புதன், 6 ஜூலை, 2016

டைகர் ( ஒரு நாயின் கதை) - மனுஷி

டைகர்

(ஒரு நாயின் கதை)

n  மனுஷி

          எதிர்வீட்டு மனோஜ் அந்த நாயை ஒரு பெரிய குச்சி ஒன்றினால் விளாசிக் கொண்டிருந்தான். தன் அம்மாவிடம் அடிவாங்கிக் கொண்டு அலறும் பத்து வயது சிறுவனைப் போல செய்வதறியாது வீறிட்டுக் கதறிக் கொண்டிருந்தது அந்த நாய். அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு ஏன் அங்கேயே கத்திக் கொண்டிருந்தது என யோசனையாக இருந்தது. அதன் கழுத்துச் சங்கிலி வெளி இரும்புக் கேட்டில் கட்டப்பட்டிருந்தது. அதன் கதறல், அது செய்த மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றிற்கு மன்னிப்புக் கேட்பது போல இருந்தது.

          “நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வச்சாலும் அது எங்கயோ போகுமாம்.. சரியாதான் இருக்கு. சனியனுக்கு என்ன கொற வச்சேன். இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது. வீட்டுப் பக்கம் வரலாம்ன்ற எண்ணத்தையே மறந்திடு”.

          அவன் அவ்வளவு வன்மத்தோடு கத்தினான். அந்த நாய், தான் செய்தது தவறுதான் மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லிக் கெஞ்சுவது போல தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. அவன் அடித்து முடிந்து ஓய்ந்தவனாய் இரும்புக் கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டான். போவதற்கு  முன்பு அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டுப் போனான். அது இரும்புக் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தது. அதன் அழுகை அவனது காதில் விழவே இல்லை. காதில் விழாதபடி கதவை அடைத்துக் கொண்டு அந்தப் பங்களா வீட்டுக்குள் அடைந்து கொண்டான்.

          அப்படி என்னதான் தவறு செய்துவிட்டது அந்த நாய்? (இனிமேல் அதை நாய் என்று சொல்ல வேண்டாம். அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. அதன் பெயர் டைகர்). டைகருக்காக அப்போதைக்கு வருத்தப்பட மட்டுமே முடிந்தது அந்தத் தெருவில் இருப்பவர்களால்.

          “அநியாயமா ஒரு வாயில்லா ஜீவனுடைய பாவத்தை அள்ளிக் கொட்டிக்கறானே. எல்லாம் பங்களா வீட்டில இருக்கோம்ன்ற திமிர். வேற என்ன” என்று அங்கலாய்த்தார் பாலாமணி அக்கா.

          சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கண்ணீருடன் இரும்பு கேட்டின் முன்னால் நின்று அழுத டைகர் களைத்துப் போய்ப் படுத்துக் கொண்டது. பாலாமணி அக்கா கொஞ்சமாய் சாம்பார் சாதம் கொண்டு வந்து அதன் பக்கத்தில் வைத்தார். தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. பூட்டப்பட்ட கதவுகள் திறக்காதா என்ற ஏக்கம் அதன் கண்களில் வழிந்தது.

***************

          டைகர் செய்த தவறெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அன்று மதிய உணவுக்குப் பிறகு சாப்பிட்டு முடித்தபின், கழுத்துச் சங்கிலியை அவிழ்த்து விட்டிருக்கிறான் மனோஜ். இரும்புக் கதவுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த டைகர், அந்தப் பக்கமாக வந்த தெருநாய்மீது கொஞ்சம் பார்வையைத் திருப்பிவிட்டது. முதல் பார்வையிலேயே காதல் மயக்கம் கொண்ட டைகர், தெருநாயின் பின்னால் போய்விட்டது. அரைமணி நேரத்திற்குப் பிறகு டைகரைக் காணாமல் தேடிக் கொண்டு தெருமுனைக்கு வந்தால், அங்கே புதிதாக முளைத்திருந்த முருகன் கோயில் பின்புறத்தில் டைகரும் அவனது ஜோடியும் ஈருடல் ஓருயிராகக் கலந்திருந்தனர்.

***********

          மாலைப்பொழுது கரைந்து கொண்டிருந்தது. பாலாமணி அக்கா உட்பட அந்தத் தெருவில் உள்ள இரண்டு பெண்களும் டைகருக்காக வருத்தப்பட்டது போதும் என்பதுபோல எழுந்து போய் மெகாசீரியலில் நுழைந்து கொண்டனர்.

          பங்களா வீட்டின் எதிரில் இருந்த மாலினியின் வீட்டு வாசல் முன்பு போய் நின்று கொண்டு குரல் கொடுத்தது டைகர். அதன் குரலில் அவ்வளவு பசி.

**********

          இரண்டு மாதம் தீவிரமான வீடு தேடல் படலத்துக்குப் பிறகு மாலினி அந்த வீட்டிற்குக் குடிவந்தாள். வீட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே  அவளுக்குப் பிடித்துப் போனது. அவளுக்கு வீடு பிடித்துப் போவது ஒரு விஷயமே இல்லை. வீட்டு ஓனர்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். வீடு தருவதாய் அவர் வாய் திறந்து சொல்லவே இல்லை. எல்லா வீட்டு ஓனர்களையும் போல சம்பிராதாயமான கேள்விகளைக் கேட்டு முடித்தார். அவள் எல்லாவற்றிற்கும் ஓக்கே சார் சரிங்க சார் என்பதைத் தவிர வேறு எதையும் பதிலாகச் சொல்லவில்லை. சொல்லவும் வாய்ப்பு அங்கே இல்லை. என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பெரிய பட்டியலாகச் சொன்னார். அவர் சொன்னவற்றில் சில எரிச்சலாக இருந்தது. ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரர். அவர் வீடு. அவருக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கும் தானே.

அது பெரிய வீடுதான். ஒரு பெட்ரூம், ஒரு ஹால், உள்ளே இன்னொரு ஹால், ஒரு கிச்சன், ஒரு சாமி (?) அறை, ஒரு பாத்ரூம், வெளியில் ஒரு வராண்டா. அவள் ஒருத்திக்கு அந்த வீடு மிகப்பெரியதுதான். இதற்கு முன்பு ஒரு சைனாக்காரப் பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் அங்கே வாடகைக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டைக் காலி செய்த ஒரு வாரத்தில் அந்த வீட்டை அவள் தேடிப் பிடித்தாள் தோழியின் மாமா மூலமாக. வீட்டு வாசல் கதவைத் திறக்கும்போதே பீர் வாசம் வயிற்றைக் குமட்டியது. அட்வான்ஸ், வாடகை எல்லாம் பேசி முடித்து, வீடு ஓக்கே ஆன மறுநாள் தனி ஆளாகவே அந்த வீட்டைக் கழுவிச் சுத்தப்படுத்தினாள். இரண்டு நாள் கடுமையான சுத்தப்படுத்தலுக்குப் பிறகு ரூம் ஸ்பிரே வாங்கி அடித்துவிட்டாள். மூன்றாம் நாள் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. இங்கே இனி வசிக்கலாம்  என்ற நம்பிக்கை அப்போதுதான் வந்தது. பக்கத்து வீட்டு பாலாமணி அக்காவும், மேல் வீட்டில் குடியிருக்கும் புதிதாகத் திருமணம் ஆகியிருந்த கீதாவும்கூட சொன்னார்கள். “இப்போதான் இந்த வீட்டுக்குள் இருந்து நல்ல வாசனை வருது”.

**************

கூகுளில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் குறிப்பு பார்த்து  மீன் குழம்பு செய்திருந்தாள் மாலினி. வாசனையே குழம்பின் சுவையைச் சொன்னது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் டைகரின் ஞாபகம் வந்தது.  வெளியில் வந்து பார்த்தாள். மாடிப்படிக்குக் கீழே படுத்திருந்தது. அவளிடம் ஐந்து தட்டுகள் இருந்தன. தினம் ஒரு தட்டில் சாப்பிடுவது அவளது வழக்கம். அதில் ஒரு தட்டை டைகருக்கென ஒதுக்கினாள். தட்டில் சோற்றைப் போட்டு, போதுமான அளவுக்குக் குழம்பை ஊற்றி, இரண்டு மீன் துண்டுகளை எடுத்துப் போட்டாள். மீனின் முள்ளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, சதைப் பகுதியைச் சோற்றில் வைத்து எடுத்துக் கொண்டு போய் டைகருக்கு வைத்தாள். அவள் சைவ உணவுப் பிரியையாக இருந்த சின்ன வயதில் அவளை மீன் சாப்பிட வைக்கவென அவளது அம்மா படாதபாடு படுவாள். முள் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து ஒரு டம்ளர் நீரில் அலசி, காரம் இல்லாமல் கொடுப்பாள். அதையும்கூட மாத்திரையை விழுங்குவது போல வாயில் போட்டு தண்ணீர் ஒரு வாய் ஊற்றி விழுங்கி விடுவாள். சிறு வயது ஞாபகங்கள் தலைதூக்க, கனத்த மனதுடன் மீன் குழம்பைச் சாப்பிட்டாள். டைகரும் சுவைத்துச் சாப்பிட்டு முடித்திருந்தது.

