ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்த இரவின் குறிப்புகள் - பெசண்ட் நகர் கடற்கரை


சென்னைக்கு வந்த வேலை முடிந்ததும் உடனே பாண்டிச்சேரி கிளம்பிவிடுவது வழக்கம். இப்போதெல்லாம் அப்படியல்ல. பெருநகரத்தின் தேவதைகளைச் சந்தித்து ஒரு தேநீராவது அருந்திவிட்டுக் கிளம்பினால் தான் அந்தப் பயணம் முழுமை பெறுகிறது. ஏனென்றால் தேநீர் என்பது தேநீர் மட்டுமல்ல.

இன்றைக்கும் அப்படியே வந்த வேலை முடிந்தவுடன் முதலில் அகிலாவைச் சந்தித்து விட்டுக் கிளம்புவதாகத் திட்டம். அகிலாவைச் சந்தித்தபிறகு,  சாரதாம்மாவைச் சந்திக்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

கூகுள் மச்சான் உதவியுடன் சாரதாம்மா சொன்ன இடத்தை அடைந்தோம். பிறகுதான் தெரிந்தது நான் சென்னையில் வேலை பார்த்த நாட்களில் நானும் கதிரும் பெசண்ட் நகர் கடற்கரையில் வாக்கிங் போய்விட்டு ஓய்வெடுக்கும் ஒட்டுச்சுவரின் எதிரில்தான் சாரதாம்மாவின் வீடு. அட இது தெரியாம போச்சே என்றபடி வீட்டுக்குச் சென்றோம்.

பெசண்ட் நகர் கடற்கரையையொட்டி அமைதியான குடியிருப்பு. இரவின் ஒளியில் மரங்களின் நிழலில் தெரு அவ்வளவு அழகாக இருந்தது. அங்கங்கே தெருவின் உரிமையாளர்கள்போல நாய்க்குட்டிகள் படுத்திருந்தார்கள். சாரதாம்மாவின் வளர்ப்புகள்.


வீட்டுக்குள் நுழைந்ததும் சாரதாம்மா சாக்கோவைக் (பூனைக்குட்டி) கொண்டு வந்து காட்டினார். சின்னூண்டு பஞ்சு பொம்மை போல அவ்வளவு அழகு சாக்கோ குட்டி. கண்கள் குட்டி  கோலி குண்டு போல இருந்தன. அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பிரௌனி (இன்னொரு பெரிய பூனை) உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார். சின்னக்குட்டி சாக்கோவைத் தூக்கிக் கையில் வைத்து முத்தம் வைத்தேன். முகத்துக்கு நேராக வைத்துக் கொஞ்சினேன். திராட்சைக் கண்களை உருட்டிப் பார்த்தது. அகிலா கையில் வாங்கிக் கொஞ்சியதும் கொஞ்ச நேரத்தில் உடலை வளைத்து நெளித்தபடி கையிலிருந்து நழுவி ஓடியது. பிஸ்கட் நிற மல்லிகைச் சரமொன்று தரையில் தவழ்ந்து செல்வது போல இருந்தது சாக்கோவின் நடை.

சாரதாம்மா மிதமான சூட்டுடன் ஒரு காஃபி கொடுத்தார். அகிலா காஃபி வேண்டாம் எனச் சொன்னதால் நான் மட்டும் குடித்தேன். என் ரூம் வந்து பாரேன் எனக் குழந்தை போல சாரதாம்மா  அழைத்ததும் உள்ளே போனோம். அவ்வளவு நேர்த்தியாக வைத்திருந்தார் அறையை. அவர் அறையைப் பேரழகாகக் காட்டுவதற்கென்றே ஜம்மென்று அமர்ந்திருந்தார் என் உயரத்திற்கு ஒரு ப்ளூ பாய் பொம்மை. என்னை மறந்து துள்ளிக் குதித்தேன். கட்டிப் பிடித்துக் கொண்டேன். வயதை மறக்கச் செய்யும் மந்திர வித்தைகள் பொம்மைகளுக்கு எப்போதும் உண்டு.

ப்ளூ பாய் பொம்மையுடன் கொஞ்சல்கள் முத்தங்கள், அவனோடு மாறி மாறிப் புகைப்படங்கள் என எல்லாம் முடிந்தபின் பீச் போகலாம் எனக் கிளம்பினோம். பீச் என்றால் எனக்கு கடற்கரை மணலில் நடப்பது, அலையில் கால்நனைப்பது இதோடு சேர்த்து நெருப்புப் பொறியில் சுட்டுத் தரும் பேபி கார்னும் தான்.

சுட்ட பேபி கார்ன், உருளைக்கிழங்கு ரோல் என எல்லாம் வாங்கிச் சாப்பிட்டப்பின் கடலலைகளை நோக்கிப் போனோம். கல்லூரி பயின்ற நாட்களில் எனக்கு வாய்க்காத, ஆனால் நான் ஆசைப்பட்ட சிலவற்றில் ஒன்று இரவுநேரத்தில் கடற்கரை மணலில் தோழிகளோடு காலாற நடப்பது. சாரதாம்மா மற்றும் அகிலாவுடன் கடற்கரை மணலில் நடந்தபோது கல்லூரித் தோழிகளோடு நடப்பதாகத்தான் உணர்ந்தேன் அந்தக் கணம்.

மெல்ல பொங்கி எழுந்த அலை கரையை வந்து தழுவிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றோம். மூவருமே கால் நனைக்கவில்லை. கால் நனைக்காமல் இரவின் கடலை ரசிப்பது அன்றைக்குப் போதுமானதாக இருந்தது. அதுவே இதமாகவும் இருந்தது.

கரையில் கடற்கரை மணலைச் சின்ன சின்ன மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அதன்மேல் ஏறியதும் வானம் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போல ஒரு பிரம்மை. மணல்குன்றின் மேல் அமர்ந்தபடி ஊர்ந்து போன அரை நிலாவையும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சதிரங்களையும் எண்ணிக் கைக்காட்டி கொண்டிருந்தோம். இரவில் அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தெரியும் நேர்க்கோட்டில் தெரியும் மூன்று நட்சத்திரம் அன்றைக்கும் பார்த்தோம். ஒன்று… இரண்டு… மூன்று.. அதற்குமேல் நட்சத்திரங்களை எண்ணவில்லை. போதும் என்றிருந்தது.

இரவு இதமான கடற்கரை குளிர் காற்றுடன் நகர்ந்து கொண்டிருக்க சாப்பிடக் கிளம்பினோம்.

நடைபாதையில்  உப்புக் காற்றுக் குளிரில் ஆயா ஒருவர், வளையல், மணி, கொலுசு, கம்மல் விற்பதைப் பார்த்ததும் மனம் நின்றதும் கால்களும் நின்றன. எனக்குப் பிடித்த கல் வளையல். சைஸ் சரியா இருந்தால் வாங்கிக்கலாம் என்று எடுத்துப் பார்த்தேன். மூன்று வளையல்கள் மட்டுமே எனக்குப் பொருத்தமாக இருந்தன. பக்கத்தில் கண்கள் போக, நான் விரும்பும் கல் மணி, ஜிமிக்கி, கல் கம்மல், க்ருஷ்டல் கொலுசுஇவை வாங்கச் சொல்லிச் சுண்டி இழுக்க, திடீர் பர்சேஸ் பெரிய அளவில் நடந்தேறியது.

பிடிச்சதை எடும்மா, அப்புறம் விலை பேசிக்கலாம் என்று சாரதாம்மா சொன்னதும் இரண்டு ஜிமிக்கி, இரண்டு கல் மணி, ஆறு தொங்கும் கல் கம்மல், மூன்று மணி, ஒரு கொலுசு, அகிலாவுக்கு ஒரு கொலுசு என அள்ளி எடுத்துக் கொண்டோம்.

