வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

துயரத்தின் பாடல்

பறவைகள்
ஓயாமல் பாடிக் கொண்டிருக்கின்றன
அவளது தனிமையை,
அவளது காதலை,
அவளது பிரிவின் வலியை,
அவளது கண்ணீரை,
அவளது பெருங்கனவை.

துயரத்தின் சாயல் அப்பியிருக்கும் அந்தப் பாடல்
அவளது பௌர்ணமியை
இருளச் செய்கின்றன.
நட்சத்திரங்களை
ஒளிமங்கச் செய்கின்றன.
மேகங்களும்
கண்ணீராகி
வழிந்தொழுகுகின்றன.

இரவு பகலாக
ஓயாமல் ஒலிக்கும் அந்தப் பாடல்
மனதைப் பிசைய
கூண்டின் கதவைத் திறந்து வைத்தாள்
துயரத்தின் பாடல்
பரந்த வெளியில்
விடுதலையின் பாடலாகுமென.
-- மனுஷி

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

வாழ்தலின் விதி

கீச் கீச்சென குரலெழுப்பும்
செல்லப் பறவைகளுக்கு
என் மீது
எந்தக் கோபமும் இல்லை.
யாதொரு முரண்பாடுகளும் இல்லை.
இருந்தும்
சமீபகாலமாக
நாங்கள் பேச்சுவார்த்தைகள் அற்று இருந்தோம்.
எப்போதாவது சோம்பல் முறித்து
அவை பேசத் துவங்குகையில்
நான் மொழியற்று நின்றேன்.
நான் அருகமர்ந்து பேசுகையில்
வார்த்தைகளைச் சுவைத்தபடி
அதீதக் காதலுடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
புதுவருடத்தின் இரண்டாம் மாதத்தில்
அவை கூண்டுக்குள்
சிறகு விரிப்பதையும்
வேனிற்காலத்தின் வெப்பத்தை
சுவைக்கும் பேராவலுடன்
பெருவெளிக்குள் பயணிக்கும்
எத்தனிப்புடன் தானியங்களைக்
கொத்தித் தின்றதையும்
நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
நாங்கள் பேசிக் கொள்ள
மௌனம் கூட மிச்சமில்லாது போன
ஒரு காலைப் பொழுதில்
நான் வைத்த பெயரைச் சுமந்தபடி
என்னிலிருந்து வெளியேறி
பறந்து சென்றன
என் பறவைகள்.
வாழ்வென்பது
விட்டு விடுதலையாகி
பறத்தல்தானே மாயா.
-- மனுஷி

புதன், 10 பிப்ரவரி, 2016

உன் குரலைத் தொட

கடைசியாய் ஒருமுறை
உன் எண்ணைத் தொடர்பு கொள்கிறேன்
கடைசி என்பது எப்போதும்
கடைசியாகாமல்
இன்னும் ஒருமுறை
இன்னும் ஒரேயொரு முறை என
நீள்கிறது என் விரல்.
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கும் உன்னை
என் நினைவுகளால்
தழுவிக் கொண்டேதான்
கடைசி முறையாக
முயற்சிக்கிறேன்
உன் குரலைத் தொட.
-- மனுஷி

திங்கள், 8 பிப்ரவரி, 2016

பறவையாதல் - மனுஷி

என்னை முதன் முதலாக
நீ முத்தமிடும் கணம்
வெளியே பனி பொழிந்து கொண்டிருக்கும்.
உன் காதலால் ஒளிவீசும்
எனது முகத்தை
உனதிரு கைகளால்
பற்றிக் கொண்டிருபாய்.
உன் தோள் அளவேயான என் முகத்தருகில்
குனிந்து நீ
முத்தமிடுவாய்
என் கைகளை
பறவையின் சிறகைப் போல்
சுவரில் சாற்றி.
உன் இதழைப் பருகும்போது
நான்
பறவையாகிப் பறந்து கொண்டிருப்பேன்.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

வருத்தம் கொள்ளும் அளவிற்கு - மனுஷி

நீ வருத்தம் கொள்ளும் அளவிற்கு
இங்கு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.
நான் மனம் நொறுங்கும்படியும்
இங்கு எதுவும்
நிகழ்ந்துவிடவில்லை.
இயல்பாக
வெகு இயல்பாகக் கடந்து போகிறாய்
என் காதலை.
வெகு இயல்பாகக் கடந்து போக
முயற்சிக்கிறேன்
உன் துரோகத்தை.

உன்னை அவமதிக்கும் பொருட்டு - மனுஷி

படுக்கையறை சுவரில்
கீறி வைத்துவிட்டுப் போன
நிர்வாணப் பெண்ணுக்கு
ஆடை வரைந்து விட்டேன்

நீ அருந்திவிட்டுப் போன
மதுபாட்டில்களையும்
புகைத்து மிச்சம் விட்டுப் போன
சிகரெட் துண்டுகளையும்
சுடுகாட்டின் அருகில் போய்
புதைத்து விட்டேன்.

படுக்கையறையின் நினைவுகளையெல்லாம்
அழித்துத் துடைத்துச்
சுத்தம் செய்து விட்டேன்.

இன்னும் சில நாட்கள்
சில மாதங்கள்
சில வருடங்கள் கூட
அழுது அழுது
மனதிலிருந்தும் உன்னை வெளியேற்றி விடுவேன்.

இன்னமும் மௌனமாய்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய்.
என் காதலை வேண்டி வரும் நாளில்
என் அறையில்
உன் நினைவுகள் இருக்கப் போவதில்லை.
முகம் செத்துத் திரும்பிப் போவாய்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

ஆறு என்றே சொன்னார்கள்

ஆறு என்றே சொன்னார்கள்
-- மனுஷி
முன்பொரு மழை நாளில்
பேருந்து பயணத்தின்போது
அம்மா சொன்னாள்
‘இதான் ஆறு’.
அங்கே
சடசடத்து ஓடிக் கொண்டிருந்தது
அழுக்குநிற தண்ணீர்
பேய் வேகத்துடன்
சில குடிசைகளை இழுத்துக் கொண்டு.

வளைகாப்பு முடிந்து
புகுந்தவீடு செல்கையில்
‘நிறைமாத கர்ப்பிணி ஆத்தைத் தாண்டக் கூடாது’
எனச் சொல்லி
இரண்டு ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றார்கள்.
அப்போது
வெண்மணலும் நாணல் புதருமாக
புதுப்பொலிவுடன் இருந்தது
வெயிலையும்
அங்கங்கே தெளிந்த நீரையும் சுமந்தபடி.

பள்ளி உணவு இடைவேளையில்
ஆற்று மணலில் ஊற்று தோண்டி
நீர் எடுக்கையில்
நண்பன் சொன்னான்
‘24 ஹவர்ஸ் வாட்டர் சர்வீஸ்.
இல்லப்பா?’.

இப்போது
அட்டைப்பூச்சியைப்போல
நதியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கின்றன
ஆற்றுப் பாலத்திற்குக் கீழே
ஊர்ந்து போகும் லாரிகள்.

நோய்மை கொண்ட ஆற்றில்
நாணல் புதர்களுக்குப் பதிலாய்
கருவேல மரங்களும்
வறண்ட புற்களும் மண்டிப்போய்
சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாகவும் ஆகிவிட்டன.

எலும்புத் துருத்திக் கொண்டிருக்கும்
வறட்சி தேசத்தின் குழந்தை போல
பரிதாபமாக படுத்திருக்கிறது
ஆறு.

குழந்தை பெய்த சிறு மூத்திரக் குளமென
தேங்கி நிற்கிறது
நதியின் கடைசி மூச்சு
அங்கங்கே.

பின்னாளில்
ஆற்றைக் கடக்கையில்
என் மகளுக்குச் சொல்வேன்
இதை ஆறு என்றே சொன்னார்கள் என.
என் மகளும்
அவள் மகளுக்குச் சொல்ல
மிச்சமிருக்கும் நதியின் சிதைந்த கூடு.