வியாழன், 19 ஏப்ரல், 2018

நட்புக்கு வயது தடையில்லை

மாலை மூன்று மணி. மெரினா சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காலியாக இருந்தது. இடது புறம் நீல நிறக் கடல். பரந்து விரிந்த மணற்பரப்பு.

உச்சி வெயிலின் போது தோன்றும் கடலின் நீல வண்ணத்திற்குக் கூடுதல் அழகு.

காமராஜ் சாலை வழியாக வடபழனி செல்ல வேண்டும் என்பது எனது திட்டம். வழி தவறிய ஆட்டுக்குட்டியாக இல்லாமல், முடிந்தவரை யாரிடமும் வழி கேட்காமல் செல்வதற்கு முயற்சி செய்தேன்.

அந்த வழி கொஞ்சம் பழக்கமான வழி தான். கல்லூரியில் இருந்து கிளம்பும் போது இரண்டு முறை கரன் கார்க்கி தோழர் வண்டியில் அமர்ந்து சாலையின் இருபுறமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் தூரம் தள்ளி, கொஞ்சம் தூரம் தள்ளி ஓரமாக நிற்கும் ஆட்டோக்காரர்களிடம் மூன்று முறை வடபழனி செல்ல வழி கேட்டுத்தான் போனேன்.

சில சமயம் ஆட்டோக்காரர்கள் சொல்லும் வழியைப் பின்பற்றிப் போனால் சுத்துதே சுத்துதே சென்னைனு சுத்திக் கொண்டே இருப்பேன்.. போய்ச் சேர வேண்டிய இடத்தைச் சேர மாட்டேன். (அப்படிச் சுற்றி அலைந்த கதையைத் தனியாக எழுதலாம். அவ்வளவு கதை இருக்கிறது.)

ஆனால் இந்த மூன்று ஆட்டோக்காரர்களும் சொன்ன வழி பெரிய சுத்தலில் விடவில்லை. மிகச் சரியாக ஜெமினி பாலம் வரை சென்று விட்டேன். அதன்பின் எனக்கே வழி தெரிந்தது.
சென்னையில் எனக்கும் கூட வழி சரியாகத் தெரிகிறதே என்கிற பெருமிதத்தோடு வள்ளுவர் கோட்டத்திற்குச் செல்லும் சாலையின் இடப்புறம் திரும்பினேன். வளைவில் ஐந்து பள்ளி மாணவர்கள் லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பாண்டிச்சேரியில் இப்படி மாலை நேரங்களில் சாலையோரங்களில் நின்று கொண்டு பள்ளி மாணவர்கள் லிஃப்ட் கேட்பார்கள். பல நேரங்களில் லிஃப்ட் கொடுத்திருக்கிறேன். சின்ன சின்ன சந்தோஷங்கள் வாழ்க்கைக்குத் தேவை தானே.

நீல நிற பள்ளிச் சீருடையில் இருந்த மாணவர்கள் வளைந்து திரும்பும் பைக்குகள் முன்னால் கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டும் காணாமல் கடந்து போக நினைத்த என்னை எது தடுத்து நிறுத்தியது எனத் தெரியவில்லை. வண்டியை நிறுத்தினேன்.

அக்கா அக்கா. இங்க தான்க்கா பக்கத்துல வீடு. கொஞ்சம் இறக்கி விட்ருங்கக்கா.

ஐந்து பேர் இருக்கிங்களே டா.

நீங்க ஒரு ரெண்டு பேரை மட்டும் கூட்டிட்டு போங்க.

என்கிட்ட லைசென்ஸே இல்ல டா. இதுல ட்ரிபிள்ஸ் என்றால் கஷ்டம்..போலிஸ் பிடிச்சிடுவாங்க.

என்னது லைசன்ஸ் இல்லையா. சரி பரவால்லக்கா. லைசென்ஸ் வேற இல்ல அப்படியே ரெண்டு பேரைக் கூட்டிட்டு போனால் போலிஸ் பிடிச்சா கூட ஒரே ஃபைன் தான் போடுவாங்க.

டேய் என்ன டா லாஜிக் இது

அக்கா அக்கா ப்ளீஸ்க்கா

அதெல்லாம் வேண்டாம். வேண்டுமென்றால் ஒருத்தர் வாங்க கூட்டிட்டு போறேன்.

டேய் அக்கா கூட்டிட்டு போறாங்க உட்காருங்கடா

என்னது உட்காருங்கடா வா. டேய் ஒருத்தர் தான் டா.

அக்கா. அதெல்லாம் நீங்க ஓட்டுவிங்க. டேய் நீ தள்ளி உட்காரு டா.

ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என்னை கன்வின்ஸ் செய்து (கன்வின்ஸ் செய்து விட்டதாக நம்பி) ஒரு வழியாக இரண்டு வாண்டுகள் வண்டியின் பின்னால் உட்கார்ந்து கொண்டனர்.

சீக்கிரம். போங்கக்கா போலீஸ் புடிக்க போறாங்க.

டேய் வாயத் தொறக்காதிங்கடா.

செல்லக் கோபமாகத்தான் சொன்னேன்.

அடுத்த கணமே எங்களுக்குள் உரையாடல் தொடங்கியது. வழக்கமாகக் கேட்கிற கேள்விகள் தான். பொதுவாக இப்படி குட்டி வாண்டுகளுடன் போகும்போது கேள்வியை நான் தொடங்குவேன். அவர்கள் பதில் சொல்வார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவர்கள் கேள்வியைத் தொடங்கினார்கள்.

நீங்க படிக்கிறிங்களா?

இல்ல வேலை பார்க்கிறேன். நீங்க என்ன படிக்கிறிங்க.?

நான் ஏழாவது படிக்கிறேன்க்கா. என் பேரு லோகேஷ்வரன். என் பின்னால் இருந்தவன் சொன்னான்.

அவனுக்குப் பின்னால் இருந்தவன் சொன்னான். என் பேரு சிவ கைலாஷ். ஆறாவது படிக்கிறேன்.

தினமும் இப்படித்தான் லிஃப்ட் கேட்டுப் போவிங்களா? பஸ் கிடையாதா இந்த ரூட்ல.

பஸ்லாம் எதுக்குக்கா. நடந்து போற தூரம் தான் வீடு.

இந்த வார்த்தையைக் கேட்டதும் மனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்று நினைவுக்குள் வந்து போனது. வீட்டுக்கு வழி கேட்டவரிடம் நடக்கிற தூரம் தான் என்றேன். எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று நானும் சொல்லவில்லை. எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று அவரும் சொல்லவில்லை என்பதாக அந்தக் கவிதை இருக்கும்.

சரி. அப்போ நடந்தே போயிருக்கலாமே.

இல்லக்கா. பயங்கர கை வலி. கால் வலி. தலைவலி.

கைவலி கால் வலி ஓக்கே. அதென்ன தலைவலி. சும்மா சொல்லாதடா.

தலை இருக்குல்ல. அப்போ தலை வலிக்கும்க்கா. லோகேஷ் சொன்னான். என்னுடைய கையை எடுத்துத் தலையைத் தொட்டுப் பார்த்தேன். தலை இருந்தது.

ஸ்பீடு ப்ரேக்கர் ஸ்லோவா போகனும். - இது கைலாஷ்

சரிங்க சார்.

சாரா. நாங்க என்ன ஸ்கூல்லையா வேலை பார்க்கிறோம் என்றான் கைலாஷ்

அக்கா நீங்க ரொம்ப நல்லா பேசுறிங்க. உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. லோகேஷ் சொல்லிவிட்டு, ஆங். இந்தக் கடைகிட்ட நிறுத்துங்க. இதோ இந்த எதிர்ல ஒரு சந்து போகுதா.. அப்படியே உள்ள போயி, அப்புறம் கொஞ்சம் நடந்து போயி இப்படிக் கொஞ்சம் திரும்பினால் எங்க வீடு வந்துடும் என்றான்.

வீடு வராது. நாம தான் வீட்டுக்குப் போவோம் என்று நான் சொன்னதும் டேய் அக்கா செமையா காமெடி பண்றாங்க டா என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

சரிக்கா. டா டா பை பை. நாளைக்கும் இதே டைம் வருவிங்களா? வந்தால் எங்களை பிக் அப் பண்ணிக்கோங்க. பேசிட்டே வரலாம் என்று சொல்லிவிட்டு, இருவரும் சாலையைக் கடந்து எதிர்த் திசையில் நடந்தார்கள்.

கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது முடிந்த வரை இந்த வழியாகவே வரலாம். ஆனால் இதே நேரம் என்பது கொஞ்சம் கடினம் தான்.

அடடா. இவ்வளவு பேசினோம். அந்தக் குட்டி நண்பர்கள் படிக்கும் பள்ளி எதுவெனக் கேட்க மறந்து விட்டேனே..

மதிய வெயிலில் ஜொலிக்கும் கடலின் நிலத்தில் சீருடை அணிந்திருக்கும் அவர்கள் எந்தப் பள்ளியென யாரேனும் சொல்லுங்களேன்...

2 கருத்துகள்:

  1. அவசர கதியில் இயங்கும் இந்த தகர மிசின் நகர நடவடிக்கைகளைக் கூட ஒரு அழகான சிறகதை ஆக்க முடிந்ததா...அருமை!

    பதிலளிநீக்கு