வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஹேங் ஓவர் கதை


இரவு எட்டு மணி­ இருக்கும். ­­ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். நிறைய இருட்டும், கொஞ்சம் நியான் விளக்கொளியும் சாலையை நிறைத்துக் கொண்டிருந்தன.  வழியில் ஒரு வயதானவர் லிஃப்ட் கேட்டுக் கையை நீட்டிக் கொண்டிருந்தார். ஒல்லியான கறுத்த உருவம், முட்டி வரை மடித்துக் கட்டிய லுங்கி. ஒரு தொளதொள டீ சர்ட். ஸ்கூட்டியை நிறுத்தக் கூடாது என்று வேகமாகச் சென்றேன். அவரைக் கடக்கும்போது ஏனோ வண்டியை நிறுத்தினேன்.
அந்த பஸ் ஸ்டாப்பில் விட்ரும்மா என்றார். நான் மை மார்கெட் வரை தான் போறேன் என்றேன். சரி அங்க வரை விட்ரு என்றார். கொஞ்சமே வெளிச்சம் நிறைந்த சாலையில் அவருக்கு லிஃப்ட் கொடுக்க மனம் தயங்கியது. இல்ல நான் அங்க போகல. அதுக்கு முன்னாடியே திரும்பிடுவேன் என்று சொல்வதற்குள் மை மார்கெட் கிட்ட விட்ரும்மா என்றபடி வண்டியில் உட்கார்ந்து விட்டார். நான் முன்னாடி தள்ளி உட்கார்ந்து கொண்டு ஆக்சிலேட்டரைத் திருகினேன். அவரும் இடைவெளி விட்டு நடுவில் ஒருவர் உட்காரும் அளவுக்குத் தள்ளி அமர்ந்திருந்தார். கொஞ்சமாய் மனதில் நிம்மதி படர வண்டியை ஓட்டினேன்.
அந்த இட்த்திலிருந்து மை மார்கெட் செல்ல குறைந்த்து 5 முதல் 10 நிமிடங்கள் ஆகும். உம்மென்று போக வேண்டாமே என்று இந்த நேரத்தில் எங்க போறிங்க தாத்தா என்றேன்.
ஒரே தலவலிமா, அதான் டவுன் பக்கம் போய் கொஞ்சம் தண்ணி போட்டுட்டு வர்லாம்னு போறேன். கண்ணாடி வழியாக அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஒரு அவசரம் தெரிந்தது. பஸ் பிடிக்கும் அவசரமாக இருக்கலாம்.
என்ன உடம்புக்கு, ஏன் தலவலி என்றேன்.
நேற்று நல்லா சரக்கு போட்டேன். அது தலவலியா வந்து உக்காந்துக்கிச்சி என்றார்.
ஹேங் ஓவரா என்றேன். அதே தான்மா என்றார்.
இரண்டு நிமிடம் அமைதியாக வந்தேன். பஸ் பிடிச்சு போய் சரக்கடிக்கனுமா இந்த வயசுல இது தேவையா என்று மனசுக்குள் ஒரு கேள்வி. எதற்கு மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்டு விட்டேன்.
என்னம்மா பண்றது வயசாகிடுச்சுல்ல. சரக்கு இல்லாமல் இருக்க முடியல என்றார்.
அதற்கு மேல் அவரிடம் சொல்லவோ கேட்கவோ எதுவும் தோன்றவில்லை. அமைதியாக வண்டியை ஓட்டினேன். மை மார்கெட் நெருங்கியது. ஏற்கனவே மை மார்கெட்டில் எடுத்து வைத்திருந்த பொருட்களுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
மை மார்கெட்டில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால் பஸ் ஸ்டாப்.
மை மார்கெட் வாசலில் வண்டியை நிறுத்தினேன். மெல்ல மெல்ல என்றபடி இறங்கினார். கடையின் டியூப் லைட் வெளிச்சத்தில் தாத்தாவின் முகம் பளிச்சென்று தெரிந்தது.  முகம் முழுக்க புன்னகையுடன் நன்றிம்மா. நடந்து வந்து இருந்தால் எந்நேரத்துக்கு நான் பஸ்ஸைப் புடிக்கிறது, எந்நேரத்துக்குக் கடைக்குப் போறது. நீ நல்லாருப்பமா என்று சொன்னார்.
இரண்டு அடி எடுத்து வைத்தவர், உன் பேரு என்னம்மா என்றார். சொன்னேன். நல்லா தைரியமான பேரு தான். பேருக்கு ஏத்த தைரியம் உன்கிட்ட இருக்கு என்று சொல்லிக் கொண்டே நடந்து போனார்.
வண்டியைக் கிளப்பும்போது கவனித்தேன். தாத்தா கொஞ்ச தூரத்தில் நின்று இன்னொரு பைக்குக்குக் கைக் காட்டிக் கொண்டிருந்தார்.

1 கருத்து:

  1. இது போன்று பல முறை பலரை இறக்கிவிட்டு ஏமாந்திருக்குறேன். நான் குடியை ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஏனெனில் என் கண்முன் மதுவால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். பலமுறை குடிப்போருக்கு அறிவுரை கூழ மனமோடும், என் வயது காரணமாக வெதும்பி கடந்துவிடுவேன்.

    உங்களின் இந்த சிறு பயணம் என் எதிர்கால நிகழ்வுகளை புகைய விட்டது.

    முன்பு இதே வித அனுப்பவத்தில் நான்பட்ட அனுபவங்களை 'விண்ணப்பம்' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

    https://t.co/buhD9Wuhow

    பதிலளிநீக்கு