செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

தேனி பாராட்டு விழா

தேனி இலக்கிய சந்திப்பு :
2008இல் கவிஞர் உமாமகேஸ்வரியை ஒரு நேர்காணலுக்காகச் சந்திக்க தேனிக்குச் சென்றிருக்கிறேன். அதன்பிறகு 2010இல் பல்கலைக்கழக துறைசார் நண்பர்களுடன் சுருளி அருவிக்குச் சுற்றுலா சென்றேன். அதன்பிறகு தேனிக்குச் செல்லும் வாய்ப்பு வரவில்லை. ஆனால், தேனியை நினைத்தாலே பிரம்மாண்டமான மலைகளும் குளிர்ச்சியும் நினைவுக்குள் வந்துபோகும்.
யுவபுரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டபோது தேனியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறோம் என்று விசாகன் தோழர் சொன்னார். மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன். தேனிக்குச் செல்லும் உற்சாகம் மனதெங்கும் நிறைந்திருந்தது.
ஜூலை 29 அன்று இராஜபாளையத்தில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய விழாவில் கலந்து கொண்டபின், அடுத்த நாள் செல்வக்குமார் அண்ணா மற்றும் அவரது நண்பர் ராஜா ஆகியோருடன் தேனிக்குப் பயணம் செய்தேன். இராஜபாளையத்தில் இருந்து கிளம்பியதும் எங்களோடு மழையும் பயணம் செய்தது. ஜன்னலோர இருக்கையில் மழையை, மலையை ரசித்தபடி மூன்று மணி நேரப் பயணம். 
சரியாக மாலை 4 மணி அளவில் தேனியில் விசாகன் தோழரை நிகழ்ச்சி நடைபெறவிருந்த தெய்வா ஹோட்டலில் சந்தித்தேன். பிறகு ஏற்பாடு செய்திருந்த அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தார். கொஞ்ச நேரத்தில் ‘எது என்னை எழுதத் தூண்டியது?’ என்பது பற்றிச் சிறு வீடியோ பதிவு ஒன்றை அவரது கேமராவில் பதிவு செய்தார். பத்துநிமிட உரையாடலுக்குப் பிறகு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குச் சென்றோம்.
முகநூல் தோழியான பிரிதம் நிலாவைச் சந்தித்தது கூடுதல் கொண்டாட்டமாக இருந்தது. கற்றல் இனிது பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என ஆவலோடு இருந்தேன். தேனி நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அன்பில் நெகிழ்ந்து போனேன். எங்கே சென்றாலும் அன்பானவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.
மழையும் மழை நிமித்தமுமான விடுமுறை நாளினை இலக்கிய நிகழ்வுக்கு ஒப்புக் கொடுத்த அறிஞர்கள், எழுத்தாளர்களால் அரங்கு நிறைந்திருந்தது. சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியைத் தொடங்கியிருந்தார்கள். சா. தேவதாஸ் தோழர், யமுனா ராஜேந்திரன் மற்றும் கதைப்பித்தன் ஆகியோருடைய மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த அறிமுகத்தினையும் விமர்சனங்களையும் ஷாஜகான், நேசமித்ரன், ஆர்.எஸ். லட்சுமி, தி. குமார், பொன்முடி, மணிமொழி, கூடல் தாரிக் ஆகியோர் மிக நேர்த்தியாக முன்வைத்துப் பேசினர்.
தலைமையுரையில் ஏர் மகாராசன் தோழர், ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதை நூல் குறித்து ஆழமான உரையை நிகழ்த்தினார். பெண் கவிதைகளின் நீண்ட வரலாற்றினைச் சுட்டிக் காட்டிப் பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. அவரது பெண் மொழி இயங்கியல் புத்தகத்தை எனது முதுகலை வகுப்பில் வாசித்திருக்கிறேன். அவரைத் தேனி நிகழ்வில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாக, பாராட்டு விழாவில் ஏற்புரைக்கு முன்பு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பு செய்வார்கள். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தோழர்கள் என்னை அன்பு மகளாக வரித்துக் கொண்டார்கள். இப்போது நினைத்தாலும் சந்தோஷத்தில் நெகிழ்ந்து கண் கலங்குகிறேன். தலையில் கிரீடம் சூட்டி, ரோஜா மலர் மாலை அணிவித்து, பெரிய தட்டில் புத்தகங்களையும் அழகான சுடிதார் ஒன்றையும் வைத்து சீர்வரிசையாக அளித்துப் பெருமை செய்தார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட இளவரசி போல உணர்ந்த தருணம் அது. மலர் மாலை மற்றும் கிரீடத்துடன் எனது சுருக்கமான ஏற்புரையை வழங்கினேன்.
மகாராசன் தோழர், ஷாஜகான் தோழர், ஆர்.எஸ். லட்சுமி அம்மா, விசாகன் தோழர், செல்வக்குமார் அண்ணா என என்னைச் சுற்றி இவ்வளவு அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தேனி நிகழ்வில் தெரிந்து கொண்டேன். விசாகன் தோழருக்கு என்றென்றைக்குமான அன்பும் நன்றியும்.
தேனி இலக்கியச் சந்திப்பு, தேனீ போல இன்னும் சுறுசுறுப்பாக எழுத்தில் இயங்குவதற்கு ஆற்றலைக் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் தோழர். பாராட்டுகளும் விருதுகளும் இன்னும் நிறைய பெற வாழ்த்துகிறேன் தோழர்
    நட்பின் வழியில்
    சோலச்சி
    புதுக்கோட்டை
    பேச : 9788210863

    பதிலளிநீக்கு