கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்குப் பிரியா விடையளிக்கும் விழா இன்று.
கல்லூரி எங்கும் வானவில் போல வண்ண வண்ண உடைகளில் மாணவிகள். ஒப்பனை செய்து நடந்து வரும் மலர்க் கூட்டங்கள் போல அங்கும் இங்கும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துறையிலும் வண்ண மின்விளக்குகள் ஒளிர பாட்டும் சிரிப்பும் ஆட்டமும் என கொண்டாட்டத்தின் சாயல். கேம்பஸ் முழுக்க குரூஃபிக்கள். செல்ஃபிக்கள். அழகழகாய் படம் பிடித்துக் கொண்டார்கள்.
கல்லூரியில் மாணவிகளைப் பார்த்தவுடன் நான் படித்த பாரதிதாசன் கல்லூரியின் நினைவில் கரைந்து போனேன். எனது கல்லுரி வளாகத்தில், நான் படித்த வகுப்பறையிலும், அதிக நேரம் செலவிட்ட கல்லூரி நூலகத்திலும் மனம் சென்று அமர்ந்து கொண்டது.
கல்லூரி வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படியான கலாட்டா நினைவுகள் எனக்கு எதுவும் இல்லை. வகுப்பறை, வகுப்பறை விட்டால் நூலகம், கல்லூரி முடிந்தவுடன் வீடு. இவ்வளவு தான் மூன்று ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கையும் கடந்து போனது. படிக்கனும். படிக்கனும். படிக்கனும். இதைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தக் கூடாது என எனக்கு நானே தூக்கிச் சுமந்த சிலுவைக்காலம்.
பாரதி மகளிர்க் கல்லூரியில் மாணவிகளைப் பார்க்கும்போது, அவர்களது குறும்புகளைப் பார்க்கிறபோது கல்லூரி வாழ்க்கையின் கலாட்டாக்கள், குறும்புகள் இதையெல்லாம் தவற விட்டதற்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.
என் வகுப்பில் உள்ள எல்லாருமே என்னிடம் நன்றாகப் பேசுவார்கள் என்றாலும் அது படிப்பு சம்பந்தமானதாக மட்டும் தான் இருக்கும். முதல் பெஞ்ச் என்பதால் அரட்டைக் கச்சேரிகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் கடைசி பெஞ்ச்காரிகள். அவ படிப்ஸ் பா. அவளை வச்சிக்கிட்டு பேச முடியாது என்று நக்கலடிப்பார்கள். நானும் நகர்ந்து விடுவேன்.
ஆனாலும் முதல் பெஞ்சில் என்னோடு அமரும் ஷீலா, லலிதா, ரமணி, ஜெயபாரதி, தனலட்சுமி - இவர்களோடு மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கொஞ்சம் சினேகம் அதிகமானது. கேண்டீன் போய் கட்லட் சாப்பிடும் அளவுக்கான சினேகம் மட்டுமே. மற்றபடி எங்கள் உரையாடல்கள் பாடம் சம்மந்தமானதாக மட்டும் தான் இருக்கும்.
கல்லூரியின் இறுதிப் பருவம் நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமாக மனசுக்குள் பிரியப் போகும் துயரம் வந்து ஒட்டிக் கொண்டது.
ஏற்கனவே ஷீலா வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ரமணியும் அந்த லிஸ்ட்டில் இருந்தாள். லலிதாவுக்கும் அதே நெருக்கடி. தனலட்சுமி பி எட் படிப்பது என முடிவு செய்திருந்தாள். எனக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்பதில் எந்த முன்முடிவும் இல்லை. பி.ஏ. படிக்கும்வரை என் வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்கும் உரிமை என்னிடம் இருக்கவில்லை.
எதிர்பார்த்தது போல farewell விழா நாள் நெருங்கியது. எப்போதும் போலவே கல்லூரிக்கு வந்தோம். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக வகுப்பறையில் அமர்ந்திருந்தோம். மதிய உணவுக்குப் பிறகு செமினார் ஹாலில் விழா. ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வாழ்த்திப் பேசினார்கள். மூன்றாம் ஆண்டு மாணவிகள் பற்றி ஜூனியர்ஸ் பேசினாங்க. கடைசியாக பேச விருப்பம் உள்ள மூன்றாம் ஆண்டு மாணவிகள் பேசலாம் என்ற போது யாரும் முன்வரவில்லை. கடைசி பெஞ்ச்காரிகள் கண்கள் குளமாகி இருந்தன. நான் முதலில் போய் பேசினேன். பிறகு இன்னும் இரண்டு மூன்று பேர் பேசினார்கள். இனிப்பு, மிக்சர், தேநீர் இவற்றுடன் விழா நிறைவு பெற்றது.
இப்போது இருப்பது போல் செல்போன்கள் இல்லை. அதனால் நோ செல்ஃபி. நோ குரூஃபி. கட்டி அணைத்து விடை பெற்றோம். எல்லாரும் என்னிடம் சொன்ன வார்த்தை " பாரதி, உன் பேரை எல்லாரும் சொல்ற மாதிரி பெரிய ஆளா வரனும். அப்போ நாங்க கூட இருக்கமோ இல்லையோ தெரியாது. எங்க ஞாபகத்துல நீ இருப்ப" என்று. அந்த வார்த்தைகளை இப்போது நினைத்து நெகிழ்ந்து போகிறேன்.
அதன்பிறகு கடைசியாக, வகுப்பறையில் எங்க பெஞ்சில் போய் அமர்ந்து ஆசை தீர அழுதோம். இதுதான் கடைசி. இதுதான் கடைசி என்பதைத் தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை.
அந்த நிமிடம் சட்டென்று முடிவெடுத்து நாம ஏன் இன்னைக்கு ஒருநாள் பீச் போகக் கூடாது என்று ஷீலா கேட்டாள். மூன்று வருடத்தில் எங்குமே போனதில்லை. இன்றைக்குப் போய் தான் பார்ப்போம். பிறகு வீட்டில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டோம்.
மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் முதல் முறையாக பீச் போனோம். ஐஸ் க்ரீம் சாப்பிட்டோம். சுண்டல் வாங்கினோம். கொஞ்சம் வாயில் போட்டது போக மீதி சுண்டலை ஒவ்வொன்றாக யார் தூரமாக எறிகிறார்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு கடலை நோக்கி எறிந்தோம். பாறைகளில் மோதிச் சிதறும் அலைகளினூடாகத் தெரிந்த வானவில்லை ரசித்தோம்.
அன்றைக்கு மார்ச் 22. நாங்க ஆறு பேரும் ஒரு முடிவெடுத்தோம். நாம் அடிக்கடி மீட் பண்ணிக்க முடியல என்றால் கூட ஒவ்வொரு வருடமும் யார் எங்க இருந்தாலும் மார்ச் 22 அன்று நாம இதே பீச்ல மீட் பண்ணலாம். யாரும் மிஸ் பண்ணக் கூடாது.
கொஞ்சம் சினிமாத்தனமாக இப்போ தோனுது. ஆனால் அப்போ அது மிகப்பெரிய கனவு. திருமணம் ஆகிவிட்டால் பெண்கள் இப்படியான கனவுகளைச் சமையலறைக்குள் பூட்டி வைத்து விட வேண்டியதுதான் என்பது அப்போது புரியவில்லை. கணவன், குடும்பம், குழந்தை எனச் சுருங்கிப் போய்விடுவார்கள் என்பது புரியவில்லை.
தேர்வு முடிந்தபிறகு மதிப்பெண் சான்றிதழ் & மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காகச் சந்தித்தோம் மீண்டும். அதன்பின் ஷீலாவின் திருமணத்தில் எல்லாரையும் பார்த்தேன். அந்தத் திருமண மண்டபத்தில் பார்த்து பேசி சிரித்து கைகுலுக்கிப் பிரிந்து சென்றதோடு சரி. ஒவ்வொருத்தரும் எங்கோ ஒரு ஊரில் திருமணமாகிப் போய் விட்டார்கள். ஷீலா மட்டும் பாண்டிச்சேரியில் இருப்பதால் அவளை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று எந்தத் தகவலும் இல்லை. அவரவர் குடும்பம். அவரவர் குழந்தைகள். அவரவர் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.
நான் மட்டும் தனியளாய் அவர்களின் நினைவுகளோடு.
இப்போது என் வாழ்க்கையை நான் என் விருப்பப்படி வாழ்கிறேன். அதனால் ஒவ்வொரு மார்ச் 22 அன்றும் மறக்காமல் பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போய் அந்தப் பாறைகளின்மீது அமர்ந்து வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன். அந்த நாளின் பசுமையான நினைவுகள் அலைகளாக உருத்திரண்டு வருகின்றன என்னை நோக்கி.
பெண்களின் நட்பை தண்ணீரில் எழுதிய எழுத்தாகத்தான் எல்லாத் தலைமுறைப் பெண்களும் அனுபவித்திருக்கிறோம். இன்றும் அது தொடர்வது வேதனை. பள்ளி, கல்லூரி கால தோழிகளின் அணுக்கம் நினைவுகளில் மட்டுமே.
பதிலளிநீக்குநன்றியும் அன்பும் அம்மா.
நீக்குகல்லாரி வாழ்க்கை அது ஒரு கனாக்காலம் என்பதெல்லாம் சென்று இந்த வருட மூன்றாம் ஆண்டு மாணவிகளின் கல்லூரி வாழ்க்கை கனவாகவே முடிந்து விட்டது எதிர்பார்த்த நாட்கள் கழிந்தது செல்கின்றன �� தனிமையில் ஒவ்வொரு மாணவிகளும்
பதிலளிநீக்குஇப்படிக்கு பாரதியின் மாணவி
பதிலளிநீக்கு