வனக்கிளியே, மீண்டும் வராதே...
- மனுஷி
வனக்கிளியே பாடலைக் கேட்ட தருணத்திலிருந்து
நாய்க்குட்டியைப் போல
எனைப் பின்தொட.ர்ந்தபடியே இருக்கிறது அது..
காலையில் நான் எழுவதற்கு முன்பே
அது விழித்துக் கொள்கிறது.
இரவு விளக்கை அணைத்த பிறகு
எனக்குத் தாலாட்டாகிறது.
என் அறைக்குள் அமர்ந்து
இளையராஜா பாடிக் கொண்டே இருக்கிறார்.
அந்தக் குரல் உன்னை நினைவூட்டுகிறது.
பாடல் முடிந்தபிறகும்
அந்தக் குரல் என்னைவிட்டு வெளியேற மறுக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு
நீ என் அருகில் அமர்ந்திருந்தாய்.
அப்போது
நமக்கிடையில் மௌனித்துக் கிடந்த மாலைப்பொழுதை
பாடலின் இசைக்குறிப்புகள் மெல்ல நினைவூட்டுகிறது
மூடிவைத்த கடிதத்தின் மடிப்புகளுக்குள் இருந்து
யாரும் எதிர்பாராத நேரத்தில்
உலர்ந்த பூவொன்று
தன் பழைய வாசனையை மீட்டெடுப்பதைப் போல.
உன்னை மறந்துவிட்டதாக
நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
நீ இல்லாத வாழ்க்கைக்கு மெல்லப் பழகிவிட்டதாக
என்னையே நம்ப வைத்திருக்கிறேன்.
ஆனால்,
நீ என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாளின்
வானம் எப்படி இருந்தது?
இப்போது நினைவில் இல்லை.
நாம் கடைசியாகப் பேசிய சொற்கள்
நினைவில் இல்லை.
நீ சிரித்தபோது உன் கண்களில் நிரம்பித் தளும்பிய
மகிழ்ச்சியை
இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
நினைவுகளுக்கு
எதைப் பாதுகாக்க வேண்டும் என்று
தெரிந்திருக்கிறது.
எதை மறந்துவிட வேண்டும் என்பதுதான்
தெரிவதில்லை.
ஒருநாள்
சிறகுகளை விரித்தபடி
உனக்கான வானத்தைத் தேடிப் பறக்க எத்தனித்தபோது
உன்னைத் தடுக்கவில்லை நான்.
காதல் என்பது
ஒருவரை நம்மோடு இருத்தி வைப்பது மட்டுமல்ல
என்று எனக்குத் தெரியும்.
நீ பறந்து சென்ற திசையை
இத்தனை காலமும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
இசை என்பது
முடிந்து போன வாழ்க்கையின்
மிகச்சிறிய சாட்சியாக இருக்கிறது.
நீ விட்டுச் சென்ற வாழ்க்கையை
இந்தப் பாடலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாம் சினேகித்த காலத்தில்
நமக்குப் பிடித்த மழை,
நாம் சேர்ந்து நடந்த சாலைகள்,
நாம் பேசித் தீராத தேநீர்க் கதைகள்,
வீடு திரும்பிய பிறகும் முடியாமல் தொடர்ந்த உரையாடல்கள்
எல்லாவற்றையும்
இந்தப் பாடல் ஒவ்வொன்றாய்த் திறக்கிறது.
நீயும் நானும் பிரிந்துபோனது
பனிக்காலத்தின் தொடக்கத்தில்தான்.
எத்தனை பருவங்களைக் கடந்துவிட்டேன்.
மரங்கள் இலைகளை உதிர்த்து
புதிய இலைகளை அணிந்துகொண்டன.
வெயில், புயல், மழை, பனி – எல்லாமும்
வந்து சென்றன.
பிரிவின் வெம்மையிலிருந்து நான்
இன்னும் வெளியேறவில்லை.
நம்பிக்கை தகர்ந்துபோன
எந்தக் காதலும் திரும்பி வருவதில்லை.
அவை ஒரு பழைய பாடலின் குரலாகவும்,
நள்ளிரவில் திடீரென விழித்துக் கொள்ளும்
ஒரு நினைவாகவும்,
யாரிடமும் பகிரமுடியாத பெருமூச்சாகவும்
தங்கிவிடுகின்றது.
இப்போது
இந்தப் பாடல் முடிந்துவிட்டது.
அறை அமைதியாக இருக்கிறது.
கடிகாரம் வழக்கம்போல ஓடுகிறது.
அண்டைவீட்டார்
இரவின் மீது கதவைத் தாழிட்டுச் சாத்துகிறார்கள்.
எல்லாமே இயல்பாக இருக்கின்றன.
என்னைத் தவிர.
எனக்குள் இன்னும் இந்தப் பாடல் முடியவில்லை.
வனக்கிளியே,
இனி என் நினைவுகளுக்குள் நீ வரவேண்டாம்.
மீண்டும் ஒருமுறை உன்னை இழக்க என்னால் முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக