திங்கள், 19 அக்டோபர், 2026

சொர்க்கத்தின் சாயல் - மணப்பாடு கடற்கரை - மனுஷி


சொர்க்கத்தின் சாயல் - மணப்பாடு கடற்கரை



சில பயணங்களைப் பற்றி எழுதுவது என்பது அந்தப் பயணத்தைப் பதிவு செய்வதல்ல. ஓர் உணர்வை வார்த்தைகளில் அடைத்து வைப்பதற்கான முயற்சியே. மணப்பாடு கடற்கரைப் பயணம் அப்படிப்பட்ட உணர்வின் குவியல்தான்.

திருச்செந்தூரில் செந்தில்வேல் ஆண்டவரைச் சந்தித்த பிறகு அடுத்தநாள் ஆட்டோவில் மணப்பாடு கடற்கரைக்குக் கிளம்பினேன். 18 கி.மீ பயணம். மணப்பாடு செல்லும் சாலைகள் இருபுறமும் பெரும்பாலும் பனைமரங்களும் சில இடங்களில் தென்னைமரங்களும் அணிவகுத்து நின்றன. ரம்மியமான சாலையில் வேடிக்கை பார்த்தபடி சென்றேன். போகும் வழியில் குலசேகரப்பட்டினம் கோயிலைப் பார்த்துவிடுங்கள் என்று ஆட்டோ அண்ணா சொன்னதால் அங்கு சென்றேன்.


பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கடைகளைக் கடந்து ஒரு எலுமிச்சை மாலை வாங்கிக் கொண்டு முத்தாரம்மனைப் பார்க்கச் சென்றேன். மக்கள் வரிசை நீண்ண்ண்ண்ண்ண்டிருந்தது. இந்தக் கோவிலின் தசரா திருவிழாவைப் பற்றிப் படித்திருக்கிறேன். சில புகைப்பட நண்பர்கள் வழியாக வண்ணமயமான முகப்பூச்சுகளைக் கொண்ட சாமி வேடங்களைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். பக்தர்களின் நேர்த்திக்கடனாக இப்படி சாமி வேடமணிந்து செல்வார்கள் என்று சொன்னார்கள்.

திருச்செந்தூரில் வரிசையில் நின்று முருகனைப் பார்த்தது போல இங்கே வரிசையில் நின்று முத்தாரம்மனைப் பார்ப்பதற்கு அவ்வளவு நேரம் என்னிடம் இல்லை. அதனால் நூறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் வாங்கி இருபது நிமிடத்தில் அம்மனைப் பார்த்துவிட்டு, கருவறையின் வெளிப்புறம் இருந்த பெரிய அரசமரத்தின் அருகில் ஐந்து நிமிடம் அமர்ந்துவிட்டு மணப்பாடு கடற்கரை நோக்கிச் சென்றேன்.

அங்கிருந்து உடன்குடி அனல்மின் நிலையத்தைக் கடந்து ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இடது புறத்தில் கடலுக்குள் நீண்ட பாலமும் ராட்சத உயர் கோபுரங்களும் ஆச்சரியத்தைத் தந்தது. எப்போதோ செய்தியில் இந்த அனல்மின் நிலையம் குறித்துப் படித்திருக்கிறேன். ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பெரும் போராட்டத்தின் சாட்சியமாக இருக்கிறது. இந்த உடன்குடி அனல்மின் நிலையம் மனதுக்குள் பல கேள்விகளை எழுப்ப ஆட்டோ வேகமாகக் கடந்து சென்றது.


மணப்பாடு கிராமத்திற்குள் ஆட்டோ நுழையவும் அங்கங்கே சில திருமண பேனர்கள். தூரத்தில் ’தூதுவளை இலை அரைச்சு…’ பாடல் காற்றில் மிதந்து வந்தது. இரண்டு தெரு தாண்டியதும், ’உனக்கென பிறந்தவ றெக்கை கட்டி பறந்தவ இவ தான்…’ பாடல் இன்னொரு வீட்டில் ஒலித்தது. பாடல்கள் ஒலித்த அந்த வீடுகளின் முகப்பில் நான் கண்ட காட்சிகள் பால்யகாலத்தில் எனது கிராமத்தில் திருமண வீடுகளில் பார்த்த காட்சிகளை அச்சுபிசமால் நினைவூட்டின. இளையராஜா, ஏஆர்ரகுமான் பாடல்கள் தாண்டி, அனிருத், சாய் அபயங்கர் பாடல்கள் என ரீல்ஸ்கள் கலைகட்டிக் கொண்டிருக்க, தொண்ணூறுகளின் பாடல்கள் இன்னமும் கிராமப்புறத் திருமண வீடுகளில் காற்றில் அசைந்தாடுவது மனதுக்கு நெருக்கமாக இருந்தது.

பாடல்களைத் தாண்டி வளைவு நெளிவான மணல் மேட்டில் ஆட்டோ போய்க் கொண்டிருக்க, இடதுபுறம் மீன்பிடி படகுகள் கரையை முகாமிட்டிருக்கும் அலையற்ற கடல். நேர் எதிரே எழில்மிகு சிறு தேவாலயம் மேகத்தைத் தொட்டு விடும் எத்தனிப்புடன் செம்மாந்து நின்றிருந்தது. ஆலயத்திற்குள் நடந்து செல்லும்போது, அங்கிருந்த கடைகளில் இருந்து வறுத்த மீனின் வாசம் பசியைத் தூண்டியது. ஆனாலும் கால்கள் ஆலயத்தை நோக்கிச் சென்றது.

போர்த்துகீசியர் மிஷனரியால் கட்டப்பட்ட ஆலயத்தின் இடதுபுறத்தில் அலையற்ற கடல். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் உடன்குடி அனல்மின் நிலையம் தெரிந்தது. அந்த அனல்மின் நிலையத்தில் வால் போல் நீண்டு கடலுக்குள் வளர்ந்து நின்றது பாலம். சற்று தூரத்தில் திருச்செந்தூர் கோயில் கோபுரம் தெரிந்தது. திருச்செந்தூர் கடலின் கரையிலிருந்து பார்த்த பாலம் இந்த ஆலயத்தின் அருகில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஆலயத்தினுள் பிரார்த்தனை முடித்துப் பலர் இளைப்பாறிக் கொண்டும் மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆலயத்தினுள் ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை முடிந்து காலி நாற்காலிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைந்திருந்தன. ஆலயத்தினுள் இருந்த யாரும் அந்த நாற்காலிகளில் அமரவில்லை. தரையில் அமர்ந்திருந்தனர். சில குட்டிக் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த உடலும், உடலில் ஆங்காங்கே ஆணி அடித்ததால் வழியும் இரத்தமுமாக கண்களில் சிறு உயிரைத் தேக்கி வைத்தது போல் தோற்றத்துடன் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சிலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவரது பாதத்தின் கீழ்த் தலையில் முக்காடிட்டபடி, மண்டியிட்டு இரண்டு பெண்கள் தேவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென வேண்டிக் கொண்டேன். அவர்கள் அருகில் சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்தேன். குழந்தைகளின் கீச்சுக் குரல்களை, சிரிப்பலைகளைத் தாண்டி அங்கே பேரமைதியை உணர முடிந்தது.


ஆலயப் படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது, கீ கொடுத்த பொம்மையைப் போல ஒரு கருப்புக் குட்டி வாலை ஆட்டிக்கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தது. முதலில் அதைப் பூனைக்குட்டி என்றே நினைத்தேன். உடலைக் குதித்துக் குதித்து படிக்கட்டுகளில் ஏறி அருகில் வந்த பிறகுதான் அது ஒரு நாய்க்குட்டி என்பது தெரிந்தது.

உப்புக் காற்றின் தாக்கத்தால் உடலின் சில இடங்களில் ரோமங்கள் உதிர்ந்திருந்தன. ஆனாலும், "அழகு" என்ற சொல்லே கருப்பு நிறத்தில் உருவெடுத்து, வாலாட்டியபடி என்னருகில் வந்து நின்றது போல அத்தனை வாஞ்சையும் பாசமும் அந்தக் குட்டியின் கண்களில் நிரம்பியிருந்தன.

தலையைத் தடவிக் கொடுத்ததும், எந்தத் தயக்கமும் இன்றி என் மடியில் வந்து படுத்துக்கொண்டது. எனக்குப் பின்னால் வளர்ந்த நாய்கள் நான்கு ஏற்கனவே என் கொஞ்சல்களை அனுபவித்துக் கொண்டு, விதவிதமான போஸ்களில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தன. ஆனால் இந்தக் கருப்புக் குட்டி மட்டும், அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையைப் போல என் மடியில் சுருண்டு படுத்துக்கிடந்தது.

நான் அதைத் தடவிக் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு சிறுவன், “ஹேய்!” என்று உச்சுக்கொட்டிக் கூப்பிட்டான். அவ்வளவுதான். மீண்டும் கீ கொடுத்த பொம்மையைப் போல துள்ளியோடி அவன் அருகே சென்று, சமத்துக் குழந்தையாய் அவன் முன் அமர்ந்துகொண்டது.


சிறிது தயக்கத்துடன் அந்தச் சிறுவன் குட்டியின் தலையைத் தடவிக் கொடுத்தான். அந்த ஒரு தொடுதலே போதுமானதாக இருந்தது. உடனே எழுந்து, பல நாட்களாக அறிந்த நண்பனைப் பின்தொடர்வது போல, அவன் பின்னாலேயே வாலாட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றது அந்தக் கருப்புக் குட்டி.

பின்பு ஆலயத்திலிருந்து வெளியே வந்து கோபுரத்தைப் பார்த்தேன். மத்தியான உச்சி வெயிலில் வெண்மேகங்களுக்குக் கீழே புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கோபுரம் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆலய வாசல் எதிரில் இருந்த மணல் மேட்டில் பெரிய சிலுவை ஒன்று நின்றிருந்தது. ஆலயத்தின் வாசலில் அமர்ந்து அந்தச் சிலுவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிலுவை யாருடைய கல்லறையாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். யோசனையைக் கலைத்து அங்கிருந்த ஒரு பெரியவரிடம் அந்தச் சிலுவை பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன கதையில் வரலாற்றுக் குறிப்புகள் / தரவுகள் இல்லை. ஆனால், மிகவும் பழமையான ஆலயம் இது என்றும், ஒரு கப்பல் கேப்டன் ஒருவர் புயலில் சிக்கிக் கொண்டபோது இயேசப்பாவிடம் வேண்டிக் கொண்டார். அவர் புயலிலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு அவரது கனவில் இயேசு தோன்றி, இந்த ஆலயத்தையும் சிலுவையையும் கட்டி வழிபாடு செய்யச் சொன்னார் என்றும் அவர் சொன்னார். இந்தச் சிலுவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வருவதாகவும் சொன்னார். ஆந்திராவில் ஒரு சிவன் கோவிலில் நந்தி சிலை ஒன்று ஆண்டுதோறும் வளர்ந்து வருவதாகப் படித்திருக்கிறேன். கிறித்தவ மதத்திலும் ஆண்டுதோறும் வளரும் சிலைகள் இருக்கிறது போலும்.


16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய கப்பல் மாலுமிகள் புயலில் சிக்கியபோது, உயிர்பிழைத்தால் கடற்கரையில் ஒரு சிலுவையை நிறுவவதாக வேண்டிக் கொண்டதாகவும், அவர்கள் வேண்டுதலின்படி பாதுகாப்பாகக் கரைசேர்ந்த இடம்தான் மணப்பாடு என்றும், வேண்டுதலுக்கான நேர்த்திக்கடனாகத்தான் அந்த மிகப்பெரிய சிலுவை நிறுவப்பட்டதாகவும் கூகுள் வரலாறு சொன்னது. மணப்பாடு கடற்கரையில் 1542இல் புனித சவேரியர் வந்து கிறித்தவ மதம் பரப்பும் பணியில் ஈடுபட்டார் என்றும், அவர் தங்கியிருந்த குகை ‘புனித சவேரியர் குகை’ என்று அங்கு வரும் மக்களால் தரிசிக்கப்படுவதாகவும் கூடுதல் தகவலை கூகுள் சொன்னது. மீண்டும் ஒருமுறை ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தேன். இந்தக் கதைகளின் அமைதி சாட்சியாக மௌனித்திருந்தது.

நானும் அமைதியாகச் சற்றுநேரம் அமர்ந்திருந்து சிலுவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோ அண்ணா செல்போனில் அழைத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். அரைமணி நேரம் ஆகும் அண்ணா… பசிக்கிறது என்றால் நீங்க சாப்பிடுங்க என்றேன். குலசேகரன்பட்டினத்தில் குடித்த ஜூஸ் எவ்வளவு நேரம்தான் பசி தாங்கும்.? பரவாயில்லை மா என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தார்.

பெரிய சிலுவைக்கு இடதுபுறம் சொர்க்கத்தின் சிறு துண்டொன்று பூமிக்கு வந்துவிட்டதோ என்று மாயபிம்பம் காட்டியபடி பரந்து விரிந்திருந்தது கடல் சொர்க்கம். மயில் கழுத்து நிறத்தில் பேரலைகளுடன் வானத்திலிருந்து வந்து கடற்கரையைத் தொட்டுவிட்டுச் செல்லும் முனைப்புடன் அலைகள் பொங்கி எழுந்து தரை தொட்டுத் தழுவி கடலுக்குள் சென்றது.


வெண்மணல் மேட்டிலிருந்து ஆர்ப்பரிக்கும் கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினேன். காற்று தன் முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி என்னைப் பின்னுக்குத் தள்ளியது. இறக்கைகள் இருந்தால் மெல்ல மேலெழுந்து கடலின் மேற்பரப்பில் நான் இலகுவாகப் பறந்து விடுவேன் போலும். அப்படியொரு காற்று. காற்றை எதிர்த்துப் பறக்கும் பறவை போல் சிறு மணல் மேட்டிலிருந்து கீழிறங்கிச் செல்லச் செல்ல, அருகில் தெரிந்த கடல் விளையாட்டுக் காட்டுவது போல தள்ளித் தள்ளிச் சென்றது. அந்த விளையாட்டை ரசித்தபடியே கடலை நோக்கிச் சென்றேன். அங்கே பத்து பதினைந்து பேர் கடலலையில் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அலையின் ஆக்ரோஷம் கடலில் இறங்கிக் குளிக்கும் தைரியத்தைக் கொடுக்கவில்லையோ?

உச்சிவெயிலைச் சற்றும் உணரச் செய்யாத கடலின் குளுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவித்துவமான பெருங்கடல்பரப்பு, ஆக்ரோஷமாய் வெகுண்டெழுந்து அருகில் வேகம் குறைந்து கால்களைத் தழுவிச் செல்லும் அலைகள் நிச்சயமாய் இது சொர்க்கத்தின் சாயல் கொண்ட கடல் தான் என மீண்டும் மீண்டும் உணர வைத்தது.

இதுவரை நிறைய கடல்களைப் பார்த்திருக்கிறேன். நனைந்திருக்கிறேன். மௌனித்து அமர்ந்திருக்கிறேன். கடல்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறேன். இந்த மணப்பாடு கடல் மற்ற கடல்களைப் போல் அல்ல என்று தோன்றியது. இந்தக் கடலின் அலைகளுக்குத் தனி மொழி இருக்கிறது. இரகசியம் இருக்கிறது. ஏகாந்தம் இருக்கிறது. நிறைய கதைகள் இருக்கின்றன. தனிமையை உணரச் செய்யாத சினேகம் இருக்கிறது. வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத பெருங்கவிதையாய் என் முன் விரிந்திருந்த கடலின் முன் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் இந்தக் காலவெளியைக் கடந்து விட முடியுமா என்றெல்லாம் எண்ணம் எங்கெங்கோ அலையாடிக் கொண்டிருந்தது.

அங்கே கடலின் அலைகளிடம் பாதி உடல் நனைந்த ஒரு குடும்பம் வந்து ‘ஒரு போட்டோ எடுத்துத் தர்றிங்களா’ என்று கேட்டனர். பேரதிசயத்தைச் சிறிய செல்போனில் புகைப்படமாக எடுத்துவிட முடியுமா தெரியவில்லை. ஆனால், இந்த வியாக்கியானங்களையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடல் பின்புறத்தில் தெரிய அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன். நன்றி சொல்லிவிட்டு மேடேறிச் சென்றுவிட்டனர். ஒரு காதல் ஜோடியா இளம் திருமண ஜோடியா தெரியவில்லை. அவர்களும் என்னை நெருங்கி வந்து சிஸ்டர் ஒரு போட்டோ எடுத்துத் தர்றிங்களா? என்றனர். அவர்களுக்கும் எடுத்துக் கொடுத்தேன்.  

மணி மூன்றைத் தொட்டது. அப்போது நானும் அந்தக் கடலும் மட்டுமே இருந்தோம். அவ்வப்போது மேலே பறந்து சென்ற சில காகங்கள். கால் தழுவிச் சென்ற அலைகள். பசி மறந்த ஏகாந்த உணர்வு.

மீண்டும் இந்தக் கடற்கரையில் நாள்முழுவதும் வந்தமர்வேன் என்று கடலிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த சில பெரிய கற்களை எடுத்து வந்து மொபைல் ஸ்டேண்டாக மாற்றிச் சில செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு, விடைபெற மனமின்றிக் கிளம்பினேன்.

கண்களை விட்டு அகல மறுத்த மணப்பாடு கடற்கரையின் காட்சி சொர்க்கத்தின் சிறு துண்டுதான்.

 

புகைப்படங்கள் : மனுஷி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக