வெள்ளி, 19 ஜனவரி, 2018

தமிழ் சினிமா : நகைச்சுவை எனும் நஞ்சு

கல்லூரியில் மாணவிகளுக்கு சங்க இலக்கியம் அறிமுக பாடமாக வைக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு இவற்றில் ஒவ்வொரு பாடல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு எல்லாவற்றையும் ஒரு கதை போல ஒரு குறும்படம் போல பாடலின் பின்புலம் சொல்லி நடத்த முயற்சி செய்கிறேன். மாணவிகளும் சங்க இலக்கியத்தின் பால் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக வகுப்பில் கவனிப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

எட்டுத்தொகை வரிசையில் புறநானூறு பாடல் நடத்தும்போது புறநானூறு குறித்த முழு அறிமுகத்தை வகுப்பில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஔவையார் அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது போனது, பாரி எனும் குறுநில மன்னனை மூவேந்தர்களும் சேர்ந்து வீழ்த்தியது என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தேன். பாரியைப் பற்றிச் சொல்லும்போது பாரியின் மகள்களான அங்கவை சங்கவை பற்றிச் சொல்லத் தொடங்கியதும் வகுப்பில் பயங்கரமான சிரிப்பு. சிரிப்புக்குக் காரணம் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்தது.

எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல்.

இந்த நூற்றாண்டிலும் கூட உறவுகளை இழந்து தவிக்கும் மனதின் கண்ணீர்க் குரலோடு இந்தப் பாடலோடு பொருத்திப் பார்த்து ஆற்றிக் கொள்ள முடியும். அவ்வளவு உன்னதமான படைப்பாளுமை மிக்க பெண்கவிகளைக் கொச்சைப் படுத்தி நகைச்சுவை எனும் பெயரில் நஞ்சை விதைத்த தமிழ் சினிமாவை என்ன சொல்லித் திட்டுவது? சங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குநர், ஆன்மீக அரசியல் செய்யவிருக்கும் ரஜினிகாந்த், பட்டிமன்றங்கள் நடத்தி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சாலமன் பாப்பையா, நடிகர் விவேக், இப்படியொரு கீழ்த்தரமான வசனம் எழுதிய சுஜாதா என எல்லோருக்கும் இதில் சமபங்கு இருக்கிறது.

அங்கவை மற்றும் சங்கவை அவ்வளவு கருப்பாக இருந்தார்கள் என்று இவர்களுக்கு யார் சொன்னது? கருப்பாக இருந்தாலும் அது அழகற்றது என்றும் நகைப்புக்குரியது என்றும் யார் சொன்னது? அங்கவை சங்கவை எனும் பெயரைச் சொன்னதும் இருவரின் ஆளுமை குறித்த பெருமையும், அவர்களின் துயர வாழ்வின் மீதான இரக்கமும் கொள்ளாமல் பொங்கிச் சிரிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியதற்காக எப்போதாவது இந்த இயக்குநரும் நடிகர்களும் குற்றவுணர்வு கொள்வார்களா?

சினிமாவில் இரட்டை அர்த்த நகைச்சுவை எனும் கொடுமையைக் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம் போல. இப்படியான நச்சு விதைகளை நகைச்சுவை என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழ்மொழி, அறுபடாத இலக்கிய வளங்கள் கொண்ட தமிழ் இனம் என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்ளும் நமக்கு, ஏன் இப்படியான வசனங்களின் மீது கோபம் வருவதில்லை.

கவுண்டமணி செந்தில், வடிவேல், விவேக், சந்தானம் என நகைச்சுவை மன்னர்கள், நகைச்சுவை புயல்கள்  எவருமே இதில் தப்பவில்லை. அழகு குறித்த மதிப்பீடுகளை நகைச்சுவை எனும் பெயரில் கிண்டலடிக்கும்போது சிரித்துவிட்டுக் கடந்துபோவதில் இருக்கிறது இனவெறி உணர்வு. உருவத்தைக் கிண்டலடிப்பது, திருநங்கைகளைக் கிண்டலடிப்பது, உடல் ஊனத்தைக் கிண்டலடிப்பது, நிறத்தை வைத்துக் கிண்டலடிப்பது - இதையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நகைச்சுவை என்று சொல்லி நம்ப வைப்பார்கள்?
சினிமா எனும் கலை சமூக மாற்றத்துக்கான விதையாக இல்லாமல் பொதுப்புத்தியில் இனவெறி எனும் நஞ்சை விதைப்பது கலைக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையோம் எம்இல்லில் இன்பத்தின் ஊற்றும் உடையோம்.
இற்றைத்திங்கள் இல்லில் இன்பத்தின்
எள்முனையும் இல்லை..
யாம் எந்தையும் இலமே.

இந்த அவலக்குரலை, அழிக்கப்பட்ட இனத்தின் வேதனைக் குரலை நம் தலைமுறைக்குச் சொல்லித் தரவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. நீரோடையின் போக்கில் மிதந்து போவதில் என்ன சுகமிருக்கிறது. நதிநீரை எதிர்த்து நீந்தி வருவது தானே பெரும் சுகம்.

கல்வி என்பது மதிப்பெண்ணுக்கானது அல்ல. அறிவுத் தெளிவுக்கானது என்று உரத்துச் சொல்வோம்.

1 கருத்து:

  1. சுஜாதா எப்படி இந்த நகைச்சுவை என்ற அபத்தத்தை அனுமதித்தார் என்ற அதிர்ச்சியில்..

    பதிலளிநீக்கு