வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கோல்கொண்டா கோட்டையும் காளி ஓவியமும்




மழைத் தூறிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் நானும் எனது தோழியும் தேநீர் அருந்தியபடிப் பேசிக் கொண்டிருந்தோம்.

பேச்சினூடாக, ஒரு சிறு பயணத்தைத் திட்டமிட்டோம். நாங்க தேர்வு செய்த நகரம் ஹைதராபாத். அந்த நகரம் எந்தவித சலனமும் இல்லாமல் எங்களை அழைத்தது. அதன் குரலை மதித்து அடுத்த நாளே டிக்கெட் புக் செய்து கிளம்பிவிட்டோம். எந்த நகரத்திற்குச் சென்றாலும் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. என்னுடைய தோழிக்கு தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் அத்துப்படி. அதனால் மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

கூகுளின் உதவியுடன் தினம் ஒரு இடத்திற்குச் செல்வது என எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அதுவொரு நல்ல அனுபவம். சார்மினார், பிர்லா மந்திர் கோயில், அருங்காட்சியகம் எனப் பல இடங்களுக்குச் சென்றிருந்தோம். அதில் கோல்கொண்டா கோட்டைக்குச் சென்றபோது மனதில் இனம் புரியாத பரவசம்.

ஹைதராபாத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று கோல்கொண்டா கோட்டை என்று சொல்கிறார்கள். ஆம். அதிசயம் தான். அது மன்னர்கள் வாழ்ந்த கோட்டையா அல்லது ஒரு நகரமா என்று ஆச்சரியம் வருவது தவிர்க்க முடியாது. பரந்து விரிந்த மதில்களும் கட்டிடங்களும் பிரம்மாண்டத்தின் உச்சம். எனக்குத் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையை நினைவுக்குக் கொண்டு வந்தது.

கோல்கொண்டா கோட்டையின் அரசியல் வரலாற்றைவிடவும் கோட்டையின் அழகியல் மனதைக் கவ்விக் கொள்ளும். ஏனெனில் வரலாற்றுத் தகவல்கள் கூகுளில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் கோட்டையின் உச்சியில் இருக்கும் பாறை ஓவியத்தின் வரலாறுதான் கிடைக்கவே இல்லை. அந்த ஓவியம் சொல்லும் கதை என்ன என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஏனெனில், கோட்டையின் பிரம்மாண்டத்தை விட என்னைக் கவர்ந்தது கோட்டையின் உச்சியில் இருந்த காளி கோவில் தான். கோவில், கருவறை காளி, கோவிலின் எதிரில் இருக்கும் மரம், மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கலர் கலரான ஜிகினா மாலைகள், ஊஞ்சல்கள், கயிறுகள்  என பெண் தெய்வக் கோயிலுக்கான அடையாளங்களுடன் இருந்தன.

காளி கோவிலுக்கு இடதுபுறம் இருந்த பாறையும் அந்தப் பாறையில் வரையப்பட்டிருந்த நீல வண்ணத்தாலான ஓவியமும் மிக முக்கியமானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் காளி ஓவியத்தில் மண்டையோட்டு மாலைகளுடன் அச்சமூட்டும் கண்களுடன் ஆக்ரோஷமாக நாக்கைத் தொங்கவிட்டபடி ஒரு காலைத் தூக்கி ஒரு காலைத் தரையில் வைத்து சூளாயுதத்துடன் காளி நின்று கொண்டிருப்பாள். அவளது பாதத்தின் கீழ் அரக்கனின் உருவம் கிடந்தநிலையில் இருக்கும். அந்த அரக்கனின் உடலின் மீது காளியின் கால்கள் பதிந்திருக்கும்.
கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் பாறையில் வரையப்பட்டிருக்கும் காளி, நீல வண்ணத்தில் மேலே சொன்ன தோற்ற அமைப்புடன் இடையில் புலித்தோல் அணிந்து ஆக்ரோஷமாக இருக்கிறது. ஆனால், பாதத்தின் கீழ் அரக்கனுக்குப் பதிலாக மயங்கிய நிலையில் சிவன் உடுக்கையைக் கையில் பிடித்தபடி வீழ்ந்து கிடக்கிறார். சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு கையில் இருக்கும் உடுக்கையை நோக்கி நகர்வது போன்றதொரு தோற்றம் இருக்கிறது. தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இந்த ஓவியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.


பாறை நின்றிருந்த தோற்றம், காளி கோவிலுக்குச் செல்லும் பாதையை  பாதியாக அடைத்தபடி இருந்தது. லாவகமற்ற வகையில் பிரம்மாண்டமானத் தோற்றம் அது. எவ்வளவோ முயன்றும் முழு ஓவியத்தைப் படமாக எடுக்க முடியவில்லை. அதனால் காளியின் முகத்தில் இருக்கின்ற கம்பீரத்தை இரு கண் கொண்டு தான் பார்க்க வேண்டும்.
ஓவியத்தின் அருகில் அமர்ந்து கொண்டேன். காளியின் உக்கிரமும் மயங்கிய கிடக்கும் சிவனும் ஆழமாகக் கண்களுக்குள் இறங்க, எனக்குள் காளி சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாள். வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது அந்த அனுபவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக