தியேட்டரில் படத்தின் பெயர்களைத் திரையில் பார்க்கும்போது நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், ஒளியமைப்பாளர் இவர்கள் பெயர்களை மட்டும் தான் பார்த்து மனதில் இருத்திக் கொள்வேன். அதைத்தாண்டி, கதையைக் கவனிப்பதுண்டு. சினிமாவை ரொம்ப தொழில்நுட்பம், குறியீடு, கோட்பாடு என்றெல்லாம் பார்க்கும் அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஒரு திரைப்படத்தில் மேலே சொன்னவர்களைத்தவிரவும் படத்தில் பங்காற்றுகின்ற கலைஞர்களை மிகச் சமீபமாகத்தான் கவனிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா இவர்கள் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் (2013) பெயர் போடும்போது கவனித்தேன். இரண்டு ஆச்சரியங்களும் அதிர்ச்சியும். ஒன்று தனுஷ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம். இரண்டாவது பாடலாசிரியர் வாலி, Poetu தனுஷ். படம் பார்ப்பதற்கு முன்பே எஃப் எம்மில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எதிர் நீச்சலடி, வென்று ஏத்துக் கொடி, அட ஜாலியா வாலி சொன்னபடி... என்ற பாடலும், ஓஹோ மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாயே என்ற பாடலும் அடிக்கடி கேட்டு வரிகள் எல்லாம் மனப்பாடம் ஆகியிருந்தது. ஜப்பானில் பிறந்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே.. என்ற வரியில் லயித்துப் போய் அமர்ந்திருந்தேன். சொல்லப் போனால் இந்த வரிக்காகத்தான் எதிர்நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும் என்று போனதே.
அந்தப் படம் பார்த்தபோது Poetu தனுஷ் என்பதைப் பார்த்து, தனுஷ் பாடல் எழுதுகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன்பே பாடல்கள் எழுதி அவர் பாடலாசிரியராக ஆகிவிட்டார் என்பது எனது கவனத்திற்கு வராமலே போய்விட்டது. அவரே படத்தைத் தயாரித்து, அவரே பாடல் எழுதி, அவரே பாட்டும் பாடி, அவரே வந்து ’சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ என்று ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிவிட்டும் போவதெல்லாம் சாதாரண விசயமல்ல.
ஆனாலும் கூட, நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே பாடலின் வரிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அதன்பிறகு தனுஷ் என்ன பாடல் எல்லாம் எழுதி இருக்கிறார் என்று ஒரு பட்டியல் எடுத்தேன்.
3 படத்தில் எனக்குப் பிடித்த கண்ணழகா காலழகா பாடல்,, போ நீ போ பாடல், நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் பாடல் என நான் மெய் மறந்து ரசிக்கும் பாடல் வரிகளை தனுஷ் தான் எழுதி இருக்கிறார். ’இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…இருளில் தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணும் விதி இல்லையா… என்ற வரியை மனதுக்குள் பலமுறை முணுமுணுத்திருக்கிறேன். ஒய் திஸ் கொலவெறி பாடலைக் கேட்கும்போது மனசுக்குள் இதெல்லாம் ஒரு பாட்டா என கொலவெறி வருவது தனிக்கதை.
வேலையில்லா பட்டதாரி படத்தில் அட ஊதுங்கடா சங்கு பாடலையும், ஹேய்.. இங்க பாரு கூத்து ஜோரு பாடலையும், ஏ சுட்ட வட போச்சு டா வாட் ய கருவாட் பாடலையும் ஒரு ஜாலி மனநிலையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒதுக்கித் தள்ளிவிடாதபடி ஏதோவொரு மேஜிக் இந்த மூன்று பாடல்களிலும் இருக்கிறது. அனிருத்தின் துள்ளல் இசை காரணமாக இருக்கலாம்.
அதே படத்தில் அம்மா அம்மா பாடல் பல நேரங்களில் என்னை நெகிழ்ந்து அழச் செய்திருக்கிறது. பகலும் இரவாகி பயமானதே அம்மா. விளக்குன் துணையின்றி இருளானதே என்ற வரிகளில் தான் எத்தனை உண்மை.
இப்படியே தனுஷ் எழுதிய பாடல்களின் பட்டியலில் பிறை தேடும் இரவிலே உயிரே எனைத் தேடி அலைகிறாய் பாடலும் இணைந்து கொண்டது ஆச்சரியம். நான் அடிக்கடி கேட்டும் பாடல்களில் ஒன்று இந்தப் பாடல். சைந்தவியின் குரலுக்காகவும் இந்த வரிகளுக்காகவும் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் இரவில் தூங்கச் செல்லும்போது கேட்கும்போது இருக்கும் சுகமே தனிதான்.
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்தச் சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
Pirai Thedum- MAYAKKAM ENNA HD - www.Tamilsweet.net
இப்படிச் சொல்லும் ஓர் இதயம் தானே காதலின் தொடக்கம்.
தனுஷை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராகவும் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக