செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மாணிக் பாட்சாவும் ப்ரியாவும்

கரண்ட் பில் கட்ட கடைசி தேதி என்று வேகவேகமாகப் போனால் சிஸ்டம் சரியில்லை. ஆன்லைனில் கட்டுங்க என்று சொல்லிவிட்டார்கள். (கம்யூட்டர் சிஸ்டம் தானுங்க சரியில்லையாம்).

சரி வீட்டு வாடகைக் கொடுத்து விடலாம் என்று வீட்டு ஓனருக்குக் கால் பண்ணால் அவர் வெளியூரில் இருக்கேன் நாளை மாலை வந்து கொடுங்க என்று சொல்லிவிட்டார். என்னடா இது சோதனை?

வங்கி வேலையையாவது முடிக்கலாம் என்று நானும் தோழியும் வங்கிக்குக் கிளம்பினோம். ஏடிஎம் கார்டு தொலைஞ்சு போய் ஒன்றரை மாதம் ஆகியும் கல்லூரியில் விடுமுறை கிடைக்காததால் கார்டை பிளாக் செய்ததோடு சரி. பணம் தேவைப்படும்போது செக் புக்கைக் கொண்டு போய் பணம் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போ செக் புக்கும் காலி ஆகிவிட்டது. வேறு வழியே இல்லை. கிடைத்த இரண்டு நாள் விடுமுறையில் வங்கி வேலையை முடிப்பது என முடிவு செய்தேன். எனது வங்கிக் கிளையில் ஏடிஎம் கார்டுக்காக ஒரு லெட்டர் கொடுத்துவிட்டு செக் புக் ஒன்று வாங்கி வரலாம் என்று போனால் இன்றைக்கு முடியாது நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

திங்கள் கிழமையில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்று திட்டமிட்ட எதுவுமே செய்ய முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா... பாடலைப் பாடிக் கொண்டே மதிய உணவு சாப்பிடக் கிளம்பினோம். சுவையான பீஃப் பிரியாணியும் வறுத்த மீனும் மீன் போண்டாவும் சாப்பிட்டு முடித்த பின் உருப்படியா ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஆரோவில்லுக்குள் ஒரு ரவுண்டு போகலாம். மாலை நேரத் தேநீரை அங்கே குடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பினோம்.

தோழி கேமாரவும் கையுமாகக் கிளம்பினார். ஆரோவில்லில் உள்ள தாமரைக்குளம் அருகில் பைக்கைப் பார்க் செய்து விட்டு பக்கத்தில் இருந்த தேநீர்க் கடையில் டீ இருக்கா அண்ணா என்று கேட்டால் ஒரு பத்து நிமிடம் ஆகும் என்றார். இது சரிப்பட்டு வராது என்று, பத்தடி தூரத்தில் ஒரு பாட்டி மலர்ச்செடி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் இளநீர் இருந்தது. இளநீர் குடிக்கலாம் என்று நல்ல வழுக்கையாக இரண்டு இளநீர் சொன்னோம். சீவிக் கொடுத்த இளநீரை வாங்கிக் கொண்டு குளக்கரையின் மீதமர்ந்து குடித்தோம்.சுவையான இளநீர் மாலை வெயிலுக்கு இதமாக இருந்தது.

இளநீர்க் குடித்து முடித்ததும் எங்கள் அருகில் நீண்டு வளர்ந்த காதுகளும் மை பூசியது போல கறுத்த விழிகளும் கொண்ட இரண்டு நாய்க்குட்டிகள் வந்தார்கள். அவர்களோடு இரண்டு நிமிடம் தான் பேசி இருப்போம். அதன்பின் இரண்டு பேரும் எங்களை விட்டுப் போகவேயில்லை.

தோழி, கேமராவை வெளியில் எடுத்து, குளத்தருகில் போய் நீரில் அலையும் புற்களின் நிழலைப் படமெடுத்தார். தாமரை இலைகளை, தாமரை மலரை, நீர் அருந்த வந்த பறவையைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பின் தொடர்ந்து வந்த நாயாரில் ஒருவர், தோழி படமெடுப்பதை உடனிருந்து மேற்பார்வையிட்டார். இன்னொருத்தர் என்னருகில் அமர்ந்து கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கழுத்தையும் காது மடலையும் தடவிக் கொடுக்க, காலருகில் சொக்கிப் படுத்து விட்டார்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. செவ்வானத்தின் பேரெழில் குளத்து நீரில் படரத் தொடங்கியபோது கிளம்பலாம் என்று மேலேறி வந்தால் இரண்டு நாயாரும் உடன் வந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் சூடா இரண்டு டீ சொன்னோம்.

இரண்டு நாயாரும் பக்கத்தில் வந்து விளையாடத் தொடங்கிவிட்டன. கடையில் இருந்து இரண்டு மில்க் பிக்கிஸ் வாங்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்து, கையை உயர்த்திப் பிடித்தால் எக்கி எக்கி வாயில் கவ்விக் கொண்டன. அது விளையாட்டைப் போலவே இருந்தது எங்களுக்கு.

இரண்டு நாயாரும் ஒரே மாதியான வெள்ளை நிறம். வெள்ளை நிறத்தில் அங்கங்கே பிஸ்கட் நிறம் ஒழுங்கற்ற வட்ட வடிவில் இருந்தது. அதில் ஒருவர் ஆண். ஒருவர் பெண். ஆண் நாயார் கொஞ்சம் உடல் வளர்த்தியாகவும், பெண் நாயார் அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவாகவும் இருந்தது. தேநீர்க் கடை அம்மாவிடம் இவங்களை யாரும் வளர்க்கறாங்களா என்ன பேர் என்று கேட்டேன். யாரும் வளர்க்கல மா. இங்க தான் சுத்திட்டு இருக்கும் என்றார்.

கிளம்புவதற்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்று யோசித்தோம். ஹேய் உனக்கு என்ன டா பேர் வைக்கலாம். உன் பேர் என்ன டா என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த வழியாக ஒரு ஆட்டோ கடந்து போனது. இவனுக்கு மாணிக் பாட்சா என்று பெயர் வைப்போமா.. கொஞ்சம் ஸ்டைலா இருக்கானே என்றேன். உடனே தோழியும் ஒப்புக் கொண்டார். டேய் மாணிக் பாட்சா. இந்தப் பேர் சொல்லிக் கூப்பிட்டால் வரனும். சரியா? என்றோம். எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக் பாட்சா. வந்து கையை நக்கி அன்பைச் சொன்னார்.

இவருக்கு மாணிக் பாட்சா என்று பெயர் வைத்தாகிவிட்டது. அவரது காதலி பெயர் என்ன? யோசித்துப் பார்த்தால் மாணிக் பாட்சாவின் காதலி பெயர் நினைவுக்கு வரவில்லை. ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸ்டைலு இந்த ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான் என்ற பாட்டு மட்டும் தான் நினைவுக்கு வந்தது. பாட்சாவின் வாழ்க்கையில் காதலி கமர்சியல் காரணங்களுக்காகத்தானே உருகி உருகிக் காதல் செய்பவளாக வருகிறாள். அல்லது அப்படியாக உருவாக்கப்படுகிறாள். அவளுக்குப் பெயரா முக்கியம். இந்த யோசனைகளூடே இருந்தபோது ஐ திங்க் பிரியா.. கேரக்டர் நேம் என்றார் தோழி. சரி இவளுக்கு ப்ரியா என்றே பெயர் வைப்போம் என்று முடிவு செய்தோம். மாணிக் பாட்சாவுக்கும் ப்ரியாவுக்கும் இந்தப் பெயரில் உடன்பாடு இருக்கும் என்றே நம்புகிறோம்.

காதலர்களுக்கு விடை கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

மாலைப்பொழுதுக்குள் இருந்த இரவு கண்விழிக்கத் தொடங்கியது.

4 கருத்துகள்: