செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

நேத்ரா எனும் குட்டி இளவரசி - மனுஷி


ஆரோவில்லில் மாரத்தானில் கலந்து கொள்வதற்காகச சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சாரதாம்மா வந்திருந்தார். அவரோடு இன்னும் இரண்டு சினேகிதிகளும். அவர்களைச் சந்தித்து ஹாய் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். 

க்ரீன் ஹவுஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரோடு வந்திருந்த நேத்ரா குட்டிப் பாப்பாவைச் சந்தித்தேன். எனது அந்த இரவைக் கூடுதல் அழகாக்கிடும் குட்டி தேவதை அவள் என்பதை அவளது முதல் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன். 

சாரதா அந்தக் குட்டிப் பாப்பாவிடம் என்னை அறிமுகம் செய்யும்போது, இவங்க பேரு மனுஷி... இவங்க கதைலாம் சொல்வாங்க. நாய்க்குட்டி கூட, பூனைக்குட்டி கூடலாம் பேசுவாங்க என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். இதுவரை இப்படி க்யூட்டாக யாரும் என்னை அறிமுகம் செய்ததில்லை. 

அக்கா, நிஜமாவே நீங்க நாய்க்குட்டி கூட பேசுவிங்களா... ஆச்சரியம் அவள் கண்களில் தெரிந்தது. பேசுவேனே என்றேன். அப்படினா இந்த நாய் கிட்ட பேசுங்க பார்ப்போம் என்றாள் அங்கே உணவகத்தில் இருந்த ஒரு வெள்ளை நாயைக் காட்டி. 

இது எனக்கு வைக்கப்பட்ட சின்ன டெஸ்ட். சாரதாம்மா அறிமுகம் செய்யும்போது இருந்த குஷி இப்போது கொஞ்சமா ஜர்க் வாங்கியது. ஒருவேளை நம் குரலுக்கு அந்த வெள்ளையன் மதிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? நேத்ராவிடம் பங்கமாக மாட்டிக் கொள்வோம். ஆனாலும் மனம் தளராமல் ஹேய்... இங்க வா என்று கை நீட்டி அழைத்தேன். அந்த வெள்ளையன் அருகில் வந்துவிட்டான். கொஞ்சமாய் அவன் காது மடல்களை, கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே என்ன டா பண்ற இங்க... சாப்பிட்டியா என்றேன். என்ன புரிந்து கொண்டானோ... என் கையை நக்கிக் கொடுத்தான். என் கால் முட்டியில் தலையை முட்டி மீண்டும் தடவிக் கொடுக்கச் சொன்னான்.

நேத்ராவின் முன்பு என் கெத்தைக் காப்பாத்திட்டடா தம்பி என்று நெற்றியில் முத்தமிட்டேன். நேத்ராவுக்கோ குரலில் ஆச்சரியம்... அக்கா நிஜமாவே சூப்பர்க்கா என்று என்னோடு ஒட்டிக் கொண்டாள். 

அதன் பிறகு, நாய்க்குட்டி, நக்கி கொடுத்தால் என்ன அர்த்தம், வாலை ஆட்டினால் என்ன அர்த்தம், பூனைக்குட்டி பசி எடுப்பதை எப்படிச் சொல்லும், மிஸ் பண்ணால் என்ன செய்யும் என்றெல்லாம் சொல்லச் சொல்ல அவளுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம். 

அக்கா... நீங்க எங்க கூடவே இன்னைக்கு நைட் வந்து தங்கிடுங்க. கதை சொல்லுங்க என்றாள். இல்லடா மா நான் நாளைக்கு வந்து சொல்றேன். என் வீட்ல பூனைக்குட்டிக்குச் சாப்பாடு வைக்கனும் என்று சொல்லிக் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டேன். 

என்னை அனுப்பவே மனசில்லை.

அடுத்த நாள் சாரதாம்மாவும் அவரோடு வந்த தோழிகளும் மாரத்தானில் ஓட வேண்டும். நேத்ராவை எங்கே விட்டுச் செல்வது என்ற யோசனையில் இருந்தபோது என்னோடு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். அடுத்த நாள் முழுக்க என்னோடு இருக்கப் போகிறோம் என்பதால் என்னை வழியனுப்பி வைத்தாள். 

அடுத்த நாள் மாரத்தான் தொடங்கும் இடத்திற்கு நண்பரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, ஒரு சூடான காபியைக் குடித்துவிட்டு அவரை அழைத்துக் கொண்டு விசிட்டர் செண்டர் சென்றேன். அங்கே அவரை இறக்கிவிட்ட பின் சாரதாம்மாவிற்கு அழைத்தால் சிக்னல் கிடைக்கவில்லை. ஆறரை மணிக்கு ஓடிக் கொண்டே வாட்ஸ் அப் காலில், நேத்ரா குட்டியும் எங்களோடு மாரத்தான் ஓடிட்டு இருக்கா... நாங்க முடிச்சிட்டு கால் பண்றோம் என்றார். 

வேறென்ன செய்ய. வீட்டுக்குக் கிளம்பினேன்.

சொன்னபடியே மாரத்தான் ஓடி முடித்து, காலை உணவும் முடித்துவிட்டு எனக்கு அழைத்தார்கள். குட்டி மாரத்தான் ஓட்டக்காரியைச் சந்திக்கும் ஆவலில் விரைவாகச் சென்றேன்.. இல்லை.. ஸ்கூட்டியில் பறந்தேன். 

அவளைப் பார்த்ததும் அள்ளிக் கட்டிக் கொண்டேன். இந்தச் சின்ன வயதில் நான்கு கிலோ மீட்டர் வரை ஓடியிருக்கிறாள். பெரிய விஷயம். அவள் முகத்தில் ஓடிய களைப்பு எதுவும் இல்லை. அன்று காலை பூத்த சின்னஞ்சிறு பூ போலத்தான் இருந்தாள். 

அக்கா நீங்க கதை சொல்றேன்னு சொன்னிங்க சொல்லவே இல்லை.. இப்ப சொல்லுங்க வாங்க என்று கையைப் பிடித்து இழுத்தாள். சொல்றேன் டா. உனக்குச் சொல்லாமல் இருப்பேனா என்று சொல்லிக் கொண்டிருக்கு போதே... நேத்ராவின் அம்மா, முதலில் ரூம் போய் குளிச்சிட்டு, ட்ரெஸ் மாத்திட்டு பிறகு கதை கேட்கலாம். அக்கா கதை சொல்வாங்க என்றார். சென்னை திரும்ப வேண்டிய அவசரம் அவர் குரலில் இருந்தது. 

அவளுக்கு அதெல்லாம் ஒரு விஷயமாகவே இல்லை.. அவள் வைத்திருந்த சுனாமிகா பொம்மையை வைத்துக் கதை சொல்ல சொன்னாள். அவள் அம்மாவிற்கோ கிளம்ப வேண்டிய அவசரம்.

அதைப் புரிந்து கொண்டு, ஆமா நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகு அக்கா வந்து கதை சொல்றேன் என்றேன். இல்ல நீங்க வாங்க என்று அடம் பிடித்தாள். நிஜமா நான் வந்து கதை சொல்வேன்.. நீ இப்போ அம்மா கூட போ என்றேன். 

ப்ராமிஸா..... என்றாள் கையை நீட்டியபடி.

பிராமிஸ் என்றேன் அவள் கை மேல் கை வைத்து.

காட் பிராமிஸா...

காட் பிராமிஸ்...

மதர் பிராமிஸா...

மதர் பிராமிஸ்...

டெட் பிராமிஸா..

டெட் பிராமிஸ்...

அவள் கேட்ட எல்லாவற்றின் மீதும் ப்ராமிஸ் செய்து கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன். 

ஆனால், அவளைப் பஸ் ஸ்டாப் வரை சென்று வழியனுப்பி வைக்க முடியவில்லை. ஆரோவில்லில் அன்றைய தினம் அவ்வளவு பரபரப்பாக இருந்தது எனக்கு. 

அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியம் அப்படியே என்னிடம் இருக்கிறது. 

அவளுக்கென தினம் ஒரு கதையைச் சொல்வது எனத் தீர்மானித்து விட்டேன்.

அவள் முகம் பார்த்துக் கொண்டே கதை சொல்லும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். 

என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது அவள் அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா, இந்த அக்காவை நம்ம கூடவே கூட்டிட்டுப் போய்டலாம்மா... 

என் உலகத்திற்குள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்ட குட்டி இளவரசியின் பேரன்பின் பெருநிழல் தான் அந்த வார்த்தை. 





சனி, 1 பிப்ரவரி, 2020

கோனேரியும் குருவம்மா அக்காவும்

கழுகுமலை பயணம் முடித்து அடுத்த நாள் மடவார் வளாகம் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை - இரண்டு இடங்களுக்கும் செல்வதென முடிவு செய்தோம். 

திருவண்ணாமலை என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் நெருப்பு வடிவமாக நின்று, மலையாகக் குளிர்ந்த திருவண்ணாமலையைத்தான் சொல்வார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலையா? அதிலும் பெருமாள் கோவிலா? ஆச்சரியத்தோடு கிளம்பினேன்.
நானும் சங்கீதாவும் ஸ்கூட்டியில் பறந்தோம் என்று சொல்ல முடியாது. மிதமான வேகத்தில் திருவண்ணாமலை கிராமத்தை நெருங்கியதும் பிரம்மாண்டமான யானை ஒன்று கால் நீட்டிப் படுத்திருப்பது போல இருந்தது அம்மலை. மலையை நோக்கி ஸ்கூட்டி விரைந்து செல்ல, மலை பின்னோக்கி நகர்வது போலிருந்தது. சென்ற வருடத்தில் திருச்சி சென்றிருந்தபோது, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு ஸ்கூட்டியில் சென்றிருந்தேன். அப்போதும் அப்படித்தான். மலையை நோக்கி ஸ்கூட்டி பயணம் செய்ய, மலை பின்னோக்கி நகர்ந்து விளையாட்டுக் காட்டுவது போலிருந்தது. சங்கீதாவிடம் அதைச் சொன்னேன். நான் சொன்னதை அவரும் ஒப்புக் கொண்டார். 

திருவண்ணாமலை கோவிலில் கோனேரி என்றொரு ஏரி உள்ளது. குலசேகராழ்வார் அந்த ஏரியைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்று சொன்னார். ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் அளவுக்கு யாரும் என்னை அவ்வளவு ஈர்த்ததில்லை. ஆண்டாளுக்குப் பெருமாளின் மேல் காதல் என்றால் எனக்கு ஆண்டாளின் மேல் மாளாக்காதல். ஆண்டாளின் கவிதைகளின் மேல் தீராக் காதல். 
கோயிலை நெருங்கியதும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அதனருகில் செருப்பைக் கழற்றிவிட்டு நடக்கத் தொடங்கினோம். மொட்டை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் கோயில் வளாகம் குளிர்ந்திருந்தது. கிளை பரப்பி, அசைந்து கொண்டிருந்த மரத்தின் குளுமை தரையெங்கும் படர்ந்திருந்தது. 

கோயிலுக்குப் படியேறிச் செல்வதற்கு முன், வலது புறம் திரும்பி கோனெரியைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என அங்கே சென்றோம். 

செக்கச் சிவந்திருந்த கோனேரியின் படிக்கட்டுகளில் இரண்டு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். 
காற்றின் தீராத பேச்சுகள் ஏரியில் நீர் வளையங்களாய் நெளிந்து கொண்டிருந்தன. ஏரியின் கரையைச் சுற்றிலும் மரங்கள். ஏரியின் நீரைக் கவ்விக் குடிப்பது போல ஏரி நீரை நோக்கித் தாழ்ந்திருந்தன. வெள்ளை வெள்ளையாய் இலைகளுக்கு நடுவில் பூக்கள். அவ்வப்போது பூக்கள் பறந்தன. உற்றுக் கவனித்தபோது தான் தெரிந்தது. பூக்கள் அல்ல. நாரைகள். 

மரத்தில் அமர்ந்திருந்த நாரைகளையும், ஏரியையும் செல்போனில் படம் பிடித்தேன். படிக்கட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரும் துணி துவைப்பதை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். நம்ம ஃபோக்கஸ் ஏரியும் நாரையும் தான் என்பது போல நான் க்ளிக் செய்து கொண்டிருந்தேன். எம்மா நீ இவங்களை போட்டோ எடுக்கறனு அவங்க போஸ் கொடுக்கறாங்க பாரு என்றார் சங்கீதா. 

சாரி அக்கா, கவனிக்கல என்று சொல்லிவிட்டு அவர்களைப் படம் பிடித்தேன். இடுப்பளவு நீரில் அமர்ந்தபடி ஈரப்புடவையுடன்  முகமெல்லாம் புன்னகையாக போஸ் கொடுத்தார்கள். 

ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என நினைத்துத்தான் ஏரியின் பக்கம் காலடி எடுத்து வைத்தோம். முதலில் படிக்கட்டில் அமர்ந்தோம். இரண்டு மூன்று செல்ஃபிக்களுக்குப் பிறகு ஏரி, உள்ளே இறங்கி வா வா எனக் கூப்பிட, ஜீன்ஸைக் கொஞ்சம் மேலே தூக்கி விட்டு கடகடவென ஏறி நீரில் கால் வைத்தேன். அடுத்து இரண்டாம் படிக்கட்டு, அடுத்து முன்று, அடுத்து நான்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கினேன். இடுப்பு வரை நனைந்து விட்டேன். நான் கால் வைத்த முதல் படிக்கட்டில் இருந்த நீரின் குளிர்ச்சிக்கும் ஐந்தாவது ஆறாவது படிக்கட்டில் இருந்த குளிர்ச்சிக்கும் வித்தியாசம் இருந்தது. படிக்கட்டின் உள்ளே இறங்க இறங்க சில்லிட்ட நீரின் அதீத குளிர்ச்சி உடலெங்கும் பரவியது. 
போட்டோவுக்கு போஸ் கொடுத்த இரண்டு அக்காக்களும் எங்கள் இருவரைப் பற்றி விசாரித்தார்கள். நான் பாண்டிச்சேரியில் இருந்து வருகிறேன் என்றதும் அவர்களுக்கு ஆச்சரியம். சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வந்திருக்கிறேன் என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கம் போலவே எனது ஒற்றைக்கால் கொலுசைப் பார்த்து, மா, இன்னொரு கால் கொலுசைக் காணோம் என்றார். இல்லக்கா இது ஸ்டைல் என்றேன் சிரித்துக் கொண்டே.  அவர்களும் சிரித்தார்கள்.

துணி துவைக்கும் சத்தத்திற்கு இடையில் செல்ஃபோனில் கானா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. துணி துவைத்துப் பிழிந்து ஏரிக்குள் தான் அழுக்கு நீரை ஊற்றினார்கள். சிவந்த நீரில் சோப்பு நுரை கலந்த அழுக்கு நீர் கலந்தாலும் அப்படியே இருந்தது. சிவந்த நீரில் அலசிய துணி சுத்தமாகவே இருந்தது. 

ஏரியின் இடதுபுறம் நான்கைந்து பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கும் ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி இரண்டு மாடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. 

துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரின் அருகில் இடுப்பு வரை நனைய இறங்கி, சங்கீதாவை போட்டோ எடுக்கச் சொன்னேன். விதவிதமாகப் போட்டோ எடுத்துத் தள்ளினார். இதற்கிடையில் அந்த அக்காக்களோடு பேச்சு வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களோடு தேநீருக்குச் சியர்ஸ் சொல்கிற அளவுக்கு... 
கோயிலுக்குப் போயிட்டு வரும்போது வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும் என அழைத்தார்கள். வீட்டின் அடையாளம் சொன்னார்கள். வர்றோம்க்கா என்று பேச்சுக்கு வாக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வெறும் பேச்சுக்கு அழைத்தார்கள் எனச் சொல்ல முடியவில்லை. வாஞ்சையான அழைப்பு தான். 

அக்கா உங்க பேரு என்னக்கா என்றேன். ஊதப்புடவை அணிந்த அக்கா, என் பேரு குருவம்மா. இவங்க பேரு முனீஸ்வரி என்றார். குருவம்மா அக்கா உங்க பேருல ஒரு பாட்டு இருக்கு. இருங்க யூடியூபில் போடறேன் என்று சொல்லி, தேடி "குறுக்குப் பாறையிலே மறிச்சு வழியில் நின்னு... பார்க்காமல் போறியே நீ குருவம்மா..." பாடலை ஒலிக்கச் செய்ததும் குருவம்மா அக்கா முகத்தில் அடக்க முடியாத வெள்ளந்தி சிரிப்பு. 

கோனேரியில் ஐந்து நிமிடம் என்பது குருவம்மா அக்காவுடனான தேநீர் உரையாடலில் ஒரு மணி நேரமாக நீண்டிருந்தது. எங்களின் உரையாடலை படித்துரையில் அமர்ந்து ஒரு குருகும் கேட்டுக் கொண்டிருந்தது.
கோனேரி வாழ் குருகாய்ப் பிறப்பேனே என்ற குலசேகராழ்வாரின் குரலை அங்கே உணர்ந்தேன். 

கோனேரியின் ஈரம் என்பது எளிய மனிதர்களின் வெள்ளந்தி அன்பினால் துளிர்த்துக் கொண்டிருக்கிறது எப்போதும்.

புதன், 29 ஜனவரி, 2020

பசி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது

#கழுகுமலை_பயணம் 
கழுகுமலையில் சமண சிற்பங்களையும் வெட்டுவான் கோயிலையும் பார்த்து முடித்த பின் சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலுக்குச் சென்றோம். சங்கர நாராயணன் கோவில் செல்வது எனது திட்டத்தில் இல்லை. உடன் வந்த தோழிகள் விருப்பம். எனவே அவர்களோடு நானும் சென்றேன். 

மிகப் பழமையான கோவில். எப்போதும் போல கோவிலில் சிற்பங்களையும் அதன் குளுமையையும் ரசித்தபடி இருந்தேன். 

நாக தோஷம் நீங்க பால் வாங்கி அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்திச் செய்து கொள்வார்கள் என அங்கே சென்ற பின் அறிந்தேன். என்னோடு வந்த தோழிகள் பாலும் பூ மாலையும் வாங்கிக் கொண்டு சென்றனர். 

கருவரையில் இருந்த சிவ லிங்கத்தைப் பார்த்துவிட்டு, பால் அபிஷேகம் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றோம். நாக தோஷப் பரிகாரம் செய்யும் இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பிள்ளையாரை வணங்கிவிட்டு, அக்கோவிலைச் சுற்றிச் செல்லும்போது, சுவர் ஓரமாக சாம்பல் நிற குட்டிப் பூனை ஒன்று படுத்திருந்தது. உடலைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்ததைப் பார்த்ததும் குரல் கொடுத்தேன். 

பூனைகள் அசந்து தூங்கும்போது சிறு சத்தம் கேட்டால் கூட உடனே தலை தூக்கிப் பார்க்கும். நான் குரல் கொடுத்தும் கூட அதனிடம் அசைவில்லை. தலையில் கை வைத்துத் தடவிக் கொடுத்தேன். அப்போது கூட அசையாமல் படுத்திருந்தது. 

பசியில் மெலிந்த உடல். தூங்கவில்லை. நினைவு தப்பிக் கொண்டிருந்தது. தோழிகளிடம் இருந்த பாலைத் தர முடியுமா எனக் கேட்டேன். அவர்கள் அபிஷேகம் செய்வதற்கான பால், வேண்டுமெனில் போய் வாங்கி வா என சங்கீதா சொன்னார். அவரிடம் இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு வாசலுக்கு ஓடினேன். பிளாஸ்டிக் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்த பால் இருபது ரூபாய். வாங்கிக் கொண்டு கூடவே பாலை ஊற்றி வைக்க ஒரு சிறிய தொன்னையைக் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தேன். 

அதே இடத்தில் அசைவின்றி படுத்திருந்தது அந்தக் குட்டிப் பூனை. 

அதன் அருகில் அமர்ந்து கவரில் சுற்றப்பட்டிருந்த நூலைக் கழற்றினேன். அநியாயத்துக்கு நூலைச் சுற்றோ சுற்றென சுற்றி இருந்தார்கள். நூலைப் பிரித்துப் பாலைத் தொன்னையில் ஊற்றிய சத்தம் கேட்டு சட்டென்று எழுந்து கொண்டது பூனை. அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அது எழுந்து கொண்டதே தவிர நிற்க முடியவில்லை. தடுமாறியது. தள்ளாட்டத்துடன் இருந்த பூனைக்கு அருகில் பால் ஊற்றி நிரப்பப்பட்ட தொன்னையை நகர்த்தி வைத்தேன். அதனால் குனிந்து குடிக்க முடியவில்லை. தலையை மெல்ல அழுத்தினேன். அப்போதும் குடிக்கவில்லை.

தொன்னையைக் கையிலெடுத்து அதன் வாயருகில் வைத்தேன். நக்கிக் குடித்தது. கொஞ்சம் தான் குடித்திருக்கும். பிறகு தலையை எடுத்துக் கொண்டது. மீண்டும் அதன் வாயருகில் பாலைத் தூக்கிப் பிடித்தேன். இன்னும் கொஞ்சம் குடித்தது. 

அப்போது தான் கவனித்தேன். அதன் பின்னங்காலில் லேசாக அடிபட்டிருந்தது. மேலும் அதற்கு வயிற்றுப்போக்கு வேறு. அருகில் இருந்த பேப்பரைக் கொண்டு பின்பக்கத்தைத் துடைத்து விட்டேன். லேசாக வலியில் முனகியது. மீண்டும் கொஞ்சம் பாலைக் குடித்தபின் தெம்பு வந்திருக்கும் போல. என் கையைத் தலையால் உரசியது. பின்பு நடந்து என் மடிமீது ஏறிக் கொண்டது. மடிமீது ஏறுவதும், கையைத் தலையால் உரசுவதும், மடியில் இருந்து இறங்குவதும், மீண்டும் கையை உடலால் உரசிக் கொண்டு மடியில் ஏறுவதுமாக இருந்தது. 

என்னை உன்னோடு அழைத்துச் சென்று விடு என்று கெஞ்சுவது போல இருந்தது அதன் செய்கை. என்னோடு அழைத்துச் செல்ல முடியாத குற்றவுணர்வு எனக்குள். 

பாண்டிச்சேரி என்றால் நீ கேட்காமலேயே எடுத்துச் சென்று விடுவேன், இப்பொழுது முடியாது, என்னை மன்னித்து விடு என அந்தக் குட்டியிடம் சொல்லி, தலையை வருடிக் கொடுத்தேன். சூழலைப் புரிந்து கொண்டது போல எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டது. 

மிச்சப் பாலையும் தொன்னையில் ஊற்றி, சுவர் அருகில் அதன் பார்வையில் படும்படி வைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து கொண்டேன். 

பக்கத்தில் நாக சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.  நேர்த்திக்கடன் எனும் பெயரில் தரையில் அவ்வளவு பாலும் வீணாக வழிந்தோடியது. இன்னும் அபிஷேகம் செய்வதற்கான பாலைக் கையில் ஏந்தியபடி நிறைய பேர் மனம் நிறைய வேண்டுதல்களுடன், பக்தியோடு போய்க் கொண்டிருந்தார்கள். அதன் அருகில் தான் பசியில் உடல் மெலிந்த பூனைக்குட்டி சுருண்டு கிடந்தது. நேர்த்திக் கடன் செய்ய வந்த யாருடைய கண்களுக்கும் பூனையின் பசி தெரியவேயில்லை. பாவம், பக்தி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டிருந்தது போல.

பசி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. 
இந்த உலகம் எல்லோருக்குமானது. பசித்திருக்கும் ஜீவன்களுக்கு உணவளிப்பதும் கூட ஆன்மீகம் தானே.

புதன், 22 ஜனவரி, 2020

பூனைப் பிரசவம் - மனுஷி

பூனைப் பிரசவம் – மனுஷி
காலையில் இருந்தே புரூஸுக்குப் பிரசவ வலி. அடி வயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தாள். உணவு கேட்பதற்காக மெல்லிய குரலெடுத்து அழைப்பதைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். அது ஒரு பாவக்குட்டியின் குரல் போல் இருக்கும். வயிறு நிறைய மீன்கள் சாப்பிட்டிருந்தாலும் நான் சாப்பிட அமரும்போது நமது இரக்கத்தைக் கோரும் வகையில் ஒரு பார்வையைப் பார்ப்பாள். அவளுக்குத்  தராமல் ஒரு வாய் கூட நம்மால் சாப்பிட முடியாது. 

ஆனால், பிரசவ வலி வந்ததாலோ என்னவோ மீன், விஸ்காஸ், முட்டை, பால் என வைத்த எதையுமே சாப்பிடவில்லை. வயிற்றுக்குள் அந்தச் சின்ன ஜீவன்கள் அசைவதை என்னால் பார்க்க முடிந்தது. 

அவள் பிரசவிப்பதற்கான இடத்தை அவளே தேர்வு செய்து வைத்திருந்தாள். துணி அடுக்கி வைக்கும் அலமாரியில் போய் படுத்துக் கொள்வாள். அதுதான் அவளுக்கான பிரசவ அறை என, அங்கிருந்த துணிகளை எல்லாம் மேலே உள்ள இடத்தில் மாற்றி வைத்து, ஒரு தலையணையைப் பெட் போல வைத்து மேலே ஒரு காட்டன் புடவையைத் தலையணை அளவுக்கு மடித்து வைத்தேன்.

பெரும்பாலும் அங்கே தான் போய் படுத்துக் கொள்வாள். நேற்று மட்டும் அங்கே போகாமல் என் காலையே சுற்றிச் சுற்றி வந்தாள். அடுப்படியில் கேஸ் சிலிண்டர் வைக்கும் இடத்தில் போய் படுத்துக் கொண்டு, தரையைச் சுரண்டிக் கொண்டிருந்தாள். பிறகு படுத்துக் கொண்டு, இட வலமாக உருண்டு கொண்டே ஓங்கிக் குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தாள். தரை சில்லென்று இருந்தது. இரண்டு தரைவிரிப்புகளை அங்கே எடுத்து வைத்தேன். அதன்மீது படுத்துக் கொண்டு கத்திக் கொண்டும், உருண்டு கொண்டும்,  தரை விரிப்பை ஆக்ரோஷமாகக் கடித்துக் கொண்டும் தனது வலியை மடைமாற்றிக் கொண்டிருந்தாள். 

ஒரு பூனைக்குட்டியின் பிரசவத்தை இவ்வளவு அருகில் இருந்து பார்ப்பது இதுவே முதல் முறை. வலியில் அவள் கதறுவதைப் பார்க்க முடியாமல் அழுதேன். 

புரூஸம்மா, புரூஸம்மா என்று குரல் கொடுத்தபடி உடலை வருடிக் கொடுத்தேன். எனது குரலும் வருடலும் அவளுக்கு இதமாக இருந்திருக்கும் போல. அந்தக் குரல் வரும் நேரம் மட்டும் கண்களை மூடி அமைதியாக இருந்தாள். 

உடலிலிருந்து கையை எடுத்தாலோ, குரல் கொடுப்பதை நிறுத்தினாலோ வேகமாகக் கத்தினாள். 

நேரம் ஆக ஆக அவளது குரல் வலியின் பெருங்கூச்சலாக இருந்தது. எனது மடியில் வந்து அமர்ந்து கொண்டாள். 

நான் வீடு மாறியதற்குப் பிறகு எனது மடியில் அவள் வந்து அமரவே இல்லை. வீடு மாற வேண்டிய சூழல் என்பதை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளுக்குப் புரியவேயில்லை. அவள் வளர்ந்த வீடு என்பதால் வாடகை வீட்டையே சொந்த வீடு போல பாவித்து விட்டாள். புது வீடு அவளுக்கு அந்நியமாகத் தெரிந்தது. ஆனால், இந்தப் பிரசவ வலி புது வீட்டின் அந்நியத் தன்மையை மறக்கச் செய்திருந்தது. 

மடியில் படுத்துக் கொண்டவளைத் தடவிக் கொடுத்தபடியே, கொஞ்ச நேரத்தில் பாப்பா வெளியில் வந்துடுவாங்க, அப்புறம் புரூஸம்மா ரிலாக்ஸ் ஆவிங்களாம் என்று சொல்லச் சொல்ல, தன் முன்னங்கைகளால் எனது கை மீது வைத்து அழுத்தி, வயிற்றை முக்கிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது முலைக்காம்புகளை, வயிற்றை நக்கிக் கொண்டாள். 

வயிற்றை முக்கிக் கொண்டே எனது கையில் வாய் வைத்து அழுத்திக் கடிக்கத் தொடங்கினாள். சட்டென்று ஒரு துண்டை எடுத்து எனது கையில் கட்டிக் கொண்டு கையைக் கடிக்கக் கொடுத்தேன். இறுக்கிக் கடித்துக் கொண்டே முக்கினாள். 

காலையில் இருந்து நான் டீ குடிக்காமல் சாப்பிடாமல் அவளோடு இருந்ததால் எனக்குத் தலைசுற்றியது. ஒரு தலையணையை எடுத்து வந்து அதில் படுத்துக் கொண்டேன். புரூஸ், எனது இடது கை மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். முகமெல்லாம் தாய்மையின் ரேகை படர்ந்திருந்தது. கையிலிருந்து தலையை எடுக்காமல், முன்னங்கைகள், பின்னங்கால்களால் அழுத்தி, வயிற்றை முக்கி தனது குட்டிகளை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் பேசிக் கொண்டே இருந்தேன். 

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவளது பின்பக்கத்திலிருந்து மெல்ல நீர் வடிந்தது. பிரசவிக்கும் பெண்ணைப் போலவே மல்லாந்து படுத்து கால்களை அகல விரித்து முக்கிக் கொண்டே இருந்தாள். 

சரியாக 4 மணிக்கு முதல் குட்டி மெல்ல மெல்ல வெளியேறியது. 

கண்களில் கண்ணீரோடு புரூஸை முத்தமிட்டேன். அவள் முன்பைப் போல சத்தமெழுப்பவில்லை. ஆனால், முனகிக் கொண்டிருந்தாள். 

முதல் குட்டி முழுவதுமாக வெளியேறச் சரியாகப் பத்து நிமிடம் ஆனது. வெளியே வந்த குட்டியை நாக்கால் நக்கிச் சுத்தம் செய்தாள். தொப்புள் கொடியையும் அவளே நக்கி எடுத்துவிட்டாள். 

அரை மணி நேரம் கழித்து இரண்டாவது குட்டி வெளியே வந்தது. அதையும் முன்பு போலவே நக்கிச் சுத்தம் செய்துவிட்டாள். முதல் குட்டி வெளியேறும்போது இருந்த அலறல் இரண்டாவது குட்டியை ஈனும்போது இல்லை. அமைதியாகப் படுத்திருந்தாள். ஆனால், என்னை மட்டும் அவளை விட்டு நகர விடவில்லை.

ஐந்து மணி அளவில் மூன்றாவது குட்டியையும் ஈன்றெடுத்தாள். 

முகத்தில் அப்படியொரு தாய்மையின் களைப்பு. 

மூன்று குட்டிகளில் ஒன்று மட்டும் அசையவே இல்லை. அது கொஞ்ச நேரத்திலேயே சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டது. மற்ற இரண்டு குட்டிகளும் கொஞ்ச நேரத்தில் அம்மாவின் மடி தேடிப் போய் பால் குடித்தது. குட்டிகளின் பிஞ்சுக் குரல் பரவசம் கொள்வதா சுவாசிப்பதை நிறுத்திக் கொண்ட குட்டிக்காக அழுவதா எனத் தெரியவில்லை. கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. 

வலியிலிருந்து ஜனிக்கும் ஜீவன் தான் வாழ்வின் பெரும் அதிசயம்.

அரை மயக்கத்தில் படுத்திருந்தாள் புரூஸ்.

பொதுவாக, பூனைகள் குட்டிப் போடும்போது யாருக்கும் தெரியாமல், மறைவான ஓரிடத்தில் போய் குட்டிப் போட்டுவிட்டு வரும் என்று படித்திருக்கிறேன். நண்பர்கள் சிலரும் சொல்லி இருக்கிறார்கள். இங்கே எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. 

இத்தனை வயதாகியும் எனக்குள் சிறுமியின் மனோநிலை எப்போதும் என்னை விட்டுப் போகவேயில்லை. ஆனால், இப்போது, மகளின் பிரசவத்தின்போது உடனிருந்த அம்மாவை எனக்குள் உணரச் செய்துவிட்டாள் புரூஸ்.

திங்கள், 30 டிசம்பர், 2019

ஒரு நண்பனிருந்தால் - குடைக்காலம் - மனுஷி

குடைக்காலம்

ஆரோவில்லில் உள்ள இடையன்சாவடியில் குடைக்காலம் நிகழ்வுக்குச் சென்னையில் இருந்து தோழி அகிலா, நண்பர்கள் பாலமுரளி, பிரவீண், இளையராஜா, தோழர் கரன்கார்க்கி, தம்பி ஷிஜு ஆகியோர் வந்திருந்தார்கள்.

அகிலாவும் பிரவீணும் ஸ்கூட்டியில் வந்திருந்தார்கள். ஸ்கூட்டி பயணப் புகைப்படத்தை முகநூலில் பார்த்த கணத்தில் மனசுக்குள் அப்படியொரு சந்தோஷம். நானே ஈசிஆர் சாலையில் பயணிப்பது போலொரு உணர்வு.

நண்பர் பாலாவும் சபரி மலைக்குப் போய்விட்டு அன்றைக்குக் காலையில் தான் சென்னை திரும்பியிருந்தார். மலைக்குப் போய் திரும்பிய காலோடு ஆரோவில் வந்து சேர்ந்தார் ஷிஜுவுடன்.

நிகழ்வு தொடங்கியதும் அனைவரையும் வரவேற்று முடித்தபின், நான் எனது கவிதைகளில் சிலவற்றைப் பார்வையாளர்கள் முன்பு வாசிக்கத் தொடங்கினேன். எந்தச் சூழ்நிலையில், எந்த மனநிலையில், எதன் பாதிப்பில் அந்தக் கவிதைகளை எழுதினேன் எனும் சூழலை விளக்கிக் கவிதைகளை வாசித்தேன். அங்கே வந்திருந்த சிலருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது. அதனால், நான் கவிதைகளை வாசித்தபோது தோழி மாளவிகா, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த கவிதைகளை வாசித்தேன். ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

நான் மட்டுமே வாசித்துச் சொல்வதோடு வந்திருந்த நண்பர்கள், அதிலும் என்னையும் என் கவிதைகளையும் நன்றாக அறிந்த நண்பர்கள் அவர்களுக்குப் பிடித்த என் கவிதைகளை வாசிக்க வைக்கலாம் என அகிலாவிடமும் பாலாவிடமும் கேட்டேன். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் என்மீது கொண்ட பிரியத்தினால் உடனே ஒப்புக் கொண்டார்கள்.

அகிலா, கருநீல முக்காடிட்ட

புகைப்படம் தொகுப்பிலிருந்து ஒரேயொரு கவிதையை மட்டும் அழுவதற்கு முன்னால் என்னும் கவிதையைத் தனக்குப் பிடித்த கவிதை என வாசித்தார். நான் எந்த மனநிலையில் இருந்து கவிதையை எழுதினேனோ அதே உணர்வைக் கவிதை வாசிப்பில் அவர் உணர்த்தினார். அந்தக் கவிதையில் மைய ஆன்மா எது என நான் நினைத்து எழுதினேனோ அந்த வரிகளைக் கூடுதல் அழுத்தமும் உணர்வும் கொடுத்து வாசித்தபோது நான் நெகிழ்ந்து போனேன். அதைவிட ஆச்சரியமும் பெருமையும் தந்தது அகிலாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு. கவிதை வரிகளை வாசித்து உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அங்கிருந்த தமிழ் அறியாத பார்வையாளர்களும் கவிதையை உணரச் செய்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அகிலா நல்ல வாசிப்பாளர். விமர்சகர். அழகுணர்ச்சி மிக்கவர் எனத் தெரியும். சில நேரம், தொலைபேசியில் ஆங்கிலத்தில் பதில் சொல்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். கவிதைகளை மொழிபெயர்க்கும் அளவுக்கான ஆங்கிலப் புலமையை அன்றைக்குத்தான் அறிந்து கொண்டேன். தமிழுக்கு நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்துவிட்டார் எனத் தோன்றியது.

அகிலா, உன்னிடம் புத்தாண்டு பரிசாக நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். பிறமொழிகளில் இருந்து ஆங்கிலம் வாயிலாக நிறைய இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழிலிருந்து அந்தளவுக்குப் பிற மொழிக்கு நமது இலக்கியங்கள் போய்ச் சேரவில்லை. நீ வாசித்தவற்றில் / வாசிப்பவற்றில் உன்னைக் கவர்ந்த, நீ சிலாகித்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்பாளராக உனது அடையாளத்தை நீ உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. நிச்சயமாக, நீ செய்வாய் என நம்புகிறேன்.

அகிலாவைப் போலவே, பாலாவும் எனது கவிதைகளில் சிலவற்றை வாசித்தார். இயல்பாகவே பாலா, கலை அழகுணர்ச்சி மிக்கவர் என்பது அவரது புகைப்படங்களைப் பார்த்தாலே எல்லோருக்கும் தெரியும். பாலாவிடம் நான் வியந்து பார்ப்பது, மனிதர்களின் இயல்பான சிரிப்பைத் தனது கேமராவில் பதிவு செய்யும் அந்தக் கலைக்கண் தான். நல்ல கேமராக் கலைஞன் என்பதைப் போல நல்ல சிறுகதை எழுத்தாளர், வாசிப்பாளர்.

அவர் ஒரேயொரு கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் முத்தங்களின் கடவுள், கருநீல முக்காடிட்ட புகைப்படம் ஆகிய இரண்டு தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்தார். மாயா கவிதைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை என்று சொன்னாலும் கூட வாசித்த சொச்ச நேரத்திலேயே எனது மாயா யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்வுக்கு வந்திருந்த ஆரோவில் நண்பர்கள் அகிலாவும் பாலாவும் வாசித்த கவிதைகளையும், வாசித்த விதத்தையும் பாராட்டிச் சொன்ன போது உச்சிமுகர்ந்து போனேன்.

என் உலகம் எப்போதும் நண்பர்களால் முழுமை பெறுகிறது. காலம் எனக்காக அனுப்பி வைத்த பிரியத்தின் சாயல் கொண்டவர்கள். 

**மனுஷி**

வியாழன், 26 டிசம்பர், 2019

சூரிய கிரகணம் எனும் ஒளிவட்டம்

குடைக்காலம் நிகழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒரு மாத காலமும் தூக்கம் சரியாக இல்லை. நிகழ்வு நல்லபடியாக முடிந்த நிறைவில் இரண்டு நாட்களாக நல்ல உறக்கம்.  உறங்காமல் இருந்த இரவின் தூக்கத்தை எல்லாம் இப்படி உறங்கிச் சமன் செய்வது என்று முடிவு செய்து விட்டபடியால் அதிகாலை 9 மணிக்குத்தான் உறக்கம் கலைந்து எழுவது என்றாகிவிட்டது.

இன்றைக்கும் அப்படியே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன். 

96 படம் பார்த்த நாளில் இருந்து எனது மொபைல் ரிங்டோன்  'காதலே காதலே தனிப்பெருந்துணையே...' தான். காதலின் நினைவுகளில் மூழ்கி எழச் செய்யும் இப்பாடல் பெரும் போதையாகத்தான் இருக்கிறது. போதை தெளிந்தே ஆக வேண்டும் என நேற்றைக்குத்தான் ரிங் டோனை மாற்றினேன். 
கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே எனத் தேடித் தேடி ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடலை வைத்திருக்கிறேன். 

காலை 9 மணியளவில் கனவுக்குள் ஓயாமல் ஒளித்துக் கொண்டிருந்தது "உன் மேல ஆச தான், ஆனது ஆகட்டும் ச்சேஞ் யு பேபி, போனது போகட்டும் ஜூ ஜூ பேபி..." இரண்டு முறைக்கு மேலாக அந்தப் பாடல் ஒலிக்கவும் கண்களைத் திறக்காமலேயே மொபைலைக் கைகளால் துழாவி எடுத்து அட்டண்ட் செய்து பேசினேன். 
ஹெலோ.... இங்க சூரிய கிரகணம் பார்த்துக் கொண்டிருக்கோம். என்ன பண்றிங்க. கிளம்பி வாங்க... தோழியும் தோழியின் மகளும் கோரஸாகச் சொன்னார்கள். 
நான் தூங்கிட்டு இருக்கேன். நீங்களே பாருங்க என்று தூக்கம் கலையாத குரலோடு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன். 
இரண்டே நிமிடத்தில் மீண்டும் உன் மேல ஆச தான் என மொபைல் சிணுங்கியது. 
இந்த முறை அழைத்தது மாளவிகா. 
மிஸ் என்ன பண்றிங்க. சூரிய கிரகணம் பார்க்கலாம் வாங்க... 
இதோ ஐந்து நிமிஷத்துல வரேன் மிஸ் என்றபடி போர்வைக்குள்ளிருந்து வெளியே வந்தேன். 

மாளவிகாவின் அழைப்புக்கு ஏதோ ஒரு மந்திர சக்தி இருக்க வேண்டும். என்னைப் பெரும்பாலும் உறக்கத்திலிருந்து எழுப்பி அந்த நாளைக்குள் இழுத்துச் செல்லும் முதல் குரல் அவருடையது தான். 

அவசர அவசரமாகப் பல் துலக்கி, முகம் கழுவிக் கொண்டு மாளவிகா வீட்டிற்குச் சென்றேன். 

இரண்டு தெரு தள்ளி இருப்பதால் ஐந்து நிமிட அவகாசம் போதுமானதாக இருக்கிறது எப்போதும். 
வாசலருகே வண்டியை நிறுத்தினால் மிகுந்த உற்சாகத்தோடு என்னை வரவேற்க அங்கே பெரும் கூட்டமே இருந்தது. 

மாளவிகா, ருத்ரா, ருத்ராவின் மகள் மற்றும் மகள், புரூஸ்லி, புல்லட் எல்லோரும் கண்கள் விரியும் ஆச்சரியத்தோடு சூரிய கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தரையில். 

மாமரத்தின் இலைகளின் நிழல்களில் வட்ட வட்டமாக சூரிய ஒளி. தென்னங்கீற்று நிழலிலும் கூட அப்படியான வட்ட ஒளி. தரையை ஒட்டி அகல் விளக்கை ஏற்றி வைத்தது போல இருந்தது. 
சிறு வயதில் எங்கள் ஊரில் சூரிய கிரகணம் வருவதற்கு முன்பே ஒரு உலக்கையைத் தயாராக வைத்திருப்பார்கள். கிரகணம் வரும் நேரம் ஒரு தட்டில் தண்ணீர் வைத்து நேராக நிற்க வைப்பார்கள். அதுவும் அப்படியே அசையாமல் நிற்கும். 
தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை வீட்டுக்குள் விரட்டி விடுவார்கள். வெளியே வரக் கூடாது எனக் கண்டிப்போடு கட்டளையிடுவார்கள் பெரியவர்கள். 
கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் போய்க் குளித்து விட்டு வர வேண்டும். அப்போது தான் சாப்பாடு. குளிக்காமல் பசிக்கிறது சாப்பிட்டுப் போய் குளிக்கிறேன் என்று சொன்னாலும் சோறு கிடைக்காது. 

தரையில் இருந்த ஒளிவட்டங்களைப் பார்த்துக்.கொண்டேயிருந்தேன். கையில் ப்ளாக் காஃபி கொண்டு  வந்து கொடுத்தார் மாளவிகா. சியர்ஸ் சொல்லி காஃபி குடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். 

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த அகல் விளக்கு போன்ற ஒளிவட்டக் குவியல் செம்மண் தரையிலிருந்து அட்டைப்பூச்சி போல மெல்ல ஊர்ந்து கொஞ்சம் மேடிட்டு இருந்த சிமெண்ட் தரை மீது ஏறி வந்தது. சீரான ஒழுங்கில் மேலே நகர்ந்து வந்த கொண்டே இருந்தது. 
அது நகர்ந்து வர வர ஏனோ உடல் சிலிர்த்தது. 

அரை மணி நேரத்தில் எல்லாம் மாறி இயல்பாகி இருந்தது தரை. 

இயற்கையின் பேரதிசயங்கள் நினைவுகளில் வந்தமர்கையில் வாழ்க்கை பேரழகாகிறது.

திங்கள், 9 டிசம்பர், 2019

ஊர் திரும்பிய பறவை - மனுஷி



நம் வாழ்க்கையில் காலம் ஆடும் ஆட்டத்தில் சீட்டுக் கட்டுகளைப் போல நாம் களைத்துப் போட்டுத் திரும்ப அடுக்கி வைக்கப்படுகிறோம். எப்போது எங்கே காணாமல் போகிறோம், எப்போது மீட்டெடுக்கப்படுகிறோம், எங்கே யாரைத் தொலைக்கிறோம் என்பதெல்லாம் புரியாத புதிர். இந்த விசித்திர விளையாட்டில் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தைத் தொடர்வது கொஞ்சம் அரிதுதான்.

பத்தொன்பது ஆண்டுகள் காணாமல் போய் மீண்டும் திரும்பி வரும்போதுதான் எவ்வளவு மாற்றங்கள்.

என் சொந்த ஊருக்குப் போகாமல் இருந்த பத்தொன்பது ஆண்டுகளில் நான் படித்த பள்ளிக் கூடத்தைப் போலவே என் கனவில் வரும் இன்னொரு இடம் திருநாவலூர் சிவன் கோவில்.

என் சிறு வயது ஞாபகங்களில் எப்போதும் மறக்க முடியாத இடங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.

திருநாவலூர் அரசுப் பள்ளியில் சந்திக்கத் திட்டமிட்டபடி தோழி ஜீவா மற்றும் பார்வதியைச் சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக அமர்ந்து படித்த மரத்தடி, விளையாடிய மைதானம், வகுப்பறை என எல்லாவற்றையும் பார்த்து, அந்தப் பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கித் திளைத்துப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம். பார்வதி விருதாச்சலத்திற்கும், ஜீவா கடலூருக்கும் நான் பாண்டிச்சேரிக்கும் செல்ல வேண்டும். பார்வதியைப் பஸ் ஏற்றிவிட்டு, ஜீவாவுடன் வண்டியில் புறப்பட்டேன். கடலூரில் அவளை இறக்கிவிட்டு, பிறகு பாண்டிச்சேரி செல்ல வேண்டும் நான்.

அங்கிருந்து கிளம்பும்போதே திருநாவலூர் சிவன் கோவிலுக்குப் போய்ப் பார்க்கலாம் என முடிவு செய்தோம்.

மெயின் ரோட்டிலிருந்து கோயிலுக்குச் செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பும்போதே எனக்குள்ளிருந்த பள்ளிச் சிறுமி துள்ளிக் குதித்தபடி கோயிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.

கோயிலுக்கு முன்னாள் எப்போதும் செம்மாந்து நிற்கும் தேரை அங்கே காணவில்லை. வண்டியை நிறுத்திவிட்டுச் செறுப்பைக் கழட்டி வண்டியின் அருகில் வைத்துவிட்டுக் கோயில் கோபுரத்தைப் பார்த்தேன். சிறு வயதில் பார்த்தபோது மிக உயரமாகக் காட்சியளித்த அந்த முகப்புக் கோபுரம் கொஞ்சம் குள்ளமாகத் தெரிந்தது. நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேனா எனத் தெரியவில்லை.

கோபுரத்தின் முன்னால் நின்று வணங்கிவிட்டுச் சென்று விடலாம் என நினைத்தோம். இவ்வளவு தூரம் வந்தாச்சு. நாம விளையாடிய இடம். உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் எனச் சென்றோம்.

அப்போதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடம் முடிந்ததும் முகம் கைகால் கழுவி, பள்ளிச் சீருடையை மாற்றிக் கொண்டு பயபக்தியோடு கோவிலுக்குக் கிளம்பிவிடுவோம். வீட்டிலிருந்து பதினைந்து அல்லது இருபது நிமிடம் நடந்தால் சிவன் கோயில். அப்போதெல்லாம் இடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டு நடந்ததில்லை. இப்போதுதான் கடிகார முட்கள் நம்மை நூல் பொம்மைகளைப் போல ஆட்டுவிக்கிறது.

கோவிலுக்குள் நுழையும்போதே வெண்கலத் தகடு பொறிக்கப்பட்ட அகண்ட படியைத் தொட்டு வணங்கியபடி உள்ளே தாண்டிச் செல்வோம். அந்தப் படியை மிதிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.

உள்ளே சென்றதும் முதலில் பிள்ளையார் சன்னதிக்கு முதல் தரிசனம். பிறகு உள்ளே இருக்கும் சிவலிங்க தரிசனம். கருவறையிலிருந்து வரும் வாசம் அது அலாதியானது. இப்போதும் கூட சாமி கும்பிடும் பழக்கம் இல்லை என்றாலும் முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்குச் செல்லும்போது கருவறை வாசனைக்காகவே அங்கே சென்று கைகூப்பி நின்று கொள்வதுண்டு. மேலும் கோயிலின் உள்ளிருக்கும் குளுமையும் அமைதியும் எப்போதாவது கேட்கும் டிங் எனும் மணியோசையும் – அதுதான் நாம் உணர வேண்டிய தெய்வீகம் எனத் தோன்றுகிறது இப்போது.

கருவறை சிவனைத் தரிசித்த பிறகு, பிரகாரத்தைச் சுற்றிவர வேண்டும். இடது புறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகள் இருக்கும். ஒவ்வொரு சிலையையும் பயபக்தியோடு தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே செல்வோம். அந்த வயதில் நாயன்மார்களின் வரலாறு எதுவும் தெரியாது. பி.ஏ. மூன்றாம் ஆண்டு பக்தி இலக்கியம் படிக்கும்போது தான் எங்கள் ஊரின் வரலாற்றுச் சிறப்பு எனக்குத் தெரிய வந்தது. நாயன்மார்களின் வரலாறும் அவர்களின் இலக்கியப் புலமையும் கூட. இப்போதெல்லாம் என்னுடைய ஊரைப் பற்றிக் கேட்கும்போது பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பிறந்த ஊர் எங்கள் ஊர் என.

இந்தக் கோயின் வரலாறு எதுவும் தெரியாமல் இருந்த பால்யகாலமும் கூட பேரழகுதான்.

நாயன்மார்களுக்கு அடுத்து தட்சணாமூர்த்தியை வணங்கிவிட்டு அடுத்துச் சென்றால் சண்டிகேசுவரர் சன்னிதி. அவருக்குக் காது கேட்காது என்பதால் விரல் சொடுக்கி அல்லது இரு கைகளைத் தட்டிச் சத்தமெழுப்பிய பிறகுதான் வணங்க வேண்டும். யார் எப்போது உருவாக்கிய கதை எனத் தெரியவில்லை. அது உண்மையா இல்லையா என்று கேட்கத் தோன்றியதில்லை. இப்போது என்றாலும் கதையின் உண்மைத்தன்மை என்ன ஏது என ஆராய்ந்திருக்கலாம். கேள்வி கேட்பதற்குப் பழக்கப்படுத்தப்படாத காலம் ஒன்று எல்லோருக்கும் இருந்திருக்கும். இன்னமும் கூட சிலருக்கு அது தொடரும். அதைத் தாண்டி வரும்போது புதிய தரிசனங்களைப் பெற முடியும்.

அதற்கடுத்து துர்கையம்மன். துர்கையம்மன் சன்னதி முன்பு ஒரு வட்டல்க்கல் இருக்கும். அதன்மேல் சிறிய கல் ஒன்று இருக்கும். நாம் பக்தோடு மனதில் ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கல்லின்மீது கையை அழுத்தி வைத்தால் அந்தக் கல் தானாகச் சுற்றும் என்று சொல்வார்கள். நெற்றி நிறைய திருநீறு குங்குமத்துடன் மனதில் வேண்டுதலை எண்ணிக் கொண்டு கல்லின் மீது கை வைத்து முயற்சித்திருக்கிறோம். ஒருமுறைகூட கல் சுற்றியதாக நினைவில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறை நாங்கள் விடுவதாக இல்லை. கல் என்றாவது ஒருநாள் சுற்றும். வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடுதான் வீடு திரும்பியிருக்கிறோம். பெரியவர்களின் வேண்டுதல் எப்படியோ அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

பிரகாரத்தைச் சுற்றி முடித்தபின், மனோன்மனியம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலுக்கு உள்பக்கம் உள்ள கோயில் அது. அம்மன் எப்போதும் சிவப்புப் பட்டாடையில் கருத்த சிலையழகுடன் சாந்தமாகக் இருக்கும். அம்மன் கோயிலுக்கு அடுத்து, பெருமாள் கோயில். எனக்குத் தெரிந்து சிவன் கோயிலுக்குள் ஒரு பெருமாள் கோயில் என்பதை வேறேங்கும் பார்த்ததில்லை. பெருமாள் எப்போதும் முழு அலங்காரத்துடன் அழகாக இருப்பார். அலங்காரத்தை விடவும், பெருமாளை விடவும் அய்யர் தருகிற அந்தத் தீர்த்த தண்ணீர்மீது தான் அலாதியான பக்தி. உள்ளங்கையில் பித்தளை ஸ்பூன் பட்டுவிடாமல் தருகிற தீர்த்தத் தண்ணீரை வாயில் ஊற்றிக் கொண்டு, மிச்ச ஈரத்தை உச்சந்தலையில் தடவிக் கொண்டபின், அவர் தரும் துளசியில் சிலதையும் வாயிலும் மிச்சமிருக்கும் இலையுடன் கூடிய காம்பைத் தலையிலும் செருகிக் கொண்டபின், பெருமாளில் கிரீடத்தைத் தலையில் வைத்துவிடும் அந்த நொடிக் கணம் மட்டும் பெருமாளைப் போல நினைத்துக் கொள்வேன்.

சிவன் கோயிலில் இதெல்லாம் விட சிறப்பான சம்பவம் சிவலிங்கத்தைப் பார்த்தபடி இருக்கும் நந்தி சிலை தான்.

நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதலைச் சொன்னால் இரவில் உலக உயிர்களுக்குப் படியளந்து விட்டு வரும் சிவன் பார்வதியிடம் நந்தி போய் சொல்லிவிடுவார் என்று எப்போதோ ஒருமுறை சொல்லியிருந்தார்கள். கூடவே, நமது வேண்டுதலைச் சொல்லும்போது நந்தியின் காது மடலில் கை படாமல் சொல்ல வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். அப்போது நான் கொஞ்சம் குட்டியாக இருந்ததால் நந்தியின் காது எட்டாது. எனது மடித்து அமர்ந்திருக்கும் நந்தியின் முன்னங்கால் மீதேறி நந்தியின் காதில் என்னுடைய பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டு, ஈஸ்வரனிடம் சொல்லிடு என்று சொல்வேன். அந்த வயதில் என்னுடைய பிரார்த்தனைகள் மிக மிகச் சிறியவை. என்ன பிரார்த்தனைகள் என்பது நானும் நந்தியும் மட்டுமே அறிந்த ரகசியம். சிவனுக்கும் பார்வதிக்கும் கூட தெரியுமா எனத் தெரியவில்லை. என்றாவது ஒருநாள் அவர்களும் நீங்களும் அறிந்து கொள்ளக் கூடும்.

இப்படியாக எங்களின் வெள்ளிக்கிழமை மாலைப்பொழுது சிவாலயத்தில் சென்று நீளும். கோயிலில் இருந்து வெளியே வந்ததும் அவசர அவசரமாக சித்தி சீரியல் பார்க்கக் கிளம்புவோம் என்பது தனிக்கதை.

வெள்ளிக்கிழமை மட்டும் தான் வழிபாடு, பக்தி, பிரார்த்தனை எல்லாம். விடுமுறை நாட்களில் நாங்கள் விளையாடும் இடமும் அந்தக் கோயில் தான்.

அதிலும் சிவனுடைய பிரகாரத்திலிருந்து மனோன்மணி அம்மன் சன்னதி செல்லும் வழியில் ஒரு பெரிய நாவல்மரம் இருக்கும். அந்த நாவல் மரத்தில் பழம் உலுக்கிப் பொறுக்கித் தின்பது பேரனுபவம். பகல் நேரங்களில் கோயிலின் பெரிய முன்கதவைப் பூட்டிவிடுவார்கள். பெரிய கதவுக்குள் இருக்கும் சதுர வடிவிலான குட்டிக் கதவின் வழியே அய்யருக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்து மரத்தில் பழம் உலுக்கிக் கொண்டு வருவோம்.

ஒருமுறை நாங்கள் அப்படி பழம் உலுக்கிக் கொண்டிருந்தபோது அய்யர் வந்துவிட்டார். பசங்களா இந்த நாவல் மரத்தடியில் ஐந்து தலை நாகம் ஒன்னு இருக்கு. அது கடிச்சிட்டா நான் பொறுப்பில்ல என்று சொன்னபடி எங்களை விரட்டிவிட்டார். உண்மையாகவே அங்கே ஒரு ஐந்து தலை நாகம் மரத்தைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருந்தேன்.
ஞாபகங்களை நாவல் பழமென நினைவுக் கிடங்கிலிருந்து ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே இருந்தது.

சிறு வயதில் பார்த்த பரந்து விரிந்த அந்த நாவல் மரம் இப்போது இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் இடிவிழுந்து மரம் இரண்டாகப் பிளந்து கொண்டது என ஜீவா சொன்னாள். அதே இடத்தில் சதுரமான சிமெண்ட் திண்ணையின் நடுவில் சிறுவனைப் போல ஒரு நாவல் மரம் செழித்து நின்றிருந்தது. அதன் நிழலில் ஒரு சிவலிங்கம். மரத்தில் கோயிலின் தலவிருட்சம் என எழுதி வைத்திருந்தார்கள்.

அந்த மரத்தை மட்டும் ஒரேயொரு புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

சிறு வயதில் பழம் உலுக்கிப் பாவடையில் பொறுக்கி எடுத்துக் கொண்டோடும் சிறுமி ஒருத்தி எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

**மனுஷி**