வெள்ளி, 4 ஜனவரி, 2019

துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை : நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து


துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை
நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து
-        மனுஷி




வாழ்வின் இருள் சூழ்ந்த பக்கங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் சிறு அகல் விளக்கின் ஒளி தான் கவிதை.
பாறையைக் கடப்பாறை கொண்டு நகர்த்துவது போல இல்லாமல் ஒரு மலர் மலர்வது போலவோ, கடல் அலை கரை வந்து மோதி மீளச் செல்வது போலவோ, குழந்தைகளிடமிருந்து பெறும் முத்தம் போலவோ கவிதை எழுதுதலும் இயல்பானதாக இருக்கும்போது அது வாழ்வின் அண்மையில் வந்தமர்ந்து கொள்கிறது. கவிஞரின் கவிதை அனுபவம் வாசக அனுபவமாக மாறும் ரசவாதம் இங்கிருந்தே தொடங்குகிறது என நினைக்கிறேன்.
வாழ்வின் அனுபவங்களிலிருந்து கண்விழிக்கும் கவிதைகளே மொழி, நாடு, பாலின எல்லைகளைக் கடந்து மனித மனங்களோடு உரையாடுகின்றன. எதைக் கவிதையாக்கினால் பேசப்படுவோம் என்பதை விடவும், எதை நாம் உண்மையென நம்புகிறோமோ அதை எழுதுவதன்மூலம் நம்மைப் படைப்புக்குள் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். எழுத்துக்கான அறம் அதுவாகத்தான் இருக்க முடியும்.
வாழ்வின் மீதான தேடலுக்குப் பயணங்களே தீனியளிக்கின்றன. பயணங்களே நம் வாழ்வின் மீதான பார்வையைப் பக்குவப்படுத்தி நமக்குக் கையளிக்கின்றன. பெண்கள், ஊர்சுற்றிப் பறவைகளைப் போல பயணம் மேற்கொள்ளும்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறேன். ஆணின் பயண வாழ்க்கையைப் போல அத்தனை எளிதானல்ல பெண்ணின் பயண வாழ்க்கை. வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை பயண அனுபவங்கள் சொல்லித் தருவது போல வேறு யாரும் சொல்லித் தர முடியாது.
முகநூலில் நர்மி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், கவிதைகளில் வெளிப்படுத்திக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் வித்தியாசம் இருக்கின்றன. பயணத்தின்மீது பெருங்காதல் கொண்ட சிறு பறவையாகத்தான் நர்மியை நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால், நர்மியின் கவிதைகளை வாசிக்கும்போது, அன்புக்காக ஏங்கும் சிறு குழந்தையின் முகத்தைப் பார்க்க முடிந்தது. அன்பின் பெயரால் ஏமாற்றப்படும்போது, அந்த வலியிலிருந்து உயிர்த்தெழுந்த வருவதற்காகவே கவிதையைத் தேர்வு செய்து கொண்டார் என நினைக்கத் தோன்றுகிறது.
உறவுகளின்மீதான அதீத எதிர்பார்ப்பும், அந்த எதிர்பார்ப்பிலிருந்து கிடைத்த ஏமாற்றத்தினால் துவண்டு போகின்ற மனமும், காதலைத் தேடியலையும் சிறு பெண்ணின் சாயலுமாக நர்மியின் கவிதைகள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையை விட்டுத் திருப்பி அனுப்பிவிடும் தூரத்திலா நான் இருக்கிறேன் எனக் கண்ணீரோடு கேட்கும்போதும், விழக்கூடாத இடத்தில் எல்லாம் அன்பு எங்களை வீழ்த்தியது. போகட்டும் அன்பு தானே வீழ்த்தியது எனத் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ள முற்படும்போதும் அது நர்மியின் குரலாக மட்டும் இருக்கவில்லை. அன்புக்காக ஏங்கும் எல்லோருடைய விசும்பலாகத்தான் அதைப் பார்க்கிறேன்.
இந்த வாழ்க்கையில் உறவின் விலகலோ அல்லது நேசித்தவர்களின் மரணமோ மிக மிக இயல்பாக நிகழ்கிறது. நாம் அதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இயல்பாய் உதிர்ந்தாய் என்னும் கவிதையில் வெளிப்படுத்துகிறார் நர்மி.
இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதக் கூடும் என பாப்லோ நெரூடாவின் வரிகளில் பொதிந்து கிடக்கும் துயரத்தை நர்மியின் இறுதி யாசகம் கவிதையும் கொடுக்கிறது. அன்பினால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கணத்திலும், இந்த அன்பு துயரமானதுதான் எனினும் அந்தத் துயராமகவேனும் எஞ்சியிரேன் என்னும் கெஞ்சல் குரல் மனதை நெகிழச் செய்துவிடுகிறது.
நர்மியின் பனிப்பூ கவிதைத்தொகுப்பு அப்படித்தான் வாசகர்களோடு உரையாடுகின்றன. பனிப்பூ தொகுப்பை வாசித்து முடிக்கையில் துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும், அன்பின் பெயராலும் துண்டாடப்பட்ட எளிய மனதின் கண்ணீர்த் துளிகளின் ஈரத்தை வாசகர்கள் உணரக் கூடும்.

பனிப்பூ தொகுப்பின் பலம் என நான் கருதுவது அந்தக் கவிதைகளின் மொழி. வலிந்து திணிக்கப்படாத உணர்வுகள். வாழ்வின் அனுபவங்களையும் கவிதைகளாக்கும்போது வார்த்தைகளைத் தேடி அலையாமல் இயல்பான எளிய மொழியில் எழுதியிருப்பது கவிதைகளின் பலம். ஏனெனில், முதல்முறையாகக் கவிதை வாசிப்பவர்களும்கூட, இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும்போது தனக்கான கவிதையாக, தன் அனுபவத்தைப் பேசும் கவிதையாக உணரச் செய்துவிடும்.
நர்மியின் கவிதைகளில் ஒரு பெண்ணின் குரல் என்று சொல்லும்படியாகச் சில கவிதைகளே உள்ளன. உதாரணமாக, ‘யட்சிகள்’ எனும் கவிதையைச் சொல்லலாம்.
‘தேவதைகள் வருவார்கள் போவார்கள்.
யட்சிகள் மாத்திரம்
தனித்தே நின்று விடுகிறார்கள்
இந்த வனாந்திரத்தில்’
எல்லா காலத்திலும் தேவதைகள் கொண்டாடப்படுகிறார்கள். வருணிக்கப்படுகிறார்கள்.இந்தச் சமூகம், பார்வதியை, மீனாட்சியைக் கொண்டாடுகிற அளவுக்குக் கொற்றவையை, காளியை, வனயட்சியைக் கொண்டாடுவதில்லை. வ வனயட்சிகள் தனது பாதையை, தனது பயணத்தை, தனது கனவுகளைச் சுயமாகத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, வனயட்சிகளின் உலகம் நிரப்பப்படாத தனிமையால் நிறைந்து கிடக்கிறது.
அதேபோல, மரணங்கள் என்னும் தலைப்பில் நர்மி எழுதிய கவிதை, காதலை யாசிக்கும் பெண்ணின் கையறு மனதை உணர்த்துவதாய் இருக்கிறது.
மரணிக்க முடியாத
காதலை உனக்கு
வழங்கிச் செல்லும்போது
எத்தனை தடவைகள் மரணித்திருப்பேன்?
நேசிக்கும் ஆணின் முன்னால் உன்னைத்தான் காதலிக்கிறேன் என்பதைச் சொல்லிச் சொல்லி நிரூபிக்கும் ஒவ்வொரு கணமும் மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பும் பெண்ணின் கையறுநிலையே இக்கவிதை.
அவமானக் குறிப்புகள், நன்றிக்கடன், புரிதல்கள், நம் பைத்தியங்கள், சிறு சஞ்சலம், என்னிடமே கொடுத்து விடுங்கள் முதலிய பல கவிதைகள்  மனதிற்கு நெருக்கமான உணர்வைத் தந்து செல்கின்றன. நாம் எல்லோரும் எங்கோ ஓரிடத்தில் இப்படியான மனநிலைகளைக் கடந்துதான் வந்திருப்போம். அந்த மனநிலையைப் பிரதிபலிக்கின்றன இக்கவிதைகள்.
கவிஞர் ச.விசயலட்சுமி அவர்கள் மொழிபெயர்த்த ‘லண்டாய்’ ஆப்கான் பெண்கவிதைகளின் தொகுப்பில் கடவுளே உன்னைக் கைத்தொழமாட்டேன் (கடவுளே நீ பெண்ணாக இருந்திருந்தால் என்னும் கவிதை) என ஒரு ஆப்கான் பெண்ணின் கலகக் குரல் பதிவாகியிருக்கிறது. அதேபோல பனிப்பூ தொகுப்பில், குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த பல கவிதைகள் இருப்பினும் கடவுள் இறந்துவிட்டார் எனும் நர்மியின் பிரகடனம் மிக முக்கியமானது. பெண் நிலையிலிருந்து கடவுளின் மரணசாசனக் குறிப்பை உலகிற்கு அறிவிப்பது தற்காலச் சூழலில் முக்கியமான கலகக்குரல். ஆனால், அக்கவிதையில் கடவுளை மறுதலித்துவிட்டு நாத்திகனின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் எனும்போது நாத்திகன் எனும் சொல்லினுள் புதைந்துள்ள ஆண்பிம்பம் சிறு உருத்தலாக இருந்தது.
ஆண்வயப்பட்ட மொழியில்தான் பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெண் என்ற நிலையிலிருந்தே மதத்தை, சாதியை, கடவுளை மறுதலிக்கும் அரசியலை நாம் பேச வேண்டியுள்ளது. பெண்ணின் காதலைப் பேசினாலும், சமூக அவலங்களை, அரசியல் சூழலை என எதைப் பேசினாலும் நமது படைப்பின் குரல் சுயமானதாக, தனித்த அடையாளம் கொண்டதாக, பெண்ணிருப்பின் அரசியல் பேசும் குரலாக இருக்க வேண்டும். அதிலிருந்துதான் பெண்ணுக்கான மொழியை நாம் மீட்டெடுக்க முடியும்.
எழுதி எழுதி நமது துயரங்களைக் கடந்து செல்வோம்.
எழுதி எழுதி நமக்கான மொழியைக் கண்டடைவோம்.
வாழ்த்துகளும் அன்பும் நர்மி.

நூல் : பனிப்பூ (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : ம. நர்மி
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை.
விலை : 100/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக