உலக சிறுகதை
வெறும் நுரை
(டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர். பத்திரிகையாளராகவும், அயல் உறவுத்துறை அதிகாரியாகவும் செனட்டராகவும் பணியாற்றியவர். நிறைய கட்டுரைகளும், குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் எழுதியவர். 'வெறும் நுரை மட்டும்' என்ற இந்த கதையாலேயே கொலம்பியா முழுக்க பிரபலமடைந்தவர். லத்தீன் அமெரிக்க சிறுகதைத் தொகுப்புகளில் அடிக்கடி இடம்பெறும் கதை இது. Patmenees என்பவரால் தொகுக்கப்பட்ட 'Contemporary Latin American, Short Stories (1974)’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு தேர்ந்த தொழிலாளி. தன் தொழில் மேல் தான் கொண்ட மரியாதையை எந்தக் காரணத்தாலும் சிதைத்துக் கொள்ளமாட்டான். வாய்ப்பு கிடைத்தாலும் கூட, ஒரு கலைஞன் தன் கடமை தவறமாட்டான் என்கிறது இந்த உலகப் புகழ் பெற்ற சிறுகதை.)
உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக் கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை. என்னுடைய உணர்ச்சியை மறைத்துக்கொள்ளும் முயற்சியில் நான் தொடர்ந்து தீட்டிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் அவனுடைய துப்பாக்கி உறை தொங்கவிடப்பட்டதும், குண்டுகள் பொருத்தப்பட்டதுமான பெல்ட்டை அவிழ்த்து சுவற்றிலிருந்த ஒரு கொக்கியில் தொங்கவிட்டு அதன்மேல் தன்னுடைய ராணுவத் தொப்பியை வைத்தான். பிறகு என் பக்கம் திரும்பி கழுத்துப்பட்டியின் முடிச்சை நெகிழ்த்திக்கொண்டு, "வெப்பம் கடுமையாக இருக்கிறது எனக்கு சவரம் செய்து விடு'' என்று நாற்காலியில் உட்கார்ந்தான்.
நான் கவனமாக சோப்பைத் தயாரித்தேன். சிறு துண்டுகளாக வெட்டி கப்பில் போட்டு கொஞ்சம் வெந்நீர் விட்டு பிரஷ்ஷால் கலக்க ஆரம்பித்தேன். உடனே நுரை எழத் தொடங்கியது. 'எங்கள் பிரிவில் இருக்கும் மற்ற சிப்பாய்களுக்கும் இதே அளவு தாடி இருக்கும்' என்று அவன் சொன்னான். புரட்சியாளர்களை பிடிக்கும் பரபரப்பில் சில நாட்களாக இவனும் இவனது குழுவினரும் சவரம் செய்யவில்லை. நான் நுரை கலக்குவதைத் தொடர்ந்தேன்.
"நாங்கள் காரியத்தை சரியாகச் செய்தோம். தெரியுமா. முக்கியமானவர்களைப் பிடித்து விட்டோம். சிலரைப் பிணமாக எடுத்து வந்தோம்; சிலரை உயிருடன் பிடித்துள்ளோம். ஆனால் விரைவில் அவர்கள் எல்லாரும் இறப்பது நிச்சயம்.'
"எத்தனை பேரை பிடித்தீர்கள்?'' நான் கேட்டேன்.
"பதினாலு பேர். காட்டுக்குள் ரொம்பதூரம் போய்தான் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்களைப் பழிவாங்கியே தீருவோம். ஒரு ஆள்கூட இந்த வேட்டையில் உயிர்தப்ப முடியாது'' என்றபடியே நாற்காலியில் பின்புறமாக சாய்ந்தான்.
'எங்கள் செய்கையிலிருந்து இந்த ஊர் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்' என்றான் அவன்.
'ஆமாம்' என்றேன்.
'அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் நடந்தது அற்புதமான சம்பவம், இல்லையா?'
'ஆமாம். நன்றாக இருந்தது' என்று சொல் லியபடி பிரஷ்ஷை எடுக்கத் திரும்பினேன்.
களைப்பை வெளிப்படுத்தும் பாவத்தோடு அவன் கண்களை மூடிக்கொண்டு சோப்பின் குளிர்ச்சியான ஸ்பரிசத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இவ்வளவு நெருக்கமாக எப்போதும் அவன் என்னருகில் இருந்ததில்லை. நான்கு புரட்சியாளர்களைத் தூக்கிலிடுவதைப் பார்ப்பதற்காக பள்ளிக்கூட உள்முற்றத்தில் நகர மக்கள் எல்லாரையும் கூடச் சொல்லி அவன் உத்தரவிட்டிருந்த அந்த ஒரு நாளில் அவனை முகத்துக்கு நேராக ஒரே ஒரு கணம் பார்த்திருக்கிறேன். சிதைந்துபோன உடல்களின் கோரக் காட்சி, அன்றைய சம்பவத்தை ஏவி நடத்திய அவனுடைய முகத்தை நான் பார்ப்பதைத் தடுத்தது. அந்த முகத்தை இப்போது நான் என் கையில் ஏந்தப் போகிறேன்.
அவனுடைய பெயர் கேப்டன் டோரெஸ். கற்பனை நிரம்பியவன்தான். ஏனென்றால் வேறு யார் புரட்சியாளர்களை நிர்வாண மாக்கி தூக்கிலிட்டபிறகு சுட்டுப் பயிற்சி பெற அவர்களுடைய உடல்களை இலக்குக் குறிகளாக்குவார்கள்?
சோப் நுரையைப் பூசுவதை நிறுத்திவிட்டு ஆர்வம் தொனிக்காத பாவனையில் கேட்டேன், 'புரட்சியாளர்களை சுட்டுக் கொல்லப் போகிறீர்களா?'
'அதுமாதிரிதான். ஆனால் போன தடவைபோல வேகம் இருக்காது.'
அவனுடைய தாடிக்கு நான் தொடர்ந்து சோப் நுரையைத் தடவினேன். என்னுடைய கைகள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. அதை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எனக்கு சாதகமாக இருந்தது. அவன் என்னுடைய கடைக்கு வராமலிருப்பதையே நான் விரும்பியிருப்பேன். என்னுடைய குழுவிலிருக்கும் பலபேர் அவன் இங்கு நுழைந்ததைப் பார்த்திருக்கக்கூடும்.
என்னிடம் வரும் எந்த வாடிக்கை யாளருடைய தாடியையும், கவனமாக வும், மென்மையாகவும் எந்த ஒரு மயிர் கண்ணும் ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட வெளியேற்றாதபடியும் சவரம் செய்யும் கடமை எனக்கு உண்டு. நான் ஒரு ரகசிய புரட்சியாளன் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயம் நான் ஒரு மனசாட்சி யுள்ள நாவிதனும்தான். என்னுடைய தொழிலுக்குத் தேவைப்படும் துல்லியம் குறித்த பெருமிதமும் எனக்குண்டு.
ஒரு பக்க காதோர முடி யிலிருந்து கீழ்நோக்கி சவரத்தைத் தொடங்கி னேன். கண்களை மூடிக் கொண்டிருந்த அவன் அப்போது கண்களைத் திறந்து துணியின் அடியி லிருந்து ஒரு கையை எடுத்து சோப்பு நுரை நீங்கி சவரம் செய்யப்பட்ட இடத்தைத் தடவிப் பார்த்துவிட்டு சொன்னான். 'இன்றைக்கு ஆறு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா.'
'அன்றைக்கு நடந்தது போலவா?' என்று பீதியுடன் கேட்டேன்.
'அதைவிட மேலானதாகவும் இருக்கலாம்' என்றான் அவன்.
மீண்டும் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். நான் சவரத்தைத் தொடர்ந் தேன்.
'அவர்கள். எல்லாரையும் தண்டிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா?' மருட்சியுடன் கேட்டேன்.
'எல்லாரையும்தான்.'
இப்போது மறுபக்க காதோர முடியிலிருந்து சவரக்கத்தி கீழ்வாக்காக இறங்கியது. கழுத்துப்பகுதியை மிருதுவாக சவரம் செய்ய முயன்றேன்.
எங்களில் எத்தனை பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரின் உடல்களை உருக்குலைக்க அவன் உத்தரவிட்டிருக்கிறான்? அதைப் பற்றி நினைக்காமலிருப்பதே நல்லது. நான் அவனுடைய எதிரி என்பது டோரெஸுக் குத் தெரியாது. பிறருக்கும் தெரியாது. கொஞ்ச பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது. அப்படி இருந்தால்தான் நகரத்தில் டோரெஸ் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையும், புரட்சி யாளர்களை வேட்டையாட அவன் என்ன திட்டமிடுகிறான் என்பதையும் என்னால் புரட்சியாளர்களுக்குத் தெரிவிக்க முடியும்.