அதன்பிறகு, டைகருக்கும் சேர்த்து ஒரு பிடி அரிசி, கூட வைத்துச் சமைத்தாள். வெளியில் கடையில் சாப்பிட்டால்கூட பாதி சாப்பாட்டைப் பார்சல் செய்து டைகருக்குக் கொண்டு வந்தாள். சிலநாள் அவள் ஹோட்டலில் இருந்து மிச்சம் கொண்டு வரும் மீல்ஸை டைகர் சாப்பிடாமல் படுத்தே கிடக்கும். வீட்டில் சமைத்த சாம்பார், கீரை, தக்காளி சாதம் செய்தால் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தது. எங்காவது சாப்பிட்டிருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இப்படியாகப் இருபது நாட்களுக்கு மேல் கடந்து போனது.  அப்போதுதான் டைகரைப் பற்றி ஒரு விடயம் புரிந்தது. டைகர், பயங்கரமான அசைவப் பிரியர். பங்களா வீட்டின் செல்லப் பிள்ளையாக டைகர் இருந்தபோது பந்தாவாக ஏசி காரில் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியாகத் தெருவில் இருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகும். பஞ்சுபோல பளபளக்கும் வெள்ளை மேனி. சில்க் போல வழவழக்கும் முடி. மனோஜ் மற்றும் அவனது நண்பர்களுடன் அது விளையாடும் அழகைப் பார்க்கக் கண்கோடி வேண்டும். தினமும் லெக் பீஸ் வாங்கிப் போட்டுப் பழக்கி இருந்தார்கள். பொறந்தா இந்த டைகர் மாதிரி பொறக்கனும் என்று பாலாமணி அக்கா சொல்லாத நாள் இல்லை. டைகருக்கு வந்த வாழ்வ பாரு என்ற அங்கலாய்ப்பு இல்லாமல் அவரது நாள் முடியவே முடியாது. டைகருக்கு அவ்வளவு சொகுசான வாழ்க்கை. ராஜ வாழ்க்கை.

‘அந்தநாள்’ ஞாபகத்திலிருந்து டைகரின் நாக்கு மீண்டு வரவே இல்லை. கறி சோறும், கறி வாசனையும் மூன்று வேளையும் தேவைப்பட்டது. தினமும் சமைக்கும் அளவுக்கு மாலினிக்குப் பொறுமை இல்லை. சிலசமயம் பிஸ்கட்டுகள் அல்லது பழங்கள் ஒரு கப் ப்ளாக் காஃப்பி இதுவே அவளது காலை மற்றும் இரவு உணவு. மதியம் வெளியில் சாப்பிட்டு விடுவாள். ஆனால், வெளியில் போய் வரும்போதெல்லாம் டைகர் பசியோடு இருக்குமே என மீன் வறுவல், பீப் ஃப்ரை, சிக்கன் 65, ட்ரில்டு சிக்கன், சிக்கன் ஃப்ரை - இவற்றில் ஏதாவது ஒரு பார்சலுடன்தான் வருவாள். அவள் தெருமுனைக்கு வருவதைப் பார்த்தவுடனேயே டைகர் குஷியாகிவிடும்.

டைகருக்கு நாக்கு ருசியாகச் சாப்பாடு போடுவது தொடக்கத்தில் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. நாட்கள் போகப் போக ஒரு நாயை ஏன் இவ்வளவு சொகுசாகப் பழக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அன்றைக்குத் தயிர் சாதம்தான். நெல்லிக்காய் ஊறுகாய். அமுதம் போல்  இருந்தது. ருசித்துச் சாப்பிட்டபின், டைகருக்குத் தயிர் சாதம் பிசைந்து கொண்டுபோய் வைத்தாள். தலைதூக்கிப் பார்த்த டைகர் சாப்பாட்டில் வாய் வைக்கவேயில்லை. அவளுக்குக் கோபம் வந்தது.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க. ஒரு நாளைக்குத் தயிர் சாதம் சாப்பிட்டா கொறைஞ்சு போய்டுவியா? தினம் நான்-வெஜ் வேணும்னா நான் எங்க போறது? என் பட்ஜெட்டுக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகாது. நானே பிரட், பிஸ்கட் என்று சிலசமயம் சாப்பிட்டுப் போறேன். உனக்கென்ன? இங்க பாரு, இனிமேல் நான் என்ன சாப்பிடறனோ அதைத்தான் தருவேன். சாப்பிட்டுத்தான் ஆகனும். இல்லனா பட்டினி கிட. யார் வேண்டாம்னு சொன்னது?”

அவள் பேசப் பேச தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. டைகர்மா, என்ன செல்லக்குட்டி, என்ன  பண்றிங்க, இங்க வாங்க என்று கொஞ்சும்போதெல்லாம் முகத்துக்கு நேராக முகத்தைக் கொண்டு வரும். அன்பில் குழையும். குழந்தையைப் போல ஆகிவிடும்.

“டைகர் இங்க பாரு, நான் சொல்றது எதாவது புரியுதா? சும்மா கடைக்குப் போகும்போதெல்லாம்கூட வருவது, வெளியில் போய்ட்டு வரும்போது வாலை ஆட்டிக் கொண்டு குழைவது, ஊருக்குப் போய்ட்டு வந்தால் மேலே ஏறி விளையாடுவது இதெல்லாம் ஓக்கேதான். அதைத்தாண்டி கொஞ்சம் சிச்சுவேஷனைப் புரிஞ்சுக்கோ.”

டைகர் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. அவளைப் பார்க்கவேயில்லை. போ இன்னைக்கு உனக்குச் சோறு கிடையாது. பட்டினி கிட என்று கோபமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், ஒரு ஆம்லேட் போட்டுக் கொண்டு வந்து தயிர் சோற்றில் பிசைந்து வைத்தாள். சாப்பிட்டு விட்டு அமைதியாகப் படுத்துக் கொண்டது. அவளும் எதுவும் பேசவில்லை அதனிடம்.

****************

ஆறு மாத காலமாக ஊர்ப் பயணங்கள் அதிகம் இருந்ததால் டைகரை அவள் பார்ப்பதே அரிதாக இருந்தது. குளிப்பது, தூங்குவது இதற்கு மட்டும்தான் வீடு என்பது போல ஆகியிருந்தது அவளது வேலைப்பளு. மற்ற நேரங்களில் பேருந்து பயணம் அல்லது பைக் பயணம். இதில் டைகரைக் கவனிக்க மறந்து போயிருந்தாள். எப்போதாவது வீட்டில் சாப்பிடும் நேரங்களில் மட்டும் டைகருக்கு மறக்காமல் உணவு வைத்தாள். முன்பு போல, அது சாப்பிட்டு முடிக்கும் வரை அதனருகில் இருந்து பேசுவது இல்லை.  

டைகரின் வெள்ளை முடி செம்பழுப்பு நிறமாக மாறியிருந்தது. உடலும் இளைத்திருந்தது. மொசுமொசுவென்று வழுக்கிச் செல்லும் சில்க் முடி கொட்டிப்போய் தோல் தெரிந்தது. இது டைகர்தானா என்று நம்ப முடியாதபடி அதனது தோற்றம் மாறியிருந்தது.  தோற்றம் தான் மாறியிருந்ததே தவிர குணம் அப்படியேதான் இருந்தது. அவள் விஷயத்தில் அதன் பழக்கவழக்கங்களில் பெரிதான மாற்றம் இருக்கவில்லை. ஒவ்வொருமுறை இரவில் வீடு திரும்பும்போது டைகர் அவள் முன்னால் வந்து நின்று வாலை ஆட்டி அன்பை வெளிப்படுத்தியது. சின்னதாகக் குரலெழுப்பி அவளது கவனத்தை ஈர்க்க நினைத்தது.  மேலும், பதினோரு மணிக்கும் மேல் தெருவில் நடந்து வருகையில் மற்ற நாயின் அச்சுறுத்தலில் இருந்து அவளைக் காப்பாற்றி அழைத்து வந்தது. டைகரின் தலை தென்பட்டவுடன் மற்ற நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு அமைதியாகிவிடுவதை அவள் கவனித்திருக்கிறாள். டைகரை நினைத்துப் பெருமைப்படும் கணங்களில் அதுவும் ஒன்று.

டைகரைக் கண்டிப்பதற்கு யாருமில்லை என்பதால் இந்தத் தெருவில் மட்டுமில்லாமல் பக்கத்துத் தெருவில் உள்ள இன்னும் சில நாய்களுக்கும் காதலனாக ஆகி இருந்தது. முடி நிறம் மாறியதற்கு அது காரணமா என்றெல்லாம் தெரியவில்லை. அதுமட்டுமில்லை. அதனுடைய உணவுப் பழக்கமும் மாறியிருந்தது. இப்போதெல்லாம் நான்–வெஜ் வாசம் வீசும் உணவு வைத்தால்தான் சாப்பிடுவேன் என்ற தனது பிடிவாதத்தைத் தளர்த்தியிருந்தது. ஒருநாள் பழைய சாதத்தில் தயிர் ஊற்றிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு, பாதியை டைகருக்கு வைத்தாள். அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்தில் கிண்ணத்தில் வைத்திருந்த கொஞ்சம் பாலையும் நக்கிக் குடித்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டது. கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.

டைகருக்கு ஏதோ வியாதி சீக்கிரமே செத்துரும் போலிருக்கு என்று பாலாமணி அக்கா சொல்லிக் கொண்டே இருந்தார். அவரது வாய் முகூர்த்தம் பலித்தே விட்டது ஒருநாள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடற்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது தான் மாலினி அந்தக் காட்சியைப் பார்த்தாள். முருகன் கோவிலின் பின்புறம் உடல் இளைத்து, முடியெல்லாம் கொட்டிப் போய், தோலுக்கு வெளியே எலும்புகள் துரித்திக் கொண்டு தெரியும்படியாக டைகர் செத்துக் கிடந்தது. காலையில் அல்லது அதற்கு முந்தின நாள் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும்.

வாழ்ந்து கெட்ட ஒரு மனிதனின் சவத்தைப் பார்ப்பதைப் போல பார்த்தாள். அனுதாபம் கூடியது. சொகுசாகவும் பிரபலமாகவும் வாழ்ந்து, அன்பின் பெயரால் ஏமாற்றப்பட்டு, துரோகமிழைக்கப்பட்டு, கைவிடப்பட்டு, விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட, நாதியற்றுச் செத்துப் போன சில மனித பிம்பங்கள் அவளது மனசுக்குள் வந்து போயின. வீட்டில் இருந்த போத்தீஸ் கட்டைப் பையைக் கொண்டு வந்து, டைகரை அதற்குள் திணித்துக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி ஓர் ஓடையில் புதைத்துவிட்டு வந்தாள்.

காலையில் எழுந்து செய்தித்தாள் எடுக்க வாசலுக்கு வந்தபோது, அவளது தொட்டிச் செடி அருகில் நாய்க்குட்டி ஒன்று படுத்திருந்தது. காலைநேரக் குளிர்ந்த காற்றில் பஞ்சு மாதிரி இருந்த அதன் வெள்ளை முடி வெல்வெட் போன்று மினுமினுத்தது. 

நன்றி : ஃபெமினா ஜூலை 2016

8 கருத்துகள்:

  1. உணர்வுப்பூர்வமான சிறுகதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கதை வெகு அருமை. கதை போல தெரியவில்லை உண்மை நிகழ்வை திரைகதையாக்கம் செய்தது போலவே உணர்கிறேன். இறுதியில் மனம் நெகிழ்ந்து வருத்தமடைய செய்கிறது. வீட்டில் வளர்க்கும் பிராணிகளின் உணர்வை புரிந்துக்கொள்வது அலாதியானது. போப் அவர்கள் தனது பூனையை சகோதரன் போல பார்த்துக்கொண்டாராம். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் வீட்டு பூனைக்கு தனியறை ஒதுக்கப்பட்டதாம். இதை சொல்ல காரணம் மனிதர்கள் செல்ல பிராணிகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதற்குதான். அதுபோல, இந்த கதையையும் இனி மனிதன் -செல்லபிராணிகளுக்கு இடையேனான அன்புக்கு உதாரணமாக சொல்லமுடியும். எங்கள் வீட்டில் பூஜா என்கிற ஆண் பூனையை வளர்த்து. .அது நோயினா இறப்பதை கண் கூடாக பார்த்து மனம் வெம்பியது இதை படிக்கும் போது நியாபகத்திற்கு வருகிறது. இதை போலவே நானும் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன் ”பூஜாக்குட்டி” என்ற பெயரில் ! மிக அருமை.. மிகவும் இதயத்தை தொட்ட கதை..! வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு