குடைக்காலம்
ஆரோவில்லில் உள்ள இடையன்சாவடியில் குடைக்காலம் நிகழ்வுக்குச் சென்னையில் இருந்து தோழி அகிலா, நண்பர்கள் பாலமுரளி, பிரவீண், இளையராஜா, தோழர் கரன்கார்க்கி, தம்பி ஷிஜு ஆகியோர் வந்திருந்தார்கள்.
அகிலாவும் பிரவீணும் ஸ்கூட்டியில் வந்திருந்தார்கள். ஸ்கூட்டி பயணப் புகைப்படத்தை முகநூலில் பார்த்த கணத்தில் மனசுக்குள் அப்படியொரு சந்தோஷம். நானே ஈசிஆர் சாலையில் பயணிப்பது போலொரு உணர்வு.
நண்பர் பாலாவும் சபரி மலைக்குப் போய்விட்டு அன்றைக்குக் காலையில் தான் சென்னை திரும்பியிருந்தார். மலைக்குப் போய் திரும்பிய காலோடு ஆரோவில் வந்து சேர்ந்தார் ஷிஜுவுடன்.
நிகழ்வு தொடங்கியதும் அனைவரையும் வரவேற்று முடித்தபின், நான் எனது கவிதைகளில் சிலவற்றைப் பார்வையாளர்கள் முன்பு வாசிக்கத் தொடங்கினேன். எந்தச் சூழ்நிலையில், எந்த மனநிலையில், எதன் பாதிப்பில் அந்தக் கவிதைகளை எழுதினேன் எனும் சூழலை விளக்கிக் கவிதைகளை வாசித்தேன். அங்கே வந்திருந்த சிலருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது. அதனால், நான் கவிதைகளை வாசித்தபோது தோழி மாளவிகா, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த கவிதைகளை வாசித்தேன். ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
நான் மட்டுமே வாசித்துச் சொல்வதோடு வந்திருந்த நண்பர்கள், அதிலும் என்னையும் என் கவிதைகளையும் நன்றாக அறிந்த நண்பர்கள் அவர்களுக்குப் பிடித்த என் கவிதைகளை வாசிக்க வைக்கலாம் என அகிலாவிடமும் பாலாவிடமும் கேட்டேன். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் என்மீது கொண்ட பிரியத்தினால் உடனே ஒப்புக் கொண்டார்கள்.
அகிலா, கருநீல முக்காடிட்ட
புகைப்படம் தொகுப்பிலிருந்து ஒரேயொரு கவிதையை மட்டும் அழுவதற்கு முன்னால் என்னும் கவிதையைத் தனக்குப் பிடித்த கவிதை என வாசித்தார். நான் எந்த மனநிலையில் இருந்து கவிதையை எழுதினேனோ அதே உணர்வைக் கவிதை வாசிப்பில் அவர் உணர்த்தினார். அந்தக் கவிதையில் மைய ஆன்மா எது என நான் நினைத்து எழுதினேனோ அந்த வரிகளைக் கூடுதல் அழுத்தமும் உணர்வும் கொடுத்து வாசித்தபோது நான் நெகிழ்ந்து போனேன். அதைவிட ஆச்சரியமும் பெருமையும் தந்தது அகிலாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு. கவிதை வரிகளை வாசித்து உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அங்கிருந்த தமிழ் அறியாத பார்வையாளர்களும் கவிதையை உணரச் செய்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.அகிலா நல்ல வாசிப்பாளர். விமர்சகர். அழகுணர்ச்சி மிக்கவர் எனத் தெரியும். சில நேரம், தொலைபேசியில் ஆங்கிலத்தில் பதில் சொல்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். கவிதைகளை மொழிபெயர்க்கும் அளவுக்கான ஆங்கிலப் புலமையை அன்றைக்குத்தான் அறிந்து கொண்டேன். தமிழுக்கு நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்துவிட்டார் எனத் தோன்றியது.
அகிலா, உன்னிடம் புத்தாண்டு பரிசாக நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். பிறமொழிகளில் இருந்து ஆங்கிலம் வாயிலாக நிறைய இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழிலிருந்து அந்தளவுக்குப் பிற மொழிக்கு நமது இலக்கியங்கள் போய்ச் சேரவில்லை. நீ வாசித்தவற்றில் / வாசிப்பவற்றில் உன்னைக் கவர்ந்த, நீ சிலாகித்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்பாளராக உனது அடையாளத்தை நீ உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. நிச்சயமாக, நீ செய்வாய் என நம்புகிறேன்.
அகிலாவைப் போலவே, பாலாவும் எனது கவிதைகளில் சிலவற்றை வாசித்தார். இயல்பாகவே பாலா, கலை அழகுணர்ச்சி மிக்கவர் என்பது அவரது புகைப்படங்களைப் பார்த்தாலே எல்லோருக்கும் தெரியும். பாலாவிடம் நான் வியந்து பார்ப்பது, மனிதர்களின் இயல்பான சிரிப்பைத் தனது கேமராவில் பதிவு செய்யும் அந்தக் கலைக்கண் தான். நல்ல கேமராக் கலைஞன் என்பதைப் போல நல்ல சிறுகதை எழுத்தாளர், வாசிப்பாளர்.
அவர் ஒரேயொரு கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் முத்தங்களின் கடவுள், கருநீல முக்காடிட்ட புகைப்படம் ஆகிய இரண்டு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்தார். மாயா கவிதைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை என்று சொன்னாலும் கூட வாசித்த சொச்ச நேரத்திலேயே எனது மாயா யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்வுக்கு வந்திருந்த ஆரோவில் நண்பர்கள் அகிலாவும் பாலாவும் வாசித்த கவிதைகளையும், வாசித்த விதத்தையும் பாராட்டிச் சொன்ன போது உச்சிமுகர்ந்து போனேன்.
என் உலகம் எப்போதும் நண்பர்களால் முழுமை பெறுகிறது. காலம் எனக்காக அனுப்பி வைத்த பிரியத்தின் சாயல் கொண்டவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக