கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை சென்று வந்தபிறகு சூடான தேநீர் அருந்திவிட்டு மீண்டும்
நாகர்கோவிலுக்குப் பயணமானேன்.
நாகர்கோவில் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்குப் பேருந்து முன்பதிவு செய்திருந்தேன். பத்து மணிக்குப் பேருந்து. பேருந்து அல்லது ரயில் வண்டி முன்பதிவு செய்தால் கடைசி நிமிடத்திற்கும் கடைசி நொடியில் மூச்சிறைக்க ஓடி வந்து ஏறுவது தான் வழக்கம்.
இந்தமுறை வழக்கத்திற்கு மாறாக 8.30க்கு ட்ராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். கார்காலத்தின் பெருமழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தபோதும் கூட நனைந்தபடி வந்து சேர்ந்தேன். ஒன்றரை மணி நேரம் முன்பாக வந்து காத்திருந்தது எனக்கே ஆச்சரியம். ஒருமுறைக்கு இரண்டு முறை இந்த இடத்திற்குத்தானே பேருந்து வரும் எனக் கேட்டுக் கொண்டேன். கொஞ்சம் புத்தகமும் கொஞ்சம் துணிகளும் இருந்த பையை சற்றே இறக்கி வைத்தேன். கொஞ்சம் பாரம்தான் எனினும் மதியத்திலிருந்து தூக்கிக் கொண்டே அலைந்ததில் முதுகு வலித்தது.
பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் கூட இவ்வளவு சுமையைச் சுமந்ததில்லை. அரசு பள்ளிக்கூடம் என்பதால் அவ்வளவு புத்தகச் சுமை இருக்கவில்லை. ஒரு கணக்கு நோட்டு, ஆங்கிலக் கையெழுத்துக்கென நான்கு வரி நோட்டு, ஒரு கோடு போட்ட நோட்டு, ஒரு ரஃப் நோட்டு, தமிழ்ப் புத்தகம் முதல் சமூக அறிவியல் புத்தகம் என ஐந்து புத்தகங்கள், ஒரு பென்சில் பாக்ஸ்… - இது என்ன பெரிய சுமையாக இருக்கப் போகிறது?
ஒன்றரை மணி நேரம் முன்னதாகப் பேருந்துக்கு வந்து காத்திருக்கிறேன் எனும் அரிய வரலாற்று நிகழ்வை உடனடியாக அகிலாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என மனம் உந்தித் தள்ளியது.
அந்தப் பேருந்து அலுவலகத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பக்கத்தில் சுவரில் இருந்த சுவிட் போர்டில் மொபைலைச் சார்ஜ் செய்து கொண்டே தோழிக்கு மெசேஜ் செய்தேன். அடடே, என்னவொரு ஆச்சரியம் மழை வரப் போகுது என்று பதில் அனுப்பினாள். ஏற்கனவே மழையில் தொப்பலாக நனைந்திருக்கிறேன் என்றதும், மழைக்கே ஆச்சரியம் தாங்கவில்லை அதனால் தான் முன்னாடியே வந்து உன்னை நனைத்திருக்கிறது என்றாள்.
யூடியூபில் மழைப் பாடல்கள் கேட்கலாம் என ப்ளே லிஸ்டை எடுத்தேன். ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடல். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மழை இன்னும் கொஞ்சமே ஈரமானது.
அடுத்து, விண்ணோடு மேளச் சத்தம் என்ன… மழை வரும் அறிகுறி,… அடடா மழை டா அடை மழை டா… சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு… தூவானம் தூவத் தூவ…. என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.
வெளியில் இரவின் மழை. காதுகளில் இசை மழை. ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது. பஸ் வரவில்லை. இசையில் லயித்துப் பஸ் விட்டுட்டேனா எனக் கொஞ்சம் பதற்றத்துடன் சார் பஸ் எப்ப வரும் என்றேன். வந்துட்டு இருக்கும்மா… பதினைந்து நிமிடத்தில் வந்துடும். வந்ததும் நானே சொல்றேன். மலையாள வாடை வீசும் தமிழில் பதற்றமே இல்லாமல் சொன்னார். ட்ராவல்ஸ் புக் பண்ணா இதெல்லாம் சகஜமப்பா என்பது போல இருந்தது.
மீண்டும் பாடலுக்குள் மூழ்கிப் போனேன்.
10.30க்கு அவரே அழைத்துப் பஸ் வந்துவிட்டதைச் சொன்னார். எப்போதும் நான் தான் பஸ் பிடிக்க லேட்டா வருவேன். இன்னைக்குப் பஸ் லேட்டா வருது என்று நினைத்தபடியே டிக்கெட்டைக் காட்டி என்னுடைய சீட் நம்பரைச் செக் செய்தபின் பேருந்துக்குள் ஏறினேன். படுக்கை வசதி கொண்ட பேருந்து. அப்பர் பர்த் என்பதால் என்னுடைய பையை மேலே வைத்தபின், ஏறிப் படுத்துக் கொண்டேன்.
என்னைப் போலவே பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஏறிக் கொண்டிருந்தார்கள். பத்துநிமிடத்தில் பேருந்து கிளம்பியது. ஹெட்போனில் பாடல் கேட்டபடி பெட்ஷீட் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன். வெளியில் இரவின் அடைமழை தூரலாக மாறியிருந்தது.
பாடலுக்குள் மூழ்கி இருந்ததால் கவனம் வேடிக்கை பார்ப்பதில் இல்லை. இரயில் என்றால் ஜன்னல் வழியாக இரவை வேடிக்கை பார்த்தபடி அல்லது எதிரில் இருப்பவர்களிடம் உரையாடியபடிப் பயணிக்கலாம். ட்ராவல்ஸில் அப்படி வாய்க்காது.
பேருந்து கிளம்பி ஆம்னி பஸ் ஸ்டாண்டைத் தாண்டவில்லை. நின்றுவிட்டது. ஏதோ டயர் பஞ்சர் போல. தூரலில் நனைந்தபடி டயரை மாற்றிக் கொண்டிருந்தார்கள். காலையில் இத்தனை மணிக்குள் போய்ச் சேர வேண்டும் என்கிற அவசரம், நெருக்கடி எதுவும் இல்லாததால் பேருந்து இன்னமும் கிளம்பாமல் இருந்தது எனக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால், மற்ற பயணிகள் ஒருவர் பின் ஒருவராகப் போய் அவரவர் அவசரத்தைச் சொல்லிச் சத்தம் போட்டார்கள். சிலர், டிக்கெட் காசைக் கொடுங்க நாங்க வேற பஸ்ல போறோம். பஸ் வந்ததே லேட், இதுல 11 மணிக்கு மேல ஆகியும் பஸ் எடுக்கல. நாங்க எப்போ போய்ச் சேருவது எனக் கோபப்பட்டார்கள். அது ஞாயிற்றுக் கிழமையின் இரவு என்பதால் எல்லோருக்குமே மறுநாள் காலை அலுவலகம் செல்ல வேண்டிய அவசரம். குடும்பத்துடன் வந்தவர்களுக்குக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய அவசரம். ஒவ்வொருவரும் சொன்ன காரணம் அதுதான்.
நான் அமைதியாகப் படுத்திருந்தேன். அந்த ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருந்த கடைகள் பெரும்பாலும் மூடியிருந்தன. ஒரேயொரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. சொல்லப்போனால் மூடுவதற்கான நேரம் தான். பஸ்ஸிலிருந்து இறங்கிப் போய் லெமன் டீ சொல்லிக் குடித்தேன். மழையிரவின் குளிருக்கு இதமாக இருந்தது. தேநீருக்கான காசைக் கொடுத்துவிட்டு நிதானமாக நடந்து வந்தேன். இன்னமும் டயர் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
11.50 ஆனபோது ஒருவழியாகப் பேருந்து கிளம்பியது. பேருந்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, நீல நிற விளக்கொளியில் குறைந்த வெளிச்சம் பேருந்துக்குள் நிறைந்திருந்தது. எனது சீட்டின் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு என்னை மறைத்துக் கொண்டேன். பேருந்து கிளம்பியதும் எல்லோரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். எனக்கு உறக்கம் வரவில்லை. யூடியூபில் அடுத்தப் பாடல் அடுத்தப் பாடல் எனப் போய்க் கொண்டிருந்தது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பேருந்து நகரவில்லை. டீ குடிக்க நிறுத்தியிருப்பார்கள் என நினைத்தேன். நான் படுத்திருந்த சீட்டின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தால் அங்கே ஹோட்டல் இருப்பதற்கான தடயமே இல்லை. கடைகள் / கடை இருப்பதற்கான தடயமும் இல்லை. கும்மிருட்டு. பேருந்தின் படிக்கட்டுக்குச் சென்றேன். பஸ் ப்ரேக் டவுன் ஆகியிருந்தது.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் பேருந்துக்குள் சலசலப்பு. என்ன ட்ராவல்ஸ் நடத்தறாங்க. நாங்க நாளைக்கு வேலைக்குப் போறதா வேண்டாமா, பஸ்ல பிரச்சினைனா வேற பஸ்ல ஏத்தி விடனும் இல்ல டிக்கெட் காசைத் திருப்பித் தரனும். நாங்கல்லாம் மனுசங்களா என்ன நினைச்சுட்டு இருக்காங்க…
பேருந்தில் இருந்தவர்களின் எந்தச் சத்தமும் பேருந்து பழுது பார்ப்பவர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவர்கள் வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பேருந்து நகரத் தொடங்கியதும் சத்தமிட்டவர்கள் சீட்டில் அமைதியாக உறங்கினார்கள். இரவின் குறைந்த ஒளியில் நகரும் சாலையோர மரங்களையும் கருத்த வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மணி சரியாக மூன்று மணியைத் தொடும் நேரம். என்னையும் மீறிக் கண்களை மூடி உறங்க முயற்சித்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அதே சலசலப்பு. மீண்டும் பேருந்து பிரேக் டவுன் ஆகி நின்று விட்டிருந்தது. பேருந்தில் இருந்தவர்கள் பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தார்கள். கிளம்பும்போது கிளம்பட்டும் என நான் உறக்கத்திற்குள் சென்று விட்டேன். ஆழ்ந்த உறக்கம்.
விடியலின் வெளிச்சம் பேருந்து ஜன்னல் வழியாக முகத்தில் பட்டுத் தெறிக்க உறக்கம் கலைந்து எழுந்தேன். ஏதோ ஒரு பேருந்து நிலையம். அதிலும் ஆம்னி பஸ் நிற்கும் பேருந்து நிலையம். நேரம் 6.30 ஆகி இருந்தது. தேநீருக்காக நிறுத்தியிருப்பார்கள் என நினைத்தேன். ஏனெனில் பேருந்தில் யாரையும் காணவில்லை. நான் மட்டுமே இருந்தேன். எழுந்து கொள்ள மனமில்லாமல் கண்களை மூடிப் படுத்திருந்தேன். பஸ் அங்கேயே இருந்தது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சரியாக 7.30 மணிக்கு டிரைவர் உள்ளே வந்தார். பஸ் இனிமேல் போகாது வேற பஸ் அரேஞ்ச் பண்றோம் அந்த பஸ்ல போகலாம் என்றார். கடைசி சீட்டில் இருந்த ஒருவர் வேகவேகமாக பையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றார். நானும் என்னுடைய ஷூவைத் தேடி எடுத்து மாட்டிக் கொண்டு, பையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றேன்.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டு. இரண்டு போலிஸ்காரர்களைச் சுற்றி என்னோடு பஸ்ஸில் வந்தவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். பஸ் டிரைவர் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு ஆம்னி பஸ் டிரைவர் சார் எங்க முதலாளி கிட்ட பேசிட்டேன் பஸ் ரெடி அமவுண்ட் கையில் கொடுக்கச் சொல்லுங்க நான் பஸ் எடுக்கிறேன். வார்த்தை மாறாமல் போலிஸிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த டிரைவர் இன்னமும் போனில் யாரிடமோ சூழலை எடுத்துச் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தார். பேருந்தில் வந்தவர்கள் சார் குழந்தைகளை எல்லாம் வச்சுக்கிட்டு இன்னும் எவ்ளோ நேரம் சார் நிக்கறது காலையில் நாங்க ரெஸ்ட் ரூம் போகக் கூட வழியில்லாமல் இருக்கோம் பேசி இதை முடிச்சு உடுங்க சார். போலிஸிடம் சொன்னார்கள். போலிஸ்காரர் புதிய ஆம்னி பஸ் டிரைவரிடம், போனில் பேசிக் கொண்டிருந்த டிரைவரிடம் பத்து நிமிடம் பேசினார். பிறகு என்ன முடிவு செய்தார்களோ தெரியாது. எல்லோரும் இந்த பஸ்ல ஏறிக்கலாம் என்று சொன்னார்.
அவரவருக்கான சீட்டை ஒதுக்கிக் கொடுத்தார்கள். எனக்குப் பேருந்து பின்புறமிருந்த சீட் கிடைத்தது.
பேருந்து கிளம்பியது. இவனாவது ஒழுங்கா கொண்டு போய்ச் சேர்ப்பானா தெரியலியே என்று புலம்பிக் கொண்டிருந்தார் முன்சீட்டுக்காரர்.
ஒன்றரை மணி நேர நிற்காத நெடும்பயணத்திற்குப் பிறகு ஒரு ஹோட்டலில் நிறுத்தினார்கள். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு முகம் கழுவி ஃப்ரஷ்ஷாகி, அந்த ஹோட்டலிலேயே எல்லோரும் காலை உணவு சாப்பிட்டார்கள். எனக்கு ப்ளாக் டீ போதுமானதாக இருந்தது.
பேருந்து உளுந்தூர்ப்பேட்டை தாண்டிப் போய்க் கொண்டிருந்தபோது பேருந்தின் செக்கர் வந்து கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் வந்துடும். விழுப்புரம் ஹைவேஸ்ல இறங்கி பாண்டிச்சேரி பஸ் பிடிச்சு போய்டுங்க இந்தப் பஸ் சென்னை போகுது என்றார் என்னிடம். அப்போது மாலை 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
மொபைலில் என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா…… இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக