இட்லி கடை
- மனுஷி.
கூரியர் அனுப்பிவிட்டுத் திரும்புகையில் பசி வயிற்றைக் கிள்ளியது. மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. வயிற்றுக்கு மட்டும் எப்படித்தான் பசி என்கிற மிகச்சரியாக அடித்துவிடுகிறதோ? எங்காவது இட்லி கடையில் சாப்பிடலாம் எனக் கண்களை மேய விட்டபடிப் போய்க் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட பெட்டிக்கடைகள், பானி பூரி கடை, ஒன்றிரண்டு டீக்கடைகளை எடுத்து வைத்து ஷட்டரை இழுத்து மூடிக் கொண்டிருந்தார்கள். மீன்குழம்புடன் இட்லிக்குத்தான் நாக்கு ஏங்கிக் கொண்டிருந்தது.
அஜந்தா சிக்னல் வளைவில் மிக உயர்ந்த ஸ்டார் ஓட்டல் ஒன்று புதிதாக முளைத்திருந்தது. பத்து வருடத்திற்கு முன்பு அங்கே ஒரு திரையரங்கம் இருந்ததாக நினைவு. அஜந்தா சிக்னல் என்ற பெயரும் கூட அஜந்தா தியேட்டர் நினைவாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அஜந்த தியேட்டர் தான் இப்போ அதிதி ஸ்டார் ஹோட்டலாக மினுக்கிக் கொண்டிருக்கிறது. அதிதிக்கு எதிரில் தான் புதிதாக முளைத்த ஷென்பகா ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குள வசதியுடன் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கிறது. விருது விழாவிற்கு வந்து நிற்கும் ஹாலிவுட் நடிகையின் தோரணை ஷென்பகா ஹோட்டலைப் பார்க்கும்போது வரும். என்னைக்காவது ஒருநாள் இந்த ஹோட்டல் அறையில் தங்கி, அங்குள்ள ரெஸ்ட்டாரண்டில் முள்ளுக்கரண்டியால் சிக்கன் அல்லது மீனைக் கொத்தித் தின்று பசியாற வேண்டும் என்பது சின்னஞ்சிறு ஆசை.
எப்போதும் போல ஷென்பகாவைப் பார்த்தபடி ஸ்கூட்டியில் கடக்கையில் அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கட்டடத்தின் வாசல் அருகில் தள்ளுவண்டி கடை. ஒரு அக்காவும் ஒரு சின்ன பையனும் இருந்தார்கள். அம்மா பையனாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்து ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மூன்று பேர் பார்சல் கேட்டு நின்றிருந்தார்கள்.
அப்போது தான் சுடச்சுட இட்லித்தட்டை எடுத்து வெளியே வைத்து தண்ணீர் தெளித்து தட்டில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் அந்த அக்கா. இட்லியில் இருந்து வந்த ஆவி வாசமே வந்து சாப்பிட்டுப் போ என்று கூப்பிட்டது. ஒரு தட்டில் எண்ணெயில் பொறித்து வைத்த மீன் துண்டுகள் இருந்தன. அக்கா, மூனு இட்லி என்றதும் மூன்று இட்லியைப் பார்சல் செய்யப் போனான். இல்ல இங்கயே சாப்ட போறேன் என்றதும் சில நொடிகள் என் முகத்தைப் பார்த்தவர், தட்டுல வச்சு கொடுப்பா என்றார்.
அந்தப் பையன் ஒரு தட்டில் மூன்று இட்லி வைத்து கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் தக்காளி சட்னி ஊற்றினான். மீன் குழம்பு இல்லையா என்றதும் ஏண்டா என்ன வேனும்னு கேட்டு ஊத்துனு எத்தனை முறை சொல்வது என்றபடி முறைத்துவிட்டு தோசையைத் திருப்பிப் போட்டார். பரவாயில்லை என்றபடி இட்லியைப் பிட்டு வாயில் வைத்தேன். சாம்பாரும் சட்னியும் லேசாக மிக்ஸ் ஆகி சுவையைக் கூட்டியது. ஆஹா.. என்று மனம் துள்ளிக் குதித்தது. ஒரு இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிட்டே ஆகனும் என்று மனதுக்குள் சொன்னபடி சாப்பிட்டேன்.
அவ்வளவு பெரிய ஹோட்டலின் முன்பு தள்ளுவண்டி கடை போட்டு வியாபாரம் செய்வதற்குத் தனியாக துணிச்சல் வேண்டும். ஸ்டார் ஹோட்டல் என்ன ஸ்டார் ஹோட்டல்? இந்த இட்லிக்கும் சாம்பார் சட்னிக்கும் ஈடாகுமா என்று அந்த ஹோட்டலின் உயரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தேன்.
தோசை சுடுவது, இட்லியை எடுத்து வைப்பது, ஆம்லேட் ஆஃப் பாயில் போடுவது இதை மட்டுமே செய்து கொண்டிருந்தார். பார்சலுக்கான காசை அந்தச் சின்ன பையன் கணக்கு பார்த்து வாங்கி வைத்தான். அந்த அக்காவின் முகம் ஏனோ வதங்கியிருந்தது. கருப்பு தான் என்றாலும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் அந்த முகத்தில் இருந்தது. மஞ்சள் பூசிய முகத்தின் மேல் வாழ்வின் மீதான கோபம் படர்ந்திருந்தது நூலாம்படை போல. அம்மாவின் மனம் புரிந்தவன் போலவே நடந்து கொண்டான் அந்தப் பையனும். அக்கா, கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தால் இந்த உணவு கூடுதல் டேஸ்ட்டா மாறிடும் என்று நாக்கின் நுனி வரை வார்த்தை வந்தது. அடுத்த முறை வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என இட்லியுடன் சேர்த்து அமைதியாக விழுங்கி விட்டேன் வார்த்தைகளையும் எனது சின்ன புன்னகையையும்.
நான்காவது இட்லியை வைக்கச் சொல்லிக் கேட்டபோது தான் அந்த அக்காவின் சிடுசிடு முகத்திற்குக் காரணம் விளங்கியது. நெஞ்சு தெரியும் படியாக ஊதாக்கலர் சட்டையும், சரியாகக் கட்டாத லுங்கியுமாக வந்து அமர்ந்தார் ஒருவர். நல்லா குடித்திருக்கிறார் என்பதைக் கண்களும் கேவலமான சிரிப்பும் சொன்னது. ஏன்டா என்னையெல்லாம் கவனிக்க மாட்டியாடா என்றதும் அந்த அக்கா கோபமாகப் பார்த்து முறைத்தார். அந்தப் பையன் ச்சீ ப்பே என்றான். அவர்களுக்குள் இருந்த பந்தம் விளங்கியது. சீக்கிரம் கடையைச் சாத்திட்டு வாடி என்றார். காதில் வாங்கிக் கொள்ளாதது போல வேலையில் மும்முரமாக இருந்தார். எவ்ளோடா தேருச்சு இன்னைக்கி என்றதும் யோவ் சும்மா இருக்க மாட்டியா என்றான் அந்தப் பையன். டேய் அந்த ஆளை இங்கிருந்து போகச் சொல்லுடா என்றார் அந்த அக்கா.
பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்து மீன் குழம்பில் தோசையைக் குழைத்து அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் இது நம்ம கடை தான். நல்லா கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு ஹெஹெஹே என்று சிரித்தார். அவர் சொன்னதற்காகவே தம்பி ஒரு தோசை என்றார். முட்டை தோசையா சாதா தோசையா என்று கேட்டதும் சாதா தோசை தான் என்றார். அந்த அக்கா தோசை ஊற்றினார். வடிவேலு ஒரு படத்துல ஏங்க இது கடலெண்ணை வேணும்னு கேப்பான். கொண்டு வந்து வச்சதும் இது நல்லெண்ணயானு கேப்பான். சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார். முட்டை தோசை சாதா தோசைக்கும் கடலெண்ணை நல்லெண்ணெய் காமெடிக்கும் என்ன சம்பந்தம் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. தோசை சொன்னவர் மட்டும் கூட சேர்ந்து சிரிப்பே வராமல் சிரித்தார். பார்சலுக்காக நின்றிருந்தவர்கள் இரண்டு பேரையும் அருவருப்பான பூச்சியைப் பார்ப்பது போல பார்த்தனர்.
கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடறேன் என்று மகனிடம் சொன்னவர், அந்த ஆள்கிட்ட கவனம் என்று கிசுகிசுத்தார். அந்த அக்கா எப்போ போவாங்க என்று காத்திருந்தவர் போல லேசான தள்ளாட்டத்துடன் எழுந்தார். பார்சல் வாங்கியவர்கள் கொடுத்த தாள்களைக் கொத்தாக அள்ளினார். தோசைக் கரண்டியால் கையில் மொத்தென்று வைத்து காசைப் பிடுங்கிக் கொண்டான். ஒரு நூறு ரூபாய் தாள் மட்டும் அவர் கையில் இருந்தது. இருடா உங்க அம்மாளையும் உன்னையும் பார்த்துக்கறேன் என்றபடி எதிரில் இருந்த மதுக்கடைக்குப் போனார்.
இட்லியின் சுவை மறந்து போயிருந்தது எனக்கு.
நன்றி : அவள் விகடன் (செப்டம்பர், 2016)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக