திங்கள், 9 டிசம்பர், 2019

ஊர் திரும்பிய பறவை - மனுஷி



நம் வாழ்க்கையில் காலம் ஆடும் ஆட்டத்தில் சீட்டுக் கட்டுகளைப் போல நாம் களைத்துப் போட்டுத் திரும்ப அடுக்கி வைக்கப்படுகிறோம். எப்போது எங்கே காணாமல் போகிறோம், எப்போது மீட்டெடுக்கப்படுகிறோம், எங்கே யாரைத் தொலைக்கிறோம் என்பதெல்லாம் புரியாத புதிர். இந்த விசித்திர விளையாட்டில் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தைத் தொடர்வது கொஞ்சம் அரிதுதான்.

பத்தொன்பது ஆண்டுகள் காணாமல் போய் மீண்டும் திரும்பி வரும்போதுதான் எவ்வளவு மாற்றங்கள்.

என் சொந்த ஊருக்குப் போகாமல் இருந்த பத்தொன்பது ஆண்டுகளில் நான் படித்த பள்ளிக் கூடத்தைப் போலவே என் கனவில் வரும் இன்னொரு இடம் திருநாவலூர் சிவன் கோவில்.

என் சிறு வயது ஞாபகங்களில் எப்போதும் மறக்க முடியாத இடங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

திருநாவலூர் அரசுப் பள்ளியில் சந்திக்கத் திட்டமிட்டபடி தோழி ஜீவா மற்றும் பார்வதியைச் சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக அமர்ந்து படித்த மரத்தடி, விளையாடிய மைதானம், வகுப்பறை என எல்லாவற்றையும் பார்த்து, அந்தப் பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கித் திளைத்துப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம். பார்வதி விருதாச்சலத்திற்கும், ஜீவா கடலூருக்கும் நான் பாண்டிச்சேரிக்கும் செல்ல வேண்டும். பார்வதியைப் பஸ் ஏற்றிவிட்டு, ஜீவாவுடன் வண்டியில் புறப்பட்டேன். கடலூரில் அவளை இறக்கிவிட்டு, பிறகு பாண்டிச்சேரி செல்ல வேண்டும் நான்.

அங்கிருந்து கிளம்பும்போதே திருநாவலூர் சிவன் கோவிலுக்குப் போய்ப் பார்க்கலாம் என முடிவு செய்தோம்.

மெயின் ரோட்டிலிருந்து கோயிலுக்குச் செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பும்போதே எனக்குள்ளிருந்த பள்ளிச் சிறுமி துள்ளிக் குதித்தபடி கோயிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.

கோயிலுக்கு முன்னாள் எப்போதும் செம்மாந்து நிற்கும் தேரை அங்கே காணவில்லை. வண்டியை நிறுத்திவிட்டுச் செறுப்பைக் கழட்டி வண்டியின் அருகில் வைத்துவிட்டுக் கோயில் கோபுரத்தைப் பார்த்தேன். சிறு வயதில் பார்த்தபோது மிக உயரமாகக் காட்சியளித்த அந்த முகப்புக் கோபுரம் கொஞ்சம் குள்ளமாகத் தெரிந்தது. நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேனா எனத் தெரியவில்லை.

கோபுரத்தின் முன்னால் நின்று வணங்கிவிட்டுச் சென்று விடலாம் என நினைத்தோம். இவ்வளவு தூரம் வந்தாச்சு. நாம விளையாடிய இடம். உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் எனச் சென்றோம்.

அப்போதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடம் முடிந்ததும் முகம் கைகால் கழுவி, பள்ளிச் சீருடையை மாற்றிக் கொண்டு பயபக்தியோடு கோவிலுக்குக் கிளம்பிவிடுவோம். வீட்டிலிருந்து பதினைந்து அல்லது இருபது நிமிடம் நடந்தால் சிவன் கோயில். அப்போதெல்லாம் இடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டு நடந்ததில்லை. இப்போதுதான் கடிகார முட்கள் நம்மை நூல் பொம்மைகளைப் போல ஆட்டுவிக்கிறது.

கோவிலுக்குள் நுழையும்போதே வெண்கலத் தகடு பொறிக்கப்பட்ட அகண்ட படியைத் தொட்டு வணங்கியபடி உள்ளே தாண்டிச் செல்வோம். அந்தப் படியை மிதிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.

உள்ளே சென்றதும் முதலில் பிள்ளையார் சன்னதிக்கு முதல் தரிசனம். பிறகு உள்ளே இருக்கும் சிவலிங்க தரிசனம். கருவறையிலிருந்து வரும் வாசம் அது அலாதியானது. இப்போதும் கூட சாமி கும்பிடும் பழக்கம் இல்லை என்றாலும் முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்குச் செல்லும்போது கருவறை வாசனைக்காகவே அங்கே சென்று கைகூப்பி நின்று கொள்வதுண்டு. மேலும் கோயிலின் உள்ளிருக்கும் குளுமையும் அமைதியும் எப்போதாவது கேட்கும் டிங் எனும் மணியோசையும் – அதுதான் நாம் உணர வேண்டிய தெய்வீகம் எனத் தோன்றுகிறது இப்போது.

கருவறை சிவனைத் தரிசித்த பிறகு, பிரகாரத்தைச் சுற்றிவர வேண்டும். இடது புறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகள் இருக்கும். ஒவ்வொரு சிலையையும் பயபக்தியோடு தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே செல்வோம். அந்த வயதில் நாயன்மார்களின் வரலாறு எதுவும் தெரியாது. பி.ஏ. மூன்றாம் ஆண்டு பக்தி இலக்கியம் படிக்கும்போது தான் எங்கள் ஊரின் வரலாற்றுச் சிறப்பு எனக்குத் தெரிய வந்தது. நாயன்மார்களின் வரலாறும் அவர்களின் இலக்கியப் புலமையும் கூட. இப்போதெல்லாம் என்னுடைய ஊரைப் பற்றிக் கேட்கும்போது பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பிறந்த ஊர் எங்கள் ஊர் என.

இந்தக் கோயின் வரலாறு எதுவும் தெரியாமல் இருந்த பால்யகாலமும் கூட பேரழகுதான்.

நாயன்மார்களுக்கு அடுத்து தட்சணாமூர்த்தியை வணங்கிவிட்டு அடுத்துச் சென்றால் சண்டிகேசுவரர் சன்னிதி. அவருக்குக் காது கேட்காது என்பதால் விரல் சொடுக்கி அல்லது இரு கைகளைத் தட்டிச் சத்தமெழுப்பிய பிறகுதான் வணங்க வேண்டும். யார் எப்போது உருவாக்கிய கதை எனத் தெரியவில்லை. அது உண்மையா இல்லையா என்று கேட்கத் தோன்றியதில்லை. இப்போது என்றாலும் கதையின் உண்மைத்தன்மை என்ன ஏது என ஆராய்ந்திருக்கலாம். கேள்வி கேட்பதற்குப் பழக்கப்படுத்தப்படாத காலம் ஒன்று எல்லோருக்கும் இருந்திருக்கும். இன்னமும் கூட சிலருக்கு அது தொடரும். அதைத் தாண்டி வரும்போது புதிய தரிசனங்களைப் பெற முடியும்.

அதற்கடுத்து துர்கையம்மன். துர்கையம்மன் சன்னதி முன்பு ஒரு வட்டல்க்கல் இருக்கும். அதன்மேல் சிறிய கல் ஒன்று இருக்கும். நாம் பக்தோடு மனதில் ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கல்லின்மீது கையை அழுத்தி வைத்தால் அந்தக் கல் தானாகச் சுற்றும் என்று சொல்வார்கள். நெற்றி நிறைய திருநீறு குங்குமத்துடன் மனதில் வேண்டுதலை எண்ணிக் கொண்டு கல்லின் மீது கை வைத்து முயற்சித்திருக்கிறோம். ஒருமுறைகூட கல் சுற்றியதாக நினைவில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறை நாங்கள் விடுவதாக இல்லை. கல் என்றாவது ஒருநாள் சுற்றும். வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடுதான் வீடு திரும்பியிருக்கிறோம். பெரியவர்களின் வேண்டுதல் எப்படியோ அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

பிரகாரத்தைச் சுற்றி முடித்தபின், மனோன்மனியம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலுக்கு உள்பக்கம் உள்ள கோயில் அது. அம்மன் எப்போதும் சிவப்புப் பட்டாடையில் கருத்த சிலையழகுடன் சாந்தமாகக் இருக்கும். அம்மன் கோயிலுக்கு அடுத்து, பெருமாள் கோயில். எனக்குத் தெரிந்து சிவன் கோயிலுக்குள் ஒரு பெருமாள் கோயில் என்பதை வேறேங்கும் பார்த்ததில்லை. பெருமாள் எப்போதும் முழு அலங்காரத்துடன் அழகாக இருப்பார். அலங்காரத்தை விடவும், பெருமாளை விடவும் அய்யர் தருகிற அந்தத் தீர்த்த தண்ணீர்மீது தான் அலாதியான பக்தி. உள்ளங்கையில் பித்தளை ஸ்பூன் பட்டுவிடாமல் தருகிற தீர்த்தத் தண்ணீரை வாயில் ஊற்றிக் கொண்டு, மிச்ச ஈரத்தை உச்சந்தலையில் தடவிக் கொண்டபின், அவர் தரும் துளசியில் சிலதையும் வாயிலும் மிச்சமிருக்கும் இலையுடன் கூடிய காம்பைத் தலையிலும் செருகிக் கொண்டபின், பெருமாளில் கிரீடத்தைத் தலையில் வைத்துவிடும் அந்த நொடிக் கணம் மட்டும் பெருமாளைப் போல நினைத்துக் கொள்வேன்.

சிவன் கோயிலில் இதெல்லாம் விட சிறப்பான சம்பவம் சிவலிங்கத்தைப் பார்த்தபடி இருக்கும் நந்தி சிலை தான்.

நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதலைச் சொன்னால் இரவில் உலக உயிர்களுக்குப் படியளந்து விட்டு வரும் சிவன் பார்வதியிடம் நந்தி போய் சொல்லிவிடுவார் என்று எப்போதோ ஒருமுறை சொல்லியிருந்தார்கள். கூடவே, நமது வேண்டுதலைச் சொல்லும்போது நந்தியின் காது மடலில் கை படாமல் சொல்ல வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். அப்போது நான் கொஞ்சம் குட்டியாக இருந்ததால் நந்தியின் காது எட்டாது. எனது மடித்து அமர்ந்திருக்கும் நந்தியின் முன்னங்கால் மீதேறி நந்தியின் காதில் என்னுடைய பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டு, ஈஸ்வரனிடம் சொல்லிடு என்று சொல்வேன். அந்த வயதில் என்னுடைய பிரார்த்தனைகள் மிக மிகச் சிறியவை. என்ன பிரார்த்தனைகள் என்பது நானும் நந்தியும் மட்டுமே அறிந்த ரகசியம். சிவனுக்கும் பார்வதிக்கும் கூட தெரியுமா எனத் தெரியவில்லை. என்றாவது ஒருநாள் அவர்களும் நீங்களும் அறிந்து கொள்ளக் கூடும்.

இப்படியாக எங்களின் வெள்ளிக்கிழமை மாலைப்பொழுது சிவாலயத்தில் சென்று நீளும். கோயிலில் இருந்து வெளியே வந்ததும் அவசர அவசரமாக சித்தி சீரியல் பார்க்கக் கிளம்புவோம் என்பது தனிக்கதை.

வெள்ளிக்கிழமை மட்டும் தான் வழிபாடு, பக்தி, பிரார்த்தனை எல்லாம். விடுமுறை நாட்களில் நாங்கள் விளையாடும் இடமும் அந்தக் கோயில் தான்.

அதிலும் சிவனுடைய பிரகாரத்திலிருந்து மனோன்மணி அம்மன் சன்னதி செல்லும் வழியில் ஒரு பெரிய நாவல்மரம் இருக்கும். அந்த நாவல் மரத்தில் பழம் உலுக்கிப் பொறுக்கித் தின்பது பேரனுபவம். பகல் நேரங்களில் கோயிலின் பெரிய முன்கதவைப் பூட்டிவிடுவார்கள். பெரிய கதவுக்குள் இருக்கும் சதுர வடிவிலான குட்டிக் கதவின் வழியே அய்யருக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்து மரத்தில் பழம் உலுக்கிக் கொண்டு வருவோம்.

ஒருமுறை நாங்கள் அப்படி பழம் உலுக்கிக் கொண்டிருந்தபோது அய்யர் வந்துவிட்டார். பசங்களா இந்த நாவல் மரத்தடியில் ஐந்து தலை நாகம் ஒன்னு இருக்கு. அது கடிச்சிட்டா நான் பொறுப்பில்ல என்று சொன்னபடி எங்களை விரட்டிவிட்டார். உண்மையாகவே அங்கே ஒரு ஐந்து தலை நாகம் மரத்தைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருந்தேன்.
ஞாபகங்களை நாவல் பழமென நினைவுக் கிடங்கிலிருந்து ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே இருந்தது.

சிறு வயதில் பார்த்த பரந்து விரிந்த அந்த நாவல் மரம் இப்போது இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் இடிவிழுந்து மரம் இரண்டாகப் பிளந்து கொண்டது என ஜீவா சொன்னாள். அதே இடத்தில் சதுரமான சிமெண்ட் திண்ணையின் நடுவில் சிறுவனைப் போல ஒரு நாவல் மரம் செழித்து நின்றிருந்தது. அதன் நிழலில் ஒரு சிவலிங்கம். மரத்தில் கோயிலின் தலவிருட்சம் என எழுதி வைத்திருந்தார்கள்.

அந்த மரத்தை மட்டும் ஒரேயொரு புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

சிறு வயதில் பழம் உலுக்கிப் பாவடையில் பொறுக்கி எடுத்துக் கொண்டோடும் சிறுமி ஒருத்தி எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

**மனுஷி**

1 கருத்து:

  1. அருமையான பதிவு.....

    பணம் சம்பாதிக்க உழைக்கும் இந்த வாழ்க்கையில் சில நொடிகள் மனதில் பழைய நினைவுகள் தோன்றும்... அது சிறுவயது காலம் தான்... சிறுவனாகவே இருக்கலாம் என்று கூட தோன்றும்

    பதிலளிநீக்கு