திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஒரு ரூபாய் காயின் போன்கள்

ஒரு ரூபாய் காயின் போட்டு பேசும் போனைப் பார்த்து வருடக் கணக்காகிறது.

மஞ்சள், நீலம், சிவப்பு என மூன்று வண்ணங்களில் அங்கங்கே சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும். குறிப்பாக பெட்டிக்கடைகளுக்கு அருகில். பேருந்து நிலையம் என்றால் எப்போதும் யாராவது யாருக்காவது பேசுவதற்காக அந்த ரிசீவரைக் காதில் வைத்தபடி நம்பரை அழுத்திக் கொண்டு அல்லது கீ கீ சப்தம் வரும்போது 'டொக்'கென்று இன்னொரு நாணயத்தைப் போட்டு பேச்சைத் தொடர்வதைப் பார்த்திருக்கிறேன். காயின் போன் பயன்படுத்துவோருக்குச் சில்லறை தரவெனவே தனியாகச் சில்லறைகளை வைத்திருப்பார்கள் சில கடைகளில்.

ஊருக்குச் சென்றால் பேருந்தை விட்டு இறங்கியதும் முதலில் கண்கள் தேடுவது காயின் போனைத்தான். அப்போதெல்லாம் பல மொபைல் நம்பர்கள் என் நினைவில் இருந்தன. இப்போது போல் சார்ஜ் தீர்ந்து மொபைல் செத்துப் போக, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைச் சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பு அப்போது இல்லை. ஆண்ட்ராய்டு காலம் போல் அது ஒரு காயின் போன் காலம்.

மொபைல் வாங்குவதற்கு முன்பு கடிதம் வழியாகத்தான் நண்பர்களிடன் உரையாடிக் கொண்டிருந்தேன். எம்.ஏ. சேரும் வரை இந்த நிலை தான். (கடித உரையாடல் போல சுகமாய் இருப்பதில்லை மொபைல் உரையாடல்). எம்.ஏ. சேரும்போது எங்கள் வகுப்பில் ஒரேயொரு பையன் மட்டும் மொபைல் வைத்திருந்தான். அதுவும் ரிலையன்ஸ் மொபைல். அதனுடைய ரிங்டோன் கேட்கும்போதெல்லாம் போன் வச்சுட்டு ரொம்ப தான் சீன் போடுறான் என்று மனசுக்குள் நினைத்ததுண்டு.

பத்து நண்பர்கள் இருந்தால் அதில் ஒருத்தர் அல்லது இரண்டு பேர் தான் மொபைல் வைத்திருப்பார்கள். அது கிட்டதட்ட பொது செல்போன் போலத்தான். யாரேனும் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் அந்த நம்பரைக் கொடுத்து விடுவோம்.

எங்கள் விடுதி வாசலில் கூட ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் போன் வைக்கப்பட்டது. மஞ்சள் நிறப் பெட்டி அது. வெளியிலிருந்து யாரும் அழைக்க முடியாது. இங்கிருந்து யாருக்கு வேண்டுமானாலும் நாணயத்தைப் போட்டுப் பேசிக் கொள்ளலாம். அந்தக் காயின் போன் பிஸியாகவே இருக்கும். கொஞ்ச நாளில் எல்லோர் கையிலும் போன் புழக்கம் வர ஆரம்பிக்கவே காயின் போனுக்கு வேலை இல்லாமல் போனது.

போன் வாங்குவதற்கு முன்பு மாலைப் பொழுதில் தோழிகளுக்கும் சில ஆண் நண்பர்களுக்கும் போன் செய்வதுண்டு. ஆனால் ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு மட்டுமே அழைப்பேன். கையில் சில்லறைகளை வைத்துக் கொண்டு செகண்ட்ஸைக் கண்கள் மேய, கொண்டு வந்த சில்லறைக் காசுகளுக்குள் பேசி முடித்து விட வேண்டும் என்கிற சிறு பதற்றத்துடன் பேசியிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு ரூபாயிலும் அதிகபட்சம் 10 ரூபாய் வரையிலும் பேசியிருப்பதாக எனக்கு நினைவு.

ஒருமுறை நான் காயின் போனில் பேசிவிட்டுச் சென்ற பிறகு, அருகிலிருந்த யாரோ ஒரு பையன் அதே எண்ணுக்கு ரீடயல் போட்டு எனது நண்பன் எனப் பேசி, அது ஒரு சில மாதங்கள் வரை எனக்குத் தெரியாமலேயே நட்பாகத் தொடர்ந்து, பின் காதலாக மலர்ந்தது தனிக்கதை.

ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு கிடைத்த பரிசுத் தொகையில் எனக்கே எனக்காக இரண்டு பொருட்கள் வாங்கினேன். ஒன்று சைக்கிள். இன்னொன்று மொபைல். ஆயிரம் ரூபாயில் நோக்கியா 1100 கருப்பு வெள்ளை மொபைல். அதுவும் தோழி பயன்படுத்திய மொபைல். செல் வாங்கியதும் சிம் கார்டு போட்டால் தான் பேச முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட அப்போது இல்லை. அந்த அறியாமை நிறைந்த நாட்கள் கூட அழகானவை தான்.

நாட்கள் உருண்டோட உருண்டோட மொபைல்கள் மாறிக் கொண்டேயிருந்தன. நிறைய அனுபவங்கள். கண்ணுக்குத் தெரியாமல் சிலவும் தெரிந்து சிலவும் மாறியிருந்தன. சில காணாமல் போயிருந்தன. சில இருந்த தடம் தெரியாமல் மறைந்துவிட்டிருந்தன. அப்படித்தான் கண்ணைவிட்டு மறைந்து போயிருந்தது ஒற்றை நாணய போன்.

நேற்று புதுவையில் செஞ்சி சாலை அருகில் ஒரு தேநீர்க் கடை பக்கத்தில் இந்த காயின் போனைப் பார்த்ததும் சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஒரு ஒற்றை நொடியில் எட்டு வருடங்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டது மனம். இப்போது பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன் தராத மகிழ்ச்சியை காயின் போன் தந்தது.
-- மனுஷி

10 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.... முந்தை அனுபவங்கள் என்றென்றும் ஆனந்தமே....

    பதிலளிநீக்கு
  2. மொபைல். செல் வாங்கியதும் சிம் கார்டு போட்டால் தான் பேச முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட அப்போது இல்லை. அந்த அறியாமை நிறைந்த நாட்கள் கூட அழகானவை தான். /// நானும் கூட இப்படி வெகுளியாய் இருந்திருக்கிறேன் பாரத்தி. எனக்குத் துணையா ஒருத்தி இருக்கேன்றதுல மகிழ்ச்சி. முன்னயெல்லாம் என் ப்ரண்ட்ஸ் நம்பர் மெமரில இருக்கும் காயின் போன்கள்ல பேசிய காலத்துல. இப்ப எது ஒண்ணுக்கும் போனத்தான் பாக்க வேண்டியிருக்குங்கறது ஒரு சின்ன வருத்தம். குட் ரைட்டப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் வாழ்விலிருந்து விலகிப் போனவற்றைப் பற்றி எழுதி எழுதி ஆற்றிக் கொள்ளலாம் பாலா சார்

      நீக்கு
    2. நம் வாழ்விலிருந்து விலகிப் போனவற்றைப் பற்றி எழுதி எழுதி ஆற்றிக் கொள்ளலாம் பாலா சார்

      நீக்கு