புதன், 22 ஜனவரி, 2020

பூனைப் பிரசவம் - மனுஷி

பூனைப் பிரசவம் – மனுஷி
காலையில் இருந்தே புரூஸுக்குப் பிரசவ வலி. அடி வயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தாள். உணவு கேட்பதற்காக மெல்லிய குரலெடுத்து அழைப்பதைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். அது ஒரு பாவக்குட்டியின் குரல் போல் இருக்கும். வயிறு நிறைய மீன்கள் சாப்பிட்டிருந்தாலும் நான் சாப்பிட அமரும்போது நமது இரக்கத்தைக் கோரும் வகையில் ஒரு பார்வையைப் பார்ப்பாள். அவளுக்குத்  தராமல் ஒரு வாய் கூட நம்மால் சாப்பிட முடியாது. 

ஆனால், பிரசவ வலி வந்ததாலோ என்னவோ மீன், விஸ்காஸ், முட்டை, பால் என வைத்த எதையுமே சாப்பிடவில்லை. வயிற்றுக்குள் அந்தச் சின்ன ஜீவன்கள் அசைவதை என்னால் பார்க்க முடிந்தது. 

அவள் பிரசவிப்பதற்கான இடத்தை அவளே தேர்வு செய்து வைத்திருந்தாள். துணி அடுக்கி வைக்கும் அலமாரியில் போய் படுத்துக் கொள்வாள். அதுதான் அவளுக்கான பிரசவ அறை என, அங்கிருந்த துணிகளை எல்லாம் மேலே உள்ள இடத்தில் மாற்றி வைத்து, ஒரு தலையணையைப் பெட் போல வைத்து மேலே ஒரு காட்டன் புடவையைத் தலையணை அளவுக்கு மடித்து வைத்தேன்.

பெரும்பாலும் அங்கே தான் போய் படுத்துக் கொள்வாள். நேற்று மட்டும் அங்கே போகாமல் என் காலையே சுற்றிச் சுற்றி வந்தாள். அடுப்படியில் கேஸ் சிலிண்டர் வைக்கும் இடத்தில் போய் படுத்துக் கொண்டு, தரையைச் சுரண்டிக் கொண்டிருந்தாள். பிறகு படுத்துக் கொண்டு, இட வலமாக உருண்டு கொண்டே ஓங்கிக் குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தாள். தரை சில்லென்று இருந்தது. இரண்டு தரைவிரிப்புகளை அங்கே எடுத்து வைத்தேன். அதன்மீது படுத்துக் கொண்டு கத்திக் கொண்டும், உருண்டு கொண்டும்,  தரை விரிப்பை ஆக்ரோஷமாகக் கடித்துக் கொண்டும் தனது வலியை மடைமாற்றிக் கொண்டிருந்தாள். 

ஒரு பூனைக்குட்டியின் பிரசவத்தை இவ்வளவு அருகில் இருந்து பார்ப்பது இதுவே முதல் முறை. வலியில் அவள் கதறுவதைப் பார்க்க முடியாமல் அழுதேன். 

புரூஸம்மா, புரூஸம்மா என்று குரல் கொடுத்தபடி உடலை வருடிக் கொடுத்தேன். எனது குரலும் வருடலும் அவளுக்கு இதமாக இருந்திருக்கும் போல. அந்தக் குரல் வரும் நேரம் மட்டும் கண்களை மூடி அமைதியாக இருந்தாள். 

உடலிலிருந்து கையை எடுத்தாலோ, குரல் கொடுப்பதை நிறுத்தினாலோ வேகமாகக் கத்தினாள். 

நேரம் ஆக ஆக அவளது குரல் வலியின் பெருங்கூச்சலாக இருந்தது. எனது மடியில் வந்து அமர்ந்து கொண்டாள். 

நான் வீடு மாறியதற்குப் பிறகு எனது மடியில் அவள் வந்து அமரவே இல்லை. வீடு மாற வேண்டிய சூழல் என்பதை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளுக்குப் புரியவேயில்லை. அவள் வளர்ந்த வீடு என்பதால் வாடகை வீட்டையே சொந்த வீடு போல பாவித்து விட்டாள். புது வீடு அவளுக்கு அந்நியமாகத் தெரிந்தது. ஆனால், இந்தப் பிரசவ வலி புது வீட்டின் அந்நியத் தன்மையை மறக்கச் செய்திருந்தது. 

மடியில் படுத்துக் கொண்டவளைத் தடவிக் கொடுத்தபடியே, கொஞ்ச நேரத்தில் பாப்பா வெளியில் வந்துடுவாங்க, அப்புறம் புரூஸம்மா ரிலாக்ஸ் ஆவிங்களாம் என்று சொல்லச் சொல்ல, தன் முன்னங்கைகளால் எனது கை மீது வைத்து அழுத்தி, வயிற்றை முக்கிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது முலைக்காம்புகளை, வயிற்றை நக்கிக் கொண்டாள். 

வயிற்றை முக்கிக் கொண்டே எனது கையில் வாய் வைத்து அழுத்திக் கடிக்கத் தொடங்கினாள். சட்டென்று ஒரு துண்டை எடுத்து எனது கையில் கட்டிக் கொண்டு கையைக் கடிக்கக் கொடுத்தேன். இறுக்கிக் கடித்துக் கொண்டே முக்கினாள். 

காலையில் இருந்து நான் டீ குடிக்காமல் சாப்பிடாமல் அவளோடு இருந்ததால் எனக்குத் தலைசுற்றியது. ஒரு தலையணையை எடுத்து வந்து அதில் படுத்துக் கொண்டேன். புரூஸ், எனது இடது கை மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். முகமெல்லாம் தாய்மையின் ரேகை படர்ந்திருந்தது. கையிலிருந்து தலையை எடுக்காமல், முன்னங்கைகள், பின்னங்கால்களால் அழுத்தி, வயிற்றை முக்கி தனது குட்டிகளை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் பேசிக் கொண்டே இருந்தேன். 

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவளது பின்பக்கத்திலிருந்து மெல்ல நீர் வடிந்தது. பிரசவிக்கும் பெண்ணைப் போலவே மல்லாந்து படுத்து கால்களை அகல விரித்து முக்கிக் கொண்டே இருந்தாள். 

சரியாக 4 மணிக்கு முதல் குட்டி மெல்ல மெல்ல வெளியேறியது. 

கண்களில் கண்ணீரோடு புரூஸை முத்தமிட்டேன். அவள் முன்பைப் போல சத்தமெழுப்பவில்லை. ஆனால், முனகிக் கொண்டிருந்தாள். 

முதல் குட்டி முழுவதுமாக வெளியேறச் சரியாகப் பத்து நிமிடம் ஆனது. வெளியே வந்த குட்டியை நாக்கால் நக்கிச் சுத்தம் செய்தாள். தொப்புள் கொடியையும் அவளே நக்கி எடுத்துவிட்டாள். 

அரை மணி நேரம் கழித்து இரண்டாவது குட்டி வெளியே வந்தது. அதையும் முன்பு போலவே நக்கிச் சுத்தம் செய்துவிட்டாள். முதல் குட்டி வெளியேறும்போது இருந்த அலறல் இரண்டாவது குட்டியை ஈனும்போது இல்லை. அமைதியாகப் படுத்திருந்தாள். ஆனால், என்னை மட்டும் அவளை விட்டு நகர விடவில்லை.

ஐந்து மணி அளவில் மூன்றாவது குட்டியையும் ஈன்றெடுத்தாள். 

முகத்தில் அப்படியொரு தாய்மையின் களைப்பு. 

மூன்று குட்டிகளில் ஒன்று மட்டும் அசையவே இல்லை. அது கொஞ்ச நேரத்திலேயே சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டது. மற்ற இரண்டு குட்டிகளும் கொஞ்ச நேரத்தில் அம்மாவின் மடி தேடிப் போய் பால் குடித்தது. குட்டிகளின் பிஞ்சுக் குரல் பரவசம் கொள்வதா சுவாசிப்பதை நிறுத்திக் கொண்ட குட்டிக்காக அழுவதா எனத் தெரியவில்லை. கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. 

வலியிலிருந்து ஜனிக்கும் ஜீவன் தான் வாழ்வின் பெரும் அதிசயம்.

அரை மயக்கத்தில் படுத்திருந்தாள் புரூஸ்.

பொதுவாக, பூனைகள் குட்டிப் போடும்போது யாருக்கும் தெரியாமல், மறைவான ஓரிடத்தில் போய் குட்டிப் போட்டுவிட்டு வரும் என்று படித்திருக்கிறேன். நண்பர்கள் சிலரும் சொல்லி இருக்கிறார்கள். இங்கே எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. 

இத்தனை வயதாகியும் எனக்குள் சிறுமியின் மனோநிலை எப்போதும் என்னை விட்டுப் போகவேயில்லை. ஆனால், இப்போது, மகளின் பிரசவத்தின்போது உடனிருந்த அம்மாவை எனக்குள் உணரச் செய்துவிட்டாள் புரூஸ்.

3 கருத்துகள்:

  1. "தாய்மை" ஒரு உன்னத உணர்வு...
    நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் வாழ்வில் எப்போதுமே அழகுதான்..
    நீங்கள் ஆசீர்திக்கப்பட்டவர் மனுஷி..

    பதிலளிநீக்கு
  2. ஆச்சரியம் அழகு அழுகை 👌
    பகிர்ந்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு