#ஆரோவில் #Youth_Center இல் பொங்கல் விழா கொண்டாட்டத்தைப் பார்க்கப் போயிருந்தேன். ஏற்கனவே வேறொரு சந்தர்ப்பங்களில் இரண்டு முறை அங்கே சென்றிருந்தாலும் இந்த முறையும் ஆரோவில் காட்டின் ஒற்றையடிப் பாதையில் வழி தெரியாமல் தேடித்தான் போக வேண்டியிருந்தது.
ஒருவழியாக யூத் செண்டர் போய்ச் சேர்ந்ததும் அவ்வளவு கூட்டம். பெரும்பாலும் வெளிநாட்டு முகங்கள். ஆரோவில்வாசிகள்.
கொண்டாட்டத்தின் கூக்குரலை அந்தக் காட்டுக்குள் கேட்க முடிந்தது.
நுழைவாயிலில் ஒரு சிறு வாகனத்தில் இருந்தபடி இரண்டு மூன்று பேர் டோக்கன் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நிறைய உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு இருந்தன. #no_money_only_tokens என்ற வாசகம் வாகனத்தின் மேல் எழுதப்பட்டிருந்தது. சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் டோக்கன் வாங்குவதில் பிஸியாக இருந்தார்கள். ஏற்கனவே மதிய உணவைச் சாப்பிட்டிருந்ததால் அங்கே சாப்பிட வாய்ப்பில்லாமல் போனது.
ஒருபக்கம் சீசா விளையாட்டைக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிரமிக்க வைக்கும் உயரம் வரை சீசா மரம் மேலெழும்பிக் கீழே வந்தது. இன்னும் சில குழந்தைகள் சருக்குமரம் விளையாடினர். அதற்கடுத்து கொஞ்சம் உள்ளே ஈஃபிள் டவர் போல உயர்ந்த கோபுரம் ஒன்று செம்மாந்து நின்றிருந்தது. இன்னொரு இடத்தில் கீழிருந்து மேலாக தொங்கும் ஏணி ஒன்று அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதன் மீது சிறுவர்களும் சில இளைஞர்களும் ஏறி மரத்தின் உச்சியை எட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம் நான்கு வெளிநாட்டு இளைஞர்கள் ஷாட்ஷும் டீ ஷர்ட்டும் அணிந்தபடி இளநீர் சீவிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நேர் எதிரில் சற்றுத் தள்ளிச் சுடச் சுட பீட்சா தயாராகி விற்பனையாகிக் கொண்டிருந்தது. கேழ்வரகு மாவு தோசை முதலான இந்திய, தமிழ்நாட்டு உணவுகளும் தயார் செய்யப்பட்டு டோக்கன்களுக்குக் கொடுக்கப்பட்டன. அழகழகான ஓவியங்கள் வரையப்பட்ட டீசர்ட்டுகள், கைவினைப் பொருள் கம்மல்கள், வளையல்கள் விற்பனைக்கு இருந்தன.
இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சூடான மசாலா டீ செய்து குக்கீஸுடன் சேர்த்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஆங்கில இசை நிகழ்ச்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. துள்ளலான இசையினூடே சூடான தேநீரையும் இனிப்பான குக்கீஸும் வாங்கிட்டு சாப்பிட்டபோது மாலைப் பொழுது இன்னும் அழகாக இருப்பதாக உணர்ந்தேன்.
ஆங்கில மொழியின் வாசம் சுற்றிலும் இருந்தது. தெரிந்தவர், நண்பர், தெரியாதவர் என்கிற பேதம் இல்லாமல் புன்னகையோடு ஹெலோ சொல்லிக் கடந்து போன மனிதர்களின் முகங்கள் அந்நியப்பட்டு ஒதுங்கியிருக்கச் செய்யவில்லை. அங்கே புன்னகை, அன்பின் மொழியாக இருந்தது.
மரங்களின் சலசலப்புகளுக்கு இடையில், குருவிகளின் கீச்சொலிகளுக்கு இடையில் மொழி பேதமற்று ஒரு சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகத்தின் ஊற்றுக் கண்ணாகப் பொங்கிக் கொண்டிருந்தது.
இப்படியொரு பொங்கல் கொண்டாட்டம் ஆரோவில்லில் நடக்கிறது என்று சொல்லி, என்னை அழைத்துச் சென்ற நண்பன் Kaba Yoவுக்குத்தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். நன்றியும் அன்பும் கபா. <3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக