ஞாயிறு, 25 அக்டோபர், 2026

 


எந்த 
இருள் அவளை ஒளித்து வைத்திருக்கிறது?

- மனுஷி

ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய்

பதினோரு  நாட்களாகின்றன.

தெருவில் பள்ளிப் பேருந்து

வழக்கம்போல வீட்டைக் கடந்து செல்கிறது.

போர்கள் தொடங்கிய தேதியை

வரலாறுப் பதிவு செய்கிறது.

சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான நாளை

பதிவு செய்கிறது.

ஏழு வயது சிறுமியைத் தேடும் நகரம்

பதினோரு நாட்களைக் கடந்து கொண்டிருக்கிறது.

காணாமல் போன சிறுமியின் நாட்களை

வரலாற்றின் பக்கங்களில் என்னவென்று எழுதுவது?

பதினோரு நாட்களாகச் சிறுமியின் அம்மா

கதவைத் திறக்கிறாள்.

காற்றும் வெளிச்சமும் இருளும்

உள்ளே வருகிறது

போகிறது.

தெருவின் மரங்கள்

இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கின்றன.

பதினோரு நாட்களாக

வீடு உறக்கமற்றுக் கிடக்கிறது.

இருட்டின்மீது பயம் கொண்ட சிறுமியின் படுக்கையருகே

மின்விளக்கை ஏற்றி வைப்பாள் அவளது தாய்.

இந்தப் பதினோரு இரவுகளுக்கு

எந்த விளக்கை ஏற்றிவைப்பது?

எந்தத் திசையில் வெளிச்சத்தை அனுப்புவது?

பதினோரு நாட்களாக

அவளது அம்மா

எந்தக் கடவுளிடம் வேண்டுதலைச் செய்து கொண்டிருப்பாள்?

வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி

எந்தக் கடவுளிடம் சிறுமி முறையிடுவாள்?

அவளுடைய புத்தகத்தில்

நாளைக்கான வீட்டுப்பாடம் இருக்கிறது.

அவளுடைய  பென்சில்

முனைமழுங்கிக் கிடக்கிறது.

அவள் கடைசியாக வரைந்த பூவுக்கு 

இன்னும்  வண்ணம் தீட்டவில்லை.

ஏழு வயது என்பது உலகத்தின் வரைபடத்தில்

தனது தெருவைக்கூட முழுமையாக அறிந்திராத வயது.

தனது பெயரை அழகாக எழுதக்

கற்றுக் கொண்டிருக்கும் வயது.

ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தால்

அதைப் பின்தொடர்ந்து ஓடிவிடும் வயது.

தொலைந்துபோனால் யாராவது கையைப் பிடித்து

வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள் என்று

நம்பிக் கொண்டிருக்கும் வயது.

அந்த நம்பிக்கையை

எந்த இருள் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது?

எந்தச் சாலை

அவளது சின்னஞ்சிறு காலடிகளை விழுங்கிவிட்டது?

எந்தக் கதவு அவள் தட்டும் ஓசைக்காக

இன்னும் காத்திருக்கிறது?

இந்த நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும்

ஒரு குழந்தையின் சிரிப்பு இருக்கிறது.

அந்தச் சிரிப்புக்குப் பின்னால் பத்திரமாகத்

திரும்பிவர வேண்டும் எனும் பெற்றோரின் பிரார்த்தனை இருக்கிறது.

குழந்தைகள் வெளியே சென்று திரும்புவதற்காக

வீடுகள் கதவுகளைத் திறந்து வைக்கின்றன.

ஒரு குழந்தை திரும்பி வராதபோது

வீட்டின் கதவு அசைவற்று நின்றுவிடுகிறது.  

வீட்டின் காலமும்தான்.

காணாமல் போன சிறுமிக்காகக் காத்திருக்கும் வீட்டில்

பதினோரு நாட்கள் என்பது முடிவற்ற ஒரு கேள்வி.

அவள் எங்கே என்பதை

எந்தச் சுவர்களிடம் கேட்பது?

அவள் பார்த்த கடைசி வானம் எதுவாக இருக்கும்?

இந்தப் பதினோரு நாட்களில்

அவளுடைய நோட்டுப் புத்தகத்தில்

ஒரு பக்கம் காலியாக இருக்கிறது.

அவள் வரைய வேண்டிய சூரியனை யார் வரைவது?

வீட்டின் கதவு திறக்கும்போது

காற்றுக்குப் பதிலாக

காணாமல் போன சிறுமி வர வேண்டும்.

பென்சிலின் முனை முடிவதற்குள்

அவள் இன்னொரு பூவை வரைய வேண்டும்.

காலியான பக்கத்தில் சூரியன் கொஞ்சம் கோணலாகவும்

வீடு கொஞ்சம் சாய்வாகவும்

மனிதர்கள்

குச்சிக் குச்சியாகவும் இருக்கட்டும்.

அவளது கரங்களால் வரையப்படும் உலகத்தில்

எந்தச் சிறுமியும்

காணாமல் போகாமல் இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக