செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அம்மா என்பவள்

யாருடைய முகநூல் பக்கத்தில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. இறக்கை குறும்படம் பற்றி சின்ன பதிவு கூடவே ஒரு லிங்க். யூடியூபில் பார்த்தபின்   வானத்தில் பறந்து போகும் பறவைகளின் சாயலில் அம்மாக்களின் முகம் தெரிந்தது.

அன்னையர் தினம் அன்று அம்மா குறித்து எழுதப்பட்ட பிரபஞ்சனின் சிறுகதை, சுமதி ரூபனின் சிறுகதை, கரிகாலனின் கவிதை, இளம்பிறையின் கவிதை இவற்றுடன் ம நவீன் இயக்கிய இறக்கை குறும்படத்தையும் நினைத்துக் கொண்டேன். (நவீன், வல்லினம் எனும் இணைய இதழையும் நடத்தி வருகிறார்)
இறக்கை குறும்படம் அம்மா எனும் பிம்பம் குறித்த சமூக மதிப்பீட்டின்மீது காத்திரமான விமர்சனத்தை முன்வைக்கிறது.

அம்மா என்பவள் எப்போதும் சமைத்துக் கொண்டேயிருப்பவள். வீட்டு வேலைகளைப் பார்ப்பவள். குழந்தைகளை வளர்ப்பவள். அப்பாவின் பேச்சினை மீறி யாதொன்றும் செய்யத் துணியாதவள். கருணை மிக்கவள். சகிப்புத் தன்மை கொண்டவள். விட்டுக்கொடுப்பவள். கருணையும் அன்பும் கொண்டவள்..... இப்படி இப்படியாகத்தான் அம்மாவை வடிவமைத்து வைத்திருக்கிறது சமூகம். உணர்வுகளும் கனவுகளும் சுய விருப்பு வெறுப்புகளும் கொண்ட சக மனுசி என்கிற உணர்வு கிஞ்சித்தும் அவளுக்கு இருந்துவிடக் கூடாது. அப்படி கனவுகளைச் சுமப்பவள் 'நல்ல' அம்மா என்ற வரையறைக்குள் வரமாட்டாள்.

நமது ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே இது தொடங்கி விடுகிறது. குடும்பம் என்றால் என்ன என்று குழந்தைக்குக் கற்பிக்கையில் அம்மா சமைப்பாள்; அப்பா பேப்பர் வாசிப்பார்; அக்கா வீடு பெருக்குவாள்; தம்பி விளையாடுவான். அங்கேயே தொடங்கிவிடுகிறது குடும்ப அமைப்பிற்குள் அம்மா என்பவள் யார் என்பது குறித்த கற்பிதம். அக்காவும் கூட அம்மாவின் இன்னொரு நீட்சியாக ஆகிப் போகிறாள். வெண்ணிலாவின் கவிதை ஒன்றில் பேப்பர்க்காரன் வந்தால் அப்பாவைக் கூப்பிடவும் காய்கறிக்காரன் வந்தால் அம்மாவைக் கூப்பிடவும் யாரும் சொல்லித் தராமலேயே கற்றுக் கொள்கிறது குழந்தை என்று எழுதியிருப்பார். குழந்தைகள் வீட்டில் இருந்தே கற்றலை துவங்கிவிடுகிறார்கள். வீட்டில் உள்ள பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள். அதன்பின்பு பள்ளிக்கூடத்தில் தங்களது கற்றலை விரிவுபடுத்திக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஆண் பெண் உறவுநிலைசார் மதிப்பீடுகள் இப்படித்தான் குழந்தைகள் மனதில் பதியப்படுகின்றன.

என் அம்மாவுக்கு இறக்கைகள் இருக்கிறது. அவள் வானத்தில் பறப்பாள். அவளது எல்லை வானம் தான். ஆனால் சமையலறையும் படுக்கையறையும் தான் அவளது எல்லையாகச் சுருக்கப்படும் அவலம் தான் நிதர்சனம் என்பதை நறுக்கென ஆறு நிமிடத்தில் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கதைக்கருவுக்கான களனாக பள்ளிக்கூடத்தைத் தேர்வு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது. என் அம்மா குறித்து அந்தச் சிறுமி எழுதி வந்த 'நிஜ' அம்மாவைச் சிவப்பு மையால் அடித்துக் காட்டியிருப்பதும், அம்மா செய்யும் வீட்டு வேலைகளைப் பட்டியல் போடும் மாணவனைப் பாராட்டுவதும் கல்விமுறை மீதான காத்திரமான விமர்சனம்.
நமது கல்விமுறையில் இருக்கின்ற கோளாறுகள் களையப்பட வேண்டும் மாற்றுக் கல்விக்கான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இக்குறும்படம்.

கடைசிக் காட்சியில் குறைந்த ஒளியில் சமையலறையில் வானலில் எதையோ வறுத்துக் கொண்டிருக்கும் அந்த அம்மா ஜன்னலின் வழியாக பறந்து விரிந்த ஆகாயத்தில் வெள்ளைப் பறவை பறந்து செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பதாகக் காட்டியிருபது கவித்துவம்.

பள்ளிகளில் இம்மாதிரியான குறும்படங்களைத் திரையிட்டு அது சார்ந்த ஒரு உரையாடலை / விவாதத்தை நிகழ்த்த வேண்டும்.
மாற்றத்தை நோக்கி நமது கால்கள் நகரட்டும்.

படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

குறும்படத்தைக் காண :- 

https://youtu.be/kvBKlA9KrSU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக