நெய்வேலிப்
புத்தகக் கண்காட்சியின் குறும்படப் போட்டியில் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்ட
செய்தி வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்புக்காக நான் பெரும் முதல் அங்கீகாரம்
இது.
இந்த நேரத்தில்
புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் சில நாடகங்களில் நடித்த நினைவுகள் மனதுக்குள்
வந்து போயின. அதேபோல 2010இல் புதுச்சேரியில் #பதியம்_அமைப்பு நடத்திய பத்துநாள் குறும்படப்
பயிற்சிப் பட்டறை நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு
எனது அன்பான நன்றிகள். குறிப்பாக, நிழல் திருநாவுக்கரசு சார், பாரதி வாசன் ஆகியோருக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அந்தக் குறும்படப்
பயிற்சிப் பட்டறையில் அறிமுகம் ஆனவர் தான் Arumugam Thangavelayutham அப்பா. பயிற்சிப்
பட்டறைக்குப் பிறகு வெறும் முகநூல் நட்பு என்பதைத் தாண்டி சொந்த மகளைப் போல பாசத்தோடு
பழகுபவர் அவர். ஈழ மக்களின் துயரங்களைப் பேசும் மீண்டும் வருவோம், தமிழினி, பிஞ்சு
ஆகிய மூன்று படங்களை அவர் இயக்கியுள்ளார். மூன்று படங்களிலும் நான் நடித்துள்ளேன்.
நடிப்பதற்கான பெரிய பிரயத்தனங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டைப் போலத்தான் நடிக்க ஒப்புக்
கொண்டேன். ஆனால், ஒவ்வொரு படத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்.
இரயில் பயணங்களைப்
போலவே பைக் பயணங்கள் மீது பெருங்காதல் எனக்கு. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு நேற்று
இயக்குநர் அப்பா, நண்பர்கள் ஸ்டீபன், ஜேம்ஸ், லெனோ ஆகியோருடன் ஸ்கூட்டியில் பயணம் செய்தோம்.
கிளம்பும்போது மண்டையைக் கொளுத்தும் வெயில்.
கடலூரில்
அம்மா உணவகத்தில் மதிய உணவு. சுமாரான சாம்பார் சாதம். பத்தாம் வகுப்பு வரை நான் படித்த
திருநாவலூர் அரசு பள்ளியின் மதிய உணவின்போது வழங்கப்படும் சாம்பார் சாதத்தின் ருசி.
ஓரளவு சுவையான தயிர் சாதம். தொட்டுக் கொள்ள
ஊறுகாய் கூட இல்லை. பசி ருசி அறியாது. சாப்பிட்டு முடித்தோம் என்பதை விட அள்ளி வாய்க்குள்
கொட்டிக் கொண்டோம். 25 ரூபாயில் மதிய உணவு முடிந்தது. சாப்பிட்டு முடித்த பின் தான்
சூழலைக் கவனித்தேன். நிறைய கல்லூரி மாணவ மாணவிகள், எளிய மக்கள் பலரும் அம்மா உணவகத்தின்
வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.
சுமார் 3
மணி அளவில் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள் நுழைந்தோம். வானம், கறுத்திருந்தது.
மழை பெய்வதற்காக காத்திருந்தது. ஆனால், சொல்ல
முடியாத அளவுக்கு வெக்கை. பிரம்மாண்டமான கலை வேலைப்பாடுகள் கொண்ட புத்தகக் கண்காட்சியின்
நுழைவாயிலை ரசித்தபடி உள்ளே நுழைந்தோம். குறும்படப் போட்டியில் பரிசு பெற்ற மூன்று
குறும்படங்கள் திரையிடத் தயாராக இருந்தன. மூன்று படங்களுமே அதனதன் அளவில் தனித்துவம்
வாய்ந்தவை. வம்சி (வலி), தினா ராகவ் (உண்மை அறிவாயோ வண்ணமலரே), மனோகரன் (பிள்ளையார்
சுழி) ஆகிய மூவருக்கும் எனது அன்பின் வாழ்த்துகள். மேலும், உடன் விருது பெற்ற அனைத்து
கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
இந்த விருதினை
திரைப்பட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி வழங்கினார். பல படங்களை இயக்கியும்,
பல படங்களில் நடித்தும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார் சமுத்திரக்கனி.
என்றாலும் இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் அவர்களின் இயக்கத்தில் காடு திரைப்படத்தில்
அவர் ஏற்று நடித்திருந்த போராளி கதாப்பாத்திரம்தான் சமுத்திரக்கனி மீதான மரியாதையைக்
கொடுத்தது. நல்ல சினிமாவா இல்லையா என்கிற கேள்விகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருந்தாலும்
மதிப்பெண்சார் கல்விச் சூழல் மற்றும் பெற்றோர் குழந்தைகள் உறவுச் சிக்கல் குறித்துப்
பேசிய மிக முக்கியமான படம் அப்பா. அதற்காகவும் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அவரது
கையால் இந்த விருதினைப் பெற்றது சிறந்த கௌரமாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைக்குமாயின்
சமுத்திரக்கனி சாருடன் ஒருநாள் சந்தித்துப் பேச வேண்டும்.
கலைநேசன்
பிரபு சாரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். விருது அறிவிப்பு வந்த நாளில் இருந்து நிகழ்வு
குறித்து அவ்வளவு பொறுமையுடன் விளக்கிச் சொல்லி, என்னைப் பற்றிய தகவல்களை அறிந்து குறித்துவைத்துக்
கொண்டு, வருகையை உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே நெய்வேலி வந்தடையும் வரை தொடர்பில்
இருந்தார். அது வெறுமனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற முறையிலான சடங்குத்தனமான பேச்சு
அல்ல. சக மனிதர்கள் மீதான தன்னலமற்ற அன்பு.
நிகழ்வு முடிந்து இரவு வழியனுப்பி வைக்கும் வரைக்கும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார்.
அந்தப் பேரன்புக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
சில ஆண்டுகளுக்கு
முன்பு செஞ்சியில் நறுமுகை ஜெ.ராதாகிருஷ்ணன் அண்ணன் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வு ஒன்றில்
நெய்வேலி பாரதி குமார் அவர்களைச் சந்தித்தேன். அதன்பிறகு நேற்று தான் புத்தகக் கண்காட்சியில்
அவரைச் சந்தித்தேன். செஞ்சி நிகழ்வைப் பற்றி அவருக்கு நினைவூட்டியதும அவர் ஆச்சரியப்பட்டுப்
போனார். அவரைச் சந்தித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
திருவண்ணாமலையில்
இருந்து ஜெயஸ்ரீ அம்மா, ஷைலஜா அம்மா, பவா தோழர், சபா தோழர் இன்னும் நிறைய பேர் வந்திருந்தார்கள்.
எல்லோரையும் ஒரே இடத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மகன் விருதுபெறும் போது குடும்பமாக வந்திருந்து வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது.
சிறந்த கதைக்கருவிற்கான
விருதினைப் பெற வருகை தந்திருந்த எழுத்தாளர் அன்புத் தோழர் கரீமைச் சந்தித்தது கூடுதல்
மகிழ்ச்சி. உடன்பிறவா அண்ணன் என்கிற உணர்வினை எப்போதும் தரும் கரீம் தோழரின் நட்பும்
அன்பும். கலையும் இலக்கியமும் எனக்கு என்ன செய்தது என்று யாரேனும் கேட்டால் என்னை நேசிக்கும்
மனிதர்களை என்வசம் கொடுத்தது வேறென்ன வேண்டும் என கர்வத்தோடு சொல்லிக் கொள்வேன். மகிழ்ச்சி
கரீம் தோழர்.
நிகழ்வு முடிந்து
புத்தகக் கண்காட்சியின் சிற்றுண்டிப் பகுதிக்குப் போய் கொஞ்சமாய் வயிற்றை நிரப்பிக்
கொண்டபின் விடைபெற்றுக் கிளம்புகையில் மழை கொட்டத் துவங்கியது. அப்போது மணி 9ஐத் தாண்டி
இருந்தது.
இரவின் ரம்மியமும்
மழைச் சாரலும் எங்கள் பயணத்தைக் கவித்துமாக்கியது. இயக்குநர் அப்பாவைச் சென்னை பேருந்தில்
ஏற்றிவிட்டு, நானும் நண்பர்கள் மூவரும் சூடான சுமாரான தேநீரை அருந்திவிட்டு நெய்வேலியில்
இருந்து கிளம்பினோம். அப்போது மணி 10.30. மழையும்
எங்களோடு அந்த இரவில் பயணமானது. இரவில் பெய்து கொண்டிருந்த மழைதான் எங்கள் பயணத்தை
மறக்க முடியாத பயணமாக ஆக்கியது. பாட்டு பாடிக் கொண்டும், கதை சொல்லிக் கொண்டும் இரவின்
பயம் சிறிதும் இன்றிப் புதுவையை வந்தடைந்தோம்.
நெய்வேலி
பயணத்தின் நினைவுகள் சில்லிட்டுக் கொண்டே இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக