திங்கள், 13 நவம்பர், 2017

பை சைக்கிள் தீவ்ஸ் - எளிய மனிதனின் வாழ்க்கை

மூன்றாவது முறையாக ஒரு படத்தைப் பார்க்கும்போதும் முதல் முறை பார்க்கும் போது இருக்கிற உணர்வு ஒருசில படங்கள்தான் கொடுக்கும். அப்படியொரு படம்தான் ’பை சைக்கிள் தீவ்ஸ்’.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான இத்தாலி நகரத்தின் ஒரு ஏழைக்குடிமகனின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்வதினூடாக அன்றைய இத்தாலியின் சூழலை, மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் ஆன்மாவைத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் விட்டோரியோ.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி நகரத்தில் கதாநாயகன் ரிச்சிவுக்கு சைக்கிள் இருந்தால் போஸ்டர் ஒட்டும் வேலை என்ற நிபந்தனையுடன் வேலை கிடைக்கிறது. வீட்டில் இருக்கும் பெட்ஷிட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் நல்ல விலைக்கு விற்று, அதில் சைக்கிள் வாங்கிக் கொண்டு பெருமிதமாக வேலையில் சேர்கிறார் ரிச்சி. சிறுவயது மகனை பெட்ரோல் பங்கில் இறக்கி விட்டுவிட்டு, மாலையில் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு, முதல்நாள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கையில் அவரது சைக்கிள் களவாடப்படுகிறது. முடிந்தவரை துரத்திப் பிடிக்க முயற்சி செய்கிறார். சைக்கிளைத் திருடியவன் சிட்டாகப் பறந்துவிடுகிறான். போலிஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கிறான். சரியான நடவடிக்கை இல்லை. குறி சொல்லும் பெண்ணிடம் செல்கிறான். அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிறகு ஒருவழியாக, சைக்கிள் திருடியவனை அடையாளம் கண்டு பிடித்துக் கேட்கையில் கைகலப்பு உருவாகி, அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். சைக்கிள் இல்லாமல் வேலை இல்லை என்கிற எண்ணம் மனதைக் குடைந்தெடுக்க, வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் சுவரோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளைத் திருடிவிடுகிறான். ஆனால், அவ்வளவு சாமர்த்தியம் இல்லாமையால் மாட்டிக் கொண்டு அடி வாங்குகிறான். பின்பு, மகன் புரூனோவுக்காக போலீஸிடம் போகாமல் மன்னித்து அனுப்புகிறார்கள். சிறுவயது மகன் முன்பு திருட்டுப் பட்டத்துடன் ரோட்டில் அடி வாங்கியது மனதை உறுத்த, கூனிக் குருகி நடந்து வருகையில் மகன் புரூனோ அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.
வேலை கிடைத்தவுடன் குறி சொல்லும் பெண்ணிடம் நன்றி சொல்ல செல்லும் மனைவி மரியாவிடம் விவாதம் செய்து முற்போக்குவாதம் பேசும் ரிச்சி, சைக்கிள் திருடு போனபின் தன் மகன் புரூனோவுடன் அதே குறி சொல்லும் பெண்ணை நாடிச் செல்வது மனித வாழ்வின் மிகப்பெரும் முரண். ஆனால், அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்தக் காட்சி மிகப்பெரும் பகடியாக இருக்கிறது. மனிதர்களின் இயலாமையை, கையறுநிலையை முதலீடாக வைத்துப் பணம் பார்க்கும் ஆன்மீகத்தைப் போகிற போக்கில் நக்கலடிக்கிறது இந்தப் படம்.
அதேபோல, சைக்கிள் காணவில்லை என்றதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும் காட்சியும் கூட இந்தச் சமூகத்தின் மீதான, அதிகார நிறுவனங்களின் மீதான நல்ல விமர்சனம். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி, சைக்கிளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் தொலைத்தவனிடமே ஒப்படைப்பதும், கண்டுபிடித்துத் தருவது தனது கடமை இல்லை என வாதிடுவதும், வேறொரு அதிகாரி எதுவும் பிரச்சினையா என்று கேட்கும் போது இந்தப் போலீஸ்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லை, வெறும் சைக்கிள் தான் என்று சொல்லிவிட்டுச் செல்வதும் கையறு நிலையில் ரிச்சி வெளியேறிச் செல்வதும் யதார்த்தமான காட்சியமைப்பு. ஏதோவொரு மனிதனின் வாழ்க்கை, இன்னொரு மனிதனுக்கு மிக மிக சாதாரண விஷயமாக இருக்கிறது.
இந்தப் படம் முழுக்கவும் சைக்கிள் என்பது வெறும் சைக்கிளாக இல்லை. ரிச்சி என்ற ஏழைக் குடும்பஸ்தனின் வாழ்க்கையாகவே இடம்பெறுகிறது. காலம் மிகவும் விசித்திரமானது. ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி, அதை வெகுசீக்கிரமே நீர்க்குமிழி போல உடைத்து விட்டு, தேடித் திரிய வைக்கிறது. பெரும்பாலும் இழந்த அந்த வாய்ப்பைத் திரும்பப் பெறுவதற்கான அல்லது கிடைத்த அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமாக, தேடலாக இந்த வாழ்க்கை அமைந்து விடுகிறது. படம் முழுக்க சைக்கிளைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் ரிச்சி மற்றும் புரூனோ. சைக்கிள் கிடைத்து, மீண்டும் அவன் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்கிற தவிப்பு அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. ரெஸ்ட்ராண்ட் காட்சி, ஆலயத்தில் கடவுளை வழிபடும் காட்சி ஆகியவற்றினூடாக சமூகத்தில் காணப்படும் வர்க்க வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாக விமர்சனம் செய்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது புரூனோதான். அவனுக்காகத்தான்  இந்தப் படத்தை மூன்றாம் முறையாகவும் பார்த்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு முதல்முறையாகப் பார்த்தபோது இருந்த காதல் இப்போதும் இம்மியும் குறையாமல் இருக்கிறது அவன்மீது.
சைக்கிளைத் துடைத்துக் கொண்டே தன் அப்பாவிடம் பேசுவதாக இருக்கட்டும், சைக்கிளைத் தொலைத்துவிட்டுத் தாமதமாகத் திரும்பும் அப்பாவிடம் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததைக் கோபத்துடன் வெளிப்படுத்துவதாக இருக்கட்டும், அப்பாவுடன் சைக்கிளைத் தேடிக் கூடவே ஓடுவதாக இருக்கட்டும், அப்பா அடித்தவுடன் அவருடன் பேசாமல் முரண்டு பிடித்தபடி நடந்து செல்வதாக இருக்கட்டும், ரெஸ்ட்டாரண்டில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும்போது எதிர் டேபிளில் இருக்கும் வசதியான வீட்டுப் பையனைப் பார்வையால் வெறுப்பேற்றுவதாக இருக்கட்டும், கடைசியாக திருட்டுப் பட்டம் சுமந்து மனம் வெதும்பி நடக்கும் தந்தையின் கையை இறுகப் பற்றிக் கொள்கிற இடத்திலும் என, புரூனோ ஒரு கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறான் மனதில். புரூனோவின் முஅப்பாவோடு வேலைக்குக் கிளம்பும்போது கண்ணாடி பார்த்து தலை சீவிவிட்டு, அந்த மப்ளரை கழுத்தைச் சுற்றித் தூக்கிப் போடுகிற ஒரு காட்சி போதும் அவனை ரசித்துக் கொண்டே இருக்க.
படத்தை இன்னும் சிலாகித்துப் பேச எவ்வளவோ இருக்கிறது படம் முழுக்க. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சைக்கிள் திருடியவனைக் கண்டுபிடித்தும் சைக்கிளைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி, வேறு வழியில்லாமல் சைக்கிளைத் திருடி மாட்டிக் கொண்டபின், அடி வாங்கி, மன்னிக்கப்பட்டு சாலையில் மகனுடன் நடந்து வருகையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை. நான் புரிந்து கொள்கிறேன் அப்பா உன்னை என்பது போல பற்றிக் கொள்கிற அந்தப் பிஞ்சுக் கரம் தான் சபிக்கப்பட்ட இந்த வாழ்க்கையில் நமக்களிக்கப்படுகின்ற உச்சபட்ச கருணை. வரம். நம்பிக்கை. எல்லாமும். அந்த ஒற்றை நம்பிக்கையில் தான் சுழன்று கொண்டிருக்கிறது இந்த வாழ்க்கை இன்னமும்.
(பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் இறுதிக் காட்சியைக் கண்ணீரின்றி கடந்து வருகிற யாரும் பாக்கியவான்களே.)

1 கருத்து:

  1. ஹாய் மனுஷி

    அற்புதமான திரைப்படம் மனதை கலங்கச்செய்துவிடுகிறது. ரிச்சியோடு சேர்ந்து அவனுக்காக சைக்கிளை தேடச் சொல்கிறது..

    உங்கள் எழுத்தும் அற்புதம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு