மிச்சமிருக்கும் வெளிச்சம்
அந்தக் கதவைச் சாத்தியவர்கள்
எனக்குப் பின்னால்
என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைத்
தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
பசித்த நாய்க்குட்டி
விரட்டியடிக்கப்பட்ட நாய்க்குட்டி
தன் பசியையும் பயத்தையும் சுமந்தபடி
ஓடுவதைப் போல,
கொஞ்சம் சுயமரியாதையும்
கொஞ்சம் கண்ணீரையும்
சுமந்தபடி வெளியேறினேன். மாயா
என்னை வெளியேற்றியபின்
அடைக்கப்பட்ட கதவின் சத்தம்
காதுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
வாழ்வின் மீது
நான் கொண்டிருந்த நம்பிக்கையின்மீது
ஊற்றப்பட்ட திராவகத்தின் பொசுங்கிய வாடை
என் உடலெங்கும் பரவுகிறது.
அவமானம்
ஒரு காயத்தைப் போல இருப்பதில்லை.
நம் புன்னகையின் விளிம்பில்
மௌனமாகத் தங்கிவிடுகிறது.
அவமானத்தின் ரணங்களை,
கண்ணீர்க் கதைகளை
சின்னதொரு புன்னகையுடன் பேசிக் கடந்து
போகும் கலையை
இன்னும் பழகவில்லை நான்.
ஒரு மனிதனின் நம்பிக்கையை உடைப்பதற்கு
ஒரு சொல் போதும் தானே மாயா,
பிறகு
ஒற்றைச் சிறகை முறிப்பதற்கு
ஏன் இத்தனை கற்கள்?
ஒரு மனிதனின் வானத்தை
இருட்டாக்குவதற்கு
ஏன் இத்தனை மேகங்கள்?
அவன் தனித்திருப்பதை உறுதிசெய்ய
இத்தனை பேர்
ஏன் அவனைச் சுற்றி நிற்கிறார்கள்?
‘நான் இருக்கிறேன்’ என்ற வார்த்தையை
இறுகப்பற்றியபடி நடக்கத் தொடங்கியது
எத்தனை பெரிய தவறு?
நாளை குறித்த பயமின்றி வாழ முடியும் என்பது
எத்தனை அபத்தமான கனவு?
’நான் இருக்கிறேன்’
என்பதற்குள்
ஒருவரைத் தனியாக நிற்கவைத்துவிட்டு
வெகுதூரம் நடந்துபோய்விட
எத்தனை இயல்பாய் முடிகிறது.
எனில்,
வார்த்தைகள் அர்த்தமற்றதுதானே மாயா.
அவற்றைப் பற்றிக் கொண்டிருந்த
என் கைகள் வலிக்கின்றன.
எனது முன்னால் கிடக்கும் கரையில்
’நாளை’ என்ற சொல்லை
எழுதி வைக்க முடியவில்லை.
எனது கனவுகளுக்கு இப்போது
முகவரியில்லை.
மனிதர்களின் குரல்களில்
எனக்கான வாஞ்சை அழிக்கப்பட்டுவிட்டது.
கரை ஒதுங்கிக் கிடந்த சிப்பிக்குள்
கடலின் சத்தம்
இன்னமும் எஞ்சியிருக்கிறது.
எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக
எப்படிச் சொல்வது?
அழுவதற்கான கண்ணீர் மிச்சமிருக்கிறது.
கண்ணீரின் உப்புக்குள் கரையாத
கொஞ்சம் உயிர் இருக்கிறது.
நாளையை எதிர்கொள்ளும் நம்பிக்கை
நூலிழையென ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எல்லாக் கதவுகளும்
எப்போதும்
எனக்காகத்
திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வாழ்க்கை என்பது
’நாளை உனக்கானது’ எனும் வாக்குறுதியா
என்ன?
என்னை வெளியேற்றியவர்கள்
என் எதிர்காலத்தையும் வெளியேற்றிவிடவில்லை..
அது இன்னும்
என் உள்ளங்கைக்குள்
மரவட்டையென சுருண்டு கிடக்கிறது.
ஆனால்
கைகளை விரித்துப் பார்க்கத்தான் துணிவில்லை.
மாயா,
இந்தக் கடலிடம்
எனக்கு ஆறுதல் மொழிகள் தேவையில்லை
’நாளை எல்லாம் சரியாகிவிடும்’ என்ற
வாக்குறுதியும்கூட வேண்டாம்.
உப்புக் காற்றினால் கொஞ்சம்
தழுவிக் கொள்ளச் சொல்
போதும்.
கடலின் அலைகளால்
கொஞ்சம் அணைத்துக் கொள்ளச் சொல்
போதும்.
மேலும்,
நான் அவமானப்பட்டதைப் போல்
நான் யாரையும் அவமானப்படுத்தாமல் இருக்கவும்,
என்னை நம்பாதவர்களுக்காக
என்னை நிரூபிக்க
என் வாழ்நாளைச் செலவிடாமல் இருக்கவும்.
என் கண்ணீரைப் பலவீனத்தின் பெயரால்
அழித்துவிடாமல் இருக்கவும்
எனக்குள்
கொஞ்சம் வெளிச்சம் எஞ்சியிருக்கட்டும்
மாயா.
மாலைக்குள் இருள் கவிகிறது.
அலை பின்வாங்கிய கரையில்
நண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதற்கு எந்த அவசரமும் இல்லை.
எங்கோ போய்ச் சேர்வதைவிட
தொடர்ந்து நகர்வதே
அதன் வாழ்க்கையாக இருக்கலாம்.
எனக்கும்
வாழ்க்கையைப் பற்றிய அவசரம் எதுவுமில்லை
எல்லாவற்றும் முடிவு தெரிந்திருக்க வேண்டுமா
என்ன?
எழுதப்படாத எதிர்காலத்தின் பக்கத்தில்
எனது கையெழுத்துக்கு இன்னும் இடமிருக்கிறது.
மேலும்,
என் வாழ்வின் கதவை
நானே திறக்க வேண்டியிருக்கும்.
உள்ளங்கைக்குள் மடங்கிக் கிடக்கும்
இந்தச் சிறிய எதிர்காலத்தைத் தொலைத்துவிடாமல்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
- மனுஷி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக