வெள்ளி, 7 ஜூலை, 2017

நெய்வேலிக் குறும்படப் போட்டி விருது விழா - பயணம்



நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியின் குறும்படப் போட்டியில் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்ட செய்தி வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்புக்காக நான் பெரும் முதல் அங்கீகாரம் இது.
இந்த நேரத்தில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் சில நாடகங்களில் நடித்த நினைவுகள் மனதுக்குள் வந்து போயின. அதேபோல 2010இல் புதுச்சேரியில் #பதியம்_அமைப்பு நடத்திய பத்துநாள் குறும்படப் பயிற்சிப் பட்டறை நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது அன்பான நன்றிகள். குறிப்பாக, நிழல் திருநாவுக்கரசு சார், பாரதி வாசன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அந்தக் குறும்படப் பயிற்சிப் பட்டறையில் அறிமுகம் ஆனவர் தான் Arumugam Thangavelayutham அப்பா. பயிற்சிப் பட்டறைக்குப் பிறகு வெறும் முகநூல் நட்பு என்பதைத் தாண்டி சொந்த மகளைப் போல பாசத்தோடு பழகுபவர் அவர். ஈழ மக்களின் துயரங்களைப் பேசும் மீண்டும் வருவோம், தமிழினி, பிஞ்சு ஆகிய மூன்று படங்களை அவர் இயக்கியுள்ளார். மூன்று படங்களிலும் நான் நடித்துள்ளேன். நடிப்பதற்கான பெரிய பிரயத்தனங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டைப் போலத்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால், ஒவ்வொரு படத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்.

இரயில் பயணங்களைப் போலவே பைக் பயணங்கள் மீது பெருங்காதல் எனக்கு. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு நேற்று இயக்குநர் அப்பா, நண்பர்கள் ஸ்டீபன், ஜேம்ஸ், லெனோ ஆகியோருடன் ஸ்கூட்டியில் பயணம் செய்தோம். கிளம்பும்போது மண்டையைக் கொளுத்தும் வெயில்.
கடலூரில் அம்மா உணவகத்தில் மதிய உணவு. சுமாரான சாம்பார் சாதம். பத்தாம் வகுப்பு வரை நான் படித்த திருநாவலூர் அரசு பள்ளியின் மதிய உணவின்போது வழங்கப்படும் சாம்பார் சாதத்தின் ருசி.  ஓரளவு சுவையான தயிர் சாதம். தொட்டுக் கொள்ள ஊறுகாய் கூட இல்லை. பசி ருசி அறியாது. சாப்பிட்டு முடித்தோம் என்பதை விட அள்ளி வாய்க்குள் கொட்டிக் கொண்டோம். 25 ரூபாயில் மதிய உணவு முடிந்தது. சாப்பிட்டு முடித்த பின் தான் சூழலைக் கவனித்தேன். நிறைய கல்லூரி மாணவ மாணவிகள், எளிய மக்கள் பலரும் அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.  
சுமார் 3 மணி அளவில் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள் நுழைந்தோம். வானம், கறுத்திருந்தது.  மழை பெய்வதற்காக காத்திருந்தது. ஆனால், சொல்ல முடியாத அளவுக்கு வெக்கை. பிரம்மாண்டமான கலை வேலைப்பாடுகள் கொண்ட புத்தகக் கண்காட்சியின் நுழைவாயிலை ரசித்தபடி உள்ளே நுழைந்தோம். குறும்படப் போட்டியில் பரிசு பெற்ற மூன்று குறும்படங்கள் திரையிடத் தயாராக இருந்தன. மூன்று படங்களுமே அதனதன் அளவில் தனித்துவம் வாய்ந்தவை. வம்சி (வலி), தினா ராகவ் (உண்மை அறிவாயோ வண்ணமலரே), மனோகரன் (பிள்ளையார் சுழி) ஆகிய மூவருக்கும் எனது அன்பின் வாழ்த்துகள். மேலும், உடன் விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த விருதினை திரைப்பட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி வழங்கினார். பல படங்களை இயக்கியும், பல படங்களில் நடித்தும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார் சமுத்திரக்கனி. என்றாலும் இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் அவர்களின் இயக்கத்தில் காடு திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த போராளி கதாப்பாத்திரம்தான் சமுத்திரக்கனி மீதான மரியாதையைக் கொடுத்தது. நல்ல சினிமாவா இல்லையா என்கிற கேள்விகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருந்தாலும் மதிப்பெண்சார் கல்விச் சூழல் மற்றும் பெற்றோர் குழந்தைகள் உறவுச் சிக்கல் குறித்துப் பேசிய மிக முக்கியமான படம் அப்பா. அதற்காகவும் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அவரது கையால் இந்த விருதினைப் பெற்றது சிறந்த கௌரமாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைக்குமாயின் சமுத்திரக்கனி சாருடன் ஒருநாள் சந்தித்துப் பேச வேண்டும்.

கலைநேசன் பிரபு சாரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். விருது அறிவிப்பு வந்த நாளில் இருந்து நிகழ்வு குறித்து அவ்வளவு பொறுமையுடன் விளக்கிச் சொல்லி, என்னைப் பற்றிய தகவல்களை அறிந்து குறித்துவைத்துக் கொண்டு, வருகையை உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே நெய்வேலி வந்தடையும் வரை தொடர்பில் இருந்தார். அது வெறுமனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற முறையிலான சடங்குத்தனமான பேச்சு அல்ல.  சக மனிதர்கள் மீதான தன்னலமற்ற அன்பு. நிகழ்வு முடிந்து இரவு வழியனுப்பி வைக்கும் வரைக்கும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். அந்தப் பேரன்புக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் நறுமுகை ஜெ.ராதாகிருஷ்ணன் அண்ணன் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வு ஒன்றில் நெய்வேலி பாரதி குமார் அவர்களைச் சந்தித்தேன். அதன்பிறகு நேற்று தான் புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தேன். செஞ்சி நிகழ்வைப் பற்றி அவருக்கு நினைவூட்டியதும அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அவரைச் சந்தித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

திருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அம்மா, ஷைலஜா அம்மா, பவா தோழர், சபா தோழர் இன்னும் நிறைய பேர் வந்திருந்தார்கள். எல்லோரையும் ஒரே இடத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மகன் விருதுபெறும் போது குடும்பமாக வந்திருந்து வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது.

சிறந்த கதைக்கருவிற்கான விருதினைப் பெற வருகை தந்திருந்த எழுத்தாளர் அன்புத் தோழர் கரீமைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. உடன்பிறவா அண்ணன் என்கிற உணர்வினை எப்போதும் தரும் கரீம் தோழரின் நட்பும் அன்பும். கலையும் இலக்கியமும் எனக்கு என்ன செய்தது என்று யாரேனும் கேட்டால் என்னை நேசிக்கும் மனிதர்களை என்வசம் கொடுத்தது வேறென்ன வேண்டும் என கர்வத்தோடு சொல்லிக் கொள்வேன். மகிழ்ச்சி கரீம் தோழர்.

நிகழ்வு முடிந்து புத்தகக் கண்காட்சியின் சிற்றுண்டிப் பகுதிக்குப் போய் கொஞ்சமாய் வயிற்றை நிரப்பிக் கொண்டபின் விடைபெற்றுக் கிளம்புகையில் மழை கொட்டத் துவங்கியது. அப்போது மணி 9ஐத் தாண்டி இருந்தது.

இரவின் ரம்மியமும் மழைச் சாரலும் எங்கள் பயணத்தைக் கவித்துமாக்கியது. இயக்குநர் அப்பாவைச் சென்னை பேருந்தில் ஏற்றிவிட்டு, நானும் நண்பர்கள் மூவரும் சூடான சுமாரான தேநீரை அருந்திவிட்டு நெய்வேலியில் இருந்து கிளம்பினோம். அப்போது மணி 10.30.  மழையும் எங்களோடு அந்த இரவில் பயணமானது. இரவில் பெய்து கொண்டிருந்த மழைதான் எங்கள் பயணத்தை மறக்க முடியாத பயணமாக ஆக்கியது. பாட்டு பாடிக் கொண்டும், கதை சொல்லிக் கொண்டும் இரவின் பயம் சிறிதும் இன்றிப் புதுவையை வந்தடைந்தோம்.

நெய்வேலி பயணத்தின் நினைவுகள் சில்லிட்டுக் கொண்டே இருக்கிறது.

திங்கள், 26 ஜூன், 2017

வெற்றுக் கூச்சல்களை புரட்டிப்போடும் ஆதிக்காதல் -ஹெச்.ஜி.ரசூல்

வெற்றுக் கூச்சல்களை புரட்டிப்போடும் ஆதிக்காதல் -ஹெச்.ஜி.ரசூல்

என் புன்னகையை வேரோடு பிடுங்கிச் சென்றுவிட்ட போதும்மீண்டும் என்னால் புன்னைகைக்க முடிகிறது
உன்னைக்கொல்ல வேறுவழியில்லை எனக்கு.
இது கவிஞர்மனுஷியின் குரல். பாலசாகித்திய அகாடெமி விருதுபெற்ற கவிஞர். 35 வயதுக்கு உட்பட்ட பிரிவு இது. .இவரது குட்டி இளவரசியின் சொற்கள், முத்தங்களின் கடவுள் தொகுப்புகளுக்கு பிறகு வெளிவந்த  மூன்றாவது கவிதைநூலான  ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் இந்த விருதைப் பெறுகிறது.
இச்சூழலில் கவிதைசார்ந்த தகுதிப்பாடு பற்றிஅவசியமற்ற வசைச் சொற்களோடு உரத்த குரலில்  பொதுவெளியில் ஓரிரு குரல்கள் கேட்கின்றன.

இக்குரல்கள்  வர்ணாசிரம சாதீய படிநிலை சொல்கிற மேலானது / கீழானது  அரசியலை மையப்படுத்தும் மனோபாவத்தின் குரலாகும். இது ஒற்றைப் படுத்தப்பட்ட எழுத்து முறை மட்டுமே உன்னதமானது , தானற்ற , தன்சார்பற்ற பிற அனைத்துமே கீழானதென்கிற இந்துத்துவ சார்பு அதிகார அரசியலை இலக்கியத்தளத்தில் நிறுவும் குரலாக வெளிப்படுகிறது. இந்த நோக்கிலே எழுப்பப் படும் வெற்றுக்கூச்சல்களை புரட்டிப்போடும் ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகளை மனுஷி தன் கவிதைப் பரப்பெங்கும் சுழலவிடுகிறார்.

தழைக்கும் முத்தங்களால் இரவுகவிதையாகிறது.
குழந்தைகளின் மீதான கொலைகளின் வாதை பிரபஞ்ச ஓலமாக கேட்கிறது.தொழில்நுட்ப முதலாளித்துவம் உருவாக்கிய உறவின் சிதைவுகளில் சொற்களற்றஉலகில் ஸ்மைலிகள் மட்டுமே உரையாடிக் கொண்டிருக்கின்றன. காதலுக்காக ஒப்புக்கொடுத்தலில் நிகழ்ந்த ஏமாளித்தனம் மனசெங்கும் வெறுமையைப்  பரப்பிச் செல்கிறது. மனித உறவுகளின் துர்மரணத்திற்கு  பதிலீடாக பறவைகளையும், விலங்குகளையும் சிநேகமிக்க உறவுகளாக மறு படைப்பு செய்கின்றன.

ஆண்திமிரை தீவிரமொழிசார்ந்து குத்திக்கிழிக்கும் சொற்களில் கோபம் கொப்பளிக்கிறது. நடுவீதியில் அணிலை, வீட்டுக்குள் சிறகடித்த பட்டாம் பூச்சியை, தொட்டிச் செடியின் மலரை, ஜன்னலோர சிட்டுக்குருவிகளை, நாய்க்குட்டியை, வாசற்படியை சுற்றிவரும் பூனையை, தோட்டத்தில் நட்டுவைத்த செடிகளை  நேசித்த அவள் கழுத்தில்தான் உங்கள் கத்தியை வைத்து அழுத்துகிறீர்கள். அவளின் குருதியைத்தான் பழச்சாறென அருந்தி தாகத்தை தணித்துக் கொள்கிறீர்கள்.. இது ஆணின் முன்னும் பணிய மறுக்கும் எதிர்ப்பின் மொழி.

எளிய சொற்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட மாறா துயருறு கொண்ட ரகசியங்கள் மனுஷியின் கவிதைப்பரப்பெங்கும் அலைபாய்கின்றன.பறவையின் சுவடை பின்தொடர்ந்து செல்லும் நிழலாக தன்னை உருவகப்படுத்தும் கவிதை சொல்லியிடம் தனிமையின் விடுபடாதுயரம் நிறைந்திருக்கிறது. காதல்,பிரிவு, துயரம் இழுத்துச்சென்று கடலில் மூழ்கடிக்கிறது. நடுங்கும் கரங்களை இறுகப்பற்றும் போது சொற்கள் நடுங்குகின்றன. இழப்பின் வலிகளாக மணல்வீடு சிதைந்து கிடக்கிறது.மாமழைக்காலம் சுவடுகளை அழிக்கிறது.காகிதத்தால் செய்யப்பட்ட கப்பலோடு காத்திருத்தல் தொடர்கிறது. விட்டுவிடுதலையாகி பிரபஞ்சமெங்கும் பறத்தலின் சுதந்திரம் முன்னே சிறகவிழ்க்கிறது.
உன்னைக் காத்திருக்கவே செய்கிறேன்
என்னைக் காத்திருக்கச் செய்துவிட்டு
என காத்திருத்தலின் நெடிய துயரத்தை எழுதிச் செல்கிறது.

நட்பு, காதல்,உறவு எனத் தொடரும் பன்மைத்தன்மையான பிரிதலின் துயரமாக இருக்கிறது. நம்பியவைகள் கைகூடாமல் போக ஏமாற்றத்தின் விளிம்பில் தள்ளி விடுகின்றன.இதன் அடியாளத்தில் அரசியல் குரலும் இணைந்திருக்கிறது.கவிதையின் உணர்வடுக்குகள் வாசகனுக்கு சொல்லிச் செல்லும் உலகம் வேறானது.ஒயின் போத்தல் கொலைக்கான காரணம், சித்தார்த்தனின் மந்திரச்சொல் ,நிலாவின் புத்தன்,சாத்தானுடன் தேநீர் அருந்துதல்,ஆறு என்றே சொன்னார்கள் என விரியும் கவிதைகளில் புனைவுத்தளத்தின் படைப்பாக்கமுறையை உணர்த்துகின்றன.

இந்துத்துவ அரசியலுக்கு  எதிரான என் உணவு என் உரிமை கவிதை புராணவியல் வரலாற்றை கட்டுடைத்து மாட்டிறைச்சி தடை அரசியலுக்கு எதிரான பொருத்தப்பாடுடைய அர்த்த உற்பத்தியையும் உணர்வுத்தளத்தில் அதியற்புதமாக உருவாக்கிவிடுகிறது.

வேசியென கூச்சலிடுங்கள்
கொல்வதெற்கென ஆயுதங்களை தூக்கி வாருங்கள்
அதிகார போதை தலைக்கேறி
தொண்டைத்தண்ணீர் வற்ற உளறிக் கொட்டுங்கள்
இப்போதும் சொல்கிறேன்
பிள்ளைக்கறி கேட்டவனே உங்கள் கடவுள்
பிறன் மனைவியைப் புணர துடித்தவனே உங்கள் கடவுள்
பக்தனை தீயிட்டுக் கொளுத்தியவனே உங்கள் கடவுள்
இன்னும் சொல்கிறேன்
வேடனின் கையால் எச்சில் மாமிசம் வாங்கித் தின்றவனே
உங்கள் கடவுள்
அவனை முதலில் கொன்று விடுங்கள்
என உணவை நான் சமைத்து உண்டு பசியாறிக் கொள்கிறேன்

நேரடி மொழிசார்ந்த ஈழப்போராளி திலீபனும் இந்த ஆதிக்காதலில் பங்கெடுத்துக் கொள்வதைப்பார்க்கலாம்.
பெண்ணிய வாசிப்பு நிறைந்த பிரதி நிர்பயாக்களின் தேசம். இது புராணவியல் தொன்மங்களில் அநீதி இழைக்கப்பட்ட அனுசுயா, ரேணுகா,அகலிகை,சூர்ப்பனகை, சீதை, கண்ணகி, மாதவி, சமகாலத்தின் நிர்பயா,விநோதினிகள், ஆயுதப்போராளி இசைபிரியா என ஒடுக்கப்பட்ட பெண்வெளியை அகழ்ந்து படைப்பாக்கி தருகிறது.

நிகழ்தளத்தின் ஒரு பெண் கால்மேல் கால் போட்டு உட்காரும் நடத்தையில் கூட   அதிகாரத்துவம் கட்டமைத்த ஒழுங்கமைவுக்கு எதிரான நுண்அரசியலை பெண்வெளியின் தடம் பதிந்த எழுத்தாகிறது.

பெண்ணியத்திற்குள் இயங்கும் சாதீய அரசியலையும் மிக எளிய மொழியில் உரையாடிச் செல்லும் மனுஷி

ஒருவேளை நீங்கள் கருதுவது போல்
நான் கவுண்டச்சி அல்லவென்று தெரிந்தால்
நீங்கள் முகம் சுழிக்கலாம்
என்னுடனான உரையாடலை துண்டித்துக் கொள்லாம்.
என் கவிதைகள் கூட தீட்டுக்கு உரியதாகலாம்

புறமும், அகமும், வன்மையும், மென்மையும் கலந்த மொழியை தேவைக்கேற்ப கையாளும் எடுத்துரைப்பியல் முறை மனுஷியின் கவிதைகளின் விஷேசித்த அம்சம். எனவேதான் அவரின் கவிதை ஒன்று

சிறுபறவையின் மரணத்திற்காக சவக்குழியைத் தோண்டிய இந்தக் கைகளை என்ன செய்வதென கேட்டு திகைத்து நிற்கிறது.

மனுஷியின் கவிதைகளின்  பல்குரல்தொனி  யதார்த்தமாகவும், நுண்அனுபவமாகவும், புனைவுவெளியாகவும் வெளிப்பட்டிருக்கும் நுட்பத்தை வாசிப்பனுபவம் கொண்ட  தேர்ந்த வாசகன்  எளிதில்  உணர்ந்து கொள்ள முடியும்...

நன்றி : தோழர் ஹெச்.ஜி.ரசூல்

ஞாயிறு, 11 ஜூன், 2017

தேவதேவன் கவிதை - அனுபவத்தின் மொழி

திருவண்ணாமலையில் #தளம்_சமூக_உரையாடல்_மையம் & #வெற்றி_டிஜிட்டல் ஒருங்கிணைப்பில் #கவிஞர்_தேவதேவன்_கவிதைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மனதுக்குள் மெல்லிய இசையைப் போல ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தேவதேவன் கவிதைகள் குறித்துப் பேச வேண்டும் என்று #தோழர்_ஷபி கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். ஆனால், தேவதேவன் கவிதைத் தொகுப்பு அப்போது கைவசம் இல்லை. நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் இல்லை என்றே சொல்லிவிட்டார்கள். நம்முடைய புத்தகச் சேகரிப்பில் ஒரு தொகுப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா புத்தகங்களையும் கலைத்துப் போட்டுத் தேடியதில் #விண்_வரையும்_தூரிகை நூல் மட்டுமே கண்டெடுத்தேன். அது மட்டுமில்லாமல் தேவதேவன் வலைப்பூவில் ( poetdevadevan.blogspot.com ) சில கவிதைகள் இருந்தன. அவற்றை வாசிக்கத் தொடங்கியபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது. பொதுவாக, நவீன கவிதைகளை வாசிப்பது போல ஒரே வாசிப்பில் அல்லது இரண்டாவது வாசிப்பில் தேவதேவன் கவிதைக்குள் நுழைந்து பயணித்துவிட முடியும் என்று தோன்றவில்லை. அவரது கவிதைகள், நண்பர்களோடு உரையாடுவது போன்ற உணர்வினைத் தரவில்லை. மாறாக, அனுபவம் முதிர்ந்த ஓர் ஆசானுடன் அமர்ந்து மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் ஒருநிலைப்பட்ட மனதுடன் உரையாடுவது போல இருந்தன.
லிவிங் ஸ்மைல் வித்யா, பாலா, லெனோ – இவர்களுடன் நிகழ்வுக்குக் கிளம்பிச் செல்லும் வரை, எந்தெந்த கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும் என்கிற திட்டம் இருந்தாலும், தேவதேவன் கவிதை குறித்துப் பேசப்போவதில் ஒருவிதத் தயக்கம் இருக்கவே செய்தது. அந்தக் கவிதை அனுபவத்தைப் பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது மனம். எல்லாமும் நிகழ்வு நடக்கும் இடத்தை அடையும் வரைதான்.
சிலுசிலு காற்று இதமாகத் தழுவிச் செல்லும் மரத்தடி. கருங்கல் பெஞ்சுகள். இரவின் ரம்மியத்தை உணரச் செய்யும் ஒளியமைப்பு. பிரம்மாண்டமான தேவதேவன் பேனர். அதன் முன்னால் சிறு புள்ளியென நான்கைந்து நாற்காலிகள். அந்தத் திறந்தவெளி, தேவதேவன் கவிதைகளைப் போலவே பெரும் அனுபவத்தைக் கொடுத்தது. இருளில் அமர்ந்து கொண்டு / எதையும் வாசிக்க முடியாது / ஒளி? / கண்முன் உள்ள / இருளைக் / கண்டு கொள்வதிலன்றோ / தொடங்குகிறது அது? (தேவதேவன்)
பழுத்து விழாது / ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள் / தான் தொட்டதனால்தான் உதிர்ந்தது என்றிருக்கக் கூடாது என்ற / எச்சரிக்கை நேர்ந்து / அப்படி ஒரு மென்மையை / அடைந்திருந்தது காற்று (தேவதேசன்)
இந்தக் கவிதைகளை, அந்தக் குறைந்த ஒளியில், மெல்லிய மரங்களின் அசைவில்  வாசித்தபோது மனதுக்குள் எழுந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விடமுடியாது. அது பேரனுபவம்.
பறத்தலின் ரகசியத்தைச் சிற்றுயிர்களுக்கும் கற்பித்துவிடும் தேவதேவனின் கொக்கு போல, அவரது கவிதைகள் இப்பிரபஞ்சத்தின் இரகசியத்தை யாவருக்கும் சொல்லித் தருகிறது அனுபவ மொழியுடன்.
நிகழ்வில் கலந்து கொண்டு தேவதேவன் கவிதைகள் குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் பச்சோந்தி, கவிஞர் ஃபீனிக்ஸ், கவிஞர் ஜெகதீசன், கவிதைகள் வாசித்த மொழிபெயர்ப்பாளர்கள் கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, அமரபாரதி, நா.கோகிலன் என அனைவருமே தேவதேவன் கவிதைகள் தரும் மௌனத்தை, அனுபவத்தை அந்த இரவின் மீது படரச் செய்தனர். இறுதியாக, தேவதேவனின் ஏற்புரை புது அனுபவத்தைக் கொடுத்தது.
நிகழ்வு முடிந்து திரும்புகையில் நேர்மறை எண்ணங்கள் மனதை இலகுவாக்கின. திறந்தவெளி இலக்கிய அரங்குகள் இப்படித்தான் மனதின் சுவர்களை உடைத்து, காற்றில் மிதந்துவரும் இறகென இலகுவாக்கிவிடும்போல.
நிகழ்வினை ஒருங்கமைத்த தோழமைகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து சொல்லவேண்டும் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை.

வியாழன், 11 மே, 2017

சினிமாவின் திருநங்கைகள் - லிவிங் ஸ்மைல் வித்யா

சினிமாவில் திருநங்கைகள் - லிவிங் ஸ்மைல் வித்யா
Living Smile Vidya
சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் திருநங்கைகள் காலம்காலமாக சித்தரிக்கப்படம் விதம் குறித்தும், திருநங்கைகளின் தேவைகள் குறித்தும் மாநில அரசின் விருது பெற்ற எழுத்தாளர், நாடகவியலாளர் லிவிங் ஸ்மைல் வித்யா பியூர் சினிமா பார்வையாளர்களுடன் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துக்கொள்கிறார். அவசியம் காணொளியைப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். திருநங்கைகள் குறித்தான உங்கள் கண்ணோட்டத்தை, குறிப்பாக சினிமாவில் இயங்கும் நண்பர்கள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

https://m.youtube.com/watch?v=Ak2OvxQW4PU