செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வாடகை பைக்குகள் : நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு



வாடகை பைக்குகள் : நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
-- மனுஷி

வார இறுதி நாட்களில் தமிழ்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் பாண்டிச்சேரியை மையமிடுவர். அதிலும் குறிப்பாக, ஆரோவில்லில் சனி ஞாயிறுகளின் இளைஞர் பட்டாளம் அலை மோதும்.
சென்னையைப் போல அல்ல பாண்டிச்சேரி. இந்த ஊரைப் பொறுத்தவரை ஒரே நாளில் கூட எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விடலாம். அவ்வளவு சிறிய மாநிலம். கையில் ஒரேயொரு பைக் இருந்தால் போதும். பாண்டிச்சேரியில் ஜாலி சுற்றுலா வசப்படும்.
வீக் எண்ட் என்ஜாய் பண்ணும் கனவுடன் வருபவர்களுக்கென இங்கே பாண்டிச்சேரியில் வாடகை பைக்குகள் கிடைக்கின்றன. பாண்டிச்சேரியில் ஆறு வருடமாக இருக்கிறேன். ஆரோவில்லில் இரண்டு வருடம். மொத்தம் எட்டு வருடத்திற்கும் மேலாக ஆகிவிட்டது புதுவைக்கு மேல்படிப்புக்காக வந்து. இத்தனை வருடத்தில் மிகச் சமீபத்தில்தான் இந்த வாடகை பைக்குகள் பற்றிய விவரம் தெரிந்தது. எனக்குத் தெரிந்து இங்கே வந்து தங்கிச் சுற்றிப் பார்க்கிற எல்லோருமே பைக் வாடகை விடும் கடையைத் தேடுவதைக் கவனித்திருக்கிறேன். ஒரு நாளைக்கான பைக் வாடகை எவ்வளவு என்றெல்லாம் விசாரித்தது இல்லை. அதற்கான தேவை ஏற்படவில்லை. நான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் அக்காவும், அதற்குப் பத்தடி தூரத்தில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் அண்ணா ஒருவரும் பைக் வாடகை விடுகின்றனர். வெள்ளிக்கிழமை மாலையிலும், சனிக்கிழமை காலையிலும் அங்கே கூட்டம் அலைமோதும். (இவ்விரண்டு இடங்கள் தவிர மிஸன் தெருவில் இரண்டு மூன்று பைக் வாடகைக் கடைகள் இருப்பதாக அறிந்தேன்).
பெட்டிக்கடையில் தான் பால், சர்க்கரை எல்லாம் வாங்குவது வழக்கம். அப்படி மிகச் சமீபத்தில் (பத்து நாட்களுக்கு முன்பு) கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி மற்றும் பைக்குகளில் இருந்து ஒரு பைப் வழியாக பாட்டிலில் பெட்ரோலை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் பைக் கேட்டு வந்த இரண்டு நபர்களிடம் புரூஃப் வாங்கிக் கொண்டு பைக் கொடுக்கும்போது கடையிலிருந்து 50 ரூபாய்க்குப் பெட்ரோலை வாங்கி ஊத்திக் கொண்டு கிளப்பச் சொன்னார்கள்.  மறக்காமல் பெட்ரோல் போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பினார் கடை அக்கா. அவர்களும் கொடுத்த பெட்ரோலை வாங்கி பைக்கில் ஊற்றிக் கொண்டு கிளம்பினார்கள். கண்ணெதிரே இது நடந்து கொண்டிருந்தது. இது ஒரு தனி பிஸினஸ் ட்ரிக் போல என்று நினைத்தாலும், ஒருவகையான ஏமாற்று வேலை என்றே தோன்றியது.
சொந்தமாக ஸ்கூட்டி இருப்பதால் இவ்வளவு நாள் இதைப் பற்றிப் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
சென்ற சனிக்கிழமை இரவு கடைக்குப் போய் திரும்பி வரும் வழியில்  ஸ்கூட்டி நின்றுவிட தள்ளிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நிச்சயமாக மெக்கானிக் ஷாப் திறந்திருக்காது. ஞாயிற்றுக்கிழமை மாலை கவிதை நூல் விமர்சனக் கூட்டம் இருந்தது. மேலும், மார்க்கெட் செல்வதற்கு நிச்சயம் வண்டி இல்லாமல் நடக்காது என்பதால் ஒரேயொரு நாள் வாடகை வண்டி வாங்கிப் பார்க்கலாம் என்று பெட்டிக்கடை அக்காவிடம் போனேன். ஸ்கூட்டி எதுவும் இருக்கவில்லை. வெள்ளிக்கிழமை மாலையே எடுத்துப் போய்விட்டார்கள் என்றார். இருந்தது ஒரேயொரு டிவிஎஸ் 50 மட்டும் தான். வண்டி ஓட்டப் பழகிய நாளில் இருந்து இதுவரை டிவிஎஸ் 50 மட்டும் ஓட்டிப் பார்த்ததே இல்லை. ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதும் இல்லை. வேறு வழியில்லை. அதுமட்டுமில்லை. பழகித்தான் பார்ப்போமோ என்ற எண்ணம். (இந்த விஷயம் தெரியாமலே போய்விட்டதே என்று வரலாறு நாளைக்குச் சொல்லிவிடக் கூடாது). எப்படி ஸ்டார்ட் செய்வது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். சைக்கிள் அல்லது ஸ்கூட்டி ஓட்டுவது போலத்தான் இதுவும்.
டிவிஎஸ் 50 தரும்போதே ஒரு பாட்டில் கொண்டு வந்து இருக்கிற பெட்ரோல் எல்லாவற்றையும் ஒரு பம்ப் வழியாக எடுத்துக் கொண்டு, ஸ்டார்ட் செய்யற அளவுக்கு பெட்ரோலை மீண்டும் ஊற்றினார். சாவி கொடுக்கும்போதே, பக்கத்தில் இருக்கிற பெட்ரோல் பங்க்கில் ஆயில் கலந்து பெட்ரோல் போட்டுக்கொள்ளச் சொன்னார். ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் தேவை எதைப் பற்றியும் யோசிக்க விடவில்லை. மதிய சமையலுக்குப் பிறகு கொஞ்சம் கவிதை நூலை மீண்டும் ஒருமுறை வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமே என்பது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மாலை 6 மணிக்கு நிகழ்வு. 5.30க்குக் கிளம்பினால் போதும் என மனக்கணக்கு போட்டுக் கொண்டு நிதானமாகக் கிளம்பி வெளியில் வந்து டிவிஎஸ் 50ஐ உதைத்துக் கிளப்பினால் கும்பகர்ணன் போல அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. உதைத்து உதைத்துச் சோர்ந்து போய், அந்தக் கடைக்கே தள்ளிக் கொண்டு போனேன். இதை விட்டுவிட்டு வேறு வண்டி கிடைத்தால் நல்லா இருக்கும். இனிமேல் பேருந்தில் போய்ச் சேருவது என்றால் ரொம்பவும் தாமதாமகும் என்பதால் வேறு வண்டி கேட்டால், இதே நல்லா ஓடுமே, நாங்களே இதுல தான் மார்கெட்லாம் போய்ட்டு வரோம், அதெப்படி உனக்கு மட்டும் ஸ்டார்ட் ஆகல என்று அந்த அக்காவின் கணவர் இரண்டு மிதி மிதித்தார். கிளம்பிவிட்டது. அப்போதே மணி 6ஐத் தொட்டுவிட்டது. வண்டியை ஓட்டிக் கொண்டு போனால் பத்து நிமிடத்தில் மறுபடியும் வண்டி நின்று விட்டது. எவ்வளவு உதைத்தும் கிளம்புவேனா என்றது? வண்டியை ஏதாவது ஒரு கடை முன்பு நிறுத்திப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஆட்டோவில் செல்லலாம் என்று பார்த்தால் ஞாயிற்றுக்கிழமை காரணமாக எல்லா கடையும் மூடியிருந்தது. யார் செய்த புண்ணியமோ பத்து நிமிட வண்டி தள்ளலுக்குப் பிறகு ஒரு கடை திறந்திருப்பதைப் பார்த்து, அங்கு விஷயத்தைச் சொல்லி வண்டியை நிறுத்திவிட்டு ஆட்டோ பிடித்துப் போய்ச் சேர மணி 6.45 ஆகி இருந்தது. ஏற்கனவே நிகழ்ச்சியைத் தொடங்கி இருந்தார்கள். சின்னதாய் மன்னிப்புக் கேட்டபடி போய் அமர்ந்து கொண்டேன்.
பேசி முடிக்க மணி 9.30ஐத் தாண்டி இருந்தது. நல்ல நாளிலேயே 8.30க்குக் கடை சாத்துகிறவர்கள் 9.30க்கு நிச்சயமாகத் திறந்து வைத்திருக்க மாட்டார்கள். பழையபடி ஆட்டோ பிடித்து அங்கிருந்து பைக் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடியே கடை மூடியிருந்தது. கடைக்குப் பக்கத்தில் அனாதை போல அந்த வண்டி நிறுத்திய நிலையில் இருந்தது. ஆட்டோவில் வரும்போதே ஆயில் கலந்த பெட்ரோலை தண்ணீர் பாட்டிலில் வாங்கி வந்திருந்ததால், ஊற்றிக் கிளப்பினால், கிளம்புவேனா என்று எருமை மாடு கணக்காக நின்று கொண்டிருந்தது. வண்டி நிற்கும் இடத்திற்கும் வீட்டுக்கும் குறைந்தது மூன்று  கிலோ மீட்டர் தூரம். மணி வேறு பத்தைத் தாண்டி இருந்தது. நடராஜா சர்வீஸ் தான் என்று வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்து வீடு வந்து சேர்ந்தேன்.  
மறுநாள் அசதியில் நன்றாகத் தூங்கி எழுந்து காலை மற்றும் மதியம் இரண்டு வேலைக்கும் சேர்த்து ஒரே வேலையாகச் சாப்பிட்டு முடித்து வண்டியைக் கொண்டு போய் விடலாம் என உதைத்துக் கிளப்பினால் கிளம்பாமல் இப்போதும் அடம்பிடித்தது. மறுபடியும் தள்ளிக் கொண்டே போய் கடையில் நிறுத்தி நடந்த கதையைச் சொன்னால், அந்த அக்கா காச் மூச் என்று கத்த ஆரம்பித்து விட்டார். இந்த வண்டி ரொம்ப ராசியான வண்டி, நாங்க ஓட்டிட்டுப் போகும்போது நல்லா தானே போச்சு இப்ப எப்படி ஸ்டார்ட் ஆகாம போகும், ஆயில் நிறைய போட்டு பெட்ரோல் போடச் சொன்னேனே போட்டிங்களா, ஏங்க வந்து இந்த வண்டியப் பாருங்க, எம்மா தெரிஞ்ச பொண்ணுனு தானே இந்த வண்டியைக் கொடுத்தேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவருடைய கணவர் வந்து பழையபடி வண்டியில் இருக்கும் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். அவர்கள் கடைக்குள் வைத்திருந்த பெட்ரோலை பாட்டிலில் எடுத்து வந்து ஊற்றி, உதைத்து கிளப்பினார். இரண்டு உதையில் உர்ரென்று கிளம்பியது. என் கண்முன்னாலேயே கடையிலிருந்து கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டு போய் திரும்பி வந்தார். ஏதோ மாயவித்தை காட்டுவது போல இருந்தது. போகும் போதும் தள்ளிக் கொண்டு போய், வரும்போதும் தள்ளிக் கொண்டு வந்த நான் சொல்வது பொய் என்பது போல ஆகிப் போனது அங்கு. அந்த வண்டியில் பிரச்சினை இருக்கிறது என்பதை நிரூபிக்க அங்கு வழியே இல்லை. வண்டியில் இருந்து பெட்ரோல் எடுத்து உள்ளே பத்திரப்படுத்துவதைக் கேள்வி கேட்கவும் அங்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தேன்.
சரிக்கா, வாடகை எவ்வளவு ஆச்சு சொல்லுங்க என்றேன். நேற்றும் இன்னைக்கும் சேர்த்து 400 ரூபாய் என்றார். அடக் கொடுமையே… கொஞ்சம் முன்னாடி கிளம்பி பஸ் ல போய் இருந்தால் 5 ப்ளஸ் 5 என பத்து ரூபாயில் முடிந்திருக்கும். போகும்போது ஆட்டோவுக்கு 100, வரும்போது ஆட்டோவுக்கு 100, பெட்ரோல் ஒரு 50, இது இல்லாமல் ஓடாத வண்டிக்கு வாடகை 400…
எங்க போய் முட்டிக் கொள்வதென தெரியவில்லை.


செவ்வாய், 29 மார்ச், 2016

கங்கனா - குயின்

சாவித்ரி, சில்க் சுமிதா, ஸ்மிதா பாட்டில், நந்திதா தாஸ், இவர்கள் வரிசையில் எனக்கு மிகப் பிடித்த நடிகை கங்கணா ரணாவத்.
தாம் தூம் படத்தில் மனதில் ஒட்டாத கிராமத்து தாவணிப் பெண்ணாக அறிமுகம் ஆனவர் கங்கணா. பெரிதாக ஈர்க்கவில்லை அந்தப் படத்தில். (தமிழில் சரியாக அவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்).
ஆனால், காட்சிப்பிழைத் திரை இதழில் குயின் திரைப்படம் குறித்த கட்டுரை ஒன்றை வாசித்த பின் அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன். அதன்பிறகு தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் கங்கணாவின் இரட்டை வேடம் என்னை வியக்க வைத்தது. கணவனிடம் இருந்து பிரிந்த தனது சுயத்தோடு வாழ முற்படும் ஒரு பெண், விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் கல்லூரிப் பெண் என இரண்டு வேடங்கள். படத்தின் இறுதிக் காட்சி வரை அந்தக் கல்லூரிப் பெண் வேடத்தில் கங்கணாவின் சாயலை என்னால் அனுமானிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியான பாத்திர வார்ப்பு. உடல்மொழி. குயின் திரைப்படமெல்லாம் நான்கைந்து முறை பார்த்தும் சலிக்காத படம். கங்கணாவின் நடிப்புக்காக மட்டுமே தான் பார்த்தேன்.
எனது தோழி அடிக்கடி சொல்லிப் பார்த்த படம் ஃபேஷன். ஃபேஷன் உலகத்தில் ஒரு பெண் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது, ஃபேஷன் துறை எவ்வளவு கொடுமையானது பெண்களைப் பொறுத்தவரை என்பதை முகத்தில் அறைவது போல சொல்லும் படம் அது. அதிலும் கங்கணாவின் நடிப்பு என்னை அசர வைத்தது.
இதனோடு சேர்த்து, தமிழ் ஃஃபெமினா இதழின் நேர்காணல் ஒன்றில் அவரது நேர்காணல் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. உங்களது ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ”எனக்கு ரசிகர்கள் தேவையில்லை. பார்வையாளர்கள் போதும்” எனச் சொன்ன துணிச்சல் அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது.
நேற்று தற்செயலாக கங்கணா ரணாவத் நடித்த படங்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டிருந்தேன் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக. சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருப்பதை அறிந்தபோது what a co incident என்று தோன்றியது.
முத்தங்களும் வாழ்த்துகளும் கங்கணா.

புதன், 23 மார்ச், 2016

ஆண்ட்ராய்டுகளின் காலம் - மனுஷி



ஆண்ட்ராய்டுகளின் காலம்
எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் நூலின் வெளியீட்டு விழாவுக்குக் கிளம்ப வேண்டும். இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியிடும்போது இருந்த உற்சாகம், மகிழ்ச்சி எதுவுமே இல்லை. மனம் முழுக்க வெறுமை. எல்லாவற்றின்மீது நம்பிக்கையற்று, வாழ்தல் என்பது நாட்களைக் கடத்துதல் என்பது மட்டும் தானா என்பது போன்ற ஒரு உணர்வு.
வெளியீட்டு விழாவுக்குச் செல்வதா வேண்டாமா? போகாமல் இருந்தாலும் நிகழ்ச்சி நடக்கத்தானே போகிறது? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கை தவறி விழுந்தது ரசித்து ரசித்து வாங்கிய என் செல்போன். மிக நீண்ட யோசனைக்குப் பின், விழுந்த செல்போனைப் பற்றி எடுத்து வைத்துவிட்டு, புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு பார்வையாளரைப் போல கலந்து கொண்டுவிட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
கிளம்பி முடித்தபின், கிளம்பிவிட்டேன் என்ற தகவலைச் சொல்வதற்காக மொபைலை எடுத்து, ஸ்கீரினைத் தொட்டால் செத்துப் போன பிணம் போல உணர்ச்சியற்று இருந்தது. இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அது தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது. டெம்ப்பர் கிளாஸ் தான் உடைந்திருக்கிறது, அதை எடுத்துவிட்டால் டச் வேலை செய்யும் என அதை உரித்து எடுத்த பின்னும், வேலை செய்யவில்லை. அவ்வளவுதான். அவ்வளவே தான். புத்தக வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ், முகவரி, நண்பர்களின் தொடர்பு எண்கள் எல்லாமும் செல்பேசிக்குள். துரதிஷ்டவசமாக யாருடைய எண்ணும் நினைவில் இல்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை. மொபைல் இல்லாமலே பயணிக்கலாம் என்று முடிவு செய்து பேருந்தில் ஏறியபின், நிகழ்ச்சிக்கு வர அரை மணி நேரம் தாமதமாகும் என்கிற தகவலை எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று மனதுக்குள் ஓடியது.
பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் மொபைல் வாங்கி குத்துமதிப்பாக இரண்டு மூன்று முறை முயற்சி செய்து திநகரில் இருக்கும் நண்பரின் எண்ணைக் கண்டு பிடித்தேன். மொபைல் இல்லை என்ற செய்தியைச் சொல்லி, திநகரில் சந்தித்துவிட்டு, பிறகு நிகழ்ச்சிக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லி, எந்த இட்த்தில், எத்தனை மணிக்குக் காத்திருக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டேன். சொன்னதைப் போல 4 மணிக்கு திநகர் பேருந்து நிலையத்தை அடையமுடியவில்லை. சென்னை வாகன நெரிசலில் சிக்கி, கிண்டி போய்ச் சேரவே 4.45 ஆகி இருந்தது. எங்காவது ஒரு ரூபாய் காய்ன் போன் அல்லது போன் பூத் இருந்தால் தகவல் சொல்லிவிடலாம் என்று தேடினால் எங்குமே இல்லை காய்ன் போன். போன் பூத்தும் தான். சரி, திநகரில் போய் தேடிக் கொள்ளலாம் என்றால் அங்கும் அதே நிலைமைதான். என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு என்று மனதுக்குள் ஒரு குரல். சரசரவென நடந்து போகும் மக்களைப் பார்த்தால் எல்லோர் கையிலும் ஒரு ஆண்ட்ராய்டு போன். காய்ன் போனுக்கான வேலையே இல்லை. ஒரு கால் பண்ணனும் கொஞ்சம் போன் கொடுங்க என்று கேட்க தன்மானம் இடம் தரவில்லை. முகம் தெரியாத ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பதற்கென்று ஒரு தைரியமான மனம் வேண்டும் என்று புரிந்தது. எல்லோராலும் அப்படிக் கேட்டுவிட முடியாது.
ஆறு வருடங்களுக்கு முன்பு கையில் செல்போன் இல்லாமல் எத்தனையோ முறை சென்னைக்கு எந்தவிதப் பதற்றமும் பயமும் இல்லாமல் வநது போயிருக்கிறேன். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் நான்கைந்து காய்ன் போன்கள் சுவற்றைப் பற்றியபடித் தொங்கிக் கொண்டிருக்கும். அந்தச் சமயங்களில் ஒரு ரூபாய் நாணயத்தைப் பத்திரப்படுத்தவென குட்டி டப்பா ஒன்று எப்போதும் என் பையில் இருக்கும். காயின் போனிலேயே இருபது நிமிடம் பேசிய நாட்களெல்லாம் உண்டு. சத்தமில்லாமல் காணாமல் போயிருக்கின்றன காயின் போன்களும் எஸ்டிடி பூத்துகளும்.
செல்போன் இல்லாமல் இருக்கும் இந்த ஐந்து நாட்களில் மனம் அலையற்ற ஒரு கடலைப் போல அமைதியாக இருக்கிறது. முகநூலில் போடப்படுகிற நிலைத்தகவல் சண்டைகள், சர்ச்சைகள் எதுவும் காதுக்கும் கண்ணுக்கும் வந்து சேரவில்லை. ஆன்லைனில் இருக்க, ஆனால் பதில் சொல்ல மாட்டியா என்ற கேள்விகள் இல்லை. போன் பண்ணேன். எடுக்கல. ரொம்ப பெரிய ஆளா ஆகிட்ட அதனால் மதிக்க மாட்டேங்கற என்ற புகார்கள் இல்லை.
நானுண்டு. என் வேலையுண்டு. என் பறவைகள் உண்டு. என் தொட்டிச் செடிகள் உண்டு. கவிதைகளுண்டு என்று போகிறது வாழ்க்கை.
அவசரத்திற்கு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவும், என் குரல் கேட்கத் தவிக்கும் சில அன்பு மனங்களைத் தவிக்கவிடக் கூடாது என்பதால், சின்னதாக ஒரு செல்போனை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டால் போதும் என்றிருக்கிறது.
##ஆண்ட்ராய்டு போன்லாம் எதுக்கு சார்?

எழுதித் தீராத வார்த்தைகள்



எழுதித் தீராத வார்த்தைகள்


மூன்றாவது தொகுப்பு வரும் இந்த வேளையில், எனது முன்னுரை அவசியமா என்ற கேள்வி எழுகிறது. எனது கவிதைகள் மட்டுமே பேசினால் போதும் என்று தோன்றுகிறது. எனது கவிதைகளே எனது மொழி. எனது கவிதைகளே நான் நிகழ்த்துகின்ற உரையாடல். எனது கவிதைகளே நான் கடந்து வந்த பாதையின் சுவடுகள்.

அதைப் பற்றித் தனியாக என்ன சொல்ல?

உறக்கத்தையும் கவிதையையும் போல மாமருந்து ஏதுமில்லை.

எனது இருப்பு, எனது அடையாளம், இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் யாவும் என் கவிதைகளில் தான் இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். எனது கவிதைகள் கோட்பாடுகளில் இருந்து பிறப்பவை அல்ல. வாழ்க்கையிலிருந்தும் உணர்வுகளிலிருந்துமே ஜீவிக்கின்றன.

எழுதி எழுதித் தீராத வார்த்தைகளாக என் பின்னால் பயணிக்கின்றன கவிதைகள், எவ்வளவு எழுதினாலும் இன்னும் எழுதுவதற்கு ஏதொவொன்றை மிச்சம் வைத்தபடி.

வாழ்க்கை, ஒரு கவிதையைப் போல இருக்க வேண்டும் எனும் பேரவா எனக்கு. அப்படி இல்லாமல் இருக்கிறது இந்த வாழ்க்கை. ஆனால், கவிதையே வாழ்க்கையாக ஆகிப் போனதில் பெருமகிழ்ச்சியே.

என் கவிதைகளோடும் என்னோடும் பயணிக்கும் நண்பர்களுக்கும், எனது கவிதைகளைப் பதிப்பிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் எனது அன்பும் நன்றிகளும்.

--  மனுஷி