அபிலாஷின் "கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்" : நாவல் விமர்சனம் - மனுஷி
யானை பார்த்த குருடன் கதை நம் எல்லோருக்கும் நினைவிருக்கும். ஒரு பிரதி குறித்த விமர்சனம் அல்லது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது என்பதும் அப்படிப்பட்டதுதான். தனது அறிவுப் புலனுக்கு எட்டிய அளவில் அல்லது தனது வாழ்வனுபவத்துக்கு ஏற்பவே அப்பிரதி குறித்த புரிதலை அடைகிறான் வாசகன். அதுதான் பிரதி எனவும் நிறுவ முயல்கிறான். ஒரு பிரதி, அத்தகைய நிறுவுதல்களுக்கு அப்பாலும் ஏதோவொன்றைத் தாங்கிப் பிடித்து நிற்கிறது. அதேசமயம், பிரதி குறித்த வாசகனின் அனுபவம்சார் புரிதல் என்பதும் முற்றிலும் மறுக்கப்பட முடியாத ஒன்றாகவே இருப்பதையும் அவதானிக்கத்தான் வேண்டும்.
அபிலாஷின் கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்ற நாவல் துப்பறியும் நாவல் என அடைப்புக்குறி இடப்பட்டாலும் என்னளவில் சமகாலச் சிக்கலைப் பேசும் முக்கியமான கதைப் பிரதி.
சிறுமிகள் கடத்தல், சிறுமிகள் பாலியல் பலாத்காரம், குரூரமான முறையில் அவர்கள் கொல்லப்படுதல், அக்கொலையைச் செய்த குற்றவாளி யார் எனத் துப்பறிதல் - இதுதான் நாவலின் மையம்.
முதல் வாசிப்பில் தொற்றிக் கொண்ட பதற்றம், இரண்டாம் முறை வாசிக்கும்போதும் தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. மன அமைதியைக் குலைத்து, யாரையும் சந்தேகிக்கத் தூண்டுகிறது. கனவுகளாகப் பல்கிப் பெருகி இரவுகளை வதைக்கிறது. அவ்வளவு காத்திரமான கதைக்களத்தை இப்பிரதி பேசுகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் யார் ஒருவரும் இந்த நாவலை வாசிக்கையில் கலவரமடையக் கூடும். பெண் வாசகர்கள் எனில் தனது பால்ய காலத்தில் நேர்ந்த அல்லது கேள்விப்பட்ட சம்பவங்களின் நினைவுத் துணுக்குகள் கண்முன் விரிய, கலவரமடையக் கூடும். இன்னும் இன்னும் பாதுகாப்போடு பெண் குழந்தைகள் இந்தச் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும் எனும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது இப்பிரதி.
பெண் குழந்தைகளின் உடல் மீதான வன்முறைகள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை நிலவும் சமூகத்தில் இந்த நாவல் கூடுதல் கவனத்தை ஈர்த்து நிற்கிறது.
நாவலின் ஒவ்வொரு பகுதியையும் வாசிக்க வாசிக்க ஒருவிதமான பதற்றத்தை வாசகம் அடைய நேரிடுகிறது. அடுத்தடுத்த கதை நகர்த்தல்களில் அது ஒரு பேரச்சமாக உருக்கொள்கிறது.
ஒரு குற்றச் செயலுக்குப் பின்னால் பேய் எனும் அமானுஷ்யத்தை நோக்கி கை நீட்டுவதும், நீல நிற மனிதன் எனும் மர்ம மனிதனை அக்குற்றச் செயல்களுக்குக் காரணமாகக் கொண்டு வந்து நிறுத்துவதும் நாம் கேள்விப்படுகிற ஒன்றுதான். ஊடகங்களில் இது போன்ற செய்திகள் நம் காதுகளிலும் கண்களிலும் வந்து விழுந்திருக்கின்றன. அதை ஒரு செய்தியாக மட்டுமே நாம் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், ஊடகங்கள் நமது வீடுகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் செய்திகளுக்குப் பின்னால், அதிகாரிகளின் விசாரணைகளுக்கும் விசாரணை அறிக்கைகளுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையினை, இதற்குப் பின்னால் இருந்து செயல்படும் அரசியலை அபிலாஷின் இப்பிரதி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இப்பிரதி முழுக்கப் பற்றிப் படரும் நீலம் என்பது குற்ற மனத்தின் குறியீடே ஆகும். பெண் உடல் மீதான வன்முறை எண்ணங்களைச் சுமந்து திரியும் ஆண் மனம், நீல நிற கொடிய விஷமாக இருக்கிறது. அது, பெண் குழந்தைகளைத் தேடிச் சிதைக்கும் ஒரு ஆலகால விஷம்.
இந்நாவலில் வரும் தமிழ்ச்செல்வன் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கயல்விழி எனும் பள்ளி மாணவியுடன் மூன்று முறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவன். அந்த வழக்கு இழுத்து இழுத்து ஒரு கட்டத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுவிடுகிறது. தமிழ்ச்செல்வன் அவ்வழக்கில் இருந்து விடுதலையும் ஆகிவிடுகிறான். இந்தச் சம்பவம் நடந்த பல ஆண்டுகள் கழித்து, கயல்விழியைச் சந்தித்துப் பேசும்போது அவள் சொல்கிற வாதம், இதே சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வன் பேசுகிற வாதம் இரண்டையும் வாசிக்கையில் எனக்கு அகிரா குரோஷோவாவின் ரொஷோமான் திரைப்படம் நினைவுக்கு வந்தது. உண்மைக்கு ஒரு பக்கம் மட்டுமில்லை என்பதை மிக நுட்பமாக விவாதித்த படம் அது. ஒரு சம்பத்திற்குப் பல கோணங்கள் இருக்கின்றன, யார் அதைப் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் நியாயமும் உண்மைத்தன்மையும் நிறுவப்படும் என்பதையெல்லாம் காட்சிகளின் வாயிலாக விவாதிக்கும் படைப்பு அது. ஒவ்வொருவரும் தனக்குச் சாதகமாகவே ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்கள். அதற்குள் உண்மை என்பது கடலுக்குள் மூழ்கியிருக்கும் பனிப்பாறையின் சிறு நுனி போல வெளிப்படுகிறது. இந்த நாவலிலும் கயல்விழி, தனது ஆசிரியர் பற்றிச் சொல்லும்போது அவரால் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டதைத் தனது நினைவிலிருந்து பேசுகிறாள். அவள் சொல்கிற அதே சம்பவங்கள், அதே காட்சிகள் - அவற்றை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வேறுவிதமாகச் சொல்வார். அவரது வாதத்தில் கயல்விழியின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும். மேலும், அவள் தான் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததற்கு முழுக் காரணமும். தான் அங்கே பலியாக்கப்பட்டேன் என்று முன்வைப்பார். மேலும், பெண் என்பதாலும், ஒடுக்கப்பட்ட இனம் என்பதாலும் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாக வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பார். நடந்தது ஒரு சம்பவம். இருவேறு கோணங்கள். இங்கே யாரைக் குற்றவாளி என முடிவு செய்வது என்கிற கேள்வி எழும். ஆனால் வாசகன் தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. பொதுவாக, நம் சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போதெல்லாம் அதை மறைமுகமாக நியாயப்படுத்துவது போல அவள் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என திரும்ப திரும்ப அறிவுறுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதையும் பார்க்கிறோம். நடந்த குற்றம் பூசி மழுப்பப்படுகிறது. காலப்போக்கில் அப்படியொரு சம்பவம் நடந்ததன் சுவடே இல்லாமல் காணாமல் போய்விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் குற்றவாளி ஆக்கும் மனோபாவம் மாற நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது மிகப்பெரிய கேள்வி.
சமீபத்தில் செய்தித்தாள்களில் பேசப்பட்ட
பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரின் வழக்கு நினைவுக்கு வந்தது. தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் சிறு வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு வருடம். டியூஷன் சொல்லித்தருவதாக, கம்ப்யூட்டர் சொல்லித் தருவதாகச் சொல்லி, அந்தக் குழந்தையை மிரட்டியும், சில பொம்மைகள், புதுத் துணிகள் வாங்கிக் கொடுத்தும் வீட்டில் சொல்லவிடாமல் பார்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் இது தெரியவர அவர் கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறையில் இருந்து, பிறகு அந்தச் சிறுமியின் பெயரில் ஒரு வீடு எழுதிக் கொடுத்து அந்த வழக்கை வாபஸ் வாங்கி, வெளியில் வந்து விட்டார். வெளியில் வந்த பின் இப்படி எழுதி வாங்குவதற்காகத்தான் இபப்டியொரு வழக்கைத் தொடுத்தார்கள் என ஒரு வாதம் கிளம்பியது. இந்தச் சம்பவத்தை தமிழ்ச்செல்வன் - கயல்விழி கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒரு விடயம் தெளிவாகிறது. எந்த நிலையிலும் பெண்ணுடல் வீழ்த்தப்படுகிறது. பெண், பலியாள் ஆகிவிடுகிறாள்.
தமிழ்ச் செல்வன் மகள் கோகிலாவின் கொலையை ஒட்டி நகரும் கதை, வேறு சில சமூக அவலங்களை வெளிக் கொணர்ந்ததன் மூலம் தான் அபிலாஷின் படைப்பு மனதைச் சிலாகிக்கத் தோன்றுகிறது. பெண் குழந்தைகள் காணாமல் போவதும், அவர்கள் உடல் சிதைக்கப்பட்டு, பிணமாகக் கண்டெடுக்கப்படுவதும் பேசப்படுகிறது. அந்தச் சிறுமிகள் எல்லாம் ஏன் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் எனும் கேள்வியை எழுப்புகிறார். ப.கல்பனாவின் ஒரு கவிதை உண்டு. ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரமாக கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் அடையாளம் தெரியாத பிணங்களைப் பற்றிய கவிதை அது. கடைசி வரியில் ஏன் எல்லா பிணங்களும் அழுக்கு லுங்கியுடனும் எண்ணையிடப்படாத செம்பட்டைத் தலையுடனுமே இருக்கின்றன என்று எழுதியிருப்பார். அப்படித்தான் அபிலாஷும் கேள்வி எழுப்புகிறார். இந்த மரணங்கள் குறித்து பெரிதாய் யாரும் கண்டுகொள்ளவில்லை. விசாரணையை முன்னெடுக்க ஆர்வம்.காட்டவில்லை. வெறும் தகவல்களாய் எஞ்சிவிட்ட மரணங்கள் அவை என்று சொல்லும்போது அவ்வளவு வலியாய் இருக்கிறது. வாழும் போது மட்டுமல்ல. மரணத்திற்கும் கூட வர்க்கம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் வரி இது.
கோகிலா, மட்டும் இதில் விதிவிலக்கு.
அவள் மேல்தட்டு வர்க்கத்தின் குழந்தை. அதனால் என்ன? அவள் பெண். அதனால் வர்க்கம் என்பதையெல்லாம் தாண்டி அவள் இந்த உலகத்தில் வாழ மறுக்கப்பட்டவளாக, உடல் சிதைக்கப்பட்டவளாக மரணத்தைத் தழுவிக் கொள்கிறாள்.
கயல்விழியின் பாத்திரம் வேறு வகையில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளி ஆசிரியர் மட்டுமின்றி, தனது சித்தப்பாவாலும் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறாள். குடும்ப அமைப்பும் கூட பல நேரங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதற்கான குறியீடுதான் கயல்விழி.
ஆ. வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பில் வருகிற பிருந்தாக்களும் அபிலாஷின் கயல்விழியும் இன்றைய ஆணாதிக்கச் சமூகச் சூழலின் பிரதிபலிப்புகள்.
நாவல் தான் என்றபோதும் அபிலாஷுக்குள் இருக்கிற கவிஞன் ஆங்காங்கே விழித்துக் கொண்டு விடுகிறான்.
சின்ன சின்ன குழந்தைகள் எட்டிப் பார்ப்பதைப் போல நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன என்று வாசித்தபோது குட்டி நட்சத்திரங்கள் சிறு குழந்தைகளாகவே எனக்குத் தெரிந்தன.
தேநீர் டம்ளரில் மழைத்துளி பட்டு துள்ளிக் குதித்தன என்று வாசித்தபோது அந்த மழைத்துளிகள் மீன் குஞ்சுகளாகவே மாறிப் போயின.
ஒரு நெடுஞ்சாலை வளைவைப் பற்றிச் சொல்லும்போது தண்ணீர் சுமந்து போகும் ஒரு பெண்ணின் இடுப்பைப் போல இருந்தது என எழுதியிருப்பார். அதைவிடவும், மாடியில் இருக்கும் நீர்த் தொட்டியில் சகாயத்தின் உடல் கிடந்ததைப் பற்றிச் சொல்லும்போது கால்கள் மேலாகவும் உடல் நீர்த்தொட்டிக்குள்ளும் இருந்ததைப் பார்க்க ஜாடிக்குள் சொருகப்பட்ட பூங்கொத்தைப் போல இருந்தது என எழுதியிருப்பார். என்னவொரு குரூர அழகியல் இது. அதை வாசித்த கணத்தில் என் வீட்டு ஹாலில் இருக்கும் ஃப்ளவர் வாஷைப் பார்க்க அவ்வளவு பயம்.
நாவல் முழுக்க இப்படியான குட்டி குட்டி அழகியல் ததும்பும் வரிகள் வாசகனை எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது.
அதேபோல, நாவலினூடாக சமகால அரசியலையும் கிண்டலடித்திருப்பார். நமது பிரதமர் ஏதோவொரு நாட்டிலிருந்து செல்ஃபி எடுத்து வெளியிட்டார், இந்தியக் கிரிக்கெட் வாரியம் குறித்து ஏதோவொரு சர்ச்சை என்று இருக்கும். நாவல் எந்தக் காலத்தில் நிகழ்கிறது என்பதை யூகிக்க இடமளிக்கும் வரிகள் இவை.
எல்லாவற்றிற்கும் மேலாக நாவலின் 19ம் பகுதியில் தமிழ்ச்செல்வன் மாணவர்களோடு பேசுகிற இடம் மிக முக்கியமானது. தர்க்க நியாயங்களை/தத்துவங்களை இவ்வளவு எதார்த்தமாக விவாதித்திருப்பதற்காக அபிலாஷின் எழுத்துகள் மீதான மதிப்பை மேலும் கூட்டுகிறது. இதுவரை மொழியின் வாயிலாக நமக்குக் கற்பிக்கப்பட்டவற்றின் அடிப்படையிலேயே இந்த வாழ்க்கையை, இந்த உலகத்தை நாம் அணுகுகின்றோம். அதனால் அதுவே உண்மை ஆகிவிடாது. தர்க்க என்று கருதுவதும் கூட ஒருவகையில் கற்பனை தான் என்கிறார். நீட்சேவின் கருத்து இது. இதைக் கொண்டு குற்றங்களை அணுகுகிறார். பொதுப்புத்திசார் கருத்தியல்களை அணுகுகிறார். ஒருகட்டத்தில் தனது மகளின் மரணத்திற்குத் தான் தான் காரணம் தானே குற்றவாளி என உணர்ச்சிப் பொங்க பேசும்போது அங்கே வாசகன் மனத்தில் பெருத்த மௌனம் நிலவுகிறது. சமூகக் குற்றம் நடக்கும்போது எதிர்வினை ஆற்றாத யார் ஒருவரும் அங்கே குற்றவாளி தான் என்று தனது படைப்பின் மூலம் உணர்த்திய ஸீக்ஃப்ரிட் லென்ஸின் (நிரபராதிகளின் காலம்) குரலை அங்கே கேட்க முடிந்தது.
இந்நாவலின் மனதை அதிரச் செய்த பகுதியில் ஒன்று அதுவா முண்டாவின் வாக்குமூலம். சிறு குழந்தைகளைத் தேடித் தேடி, அவர்களை வதைத்துக் கொன்றதை எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் காவல்நிலையத்தில் பகிர்ந்து கொள்ளும்போது மனிதத்தின் மீது பெரும் அவநம்பிக்கை கவிகிறது. மனித மனத்தில் புதைந்து கிடக்கும் ஒருவித சைக்கோத்தனத்தின் உச்சமாகத்தான் அதுவா முண்டாவின் வாக்குமூலத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நிறைவாக, உரையாடலின் முடிவுக்கு வந்து விடலாம் நண்பர்களே,
அபிலாஷின் மற்ற எழுத்துகளில் இருந்து இந்த நாவல் வேறுபட்ட தளத்தில் நின்று பேசுகிறது. விறுவிறுப்பை மட்டும் ஏற்படுத்தாமல், மனித மனத்தின் உளக்கூறுகளை அலசுகிறது. இந்நாவலில் நடந்த குற்றச் செயல்களுக்கு யார் காரணம் என யோசித்துப் பார்த்தால் கதையில் வருகிற எல்லோருமே ஒருவகையில் குற்றவாளிகளாக ஆகியிருக்கிறார்கள். ஆனால், அதிகார பலமும், பணமும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் குற்றவாளியாகாமல் தப்பிச்செல்ல வழி செய்து கொடுக்கிறது.
குற்றத்தைத் துப்பறியும் ஜார்ஜும் ஒரு குற்றவாளியாக ஆகியிருக்கிறான். நாவல் அங்கே முடிகிறது. ஆனால், அங்கிருந்து கதை இன்னும் வேறொன்றாகத் தொடரத்தான் செய்கிறது.
கதை முடிவுக்கு வர முடியாமல் வாசகன் துப்பறிவதைத் தொடங்கிவிடுகிறான்.
துப்பறியத் தொடங்கும் வாசகனுக்குள்ளும் ஒரு ஜார்ஜ், ஒரு தமிழ்ச்செல்வன், ஒரு மோகனா, ஒரு மோகன் ஒரு அரசு, அதுவா முண்டா என யாரேனும் ஒளிந்திருக்கக் கூடும்.
****
நன்றி : அம்ருதா மாத இதழ்
****
கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் - நாவல்,
ஆசிரியர் : ஆர் அபிலாஷ்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
முதல் பதிப்பு : 2016
Great
பதிலளிநீக்குGreat
பதிலளிநீக்கு