குட்டிக்கதையின் கதை
பள்ளித் தோழிகள் மட்டும் உரையாடிக் கொள்வதற்கென ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி இருந்தோம். தினம் இரவுகளில் கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் பேச்சு எனப் பால்யகால நினைவலைகளில் சென்று மீண்டு வருவோம்.
மூன்று நாட்களுக்கு முன்பு தோழிகளோடு பேசிக் கொண்டிருந்தபோது, தோழிகளோடு எவ்வளவு பேசுவது, அவர்களுடைய குழந்தைகளுக்குத் தினம் ஒரு கதை சொல்லலாம் என யோசித்தேன். தோழிகளிடம் சொன்னபோது கதைதானே சொல்லு என அனுமதி கொடுத்தார்கள்.
அன்றைய எங்களின் உரையாடலுக்குப் பிறகு, குழந்தைகளுக்கென ஒரு கதையைக் குரல் பதிவு செய்தேன். முதல் நாள் கதை. கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கட்டுமே என எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 'கால் முளைத்த கதைகள்' குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பில் எனக்குப் பிடித்த 'கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?' எனும் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
உங்க எல்லாருக்கும் நான் இப்போ ஒரு குட்டிக் கதை சொல்லப் போறேன்... முன்ன ஒரு காலத்துல, கடல் தண்ணி உப்புக் கரிக்காதாம். குடிக்கிற தண்ணி போலவே இருக்குமாம்....... என்று தொடங்கி, அன்னைல இருந்து கடல் தண்ணி உப்புக் கரிக்குதாம்... என்று கதையைச் சொல்லி முடித்தேன். (முழுக் கதையைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் கால் முளைத்த கதைகள் தொகுப்பை வாசிக்கலாம்)
அடுத்த நாள் என் தோழிகளிடமிருந்து ஏய் ரொம்ப நல்லா கதை சொல்ற டி என்று பதில் வந்தது. அவர்களின் பிள்ளைகளும் கதையை ரசித்துக் கேட்டார்கள் என அவர்கள் சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் என் தோழி பார்வதியின் இரண்டு வயது மகன் மித்ரன் குரூப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான். அத்தை, கதை நல்லா இருந்த்து. இப்போ குட்டிக்கதை சொல்லுங்க என்று.
கதையை ஆறு நிமிடம் சொல்லி இருக்கிறேன் என அப்போது தான் கவனித்தேன். சரி அவனுக்கு ஒரு குட்டிக் கதையைச் சொல்வோம் என அப்போதைக்கு யோசித்து இரண்டு மியாவ் குட்டிகள் ஊர் சுற்றிப் பார்க்கப் போன கதையைச் சொன்னேன். அதையும் கேட்டுவிட்டு மியாவ் கதை நல்லா இருக்கு. குட்டிக் கதை சொல்லுங்க என வாய்ஸ் மெசேஜ் செய்தான்.
இவனைக் கதை சொல்லித் திருப்தி படுத்தினால்தான் அன்றைய எனது நாள் முழுமையாகும் என்ற அளவுக்கு வந்துவிட்டேன். யோசித்து யோசித்துப் பார்த்துக் குட்டியா ஒரு கதை சொல்வோம் என முடிவு செய்தேன்.
எறும்பு ஒன்று ஆற்றில் தவறி விழுந்துவிட ஒரு பறவை இலையைப் பறித்து ஆற்றில் போட்டு எறும்பைக் காப்பாற்றிய கதையை ஒரு நிமிடத்தில் சொன்னேன். அதையும் கேட்டுவிட்டு எறும்பு கதை சூப்பரா இருக்கு. குட்டிக் கதை சொல்லுங்க அத்தை என்று ரிப்ளை செய்தான்.
டேய் இதற்கு மேல குட்டிக் கதையை என்னால சொல்ல முடியாது டா என்று சொல்லிவிட்டேன். குழந்தைகளிடம் கதை சொல்லிக் கவரும் எனக்கு மித்துக் குட்டி கேட்கும் குட்டிக் கதையைச் சொல்ல முடியவில்லையே என வருத்தமாக இருந்தது.
அடுத்தநாள் தோழியிடம் பேசும்போது என் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன். அப்போது அவள் அழகான உண்மை ஒன்றை எனக்குச் சொன்னாள்.
பாரதி, நீ அன்னைக்குக் கதை சொல்லத் தொடங்கும்போது நான் ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா என்று சொன்னியா..
கடல் கதை சொன்ன. மியாவ் கதை சொன்ன. எறும்பு கதை சொன்ன. ஆனால் நீ சொன்ன குட்டிக் கதையைச் சொல்லவே இல்லையாம். அதைத்தான் மித்ரன் சொல்லிட்டு இருந்தான். நீ அதைப் புரிஞ்சுக்கல என்றாள் சிரித்துக் கொண்டே.
பஞ்சு பொம்மையால் தலையில் கொட்டியது போல இருந்தது அந்தக் கணம். குழந்தைகளிடம் பேசும் இன்னும் கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும் என அப்போது உணர்ந்தேன். நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
குழந்தைகள் நாம் சொல்லும் வார்த்தைகளுக்குள் வாழக் கற்றுக்கொள்கிறார்கள். நம்மிடமிருந்தே உலகத்தைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
அவர்களின் உலகத்தைக் கதைகளால் திறந்து விட வேண்டியது நமது கடமை.
அருமை. குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு அலாதி இன்பம் தரும்.
பதிலளிநீக்கு