நான் ஒரு புரட்சியாளன். கொலைகார னில்லை. இவனைக் கொல்வது எவ்வளவு எளிதானது. கொல்லப்பட வேண்டியவன் தான்.
ஒரு சிறு சத்தத்துடன் இந்தத் தொண்டையை என்னால் அறுத்துவிட முடியும்! எதிர்த்துப் போராட அவனுக்கு நான் நேரம் தரமாட்டேன். கண்களை மூடிக்கொண்டிருப்பதால் மின்னும் கத்தி யையோ அல்லது என்னுடைய மின்னும் கண்களையோ அவன் பார்க்கமாட்டான்.
ஒரு உறுதியான இழுப்பு, ஒரு ஆழ்ந்த வெட்டு எந்த வலியையும் தடுத்துவிடும் என்று நான் திடமாக நம்புகிறேன். அவன் துன்பப்படமாட்டான். ஆனால் நான் அந்த உடலை என்ன செய்வது? எங்கே மறைப் பேன்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் வெகு தொலைவில் எங்காவது அடைக்கலம் தேடவேண்டியிருக்கும். ஆனால் என்னைப் பின்தொடர்ந்து அவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள். 'கேப்டன் டோரெஸைக் கொன்றவன். அவனுக்கு சவரம் செய்யும்போது அவனுடைய கழுத்தை அறுத்தவன்-கோழை' என்பார்கள்.
அடுத்து மறுதரப்பில் 'நம் எல்லார் சார்பிலும் பழிவாங்கியவன். நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய பெயர் அவனுடையது. அவன் நம் ஊரில் நாவிதனாக இருந்திருக் கிறான். நம்முடைய போராட்டத்தை ஆதரித்திருக்கிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை' என்பார்கள்.
கொலைகாரனா? அல்லது வீரனா? இந்த சவரக்கத்தியின் முனையைச் சார்ந்து தான் என்னுடைய விதி இருக்கிறது. என்னுடைய கையை லேசாக திருப்பி, கத்திக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து அதை உள்ளே அமிழ்த்திவிட முடியும்.
ஆனால் நான் ஒரு கொலைகாரனாக ஆக விரும்பவில்லை. நீ வந்தது சவரம் செய்துகொள்வதற்காக. நான் என்னுடைய வேலையை கௌரவமாக செய்கிறேன். என்னுடைய கைகளில் ரத்தம் படிவதை நான் விரும்பவில்லை. வெறும் நுரை மட்டும் போதும். நீ தூக்கிலிடுபவன். நான் வெறும் நாவிதன். சமூக அமைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.
இப்போது அவனுடைய தாடை சுத்தமாகவும் மழமழப்பாகவும் சவரம் செய்யப்பட்டு விட்டது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடியில் பார்த்தான். கையால் முகத்தைத் தடவி அதன் புத்துணர்ச்சியை உணர்ந்தான்.
'நன்றி' என்று சொன்னான். கொக்கியிலிருந்து அவனுடைய பெல்ட், துப்பாக்கி, மற்றும் தொப்பி ஆகியவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டான். கால் சட்டைப் பையிலிருந்த சில நாணயங்களை எடுத்து என்னுடைய வேலைக்காகக் கொடுத்துவிட்டு கதவை நோக்கி நடந்தான்.
வாசற்படியில் கொஞ்சம் தயங்கி நின்றபின் அவன் சொன்னான். 'நீ என்னைக் கொன்று விடுவாய் என்று அவர்கள் சொன்னார்கள். அது நடக்குமா என்று பார்க்கத்தான் வந்தேன்.
ஆனால் கொல்வது அவ்வளவு எளிதல்ல. இந்த விஷயத்தில் நீ என்னுடைய வார்த் தையை நம்பலாம்' என்று சொல்லிவிட்டுத் திரும்பிய அவன் நடந்து போய்விட்டான்.
நன்றி: ஆக்கிரமிக்கப்பட்ட வீடு
(புதுப்புனல் வெளியீடு)
டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர்
Via : http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=621:2015-01-31-14-27-13&catid=40:-2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக