சந்திப்பின் தேவ கணங்கள்
- மனுஷி
பரிசு
பெறக் காத்திருக்கும் பள்ளிச் சிறுமி போல
உனக்காகக்
காத்திருக்கிறேன் மாயா.
என்
வாசல் கதவைத் திறந்து
நீ உள்நுழைகையில்
எதைக்
கொடுத்து
உன்னை
வரவேற்பது?
பூங்கொத்து
உன்னை வரவேற்கப் போதுமா?
புத்தாடை
புத்தகம்
பேனா
புத்தர்
சிலை
அல்லது
ஒரு
கோப்பைத் தேநீர்
எதைத்
தர?
நீயும் நானும்
ஆதிப் பழைய
ஆன்மாக்கள்.
என்
பழைய ஆன்மாவைத்தானே
நான்
சந்திக்கக் காத்திருக்கிறேன்.
எனது
காத்திருப்பின் பேருவகையை
பூங்கொத்தின்
மலர்கள் உணர்த்தி விடுமா?
ஆவி
பறக்கும் தேநீரின் மென்சுவை கடத்திவிடுமா?
அல்லது
வேறு பொருட்கள் சொல்லிவிடுமா?
அன்றொரு
நாள் நீ கேட்டது போல்
இருகரம்
நீட்டி,
உலகத்தை ஒரு
போர்வையாக்கி
என் உடலைப்
போர்த்திக் கொள்வது போல்
அள்ளியெடுத்து,
இறுக்கி
உன்னை
அணைத்துக் கொள்ள வேண்டும்.
ஆம்.
என்
அணைப்பின் வழியாக
என்னையே
பரிசுப் பொருளாய் உனக்களித்து
உன்னை
வரவேற்க விரும்புகிறேன்.
மிக
நீண்ண்ண்ண்ட அந்த அணைப்பின்வழியாக
உன்னைச்
சந்தித்த
அக்கணத்தை
அப்படியே உறைய வைக்க விரும்புகிறேன்.
மேலும்,
உன்
கண்களைப் பார்த்தபடி
உன்னை
முத்தமிடவும் விரும்புகிறேன்.
என்
முத்தத்தின் வழியாக
உனக்குள்
ஊடுருவி
நான்
நீயாகவும்
நீ நானாகவும்
நம்
ஆன்மாவை இடம் மாற்றிக் கொள்ள
விரும்புகிறேன்.
ரோமங்கள் அடர்ந்த
உன் மார்பின்மீது
முகம் புதைத்தபடி
இருண்ட என்
இரவை
விடியலின் ஒளிக்கீற்றுக்குள்
அழைத்துச் செல்ல வேண்டும்.
நமது சந்திப்பின்
தேவ கணங்களை
இப்படியாகச்
செதுக்கிக் கொண்டிருக்கிறேன் மாயா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக