கல்லூரியில் இருந்து பயங்கர பசியோடும் சீக்கிரம் அறைக்குப் போக வேண்டும் என்ற பேராவலோடும் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினேன். சென்ட்ரல் ரயில் நிலைய சிக்னலில் நிற்கும்போது வந்த வேகத்தில் பிரேக் போட்டேன். வலது புறம் நின்றிருந்த பைக் கண்ணாடியில் என்னுடைய வண்டி கண்ணாடி லேசாக இடித்தது.
பொதுவாக சென்னையில் காலையில் கல்லூரி போகும் போது அல்லது கல்லூரியில் இருந்து மதியம் வரும்போது ஆட்டோ அல்லது பைக்காரர்கள் யாரையாவது திட்டாமல் கடந்து போவதில்லை. நானும் சில நேரங்களில் திட்டு வாங்கி இருக்கிறேன். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சாரி சார் என்று சொன்னால் கூட சலித்துக் கொள்பவர்கள் தான் அதிகம்.
இன்று மதியம் அப்படியான திட்டு இல்லை. முகத்தில் கடுகடுப்பு இல்லை. கண்ணாடியில் இடித்த அடுத்த நொடி, சாரி என்பது போல தலையசைத்தேன். அந்தப் பைக்காரன் என் கண்களை மட்டும்தான் பார்த்திருக்க வேண்டும். முகத்தைத் துப்பட்டாவால் மூடிக் கொண்டிருந்தேன். சென்னை சாலையில் புழுதியில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லை. முகமூடி கொள்ளைக்காரி போலத்தான் சுற்ற வேண்டியிருக்கு.
நல்ல வெள்ளை நிறத்தில் ஃபிட்டான சட்டை. நீல ஜீன்ஸ். ஹெல்மெட் தலை. முறுக்கு மீசை. லேசான தாடி. உயரத்திற்கேற்ற அளவான உடல். பார்த்தவுடன் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் முகம். நான் சாரி சொன்னதும் அந்த அழகான முகத்தில் சட்டென்று சிறு எரிச்சல் மறைந்து புன்னகைத்தான். மண்டையைப் பிளக்கும் வெயிலில் குல்பி சாப்பிட்டது போல அவ்வளவு கூல் ஆக இருந்தது அந்தப் புன்னகை. ஒரு சினேகத்துக்கான அறிகுறி அது.
ஒரு நிமிடம் கூட இல்லை. சிக்னல் பச்சை விளக்கு விழுந்ததும் நான் மீண்டும் சிறு புன்னகையோடு அவனைக் கடந்து விரைந்து வந்துவிட்டேன். மனசு இன்னமும் அங்கேயே அந்தப் புன்னகையைப் பற்றிக் கொண்டு நிற்கிறது. அவன் யாரோ. எங்கே இருக்கிறானோ. யாதொரு கேள்வியும் தேவையில்லை.
பெருநகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் இப்படியான சின்னஞ்சிறு புன்னகைகள் மனசுக்குள் முடங்கிக் கிடக்கும் சிறகுகளை நீவி விடுகிறது பறக்கச் சொல்லி. போதும்.
செவ்வாய், 13 பிப்ரவரி, 2018
சில்லென்று ஒரு மதியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக