நான் தேடித் தேடி யோசித்து யோசித்து எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர் மனுஷி.
2017 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர். என்ன அதிசயம். வாழ்த்துகள் பெண்ணே.
என்னுடைய பெயரில் (புனைபெயரில் என்றாலும் கூட) 20 வயது இளம்பெண், இந்தியப் பெண் உலகின் அழகிய பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
17 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பெண் உலக அழகிப் பட்டம் வென்றிருக்கிறார். இதைப் பெருமையாகக் கொள்வதா என்கிற கேள்வியைச் சில நண்பர்கள் எழுப்பி இருந்தார்கள். கோபம் கொண்டார்கள். இதைச் சிலாகிப்பவர்களை முட்டாள்கள் என்று ஒரு தோழி பதிவிட்டிருந்தார்.
உலகில் தோன்றிய எல்லாமே அழகு தான். அதற்கு மொழி கிடையாது. இனம் கிடையாது. வயது கிடையாது. பால் வேறுபாடு கிடையாது. அழகென்பது அன்பாலானது.
வணிக அரசியல் நோக்கத்திற்காகத்தான் உலக அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்மை தான். பெண்ணின் உடல் காட்சிப் பிண்டமாகக் காட்டப்படுகிறது. மறுக்கவே இல்லை.வணிக உள்நோக்கம் கொண்ட வெற்றியைக் கொண்டாடுவது நியாயமா என்கிற கேள்வி மிக மிக நியாயமனது. ஆனால் வாழ்த்து தெரிவிப்பவர்களை முட்டாள் என்று சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கிறது. நமது கருத்தை, விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் பொதுவெளியில் கருத்தை முன்வைக்கும்போது இப்படியான வார்த்தைகளைத் தவிர்க்கலாம் அல்லவா? உணர்ச்சிவசப்பட்ட கோபத்தை விட, பக்குவமான கோபம் தான் மாற்றத்திற்கான விதை.
இங்கே சில கேள்விகளை எழுப்ப வேண்டும்.
உலக அழகிப் போட்டி மட்டும் தான் வணிக அரசியல் உள்நோக்கம் கொண்டதா? கிரிக்கெட்டில், அரசியலில், சினிமாவில், கல்வியில், சின்னத்திரை விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் வணிக உள்நோக்கம் இல்லையா? ஆண்கள் ஆடுகிற 20/20 கிரிக்கெட்டில் சியர் கேர்ஸ் எதற்கு? சினிமாவில் கதாநாயகனைத் தொட்டுத் தடவி ஆட கூட்டமாக வெள்ளைத் தோல் பெண்கள் எதற்கு? மூலைக்கு மூலை சூப்பர் மார்க்கெட்டுகள் எதற்கு? நமது பணத்தைக் கரைத்து அவர்கள் கல்லா நிரப்புவதற்காவா? இவ்வளவு ஏன்? நமது கருத்துச் சுதந்திரத்தைக் காத்திரமாக வெளிப்படுத்த துணை செய்யும் முகநூல் கூட வணிக அரசியல், விளம்பர அரசியலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. டைம்லைனில் நான்கு நிலைத்தகவலுக்கு அடுத்து ஆன்லைன் ஷாப்பிங் விளம்பரங்கள் வருகின்றன. பொருளை வாங்கச் சொல்லித் தூண்டுகின்றன.
நாம் எங்கே சென்றாலும் பொருட்களை வாங்கத் தூண்டும் வாசகங்களும் கலர் கலர் புகைப்படங்களும் விளம்பரப் புன்னகைகளும் வியாபார தந்திரம் கொண்டவை தானே. தூண்டும் இத்தகைய விளம்பர உத்திகளை முதலில் விமர்சிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் எதிர்ப்பதன் மூலம், விமர்சிப்பதன் மூலம் மாற்றுச் சிந்தையோடு இயங்குகிறோம் என்கிற கற்பனைக்குள் சென்று விடத் தேவையில்லை. எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது மனோவியாதியாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்க் கருத்தை முன்வைக்கும்போது யாரை விமர்சிக்கிறோம், எதை விமர்சிக்கிறோம், விமர்சனங்களை எப்படி முன்வைக்கிறோம் என்பது மிக முக்கியம்.
ஒன்று மட்டும் நிச்சயம்.
உலக அரங்கிற்கான அரை கூவலை உள்ளூர் வணிக அரசியலில் இருந்தே துவங்கலாம்.
மிகச் சரியான பதிவு. வாழ்த்துகள் தோழர்
பதிலளிநீக்குnandri thozhar
நீக்குமிகச் சரியான பதிவு. வாழ்த்துகள் தோழர்
பதிலளிநீக்குஅருமை மனுஷி. உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன் . வெறுப்பரசியலும், எதிர்மறைக் கருத்துகளுமே சரியானவை என்கிற போக்கு முதன்மைப்படுவது நல்லதே அல்ல.
பதிலளிநீக்கு