வியாழன், 6 டிசம்பர், 2018

அன்பின் உண்டியல்

உண்டியல் வாங்க வேண்டுமென
நானும் தோழியும் கிளம்பினோம்.
பாண்டிச்சேரியில் காலாப்பட்டு குளம் அருகில் உள்ள இரண்டு கடைகள், கோட்டக்குப்பத்தில் இருக்கும் இரண்டு கடைகள், அஜந்தா சிக்னல் அருகில் இருக்கும் ஒரு கடை இவைகள் தான் எனக்குத் தெரிந்தவை.
இது தவிர, மகாத்மா காந்தி சாலை, சிவன் கோவில் எதிரில் சிவராத்திரி சமயங்களில் பொம்மைக்கடையில் உண்டியல் விற்கும். கொலுவுக்கு வைக்கும் கலர்கலரான பொம்மைகளுடன், அரைடவுசரும் தொப்பியும் போட்ட குட்டிப் பையன் உண்டியல், மீன் உண்டியல், ஆப்பிள் உண்டியல், மாம்பழ உண்டியல், கப்பம் உண்டியல், ஆரஞ்சுப் பழ உண்டியல் என விதவிதமான உண்டியல் அங்கே இருக்கும்.
அஜந்தா சிக்னல் அருகில் உள்ள மண்பானைக் கடை மூடியிருந்தது. கோட்டக்குப்பத்தில் இருக்கின்ற இரண்டு மண்பானைக் கடைகளிலும் உண்டியல் தவிர பானை, சட்டி, தொட்டிச் செடிகள் என எல்லாமும் இருந்தன. அதைவிட்டால் பாண்டிச்சேரியில் முன்பு மத்தியச் சிறைச்சாலை இருந்த இடத்தில் சரியாகச் சொன்னால் கொசக்கடை வீதியில் நான்கைந்து மண் பானைக் கடையில் வாங்கலாமெனக் கிளம்பினோம். வார நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை.
முதல் கடையில் உண்டியல் இல்லை. அடுத்த கடையில் ஆப்பிள் உண்டியல் இரண்டு வைத்திருந்தார் கடைக்காரம்மா.
ஆரோவில் வீட்டுக்கு வந்த புதிதில் தொட்டிச் செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டபோது மொத்தமாகப் பத்துத் தொட்டிகள் வாங்கி எடுத்து வந்தேன். வெயில் காலத்தில் மண்பானை ஒரு முறை வாங்கியிருக்கிறேன். அதன்பிறகு தோழிகள் சட்டிப்பானை, தொட்டிச் செடிகள் வாங்க வேண்டும் என்று கேட்டால் இங்கே தான் அழைத்து வருவேன்.

வண்டியை நிறுத்திவிட்டு உண்டியல் விலை கேட்டோம். ஒரு உண்டியல் விலை முப்பது ரூபாய் என்றார். எங்களுக்கு நான்கு உண்டியல் வேண்டுமே என்றதும் கடைக்குள் போய் வைத்திருந்த எல்லா உண்டியல்களையும் எடுத்து வந்து காட்டினார். மொத்தம் எட்டு உண்டியல். எம்மா, உண்டியல் வாங்கினால் உள்ள உங்க கையால் காசு போட்டு விஷ் பண்ணிக் கொடுக்கனும் என்றோம். அவர் வைத்திருந்த கல்லாப் பெட்டியில் இருந்து சில்லறையை எடுத்து நான்கு உண்டியலிலும் காசைப் போட்டுக் கையில் கொடுத்தார். விளையாட்டுக்குத்தான் சொன்னோம்மா என்றதும் பரவால்ல எங்க ஊட்டுப் புள்ளைங்க மாதிரி தான் என்று சிரித்துக் கொண்டே உண்டியல் போனி பண்ணார்.
உண்டியல்தான் வாங்குவது திட்டம். கூடவே, மீன்குழம்பு வைக்க ஒரு சட்டியும், கீரைக் கடைய ஒரு சட்டியும் எடுத்து விலை கேட்டோம். ஒரு சட்டி நாப்பது ரூபாம்மா. உண்டியல் வேற வாங்குறிங்க. ஒரு சட்டிக்கு முப்பது ரூபாய் கொடுங்க போதும் என்றார். அதெல்லாம் குறைக்க வேண்டாம். நீங்க என்ன விலை வைச்சிங்களோ அதையே சொல்லுங்க என்று, சட்டியைத் தட்டிப் பார்த்து இரண்டு சட்டி எடுத்து வைத்தோம். நான்கு உண்டியல் வாங்கும் திட்டத்தைக் கொஞ்சம் நீட்டித்து மீதி இருக்கும் நான்கு உண்டியலையும் எடுத்துக் கொள்கிறோம் என்று எட்டு உண்டியலையும் எடுத்து வைத்துக் கொண்டோம். அந்த உண்டியலிலும் சில்லறை காசைப் போட்டு போனி செய்து ஒரு மஞ்சள்நிறச் சாக்குப் பையில் சட்டியையும் உண்டியல்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கட்டிக் கொடுத்தார்.
அங்கே குட்டி குட்டி அகல் விளக்குகள் குவியல் இருந்தது. அதன் விலையைத்தான் கேட்டோம். கை நிறைய விளக்கை அள்ளி இந்தாம்மா இந்தக் குட்டிப் பொண்ணுக்கு இது என பத்து அகல்விளக்குகளை என் கையில் கொடுத்தார். இது உனக்கு என என் தோழிக்கு ஆறு விளக்குகளைக் கொடுத்தார். எவ்ளோமா என்றேன். வச்சிக்கம்மா. நீ அந்த அகலை வைச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டே இருந்தல்ல. அம்மா கொடுக்கிறேன் வச்சிக்க என்றார்.

ம்மா, உங்க கடையோட சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றேன். நல்லா எடுத்துக்க என்று சேலையைச் சரி செய்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தார். தேங்க்ஸ் மா என்று சொல்லிவிட்டு, கட்டி வைத்த மூட்டையை வண்டியின் முன்பு வைத்துக் கொண்டு கிளம்பினோம். எம்மா, அடுத்தமுறை வரும்போது இந்தப் போட்டோவை ஒரு காப்பி எடுத்து வந்து கொடுக்கனும் என்றார்.

அவசியம்மா என்றபடி  பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
அந்த எளிய அன்பு மனதைச் சிலிர்க்கச் செய்தது.
மனித வாழ்வின் ஆணிவேர் எளிய அன்பன்றி வேறென்ன.

1 கருத்து:

  1. படித்த மனிதர்கள் அன்பாகப் பேசினால் என்னவோ தெரியவில்லை வியாபாரிகள் உருகிப் போகிறார்கள். அவ்வளவு எளிமையா இருப்பாங்க என்று அன்பைப் பொழிகிறார்கள்.

    பதிலளிநீக்கு