வாழ்க்கைக்குள்
நீண்ட நாட்களாக மூடியிருந்த ஜன்னலொன்று
மெல்லத் திறக்கிறது.
மழையில் நனைந்த சிட்டுக்குருவி ஒன்று
என் ஜன்னலோரம் வந்தமர்கிறது.
தனது சிறகுகளைச் சிலுப்பி
மழையின் மிச்சத்தை
நீர்த்துளிகளை உதிர்க்கிறது.
அந்தத் துளிகள்
எனக்குள் அன்பின் நீர்மையைத் தெளித்துவிடுகிறது.
நனைந்த அதன் சிறகுகளில்
எஞ்சியிருக்கும் மழையைப் போல
உன் அன்பின் சிறு ஈரம்
என்னுள் தங்கிவிடுகிறது.
சிட்டுக்குருவி பறந்துபோன பிறகும்
ஜன்னலோரம்
சில துளிகள் மிச்சமிருக்கின்றன.
உண்மையில்
நான் உன்னிடம் கேட்பது
நீ என்னை நேசிக்கிறாயா என்பதையல்ல.
உன் அன்புக்குள்
இன்னும் எவ்வளவு ஆழம்
என்னை இழந்துவிட முடியும் என்பதைத்தான்
நாளையும் உன்னிடம் கேட்பேன்.
‘நீ என்னை நேசிக்கிறாயா?’
அப்போது
அதே சிட்டுக்குருவி
வேறொரு மழையிலிருந்து
என் ஜன்னலுக்கு வந்துசேரலாம்.- மனுஷி
