ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் தொடங்கும்போதெல்லாம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மழையில் நனைந்து மகிழ்ந்துவிட்டு அடுத்து நனையாமல் போய் வர வேண்டும் என குடை வாங்குவேன். குடை வாங்கிய கொஞ்ச நேரத்தில் அல்லது மாலைக்குள் மழை நின்று விடும். மழைதான் நின்றுவிட்டதே என குடையை யாருக்காகவது தானம் கொடுத்துவிடுவேன். பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த காலங்களில் ஹாஸ்டலில் வேலை செய்யும் அக்காக்களில் யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன். அந்தக் குடைக்காக வாரத்தின் இரண்டு நாட்கள் மீன் குழம்பு கொண்டு வருவார்கள். அடிக்கடி வீட்டு சாப்பாடு சாப்பிடும் யோகம் கிடைக்கும். மீண்டும் மழை கொட்டத் துவங்கும். மழை பெய்யத் தொடங்கியதும் கொடுத்த குடையைத் திருப்பிக் கேட்பது நியாயமில்லை தானே.
மழை பெய்வதும் குடை வாங்குவதும் குடை வாங்கியதும் மழை நிற்பதும் தற்செயலாக நடக்கிறது என விட்டுவிட்டேன்.
இப்போது எனது சிறிய கேரளப் பயணத்தில் வந்திறங்கிய நிமிடத்திலிருந்து மழை. (ஏற்கனவே பெய்து கொண்டு தான் இருக்கிறது.) மழையில் நனைந்தபடியே நேற்று கொச்சின் கடற்கரை பயணம் மனதுக்கு நிறைவாக அமைந்தது.
இரண்டாம் நாளான இன்று காலை அதிரப்பள்ளி அருவியைத் தரிசிக்கக் கிளம்பினால் மழையோ மழை அப்படியொரு மழை. மழைக்காக ஒதுங்கி நிற்க முடியாது என நனைந்து கொண்டே கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு குடை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கினால் அது வரை அடித்துப் பெய்த மழை தூறலாக மாறிவிட்டது. சாலக்குடி போகும் பேருந்தில் ஏறி அமர்ந்து டிக்கட் எடுப்பதற்குள் மழை மொத்தமாக நின்றுவிட்டது.
பேருந்தில் போகும்போது வழியில் கொஞ்சம் மீண்டும் மழை. போகும் வழியெல்லாம் மழை தான். குடைக்கு வேலை வந்துவிட்டது என்று நினைத்தேன். அதிரப்பள்ளி அருவி நிறுத்தத்தில் இறங்கிய ஐந்து நிமிடத்தில் மீண்டும் மழை நின்று விட்டது.
என்னடா என் குடைக்கு வந்த சோதனை??
ஒரு டைம் மெஷின் இருந்தால் குடை வாங்காமல் போயிருப்பின் என்ன நடந்திருக்கும் எனப் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். தற்செயலாக மழைச் செயலா எனத் தெரிந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக