செவ்வாய், 21 மார்ச், 2017

விசிட்டிங் கார்டு - மனுஷி

ஐந்தடுக்கு மாடி கொண்ட பிரபல துணிக்கடைக்கு எதிரே எப்போதும் வாகன நெரிசலால் பிதுங்கி வழியும்  தெருவில் இருந்தது நந்தினி அச்சகம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அச்சகத்தின் வாசலில் ஒரு வாதாம் மரம் கிளைபரப்பி நின்றிருந்தது. அங்கு பேனர், அழைப்பிதழ் செய்ய அட்வான்ஸ் கொடுத்திருந்தாள் அவந்திகா.

அச்சகத்திலிருந்து எல்லாம் ரெடியாகிவிட்டதாக போன் வந்தது. பெரிய சப்போர்ட் எதுவும் இல்லாமல் அவள் நடத்துகிற முதல் நிகழ்ச்சி. மனம் பட்டாம்பூச்சியாகப் படபடத்தது. ஸ்கூட்டியில் கிளம்பிப் போனாள்.

அவள் எதிர்பார்த்ததை விடவும் அழகாகத் தயாராகியிருந்தது பேனர். அழைப்பிதழ் அவளுக்குப் பிடித்த நீல நிறம். தீவில் தளும்பும் கடல் நீர் நிறத்தில் பார்க்கவும் மனம் குளிர்ந்தது முகத்தில் தெரிந்தது.

அண்ணா, ரொம்ப அழகா இருக்கு. ஓவியம், படம்லாம் நல்லா செலக்ட் பண்ணி இருக்கிங்க. இனிமேல் எப்போ நிகழ்ச்சி பண்ணாலும் நீங்க தான் பேனர் செய்து கொடுக்கனும்.

வெறும் வார்த்தையாக இருக்கவில்லை அவை. உண்மையாகவே அவ்வளவு நேர்த்தியாக செய்திருந்தார்.

பேனர் மட்டுமில்ல. புக் கூட டிசைன் பண்றோம்" என்றபடி அவர் அச்சகத்தில் தயாரான புத்தகங்கள் சிலவற்றை சாம்பிள் சிலவற்றைக் காட்டினார்.

சென்னையில் சில பிரபல பதிப்பகங்களின் தரத்தில் தாள்களும் வடிவமைப்பும் இல்லை. ஆனாலும் ஓரளவு பரவாயில்லை எனும்படி சில புத்தகங்களும் இது ஓக்கே எனும்படி ஒரேயொரு புத்தகமும் இருந்தன.

இத்தனை புத்தகங்கள் போட்டிருக்கேன் பார் எனக் கணக்குக் காட்டுவதற்கான தலைப்புகள். புத்தகங்கள். உள்ளே புரட்டிப் பார்க்கத் தோன்றவேயில்லை. எண்ணிக்கை தான் எல்லாமே என்றாகிவிட்டது. ஒரேயொரு பாட்டு எழுதி உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். அவர்கள் பன்னிக்குட்டி போல வசவசவென்று எதையாவது எழுதித் தள்ளி இருந்தால்... ச்சே... ஏன் இப்படி யோசனை. சின்ன தடுப்பைப் போட்டாள் யோசனையின்மீது.

"விசிட்டிங் கார்டு கூட அடிச்சுத் தர்றோம்மா. கம்மியா தான் பண்ணித் தர்றோம்" என்றார்.

வாடிக்கையாளரைக் கடை தேடி வரவைக்கும் உத்திகளில் இதுவும் ஒன்று.

ஆசை யாரை விட்டது. உங்க அட்ரஸ் கொடுங்க எனக் கேட்கும் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் இது என் விசிட்டிங் கார்டு என கெத்தா கொடுத்திட்டு கம்பீரமான புன்னகையுடன் விடை பெறும் காட்சி கண்முன் விரிந்தது. பேனருக்கும் அழைப்பிதழுக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்த கையுடன் விசிட்டிங் கார்டு டிசைன் செலக்ட் செய்தாள். எவ்வளவு ஆகும் என விசாரித்தாள். மொத்தம் ஆயிரம் கார்டு. ஆனால் ஒவ்வொரு டிசைனுக்கும் ஒவ்வொரு ரேட். ஒரு கார்டை எடுத்து 
"இது எப்படிக் கிழித்தாலும் கிழியாது" 
என்று கிழித்துக் காட்டினார். கிழியவேயில்லை. அவளும் ஒருமுறை கிழித்துப் பார்த்தாள். சாதா பேப்பர் போல தான் இருந்தது. ஆனால் கிழியவில்லை. அந்த ஒரு குவாலிட்டியை தவிர வேறு எதுவும் அவளை ஈர்க்கவில்லை. தேடித் தேடித் தேடி வெகுநேரத்திற்குப் பிறகு ஒரு டிசைனை எடுத்து இந்தக் கார்டு போல பண்ணிக் கொடுங்க என்றாள். பின்னணியில் கடல் நீல நிறம் கொண்ட கார்டு.

கார்டில் இடம்பெற வேண்டிய தகவல்களை வெள்ளைத்தாளில் எழுதித் தரச் சொன்னார். பேனாவை எடுத்து முதலில் பெயரை எழுதி முடித்தவுடன் அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி எழுதி விடலாம். வீட்டு முகவரி பற்றி யோசிக்க யோசிக்க அழுகை வந்தது அவளுக்கு.
****
சொந்த ஊரை விட்டு வந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.

பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை பள்ளிக்கூடத்தை ஒட்டிய விடுதியில் தங்கிப் படித்தாள்.

இரண்டு அறைகள், விசாலமான வராண்டா, ஒரு கிச்சன் கொண்ட ஒரு மெத்தை வீடு தான் விடுதி. அங்கே முப்பது மாணவிகள். அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க ஒரு ஆயா. அவரும் அவர்களுடனே தங்கிக் கொள்வார். எப்போதாவது வீட்டுக்குப் போய் வருவார். வரும்போது ஒயர் கூடையில் ரவா லட்டு, கை முறுக்கு, சீடை, எல்லடை போன்ற தின்பண்டங்கள் கொண்டு வருவார். மாணவிகளுக்கு அதுதான் நொறுக்குத் தீனி. கையில் இருக்கும் காசில் வாங்கித் தின்ற பின்னும் ஆசை தீராது. ஒரு நோட்டில்.பெயர் எழுதி எத்தனை ரவா லட்டு, எத்தனை முறுக்கு என எழுதி வைத்து விட்டு எடுத்துக் கொள்வார்கள். வார விடுமுறை நாளில் பெற்றோர்கள் பார்க்க வரும்போது கொடுக்கிற கைக்காசில் கடனைக் கழித்து விடுவார்கள்.

அவந்திகா மட்டும் அந்த ஒயர் கூடை பக்கம் போகவே மாட்டாள். யாருடனும் பேசவும் மாட்டாள். என்ன என்றால் என்ன என்பதோடு சரி.

வார விடுமுறை நாட்களில் மொட்டை மாடியே கதியென கிடப்பாள். எல்லோருடைய பெற்றோரும் வந்து போன பிறகே கீழே இறங்குவாள். அழுது அழுது கண்கள் வீங்கி இருக்கும். நேராக போய் குளித்து முடித்து சிவந்து வீங்கிய கண்களுடன் அவளது படுக்கையில் தூங்கி எழுவாள். அவளுக்காக வீட்டிலிருந்து கடிதம் கூட வருவதில்லை என்பதில்தான் பெரிய வருத்தமும் ஏக்கமும் அவளுக்கு.

ஒருமுறை விளையாட்டு பீரியடில் ரிங் பால் விளையாடிக் கொண்டிருந்தாள். கூட விளையாடிய தோழிகளிடம்  "ஏம்ப்பா நாம ஏன் லெட்டர் எழுதிப் பேசிக்கக் கூடாது" எனக் கேட்டாள்.

"சாயந்திரம் போறோம். காலையில் மறுபடியும் மீட் பண்ணப் போறோம். அதுக்கு எதுக்கு லெட்டர்".

சாதாரணமாக அந்தக் கேள்வியைக் கடந்து விட்டார்கள். அவள் மேலே சொல்ல முடியாமல் மென்று முழுங்கினாள்.

கல்லூரியில் சேர்ந்த பிறகும் முகவரி ஒரு பெரும் பிரச்சினையாகப் பின் தொடர்ந்தது. விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும்போதெல்லாம் முகவரி என்ற இடத்தில் கைகள் சற்றுத் தயங்கி நிற்கும். முக்கியமாக ஐடி கார்டில்.

சொந்த ஊரின் முகவரியை எழுதலாம் என்றால் அங்கிருந்து கடிதம் அல்லது இண்டர்வியூ கார்டு வந்திருக்கு என்று தகவல் சொல்லவோ, கொண்டு வந்து கொடுக்கவோ அண்ணனுக்கோ அப்பாவுக்கோ நேரமும் இல்லை. மனமும் இல்லை. இரண்டு மூன்று இண்டர்வியூக்கள் இதனால் போக முடியாமல் போனது. இவளும் அதற்காக அவர்களிடம் சண்டையிடவில்லை. கோபித்துக் கொள்ளவில்லை. அவ்வளவு தூரம் விலகிப் போயிருந்தாள்.

ஒன்றரை வருடங்கள் தோழி ஒருத்தி தனது முகவரியைக் கடனாகக் கொடுத்திருந்தாள். அங்கே வருகிற கூரியர், ஸ்பீடு போஸ்ட் எல்லாம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை கைக்கு வந்து சேர்ந்தன.

போகப் போக அதுவும் எவ்வளவு நாளைக்கு என்று தோன்ற அவள் படிக்கும் கல்லூரியின் முகவரியே தொடர்பு முகவரியானது. ஆனாலும் ஐடி கார்டில் தோழியின் முகவரியே நிரந்தரமானது.

கல்லூரி வாழ்க்கை முடியும் தருவாயில் மீண்டும் முகவரி பிரச்சினை தலை தூக்க நிலைகுலைந்து போனாள். ஹாஸ்டலைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியிருப்பது என முடிவு செய்தாள். அவ்வளவு சுலபத்தில் வீடு கிடைக்கவில்லை. பெண்ணாய் பிறந்ததற்காக முதன்முதலாக வருத்தப்பட்டாள்.

ஒருவழியாக வீடு கிடைத்தது. முகவரியும் கிடைத்தது. அந்த நாளைப் போல சந்தோஷமாக அவள் இருந்திருப்பாளா தெரியாது. மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போய் முத்தமிட்டாள் கண்ணாடியில்.

சரியாக எண்ணி ஆறு மாதம். வீட்டு ஓனரம்மாவுடன் சின்ன சின்ன முரண்பாடுகள். கூடவே அறையில் வைக்கும் பொருட்கள், பணம் எல்லாம் காணாமல் போகவும் தேவையில்லாமல் பெரிய மனஸ்தாபத்துடன் வீட்டை காலி செய்ய வேண்டாமென மீண்டும் வீடு பார்த்தாள் தோழியுடன். முழுதாக இருபது நாளுக்குப் பிறகு வீடு ஒன்று அமைந்தது. வீட்டு ஓனரம்மாவிடம் சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டு, பொய்யாய் புன்னகைத்து, பொய்யாய் வருத்தப்பட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து தனது பொருட்களுடன் முகவரியையும் தூக்கிக் கொண்டு புது வீட்டில் குடியேறினாள்.

வீடு மாறினாலும் ஆறு மாதத்திற்கு முன்பு முகவரி வாங்கியவர்கள் அதே முகவரிக்கு இன்னமும் இதழ்கள், அழைப்பிதழ், நூல்கள் என அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவள் கைகளைத் தீண்டாமல் அனாதைகளைப் போல் அவையெல்லாம் ஓனரம்மா வீட்டின் அலமாரியில் படுத்துக் கொண்டன.
****
அண்ணா, விசிட்டிங் கார்டு அப்புறமா போட்டுக்கறேன்.

பயங்கர பிஸியாகத் தன்னைக் காட்டிக் கொண்டபடி பேனர், அழைப்பிதழ்களை வாங்கிக் கொண்டு கண்கள் பனிக்க வெளியேறினாள்.

முகவரிகள் மாறிக் கொண்டே இருந்தன. இத்தனை வருடத்தில் அவளது முகவரிக்கு இன்னமும் ஒரு கடிதம் கூட வரவில்லை.

நன்றி : புழுதி இதழ், மார்ச் 2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக