புதன், 9 ஜனவரி, 2019

அப்பா : நினைவும் - புனைவும் நூல் பற்றி


அப்பா எனும் சொல்லுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி உண்டு. திரைப்படங்களிலும் நாவல்களில், சிறுகதைகளில் வருகின்ற அப்பாக்களைத்தான் எனக்குத் தெரியும். அப்பா எனும் சொல்லுடன் உணர்வு ரீதியாக பொருந்திப் போவது எனக்குச் சற்றே சிரமம் தான். எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவமாக அது இருப்பது ஒரு காரணம். ஆனால், ஒரு கட்டத்தில், அப்பா குறித்த சித்திரிப்புகளில் நான் என் அம்மாவைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பிறகு, சினிமாவிலும் இலக்கியத்திலும் வருகின்ற அப்பாக்கள் எனக்கு நெருக்கமாகத் தொடங்கினர்.

மயிலாடுதுறையில் #வாகை_இலக்கியக்_கூடல் நிகழ்வின் #அப்பா_ நினைவும்_புனைவும் நூல் குறித்துப் பேச வேண்டும் என துவாரகா சாமிநாதன் தோழர் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். அதற்கு முக்கியக் காரணம் ஏற்கனவே Shruthi Tv காணொளி வழியாக இந்நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா, சப்தரிஷி சார் போன்றோர் பேச்சின் வழியே அப்பாக்களின் வெவ்வேறு நிறங்களை வாசித்து அறிந்து கொள்ளும் ஆவல். அத்தனை சுவாரஸ்யமான நினைவுப் பகிர்வுகள் அவை.

மயிலாடுதுறை வாகை இலக்கியக் கூடல் நிகழ்வில் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, ரண்டொரு நாளில் அப்பாவை அனுப்பி வைத்தார்கள். முதல் கட்டுரையாக எழுத்தாளர் ஆத்மார்த்தி, தன் அப்பா குறித்து எழுதிய தந்தைப் பறவை கட்டுரையை வாசித்து முடித்துக் கதறி அழுதேன். அந்த அழுகை அவரது அப்பாவின் இறுதிநாட்களின் வலியை எனக்குள் முழுமையாகக் கடத்தியதால் வந்த அழுகை. என் அம்மாவின் உயிர் பிரியும் கடைசி கணங்களை ஒரு காட்சியாக என் கண்முன் கொண்டு வந்தது. நான் மறந்துவிடத் தவிக்கும் துயரச் சித்திரம் அது. ஆத்மார்த்தியை போனில் அழைத்துப் பேசி என் அழுகையை ஆற்றிக் கொண்டேன்.

அதன்பின் ஒரு கட்டுரையையும் வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்தேன். அன்றைய இரவில் மீண்டும் எடுத்து வாசிக்கத் துவங்கினேன்.

அடுத்து சப்தரிஷியின் கட்டுரை. அதில் புதிதாக லா.ச.ரா. எனும் அப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள எதுவுமில்லை. ஏனெனில், சப்தரிஷி அவர்களுடன் பேசும்போதெல்லாம் எழுத்தாளர் லா.ச.ரா.வின் பிம்பம் மறைந்து அற்புதமான அப்பாவைத்தான் நான் தரிசித்தேன். அப்பாவைச் சிலாகித்துக் கொண்டாடும் மகன் அவர். பல நேரங்களில் இப்படியொரு அப்பா ஏன் எனக்கு வாய்க்கவில்லை என ஏங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் லா.ச.ரா எனும் எழுத்தாளரை விட லா.ச.ரா எனும் அப்பாவின்பால் ஈர்ப்பு அதிகமானது.

பெயர் எழுதப்படாத மொட்டைக் கடுதாசியில் கூட மகனது அடையாளத்தைக் கண்டுபிடித்து, மகனைத் தோழனைப் போல் பாவித்த அமிர்தம்சூர்யாவின் அப்பா ஒரு கவித்துவம். தன் நண்பர்களிடன் உரையாடுவதை காதல் உட்பட  ‘எல்லாவற்றையும்’ பகிர்ந்து புரிந்துகொள்ள அப்பா மகன் உறவில் வாய்க்கிறது எனில் அது வரம். காதலைப்பற்றிச் சொல்லும்போது, முட்டை உடைந்து குஞ்சு வெளிவருவது போல ஈகோ உடைந்து காதல் வெளிவர வேண்டும் என மகனிடம் சொன்ன தருணம் கூட கவித்துவம் தான். அமிர்தம் சூர்யாவும் தன் மகன்களுக்கு ‘நல்ல அப்பா’வாக, தோழனாக இருக்கிறார். அது அவர் அப்பாவிடமிருந்து பெற்ற பிரியத்தின் நீட்சி.

முரண்பாடுகளின் சந்திக்க முடியாத புள்ளியாக எதிரெதிர் துருவங்களில் பயணித்த அப்பா மகனை பாரதி கிருண்ஷகுமார் அவர்களின் அப்பா கட்டுரையில் தரிசிக்க முடியும். அப்பாவின் கனவு எதையும் நிறைவேற்ற முடியாத மகனாக அவர் இருந்திருந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான மகன்கள் / மகள்கள் அப்படியே. ஏனெனில் அப்பாவுக்கும் மகனுக்கும் அப்பாவுக்கும் மகளுக்கும் வேறுவேறு கனவுகள் இருக்கின்றன. ஒருவருடைய கனவுக்காக இன்னொருவர் பலியாகிவிட முடியாத எதார்த்தம் பலநேரங்களில் அப்பாக்களுக்குப் புரிவதில்லை. அல்லது புரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள். ஆனால், கடைசிக் காலத்தில், கடைசித் தருணத்தில்  என்னால தனியா இருக்க முடியாது என்னை உன்னோடு அழைத்துச் சென்றுவிடு, பழைய கோபத்துல என்னை விட்டுட்டுப் போயிடாத என்று அப்பா சொன்னார் என்ற வரிகளை வாசிக்கும்போது கண்கள் நிறைந்துவிட்டன. அப்பாவின் அன்பைப் புரிந்து கொள்வதற்கென்று ஒரு காலம் வரும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.

பிரபஞ்சன் சாருக்கு அப்பாதான் கதாநாயகன். அவரது அப்பாவின் வேட்டி சிறுகதையை வாசிக்கின்றபோது அதை உணர முடியும். கூடுதலாக எனக்கொரு அதிர்ஷ்டம், கதையில் இருக்கின்ற சம்பவம் அவர் அப்பா பற்றி நிறைய அனுபவங்களை அவர் என்னோடு பேசி இருக்கிறார். சினிமாவில்  கதாநாயகன் அறிமுகக் காட்சியில் பாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேமரா மேலே போய் அவரது முகத்தைக் காட்டுமே அதுபோல அப்பாவை ஒவ்வொரு அணுவாக ரசித்துக் காட்சிப் படுத்திச் சொல்வார். அவர் சொல்வதைக் கேட்கையில் அவரது அப்பாவைச் சந்தித்து வணக்கம் சார் என்று சொல்ல வேண்டும் போல் இருக்கும். வாழ்வின் மீது எந்தப் புகார்களற்று, விமர்சனங்களுக்கு வாழ்ந்த மனிதரைப் பிரபஞ்சன் அப்பாவாகப் பெற்றிருக்கிறார். எளிமை, நேர்மை, அறவுணர்வு, அன்பு, மிடுக்கான உடை, புன்சிரிப்பு, அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கழிவிரக்கத்தோடு இல்லாமல் நகைச்சுவையாகச் சொல்லிக் கடந்து போகிற பண்பு, எதையும் மற்றவர் இடத்திலிருந்து புரிந்து கொள்ளும் பண்பு, இரக்க குணம் – பிரபஞ்சன் சாரைப் பற்றி நினைத்தால் இவையெல்லாம் நினைவுக்கு வரும். இதையெல்லாம் அவர் தன் அப்பாவிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். நான் பிரபஞ்சனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருவாயில்தான் பிரபஞ்சன் இனி நம்மோடு இல்லை எனும் கொடுஞ்செய்தி வந்து சேர்ந்தது என் துரதிஷ்டம். சுக்குநூறாய் உடைந்துவிட்டேன். அழுகையோடு தொடங்கிய எனது வாசிப்பு பேரழுகையுடன் தொடர்கிறது. தன் சினேகிதிகளை மகள்களாக நேசித்த மனிதர். சினேகிதிகளால் நேசிக்கப்பட்டவர். எப்போதும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் / மனுஷிகள் பக்கம் நின்று பேசியதும், எழுதியதும் தான் அவருக்கான கம்பீரம்.  

ஒரு மூட்டை புத்தகம் கிடைக்குமெனில் தன் பிள்ளையைக் கூட விற்றுவிடத் தயங்காத புத்தகப் பிரியர் ந.முத்துக்குமாரின் அப்பா. மகன், மலையாள பிட்டுப் படம் பார்த்துவிட்டு வருவதை அறிந்தும் கோபப்படாமல் அடிக்காமல் குணமாக எடுத்துச் சொல்லும் அப்பாவை, மிதிவண்டியின் பின்னால் அமர வைத்து ஊர் சுற்றிக் காட்டும் அப்பாவை,  யாருக்குத்தான் பிடிக்காது.

கை வாதம் மகனுக்குப் பத்தியச் சாப்பாடு தான் இனி என்றானபின், தண்ணீரே குடிக்கக் கூடாது என வைத்தியர் சொல்லிவிட, தெரியாமல் ஒரு வாய் தண்ணீர் குடித்தால் உலக்கையாலே அடிச்சு மண்டையைப் பேத்துடுவேன் எனச் சொல்லும் ஜெயமோகனின் கோவக்கார அப்பா, மகன் பத்தியமிருந்த நாட்களில் தானும் பத்தியச் சாப்பாடு சாப்பிடுபவராக இருந்தார். மகனைக் குணப்படுத்திய வைத்தியரின் பாதத்தில் உதடுபட விழுந்து வணங்கி நன்றி சொல்பவராகவும் இருந்தார். அவர் சொல்வது போல தெய்வ மிருகம். அன்பு செய்யும் மிருகம் அந்த அப்பா.

அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார், ஜெயமோகன், பாமரன், பவா செல்லதுரை, மதுமிதா, தமிழச்சி தங்கபாண்டியன், இசை, கீரனூர் ஜாகிர் ராஜா, சப்தரிஷி, சுமதிஸ்ரீ, இசை, தி.பரமேஸ்வரி, அமிர்தம் சூர்யா, கவிதைக்காரன் இளங்கோ, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன், கலாப்ரியா, கண்மணி குணசேகரன், ஆயிஷா நடராஜன், நா. முத்துக்குமார், நாராயணி கண்ணகி, வண்ண நிலவன் இப்படி வாசித்து வாசித்து இரண்டு நாட்கள் அப்பாக்களின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தேன்.

சமீபத்தில் நான் அவதானித்த ஒரு விடயம். முகநூலில் தனது மகள்களை இளவரசிகளாகக் கொண்டாடும் அப்பாக்கள் சிலரைப் பார்க்கிறேன். தங்கள் மகளதிகாரத்தை அவர் எல்லையற்ற அன்புடன் பதிவிடும் போது என்னையறியாமல் அந்த மகளையும் அப்பாவையும் நான் நேசிக்கத் தொடங்கிவிடுகிறேன். மகள்களின் உலகத்தை அவர்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்ள வழிவிடும் அப்பாக்கள் ஆண் தேவதைகள் தான்.

பெரும்பாலும் மகன்களின் அப்பாக்கள் மகன்களுக்கு ஆகச்சிறந்த கதாநாயகனாகவே இருந்திருக்கிறார்கள். மகள்களின் அப்பாக்கள் அப்படித்தான். ஆனால், இந்தப் புத்தகத்தில் மகள்களின் அப்பாக்கள், மகள்களின் உலகத்திற்குள் அதிகம் பிரவேசிக்க முடியாத ஆண்களாக இருந்திருக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன், மதுமிதா ஆகியோரின் அப்பாக்கள் இதற்கு விதிவிலக்கு. தி. பரமேஸ்வரியும், சுமதிஸ்ரீயும் தங்கள் அப்பாக்களுடன் பேசிக் கொள்ளமுடியாத சொற்களை, ஆற்றாமையை, கண்ணீரை இதில் கட்டுரையாக மாற்றித் தந்திருக்கிறார்கள்.

இந்த அப்பாக்கள்வழி நான் அறிந்து கொண்டது, அப்பாக்கள் கொஞ்சம் கண்டிப்பானவர்கள். தன் கனவுச் சிலுவைகளைப் பிள்ளைகளைச் சுமக்கச் செய்ய எத்தனித்தவர்கள். மகன்மீதும், மகள்மீதும் கொண்ட அன்பை, அன்பாகக் காட்டத் தெரியாமல் கோபமாக, அதிகாரமாகக் காட்டியவர்கள். நண்பனைப் போல பிரியங்களைக் கையளித்தவர்கள். புறவுலக அழுத்தங்களைத் தனக்குள்ளாகப் புதைத்துக் கொண்டு புத்தக உலகத்திற்குள் தங்கள் பிள்ளைகளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்கள். இப்படியாக, இன்னும் இன்னுமாக அப்பாக்களின் நிறங்கள் வெவ்வேறானவை. முகங்கள் வேறானவை. அப்பாக்கள் எந்தவொரு ஒற்றைப் பிம்பத்திற்குள்ளும் அடங்கிப் போகாதவர்கள்.

அப்பா நூலை வாசித்து முடிக்கையில் இப்போது அப்பாக்களாக இருப்பவர்கள் தங்கள் மகன்களை, மகள்களை இன்னும் ஆழமாக நேசிக்கச் செய்வார்கள். மகன்கள், மகள்கள் தங்கள் அப்பாக்களை இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்வார்கள். அப்பாக்கள் கொண்டாடப்படுவார்கள். இனிமேல் அப்பாக்களாக ஆகப் போகிறவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நண்பனைப்போல மாறிவிடும் சூத்திரத்தைச் சொல்லித் தரும் இந்த அப்பா.
இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்த தோழர் இளம்பரிதிக்கு அப்பாக்களும் மகன்களும் மகள்களும் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அவருக்கு என் வாழ்த்துகளும் அன்பும். ஏனெனில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு கட்டுரைகளை வாங்கித் தொகுப்பது சாதாரணப் பணியன்று. ஆனால், அப்பாமீது கொண்ட அளப்பரிய பிரியம்தான் அரிய பணியைச் செய்து முடிக்க உடனிருந்து ஊக்குவித்திருக்கக் கூடும். புத்தகம் உருப்பெற மூலகாரணியாய் இருந்த அந்த அப்பாவுக்கு எனது அன்பும் பிரியங்களும்.

நூல் : அப்பா நினைவும் – புனைவும்
தொகுப்பாசிரியர் : ப. இளம்பரிதி
பதிப்பகம் : பரிதி பதிப்பகம், 56சி/128, பாரத கோயில் அருகில்,
                        ஜோலார் பேட்டை, வேலூர் – 635 851
விலை : 500/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக