அவசரமாக
எஸ்பிஐ அக்கவுண்ட் ஒன்றுக்குப் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. காலை நேரத் தேநீருக்குப்
பிறகு வீட்டைக் கொஞ்சமாகச் சுத்தம் செய்துவிட்டு பேங்க் போனேன். இந்தியன் வங்கியில்
நான் கணக்கு வைத்திருப்பதால் கோட்டக்குப்பம் பேங்க் சென்றேன். பணம் டெபாசிட் செய்வதற்கான
ஸ்லிப் அங்கே இல்லை. யாரிடமும் கேட்கலாம் என்றால் பதில் சொல்லும் நிலையில் யாருமில்லை.
எல்லோரும் பிஸியாக இருந்தார்கள். பதினைந்து நிமிடத்திற்கு மேல் காத்திருந்தபின் கவுண்ட்டரில்
இருக்கும் பெண்மணியிடம் ஸ்லிப் கேட்கலாம் என்றால் வரிசையில் வாங்க என்றார். ஸ்லிப்
எங்க இருக்குனு சொல்லுங்க மேடம் ஃபில் பண்ணிட்டு வருகிறேன் என்றேன். ஸ்லிப்பெல்லாம்
இல்லை ஏடிஎம் கார்டுல ஸ்வைப் செய்து டெபாசிட் பண்ணச் சொன்னார். பொதுவாக அக்கவுண்ட்டில்
மெயிண்ட்டனன்ஸ் பேலன்ஸ் தவிர இருப்பு வைப்பதில்லை. இருப்பில் உள்ள தொகை அடிக்கடி காணாமல்
போவதால் அதிகமான தொகையோ கம்மியான தொகையில் கையில் வைத்துக் கொள்வதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன்.
வங்கிக் கணக்கில் பணம் அடிக்கடி மிஸ் ஆகிறது என்று புகார் செய்தும் பெரிய ரெஸ்பான்ஸ்
கிடைக்கவில்லை. ஏடிஎம்மில் பணம் இல்லை மேடம் கையில் தான் வைத்திருக்கிறேன் என்றேன்.
இல்லம்மா இப்பல்லாம் கார்டுல ஸ்வைப் பண்ணி தான் பண்றோம். இல்லனா நேரடியா மெஷின்ல போட்டு
விடுங்க என்றார் முகம் பார்க்காமலேயே.
எஸ்பிஐ
டெபாசிட் மெஷின் எங்கே இருக்கும் எனக் கேட்டேன். காதில் வாங்காதது போல இருந்தார். நண்பருக்கு
போன் செய்து கேட்டேன். அவர் முத்தியால்பேட்டை மார்கெட் அருகில் பேங்க் இருக்கு அங்க
போய் பார்க்கச் சொன்னார். அங்கே போனால் அப்படி எந்த மெஷினும் இல்லை. சரி பேங்கில் ஸ்லிப்
ஃபில் பண்ணி போடலாம் என்றால் அங்கும் ஸ்லிப் இல்லை. அங்கிருந்தவரிடம் கேட்டால் அவரும்
இந்தியன் வங்கியில் சொன்ன அதே வார்த்தையைச் சொன்னார். ஆனால் அவர் எஸ்பிஐயில் அக்கவுண்ட்
இருக்கா என்ற கேள்வியைக் கூடுதலாகக் கேட்டார். அக்கவுண்ட் இல்லை என்றேன். அப்படியென்றால்
மெயின் பிராஞ்ச் போங்க அங்க மெஷின் இருக்கு என்றார். மெயின் பிராஞ்ச் எங்கிருக்கிறது
எனக் கேட்டேன். பக்கத்து கவுண்ட்டரில் இருந்த பெண்மணியிடம் மெயின் பிராஞ்ச் பாண்டிச்சேரியில்
எங்க இருக்கு என்று கேட்டார். எனக்குத்ட் தெரியலையே என்றார் போனைப் பார்த்தபடியே.
மீண்டும்
நண்பருக்குக் கால் செய்து மெயின் பிராஞ்ச் எங்க இருக்கு என்றதும் பீச் கிட்ட இருக்கு என்றார். எழுந்ததில் இருந்து இரண்டு டீ மட்டுமே குடித்திருந்ததால்
பசி வயிற்றைக் கிள்ளியது. பேங்க் வேலையை முடித்துவிட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம் என வண்டியில் கிளம்பினேன்.
கூகுள் மேப் உதவியுடன் கொஞ்சமே சுற்றியலைந்து மெயின் பிராஞ்சைக் கண்டுபிடித்தேன்.
உள்ளே
நுழைந்ததும் செக்யூரிட்டியிடம் விவரத்தைச் சொல்லி ஸ்லிப் ஃபில் பண்ணனும் என்றதும் ஸ்லிப்
ஃபில் பண்ணி அனுப்பினால் அறுபது ரூபாய் கமிஷன், மெஷின்ல போட்டால் இருபத்தி ஐந்து ரூபாய்
கமிஷன். நீங்க மெஷின்ல போட்ருங்க. எல்லாரும் இப்போ அதைத்தான் யூஸ் பண்றாங்க என்றார்.
என்னிடம் ஒரேயொரு பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் தான் இருந்தது. ஏனோ அந்த பிங்க்
தாளைப் பார்த்தாலே தூக்கம் இல்லாமல் ஏடிஎம் ஏடிஎம்மாக இரவும் பகலுமாக அலைந்த நாட்கள்
நினைவுக்கு வந்து போகும். வேண்டா வெறுப்பாக அதைக் கையில் வைத்திருந்தேன். இப்போ நான்
அனுப்ப வேண்டிய தொகையுடன் இருபத்தி ஐந்து ரூபாய் சில்லறை வேறு வேண்டுமே. என்னடா எனக்கு
வந்த சோதனை நினைத்துக் கொண்டேன். கேஷ் கவுண்ட்டரில் போய் பிங்க் நோட்டை மாற்றிக் கொள்ளலாம்
என வரிசையில் போய் நின்றேன். நான் பதின்மூன்றாவது நபராக நின்றிருந்தேன். என்முறை வரும்வரை
காத்திருந்தேன். என் காத்திருப்பு வீண் எனப் பிறகு தான் புரிந்தது. கேஷியர் சொன்னார்,
இது என்ஆர்ஐ பணம் கொடுக்கிற இடம். நீங்க ஐந்து அல்லது ஆறாவது கவுண்ட்டர் போங்க. பசி
மயக்கம் கொஞ்சம் கோவமாக மாறியது. ஆனால், கோபப்பட இது நேரமல்ல. இன்னும் இரண்டு வேலைகளை
முடிக்க வேண்டியிருக்கிறது என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ஆனாலும் முதல்
வேலையான பணம் அனுப்பும் வேலையை முடிப்பதற்குள்ளாகவே மணி இரண்டரை ஆகியிருந்தது.
ஐந்தாவது
கவுண்ட்டரில் அழகான கருநீலச் சுடிதார் அணிந்த பெண். அமைதியாக சிஸ்டத்தைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தார். மேடம் மெஷின்ல அமைண்ட் டெபாசிட் பண்ணனும் இந்த இரண்டாயிரம் ரூபாய்க்கு
சேஞ்ச் தருவிங்களா என்றேன். பதினைந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க என்றார். பதினைந்து
நிமிடம் என்னை வெயிட் பண்ண சொன்னவர் அப்படி எதுவும் முக்கியமான வேலை செய்யவில்லை. அமைதியாக
உட்கார்ந்திருந்தார். நானும் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக பதினைந்து
நிமிடத்திற்குப் பிறகு மேடம் சேஞ்ச் என்றேன்.
வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன்ல. குரலில் அப்படியொரு கடுமை. முகத்தில் அவ்வளவு ஒரு எரிச்சல்.
நான் என்ன அவங்க பர்சில் இருந்து பணம் கேட்டது போல நடந்து கொண்டார். பணம் வைத்திருக்கும்
டிராவுக்கும் அவருக்கும் இரண்டு விரல் அளவு கூட இடைவெளி இல்லை. கையை நீட்டி ட்ராவை
இழுக்க வேண்டும். அதற்கு இருபது நிமிடம் காத்திருக்கச் சொல்வது ஏன் எனப் புரியாமல்
இருந்தது.
ஏற்கனவே
பதினைந்து நிமிடம் சொன்னிங்க. இன்னும் வெயிட் பண்ண சொன்னால் என்ன அர்த்தம் மேடம். கொஞ்சம்
அவசரம் என்று தான் கேட்கிறேன். நீங்க கொடுத்துவிட்டால் உங்களை ஏன் கேட்கப் போகிறேன்
என்றேன். எவ்ளோ போடனும். எவ்வளவு என்று சொன்னேன்.
அந்த
மாதிரி போடமுடியாது. ரவுண்டா ஆயிரம், ஆயிரத்து
ஐந்நூறு, இரண்டாயிரம் இப்படித்தான் போடமுடியும் என்றார். அதெப்படி மேடம், எனக்கு அனுப்ப
வேண்டிய அமவுண்ட் தானே அனுப்ப முடியும், வெறும் ஐந்நூறு ஆயிரம் மட்டும் தான் அக்சப்ட்
பண்ணும் என்றால் அது என்ன மெஷின் என்றேன் கோபத்தை அடக்கிக் கொண்டு. என் வார்த்தைகளைக்
காதில் வாங்காதது போல அலட்சியமாக அமர்ந்திருந்தார். சரி நான் பார்த்துக்கறேன் சேஞ்ச்
மட்டும் கொடுங்க மேடம் என்றேன். ஆறாவது கவுண்ட்டரில் ஃபார்ம் ஃபில் பண்ணிக் கட்டுங்க.
பேலன்ஸ் தருவார் என்றார். ஃபார்ம் ஃபில் பண்ணால் அறுபது ரூபாய் கமிஷன்னு சொன்னாங்க
என்று சொல்லி முடிப்பதற்குள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
ஸ்லிப்
ஃபில் பண்ணிக் கொண்டு ஆறாவது கவுண்ட்டர் போனால் ஒரு தாத்தா கியூவில் வாங்க என்றார்
அடித்தொண்டையில். அவரும் ஏதோ கடுப்பில் இருந்திருப்பார் போல. பத்தாவது நபராக மீண்டும்
வரிசையில் நின்றேன். எனது வரிசையில் நான் நான்காவது நபராக நான் நின்று கொண்டிருந்தபோது
ஒரு போலிஸ்காரர் வந்தார். ஃபில் பண்ண ஸ்லிப்பையும் பணத்தையும் கொடுத்தார். இரண்டு நிமிடத்தில்
ரசீதைப் பெற்றுக் கொண்டு புன்னகையோடு போய்விட்டார். அந்தத் தாத்தா அவரை கியூவில் வாங்க
என்று சொல்லவில்லை. அவர் பாட்டுக்கு நின்று கொண்டிருந்தார். நான் அவர் பின்னால் நின்றிருந்தேன்.
என்முறை
வந்ததும் ஃபில் பண்ண ஸ்லிப்பையும் பிங்க் நோட்டையும் கொடுத்தேன். இரண்டு நிமிடத்தில் வேலை முடிந்தது. நன்றி சார்
என்று சொல்லிவிட்டு பணம் அனுப்பியதற்கான ரசீதை வாங்கிக் கொண்டு திரும்பினேன். இன்னமும்
அந்த உம்மனாமூஞ்சி அக்கா எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தார்.
மேடம்,
ஒன்னும் சொல்லட்டுமா, நீங்க அழகா இருக்கிங்க. ஆனால் சிடுசிடுனு இருக்காங்க. கொஞ்சம்
சிரிங்க. இன்னும் அழகா இருக்கும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
ஏசியால்
குளிர்ந்திருந்த அந்த இடம் எனக்கு அவ்வளவு வெப்பமாக இருந்தது.
நானே பேங்க்ல போய் பணம் கட்டுன மாதிரி இருக்கு மேடம்
பதிலளிநீக்கு