எனது நெருங்கிய நண்பர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்பீட் போஸ்ட் அனுப்பினேன் வந்ததா என்று மெசேஜ் அனுப்பினார். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று ஓடிக் கொண்டிருக்கிற காலத்தில் இன்னமும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி ஆச்சரியத்தில் மூழ்கடிப்பவர். (வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பேசிக் கொண்டாலும் அவ்வப்போது கடிதங்கள் வந்து சேரும்).
திடீரென்று அனுப்புனர் முகவரி இல்லாமல் ஒரு பார்சல் வந்து சேரும். எனக்குப் பிடித்த ஏதோவொரு இனிப்பு வகையோ ஒரு புத்தகமோ அல்லது நான் பயன்படுத்தும் ஏதோவொரு பொருளோ இருக்கும். அது பற்றி நான் பகிர்ந்து கொள்ளும்போதுதான் தெரியும் அது அந்த நண்பர் அனுப்பியது என்று.
புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கும் புத்தகப்புழு. எந்நேரமும் ஏதாவது ஒன்றை அது சிறுபத்திரிகையாகவோ, மொழிபெயர்ப்பு நாவலாகவோ, கவிதை நூலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரை நூலாகவோ அல்லது வெகுஜன பத்திரிகையில் வந்த ஏதோவொரு படைப்பாக அல்லது நேர்காணலாகவோ ஏதாவதொன்றை வாசித்துக் கொண்டேயிருப்பார். வாசித்ததில் பிடித்த பத்திகளை, அல்லது பிடித்த வரிகளை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்வதில்தான் தொடங்கும் பெரும்பாலும் எங்களது உரையாடல். வாசித்த நூல்கள் குறித்து உடனடியாக மதிப்புரை ஒன்றையும் எழுதி முடித்து விடுவார். அவரிடம் நான் வியந்து பார்க்கிற விடயம் அது.
சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் அவர் வாங்கிய நூல்களின் பெயர்ப் பட்டியலை எனக்கு அனுப்பி வைத்தார். என்னுடைய ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதை நூல் அந்தப் பட்டியலில் இல்லை. கொஞ்சம் ஏமாற்றம். நிறைய மகிழ்ச்சி.
காரணம், மார்ச் மாதம் புத்தக வெளியீடு முடிந்த அடுத்த வாரத்தில் அவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். எனது நூல் என் கைவசம் இல்லை. கடைகளிலும் கிடைக்கவில்லை. புத்தகம் கைக்கு வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என மற்ற நண்பர்களுக்குச் சொன்னது போலவே அவரிடமும் சொல்லி இருந்தேன். ஆனால் அனுப்பவேயில்லை. அவரும் அதைப் பற்றி இரண்டு மூன்று முறைக்கு மேல் அனுப்பச் சொல்லி, பிறகு கேட்கவுமில்லை. அவரிடம் சொல்லாமலேயே புத்தகத்தை அனுப்பிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன். நூல் வெளியாகி மூன்றே மாதத்திற்குள் கிடைக்காமல் இருப்பது வரமா சாபமா தெரியவில்லை.
இந்தச் சூழலில் தான் ஸ்பீட் போஸ்ட் அனுப்பி அது வந்து சேர்ந்ததா என நச்சரித்தார் நண்னர்.
போஸ்ட் மேன் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து குரல் கொடுத்துவிட்டுப் போயிருப்பார் போல. சரி அஞ்சல் அலுவலகம் போய் நேரில் கேட்டு விடலாம் என்று கிளம்பினேன். வழக்கம் போல ஏதாவது நூல் அல்லது புதிதாக வந்த இதழ் அனுப்பியிருப்பார் அல்லது அவரது நூல் அனுப்பியிருப்பார் அதனால்தான் திரும்ப திரும்ப கிடைத்ததா எனக் கேட்கிறார் என நானாக யூகித்துக் கொண்டேன். அல்லது வேறெதுவும் விலை மதிக்க முடியாத பொருள் அந்தப் பார்சலில் இருக்கிறதா? ஆர்வம் என்னக் குடைந்தெடுத்தது.
ஒரேயொரு கட்டிடம் கொண்ட சின்ன அறை தான் அஞ்சல் அலுவலகம்.
அஞ்சல் அலுவலகத்தில் இருந்த பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரிந்தது அடிக்கடி போஸ்ட் வாங்க வந்து போயிருந்ததால். எனது பெயர் கூட நினைவு வைத்திருந்தார். போஸ்ட் மேன் வெளியில் போயிருக்கார் கால் பண்ணி கேளுங்கள் என்று நம்பர் கொடுத்தார். அந்த எண்ணுக்கு அழைத்தால் பதினைந்து நிமிடங்களில் வருகிறேன் வெயிட் பண்ணுங்க என்று சொன்னவர் அரை மணி நேரம் கழித்து வந்தார். அதற்குள் என் நண்பர் மூன்று முறை போன் பண்ணி வாங்கியாச்சா என்று கேட்டுவிட்டார். போஸ்ட் மேன் வந்ததும் ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா என்றபடி பார்சலைக் கொடுத்தார். அவர் நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு நன்றி சொல்லிவிட்டு அந்தச் சின்ன கட்டிடத்தை விட்டு தள்ளி வந்து பார்சலைப் பிரித்தேன். எதிர்பார்த்தது போலவே புத்தகம்தான். பார்சலின் வடிவம் பிரிக்காமலேயே சொன்னது. பிளாஸ்டிக் கவரால் கவர் செய்யப்பட்டிருந்தது ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள். நான் எதிர்பாராதது. கண்கள் தளும்பி விட்டன. காணாமல் போன குழந்தை திரும்ப கிடைத்தவுடன் அக்குழந்தையைத் தொட்டுத் தடவி அள்ளி முத்தமிடுவதைப் போல எனது நூலைத் தொட்டுத் தடவிப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து நுகர்ந்து வாசனையை உள்ளிழுத்தேன். வெளியீட்டு விழாவுக்குப் பிறகு அப்போது தான் கையில் தொடுகிறேன் எனது நூலை.
நான் கையெழுத்திட்டு அனுப்பியிருக்க வேண்டும். அவர் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். நாம் இந்நாள் வரை நூல் அனுப்பாமல் இருப்பதால் குத்திக் காட்டுகிறாரோ என்று ஒருகணம் தோன்றியது. அப்படியான நோக்கம் அவருக்கு இருக்காது என உடனடியாக மனதிலிருந்து அந்த நினைப்பை விலக்கி விட்டேன். மானசீகமாக அன்பான நன்றிகளை அவரிடத்தில் சொன்னேன்.
நூலை எழுதியவருக்கே ஒரு வாசகனின் அன்புப் பரிசு என எழுதியவரின் நூலை, எழுதியவருக்கே கையெழுத்திட்டு அனுப்பி வைத்த நிகழ்வு இதற்கு முன்பு எந்தப் படைப்பாளிக்கேனும் நிகழ்ந்திருக்கிறதா? அதைப் பெற்றுக் கொண்ட அனுபவம் வேறு யாருக்கும் வாய்த்திருக்குமோ என்னவோ?
மறக்கமுடியாத பேரனுபவம் அது.
- மனுஷி
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு