வியாழன், 29 அக்டோபர், 2026

தேய்பிறை சுமக்கும் வெளிச்சம் 

தேய்பிறையின் சிறு வெளிச்சத்தில்

ஒளிர்ந்து கொண்டிருக்கிறது கடல்.

அதன் முன்னால்

மௌனித்துக் கிடக்கிறேன் நான்.

திரண்டு வரும் கண்ணீருக்கு

எந்தக் கரையில் அணைகட்டுவது மாயா?


சின்னஞ்சிறிய வெளிச்சத்தினூடாக

எனக்கான பாதையைப் பார்த்தேன்.

அது மீச்சிறு வெளிச்சம்தான்.

ஆனால்,

அது மீச்சிறு பாதையை மட்டுமே காட்டும் என்று

அப்போது அறிந்திருக்கவில்லை.


இன்னும் கொஞ்சம் கௌரவமாக

என்னை வெளியேற்றியிருக்கலாம்.

இன்னும் கொஞ்சம் கௌரவமான சொற்களால்

என்னை அவமானப்படுத்தியிருக்கலாம்.

இன்னும் கொஞ்சம் கௌரவமாக

என் முதுகில் குத்தியிருக்கலாம்.

வாழ்வின் மீது

நான் கொண்டிருந்த நம்பிக்கை

முற்றிலுமாக அணைந்துபோவதற்கு முன்பு

அதன் கடைசிச் சுடரை

இன்னும் கொஞ்ச நேரம்

பார்த்துக் கொண்டிருக்க அனுமதித்திருக்கலாம்.


நிராதரவாய்க் கடலின் முன்பு

அமர்ந்திருக்கும் இக்கணத்தில்

எனது அழுகையை அடக்க முடியவில்லை.

அலைகளின் பேரிரைச்சலுக்கிடையில்

ஓங்கிப் பெருங்குரலெடுத்து

அழுது தீர்த்துக் கொள்கிறேன்.

எனது தோள்களைத் தட்டி

நானே ஆறுதல் படுத்திக் கொள்கிறேன்.

உள்ளங்கைக்குள்

எனது கையைப் பொதிந்து

ஆதுரமாய் அழுத்திக் கொள்கிறேன்.

ஆற்றுப்படுத்த யாருமற்ற இந்த இரவில்,

கண்ணீரைத் துடைத்துக்கொள்ள

என்னிடம் இன்னும்

பத்து விரல்கள் இருக்கின்றன மாயா.

எவ்வளவு பெரிய ஆறுதல் இது!


என் கண்ணீரின் உப்பை

இந்தக் கடல் அறியட்டும்.

என் அவமானத்தின் ரணங்களை

யாரும் பார்க்காதிருக்கட்டும்.


இருள் கவிந்த இந்தக் கடலுக்கு மேலே

தேய்பிறையின் வெளிச்சம்

இன்னும் அணைந்துவிடவில்லை மாயா

தேய்பிறைக்குப் பின்பு

எனக்கான பௌர்ணமி உதிக்கும் தானே.

இப்போதைக்கு

இந்தச் சிறு வெளிச்சம் போதும்.

 - மனுஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக