கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே வாழ்த்து அட்டைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் சினிமா நடிகர்கள் / நடிகைகள் படங்கள், பப்ளி பப்ளி குழந்தைகள், அழகான அடக்கமான தமிழ்ச் சாயல் கொண்ட பெண்களின் ஓவியங்கள், வண்ண வண்ண மலர்க் கொத்துகள் இவைகள் தான் வாழ்த்து அட்டைகளில் இருக்கும். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் என மூன்று பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்து அட்டைகள் இருக்கும்.
முதலில் எத்தனை பேருக்கு இந்த வருடம் வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்று எழுதி வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களுக்கு எந்த நடிகர் அல்லது நடிகை பிடிக்கும் என்பதை டிக் செய்து கொள்வோம். எங்களுடைய பள்ளி ஆசிரியர்களில் யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று அது ஒரு தனி லிஸ்ட்.
எங்களுக்கு நான்காம் வகுப்பு எடுத்த ஆசிரியர் மட்டும் இப்போது கூட நினைவில் இருக்கிறார். மற்ற வகுப்பாசிரியர்கள் அவ்வளவாக மனதில் நிற்கவில்லை. நான்காம் வகுப்பு சொல்லிக் கொடுத்த சார் அந்தக் காலத்து விஜய்காந்த் போல இருப்பார். காற்றில் அலையும் தலைமுடி. பேண்ட் சட்டை, கறுத்த கலையான முகம். ம் குண்டான உடல். ஏய் விஜயகாந்த் சாரு வந்துட்டாராப்பா என்று கேட்கிற அளவுக்கு அச்சு அசலாக இருப்பார். அவருக்கு மட்டும் விஜய்காந்த் புகைப்படம் போட்ட வாழ்த்து அட்டையை ஒவ்வொருவரும் தனித்தனியாக போஸ்ட் செய்துவிட்டு இரண்டொரு நாளில் வகுப்பில் ஆவலோடு காத்திருப்போம். அவர் வாழ்த்து அட்டை வந்தது பற்றி ஏதாவது சொல்கிறாரா என. அவர் அதைப் பற்றி வாயே திறக்க மாட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு நாங்களே கோரசாக கேட்போம். வாழ்த்து அட்டை அனுப்பினோம் சார் என்று. சிரித்துக் கொண்டே வந்துச்ச்சு வந்துச்சு என்பார். அவ்வளவு தான் அவர் ரியாக்ஷன். அந்தப் பதிலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். கிறிஸ்துமஸ் தொடங்கி பொங்கல் வரை ஒரு நீண்ட விடுமுறை வரும். கடைசி நாளில் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பசங்களா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுக் கிளம்புவார்.
ஐந்தாம் வகுப்பு முடித்து அந்தப் பள்ளியில் இருந்து அடுத்து கெடிலம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தோம். என் நினைவு தெரிந்து எட்டாம் வகுப்பு வரை அவருக்கு நாங்கள் வாழ்த்து அட்டையும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியும் அனுப்பி இருக்கிறோம். அடுத்தடுத்த வருடங்களில் அப்படியே அந்த வாழ்த்துத் தொடர்பு மங்கிப் போனது. நானும் மேற்படிப்புக்காக ஊரைவிட்டு விழுப்புரம், பாண்டிச்சேரி என இடம் மாறிக் கொண்டே இருந்ததில் பள்ளி தோழிகளிடமிருந்து முற்றிலுமாக வேரறுந்து போனேன்.
அடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்பியது போக அடுத்து ஊரில் இருக்கும் உறவினர் வீடுகளில் இருக்கும் எஞ்சோட்டு பெண்களுக்கு வாழ்த்து அட்டையின் உள்ளே பொம்மையெல்லாம் வரைந்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளை எழுதி அனுப்புவோம். மூன்றாவது கட்டமாக அடுத்த தெரு, பக்கத்து வீட்டில் இருக்கும் உடன் படிக்கும், விளையாடும் தோழிகளுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம். மாலையில் விளையாட வரும்போது முதல் கேள்வி. ஏய் பொங்கல் வாழ்த்து கார்டு அனுப்பினேன் வந்ததாப்பா என்பதாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டையை போஸ்ட் செய்யும்போதும், தோழி அனுப்பிய வாழ்த்து அட்டையைப் பெயர் சொல்லி தபால்காரர் அழைக்கும்போதும் பண்டிகைக்கான உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
அதற்கடுத்து கல்லூரிக் காலத்தில் அப்படி வாழ்த்து அட்டை அனுப்பும் அளவுக்கு யாரிடமும் நட்பாகப் பழகவில்லை. நானுண்டு. வகுப்பறை உண்டு. நூலகம் உண்டு என்று இருந்துவிட்டேன். படிக்க வந்த சூழல் அப்படி எனக்குள் என்னைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் என்னுடைய உறவுக்கார அக்காவின் நண்பர் ஒருவர் ஸ்கூல் முடித்து வரும்போது ஒரு வாழ்த்து அட்டையைக் கையில் கொடுத்தார். வீட்டுல போய் படிச்சு பார் என்று சொல்லிவிட்டு விசுக்கென்று பைக்கில் பறந்துவிட்டார். ஆடம்பரமான வாழ்த்து அட்டைக்குள் ஒரு காதல் கடிதம். படித்துவிட்டு அப்படியொரு அழுகை. எனக்கென்ன காதலிக்கும் வயதாகிவிட்டதா அதற்குள் என்று தேம்பித் தேம்பி அழுதேன். அக்கா வந்து சமாதானம் செய்தார். இதெல்லாம் இந்த வயசில் நடக்கும். இயல்பு தான். பிடிக்கல என்றால் சொல்லிடு. அழாதே என்று ஆறுதல் சொன்னார். நான் வளர்ந்த பெண் என்ற உணர்வை அந்தக் காதல் அட்டை எனக்கு உணர்த்தியது. அந்த அட்டையைக் வெந்நீர் சூடாகிக் கொண்டிருந்த அடுப்பில் போட்டு விட்டு அது கொழுந்துவிட்டு சிவப்பு நிறத்தில் எரிவதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் நானுண்டு என் வேலை உண்டு என்று இருந்தபோதும் சில வாழ்த்து அட்டைகள் ஒற்றை ரோஜாப் பூவுடன் என் முன் வரும். ஒன்று வாங்கவே மாட்டேன். அல்லது வாங்கி அந்தப் பையன் கிளம்பிய அடுத்த நொடியே படித்தே பார்க்காமல் கிழித்து ரோட்டோரம் எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடப்பேன்.
என் வாழ்க்கையின் முன் வந்து நின்ற இளம்பருவத்துக் காதல்களை இப்படித்தான் விரட்டியடித்தேன்.
2005க்குப் பிறகு வாழ்த்து அட்டை கலாச்சாரம் மாறிவிட்டதாக உணர்கிறேன். எல்லார் கையிலும் ஒரு ரிலையன்ஸ் போன் அல்லது பிளாக் & வொயிட் நோக்கியா போன் இருக்கும். மெசேஜ் பூஸ்டர் போட்டுக் கொண்டு எல்லா உரையாடல்களும் வெறும் மெசேஜ்களாகச் சுருங்கி விட்டன. காதலைச் சொல்வதாக இருந்தாலும் சரி. பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் வாழ்த்தாக இருந்தாலும் சரி. குட்டி குட்டி மெசேஜ்கள் தான். முகம் பார்த்து தயக்கமும் நடுக்கமுமாக காதலைச் சொல்லும் காலம் மலையேறிப் போனது செல்போன்கள் நமது மூன்றாவது கையாக மாறிக் கொண்டிருந்தபோதுதான். அதுவும் ஆண்டிராய்டு போன் வந்த பிறகு வாழ்வின் மகத்தான தருணங்கள் எல்லாம் ஸ்மைலிக்களாக இன்னும் சுருங்கிவிட்டது.
வாழ்த்து அட்டைகளில் கையெழுத்து தாங்கி வரும் வார்த்தைகளுக்கு இணையான உணர்வு விலையுயர்ந்த செல்போன் மெசேஜ்களில் ஸ்மைலிகளில் கிடைப்பதேயில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக