அண்ணா நகருக்கு ஒரு வேலையாகச் சென்றபோது பசி வயிற்றைக் கிள்ளியது. மெட்ரோ ஸ்டேஷன் அருகில் சாப்பிட கடைகள் இருக்குமா என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை . காஃபி ஷாப் (கொஞ்சம் காஸ்ட்லி ஷாப்), கேக் ஷாப், செப்பல் கடை, ஆண்ட்டிக் ஷாப், துணிக்கடை என வரிசையாக இருந்தன. அதில் ஒரு சின்ன கடை. ரெஸ்ட்டாரண்ட் என்று சொன்னால் கொஞ்சம் கெத்தா இருக்கும். எனவே ரெஸ்டாரண்ட் என்றே வைத்துக் கொள்ளலாம்.
அங்கே சிம்பிளா ஏதாவது சாப்பிடலாம் என்று போனேன். பசி ஒரு பக்கம் என்றாலும் போனில் 2% தான் சார்ஜ். சாப்பிடுகிற சாக்கில் போன் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதுதான் முதன்மை நோக்கம்.
போனதும் சாப்பிட என்ன இருக்கு என்றேன். மெனு கார்டை எடுத்துக் கொடுத்தார் அந்த நண்பர். மெனு கார்டைப் பார்த்துக் கொண்டே போன் சார்ஜ் பண்ணிக்கலாமா என்றதும் ம் கொடுங்க என்று மொபைலை வாங்கி சார்ஜ் போட்டார்.
அந்தக் கடையில் இருந்ததே மொத்தம் மூன்றே மூன்று டேபிள் & சேர்கள் தான். அதில் ஒரு டேபிளில் அமர்ந்து மெனு கார்டை ஒருமுறைக்கு நான்கு முறை படித்தேன். பசிக்குச் சாப்பிடுவது போல எதுவுமில்லை. பிரட் டோஸ்ட் இருக்கா என்றேன். 4 மணிக்கு மேல தான் மேடம் என்றார். பிறகு மீண்டும் மெனு கார்டை ஒரு ரவுண்டு பார்த்து விட்டு ஃப்ரன்ச் ஃப்ரைஸ் 🍟 என்றேன். ஃப்ரை ஐட்டம் எல்லாமே 4 மணிக்கு மேல தான் மேடம் என்றார். சரி இப்போ சாப்பிடற போல என்ன தான் இருக்கும் என்றேன். இதை முன்னாடியே கேட்டிருக்கலாம் என்றது என் மைண்ட் வாய்ஸ். மேகி, பாஸ்தா, சமோசா இதான் மேடம் இப்போ கிடைக்கும் என்றார்.
அவசரத்துக்கு மேகி சாப்பிடுவோம் என நினைத்தேன். மெனு கார்டில் மேகியில் 5 வகைகள் இருந்தன. நமக்குத் தெரிந்ததெல்லாம் 10 ரூபாய் மேகி வாங்கி கொதிக்க வைத்த தண்ணீரில் கொட்டி கிளறி ஆவிபறக்கத் தட்டில் பரப்பி சாப்பிடுவது. அல்லது கொஞ்சம் நல்ல மனநிலை இருந்தால் கேரட் பீன்ஸ் வெங்காயம் போட்டு வதக்கி கலர்ஃபுல்லாகச் செய்வதுண்டு. அதுவும் இல்லாமல் நான் முதல் முதலில் சமைக்கக் கற்றுக் கொண்டது மேகி தான். அதனாலேயே மேகி எனக்குப் பிடித்த உணவாக இருந்தது.
மெனு கார்டில் இருந்த 5 வகை மேகியில் கார்ன் ச்சீஸ் மேகி வித்தியாசமாகத் தெரிந்தது. ஸ்வீட் கார்ன் பிரியை என்பதால் அதை முயற்சி செய்வோம் என்று கார்ன் ச்சீஸ் மேகி என்றேன். மெனு கார்டை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
எதிரில் சுவரில் மாட்டியிருந்த எல்ஈடி டீவியில் ப்ரேக் ஃப்ரீ சாங்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. மத்தியன வெயில் பல்லை இளித்துக் கொண்டிருந்தது. உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் லவ்வு ஒரு ஃபீலு அட சொல்லுறத கேளு என பொம்மலாட்ட பொம்மைகள் போல கையைக் காலை ஆட்டி நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. அதற்கடுத்து வந்த பாடலும் அதே வகையறா பாடல்கள் என்பதால் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது மொபைலில் சார்ஜ் ஏறுகிறதா என்று பார்த்துக் கொண்டேன். 2%லிருந்து 30% சார்ஜ் ஏறியிருந்தது. 5 நிமிடத்தில் ரெடியாகியிருக்க வேண்டிய மேகி அரை மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை. மெனு கார்டை கொண்டு போன அண்ணாவைக் காணவில்லை. இதற்கு மேல் காத்திருக்க முடியாது எனப் பொறுமையிழந்து மேகி கேன்சல் எனச் சொல்வதற்கு எழுந்து போனேன். சமைக்கும் பகுதியில் இருந்து வந்தவர் இன்னும் 5 நிமிடத்தில் உங்க மேகி ரெடி ஆகிடும் மேம் என்றார். இருக்கிற உணவு வகையிலேயே மேகி தான் குறைவான நேரத்தில் தயாராகக் கூடியது. ஏற்கனவே அரை மணி நேரம். இதில் இன்னும் 5 நிமிடமா என்று சலிப்பாக இருந்தது.
அவர் சொல்லிவிட்டுப் போய் பத்து நிமிடம் கழித்து மேகி வந்தது. பார்த்ததும் பயங்கர அதிர்ச்சி. பத்து ரூபாய் மேகியை தண்ணீரில் வேக வைத்து, எண்ணி 15 சோளப் பற்கள் போட்டு, கொஞ்சம் சீஸை மேலே தூவி இருக்கிறார்கள். இதற்குப் பெயர் கார்ன் ச்சீஸ் மேகி. விலை 80/- தயாராகி வருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் 40 நிமிடங்கள்.
இதானா சார் உங்க டக்கு என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்போதைய பசிக்குக் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் சாப்பிட்டுவிட்டு பில் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.
டீவியில் போ நீ போ... போ நீ போ... தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ என தனுஷ் சோகமாகப் பாடிக் கொண்டிருந்தார். கிளம்பும் நேரத்தில் எனக்குப் பிடித்த பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் போய்த்தான் ஆக வேண்டும் அன்பே.
இருக்குற மூனு டேபிள்ல ஒரு டேபிளையாவது எப்போவும் ஆளு இருக்கனும்ல.கஷ்டமர் திருப்தி ய விட இருப்பை தக்க வைக்கவே இத்தனைப்பாடுகள்
பதிலளிநீக்கு