ஆண்ட்ராய்டுகளின்
காலம்
எனது மூன்றாவது
கவிதைத் தொகுப்பான ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் நூலின் வெளியீட்டு விழாவுக்குக்
கிளம்ப வேண்டும். இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியிடும்போது இருந்த உற்சாகம், மகிழ்ச்சி
எதுவுமே இல்லை. மனம் முழுக்க வெறுமை. எல்லாவற்றின்மீது நம்பிக்கையற்று, வாழ்தல் என்பது
நாட்களைக் கடத்துதல் என்பது மட்டும் தானா என்பது போன்ற ஒரு உணர்வு.
வெளியீட்டு விழாவுக்குச்
செல்வதா வேண்டாமா? போகாமல் இருந்தாலும் நிகழ்ச்சி நடக்கத்தானே போகிறது? என்றெல்லாம்
யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கை தவறி விழுந்தது ரசித்து ரசித்து வாங்கிய என் செல்போன்.
மிக நீண்ட யோசனைக்குப் பின், விழுந்த செல்போனைப் பற்றி எடுத்து வைத்துவிட்டு, புத்தக
வெளியீட்டு விழாவில் ஒரு பார்வையாளரைப் போல கலந்து கொண்டுவிட்டு வந்துவிடலாம் என்று
முடிவு செய்தேன்.
கிளம்பி முடித்தபின்,
கிளம்பிவிட்டேன் என்ற தகவலைச் சொல்வதற்காக மொபைலை எடுத்து, ஸ்கீரினைத் தொட்டால் செத்துப்
போன பிணம் போல உணர்ச்சியற்று இருந்தது. இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அது தன் இயக்கத்தை
நிறுத்தியிருந்தது. டெம்ப்பர் கிளாஸ் தான் உடைந்திருக்கிறது, அதை எடுத்துவிட்டால் டச்
வேலை செய்யும் என அதை உரித்து எடுத்த பின்னும், வேலை செய்யவில்லை. அவ்வளவுதான். அவ்வளவே
தான். புத்தக வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ், முகவரி, நண்பர்களின் தொடர்பு எண்கள்
எல்லாமும் செல்பேசிக்குள். துரதிஷ்டவசமாக யாருடைய எண்ணும் நினைவில் இல்லை. என்ன ஆனாலும்
பரவாயில்லை. மொபைல் இல்லாமலே பயணிக்கலாம் என்று முடிவு செய்து பேருந்தில் ஏறியபின்,
நிகழ்ச்சிக்கு வர அரை மணி நேரம் தாமதமாகும் என்கிற தகவலை எப்படியாவது சொல்லியாக வேண்டும்
என்று மனதுக்குள் ஓடியது.
பக்கத்தில் இருக்கும்
நண்பரிடம் மொபைல் வாங்கி குத்துமதிப்பாக இரண்டு மூன்று முறை முயற்சி செய்து திநகரில்
இருக்கும் நண்பரின் எண்ணைக் கண்டு பிடித்தேன். மொபைல் இல்லை என்ற செய்தியைச் சொல்லி,
திநகரில் சந்தித்துவிட்டு, பிறகு நிகழ்ச்சிக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லி, எந்த
இட்த்தில், எத்தனை மணிக்குக் காத்திருக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டேன். சொன்னதைப்
போல 4 மணிக்கு திநகர் பேருந்து நிலையத்தை அடையமுடியவில்லை. சென்னை வாகன நெரிசலில் சிக்கி,
கிண்டி போய்ச் சேரவே 4.45 ஆகி இருந்தது. எங்காவது ஒரு ரூபாய் காய்ன் போன் அல்லது போன்
பூத் இருந்தால் தகவல் சொல்லிவிடலாம் என்று தேடினால் எங்குமே இல்லை காய்ன் போன். போன்
பூத்தும் தான். சரி, திநகரில் போய் தேடிக் கொள்ளலாம் என்றால் அங்கும் அதே நிலைமைதான்.
என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு என்று மனதுக்குள் ஒரு குரல். சரசரவென நடந்து போகும் மக்களைப்
பார்த்தால் எல்லோர் கையிலும் ஒரு ஆண்ட்ராய்டு போன். காய்ன் போனுக்கான வேலையே இல்லை.
ஒரு கால் பண்ணனும் கொஞ்சம் போன் கொடுங்க என்று கேட்க தன்மானம் இடம் தரவில்லை. முகம்
தெரியாத ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பதற்கென்று ஒரு தைரியமான மனம் வேண்டும் என்று
புரிந்தது. எல்லோராலும் அப்படிக் கேட்டுவிட முடியாது.
ஆறு வருடங்களுக்கு
முன்பு கையில் செல்போன் இல்லாமல் எத்தனையோ முறை சென்னைக்கு எந்தவிதப் பதற்றமும் பயமும்
இல்லாமல் வநது போயிருக்கிறேன். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மஞ்சள் மற்றும் நீல
நிறத்தில் நான்கைந்து காய்ன் போன்கள் சுவற்றைப் பற்றியபடித் தொங்கிக் கொண்டிருக்கும்.
அந்தச் சமயங்களில் ஒரு ரூபாய் நாணயத்தைப் பத்திரப்படுத்தவென குட்டி டப்பா ஒன்று எப்போதும்
என் பையில் இருக்கும். காயின் போனிலேயே இருபது நிமிடம் பேசிய நாட்களெல்லாம் உண்டு.
சத்தமில்லாமல் காணாமல் போயிருக்கின்றன காயின் போன்களும் எஸ்டிடி பூத்துகளும்.
செல்போன் இல்லாமல்
இருக்கும் இந்த ஐந்து நாட்களில் மனம் அலையற்ற ஒரு கடலைப் போல அமைதியாக இருக்கிறது.
முகநூலில் போடப்படுகிற நிலைத்தகவல் சண்டைகள், சர்ச்சைகள் எதுவும் காதுக்கும் கண்ணுக்கும்
வந்து சேரவில்லை. ஆன்லைனில் இருக்க, ஆனால் பதில் சொல்ல மாட்டியா என்ற கேள்விகள் இல்லை.
போன் பண்ணேன். எடுக்கல. ரொம்ப பெரிய ஆளா ஆகிட்ட அதனால் மதிக்க மாட்டேங்கற என்ற புகார்கள்
இல்லை.
நானுண்டு. என் வேலையுண்டு.
என் பறவைகள் உண்டு. என் தொட்டிச் செடிகள் உண்டு. கவிதைகளுண்டு என்று போகிறது வாழ்க்கை.
அவசரத்திற்கு யாரையும்
தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவும், என் குரல் கேட்கத் தவிக்கும் சில அன்பு மனங்களைத்
தவிக்கவிடக் கூடாது என்பதால், சின்னதாக ஒரு செல்போனை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டால்
போதும் என்றிருக்கிறது.
##ஆண்ட்ராய்டு போன்லாம்
எதுக்கு சார்?
இதுக்குதான் நாம் ஏற்கனவே ஒரு ஏற்பாடு செய்து ஒரு சந்திப்பு நிகத்தலாம் என சொன்னேன்.
பதிலளிநீக்கு