அந்தக் கடையின் உரிமையாளர் பொன்னி ஆயா (பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்) மஞ்சள் பூசிய முகம், பெரிய கல் வைத்த மூக்குத்தி, முகமெங்கும் முதுமையின் கோடுகள், வாரி முடிந்த கொண்டை, வெற்றிலைப் போட்டுச் சிவந்த உதடு, ஒரு காட்டன் புடவை அவ்வளவுதான். ஆனால் கிராமத்து மனுசியின் கலையான முகம். முதுமையின் மெருகேறிய அழகு.  ரொம்ப இயல்பான பேச்சு.

எங்க இருக்காங்க, இந்த ஆபரணங்கள் எல்லாம் எங்கிருந்து வருது என்ன சாப்டாங்க என்பது முதற்கொண்டு எல்லாம் பேசியபடி, நாங்கள் எடுத்தவற்றுக்கும் விலை கேட்டு நாங்கள் ஒரு கணக்கு சொன்னோம். பொன்னி ஆயா ஒரு விலை சொன்னார். பிறகு கொஞ்சம் பேரம் பேசி 600 ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார். ஒரு கைப்பையில் போட்டுக் கொடுத்தார். ஆயா சந்தோஷம் தானே உங்களுக்கு என்றோம். சந்தோஷம் மா. அப்புறமாவும் வாங்க என்றார். நிச்சயம் வருவோம் என்றபடிக் கிளம்பினோம். ஒரே இடத்தில் எனக்குப் பிடித்த ஆபரணங்களை வாங்கியதில் அதுவரை இருந்த பசி காணமல் போயிருந்தது.

அங்கிருந்து ஆதாமிண்டே தட்டுக்கடை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார் சாரதாம்மா. மிதமான வெளிச்சம் அன்றைய இரவு உணவுக்கு நிறைவான சூழலை உண்டாக்கிக் கொடுத்தது. வெளியில் இரண்டு டேபிள், உள்ளே ஐந்து டேபிள் அவ்வளவு தான் கடை. ஆனால்,  மலையாள உணவு வகைகள் மெனு கார்டை அலங்கரித்தன. ஆதாமிண்டே கடையில் அதுதானே இருக்கும். சிறப்பாக என்ன சொல்ல. புட்டுக் கொண்டைக்கடலை, தோசை, பீஃப் மசாலா, அயிலா மீன் வறுவல் என ஆர்டர் செய்தோம். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் பதினைந்து நிமிடத்தில் எல்லாம் வந்தன. புட்டு கொண்டைக்கடலை பிரமாதம். பீஃப் மசாலா தனி சுவை. பீஃப் மசாலாவுக்காகவே கூடுதலாக ஒரு தோசை ஆர்டர் செய்யலாம் போல இருந்தது. ஆனால், முதலில் ஆர்டர் செய்த தோசையிலேயே வயிறு நிறைந்திருந்தது. அயிலை மீன் வறுவல் தான் அளவில் பெரிதாக இருந்ததால் முழுதாகச் சாப்பிட முடியவில்லை. மிச்சம் வைக்கும்படி ஆகிவிட்டது.

ஆர்டர் செய்த எல்லாமும் சாப்பிட்டு முடித்தபின், சுலைமானி டீ அங்கே ரொம்ப ஃபேமஸ் என்று சாரதாம்மா சொன்னார். ஃபேமஸான விஷயத்தை நிச்சயமாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என மூன்று சுலைமானி டீ ஆர்டர் சொன்னோம். லெமன் டீ கலரிலேயே வந்தது. லெமன் டீ போல நினைத்து சியர்ஸ் சொல்லி முதல் சிப் குடித்ததும் இதுவரை குடித்திருக்காத புதிய சுவை. இதுவல்லவா தேநீர் என்று நாக்கு துள்ளிக் குதித்தது. என்ன மசாலா தூள் கலந்தார்கள் எனத் தெரியவில்லை. சென்னை வாழ்க்கை தந்த கசப்புகளை எல்லாம் வெளியே தள்ளிவிட்ட இனிப்பை நினைவுகளுக்குள் கொண்டு போகும் அற்புதமான தேநீர் அது. இனிமேல் சென்னை வந்தால் அதாமிண்டே தட்டுக்கடைக்கு வந்து சுலைமானி டீ குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அன்றைய சந்திப்பும். இரவு உணவும் மறக்க முடியாத அனுபவத்தின் நினைவுக் குவியலாய் மனதுக்குள் ஒட்டிக் கொண்டுவிட்டது.

மீண்டும் ஒருமுறை இதேபோல இவர்களோடு கொஞ்சம் முன்கூட்டியே வந்து தாமதமாகத் திரும்புவேன் என பெசண்ட் நகர் கடலிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

பேங்க் பரிதாபங்கள்



அவசரமாக எஸ்பிஐ அக்கவுண்ட் ஒன்றுக்குப் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. காலை நேரத் தேநீருக்குப் பிறகு வீட்டைக் கொஞ்சமாகச் சுத்தம் செய்துவிட்டு பேங்க் போனேன். இந்தியன் வங்கியில் நான் கணக்கு வைத்திருப்பதால் கோட்டக்குப்பம் பேங்க் சென்றேன். பணம் டெபாசிட் செய்வதற்கான ஸ்லிப் அங்கே இல்லை. யாரிடமும் கேட்கலாம் என்றால் பதில் சொல்லும் நிலையில் யாருமில்லை. எல்லோரும் பிஸியாக இருந்தார்கள். பதினைந்து நிமிடத்திற்கு மேல் காத்திருந்தபின் கவுண்ட்டரில் இருக்கும் பெண்மணியிடம் ஸ்லிப் கேட்கலாம் என்றால் வரிசையில் வாங்க என்றார். ஸ்லிப் எங்க இருக்குனு சொல்லுங்க மேடம் ஃபில் பண்ணிட்டு வருகிறேன் என்றேன். ஸ்லிப்பெல்லாம் இல்லை ஏடிஎம் கார்டுல ஸ்வைப் செய்து டெபாசிட் பண்ணச் சொன்னார். பொதுவாக அக்கவுண்ட்டில் மெயிண்ட்டனன்ஸ் பேலன்ஸ் தவிர இருப்பு வைப்பதில்லை. இருப்பில் உள்ள தொகை அடிக்கடி காணாமல் போவதால் அதிகமான தொகையோ கம்மியான தொகையில் கையில் வைத்துக் கொள்வதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன். வங்கிக் கணக்கில் பணம் அடிக்கடி மிஸ் ஆகிறது என்று புகார் செய்தும் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஏடிஎம்மில் பணம் இல்லை மேடம் கையில் தான் வைத்திருக்கிறேன் என்றேன். இல்லம்மா இப்பல்லாம் கார்டுல ஸ்வைப் பண்ணி தான் பண்றோம். இல்லனா நேரடியா மெஷின்ல போட்டு விடுங்க என்றார் முகம் பார்க்காமலேயே.
எஸ்பிஐ டெபாசிட் மெஷின் எங்கே இருக்கும் எனக் கேட்டேன். காதில் வாங்காதது போல இருந்தார். நண்பருக்கு போன் செய்து கேட்டேன். அவர் முத்தியால்பேட்டை மார்கெட் அருகில் பேங்க் இருக்கு அங்க போய் பார்க்கச் சொன்னார். அங்கே போனால் அப்படி எந்த மெஷினும் இல்லை. சரி பேங்கில் ஸ்லிப் ஃபில் பண்ணி போடலாம் என்றால் அங்கும் ஸ்லிப் இல்லை. அங்கிருந்தவரிடம் கேட்டால் அவரும் இந்தியன் வங்கியில் சொன்ன அதே வார்த்தையைச் சொன்னார். ஆனால் அவர் எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருக்கா என்ற கேள்வியைக் கூடுதலாகக் கேட்டார். அக்கவுண்ட் இல்லை என்றேன். அப்படியென்றால் மெயின் பிராஞ்ச் போங்க அங்க மெஷின் இருக்கு என்றார். மெயின் பிராஞ்ச் எங்கிருக்கிறது எனக் கேட்டேன். பக்கத்து கவுண்ட்டரில் இருந்த பெண்மணியிடம் மெயின் பிராஞ்ச் பாண்டிச்சேரியில் எங்க இருக்கு என்று கேட்டார். எனக்குத்ட் தெரியலையே என்றார் போனைப் பார்த்தபடியே.
மீண்டும் நண்பருக்குக் கால் செய்து மெயின் பிராஞ்ச் எங்க இருக்கு என்றதும் பீச் கிட்ட இருக்கு என்றார். எழுந்ததில் இருந்து இரண்டு டீ மட்டுமே குடித்திருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. பேங்க் வேலையை முடித்துவிட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம் என வண்டியில் கிளம்பினேன். கூகுள் மேப் உதவியுடன் கொஞ்சமே சுற்றியலைந்து மெயின் பிராஞ்சைக் கண்டுபிடித்தேன்.
உள்ளே நுழைந்ததும் செக்யூரிட்டியிடம் விவரத்தைச் சொல்லி ஸ்லிப் ஃபில் பண்ணனும் என்றதும் ஸ்லிப் ஃபில் பண்ணி அனுப்பினால் அறுபது ரூபாய் கமிஷன், மெஷின்ல போட்டால் இருபத்தி ஐந்து ரூபாய் கமிஷன். நீங்க மெஷின்ல போட்ருங்க. எல்லாரும் இப்போ அதைத்தான் யூஸ் பண்றாங்க என்றார். என்னிடம் ஒரேயொரு பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் தான் இருந்தது. ஏனோ அந்த பிங்க் தாளைப் பார்த்தாலே தூக்கம் இல்லாமல் ஏடிஎம் ஏடிஎம்மாக இரவும் பகலுமாக அலைந்த நாட்கள் நினைவுக்கு வந்து போகும். வேண்டா வெறுப்பாக அதைக் கையில் வைத்திருந்தேன். இப்போ நான் அனுப்ப வேண்டிய தொகையுடன் இருபத்தி ஐந்து ரூபாய் சில்லறை வேறு வேண்டுமே. என்னடா எனக்கு வந்த சோதனை நினைத்துக் கொண்டேன். கேஷ் கவுண்ட்டரில் போய் பிங்க் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என வரிசையில் போய் நின்றேன். நான் பதின்மூன்றாவது நபராக நின்றிருந்தேன். என்முறை வரும்வரை காத்திருந்தேன். என் காத்திருப்பு வீண் எனப் பிறகு தான் புரிந்தது. கேஷியர் சொன்னார், இது என்ஆர்ஐ பணம் கொடுக்கிற இடம். நீங்க ஐந்து அல்லது ஆறாவது கவுண்ட்டர் போங்க. பசி மயக்கம் கொஞ்சம் கோவமாக மாறியது. ஆனால், கோபப்பட இது நேரமல்ல. இன்னும் இரண்டு வேலைகளை முடிக்க வேண்டியிருக்கிறது என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ஆனாலும் முதல் வேலையான பணம் அனுப்பும் வேலையை முடிப்பதற்குள்ளாகவே மணி இரண்டரை ஆகியிருந்தது.

ஐந்தாவது கவுண்ட்டரில் அழகான கருநீலச் சுடிதார் அணிந்த பெண். அமைதியாக சிஸ்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். மேடம் மெஷின்ல அமைண்ட் டெபாசிட் பண்ணனும் இந்த இரண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் தருவிங்களா என்றேன். பதினைந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க என்றார். பதினைந்து நிமிடம் என்னை வெயிட் பண்ண சொன்னவர் அப்படி எதுவும் முக்கியமான வேலை செய்யவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார். நானும் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு மேடம்  சேஞ்ச் என்றேன். வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன்ல. குரலில் அப்படியொரு கடுமை. முகத்தில் அவ்வளவு ஒரு எரிச்சல். நான் என்ன அவங்க பர்சில் இருந்து பணம் கேட்டது போல நடந்து கொண்டார். பணம் வைத்திருக்கும் டிராவுக்கும் அவருக்கும் இரண்டு விரல் அளவு கூட இடைவெளி இல்லை. கையை நீட்டி ட்ராவை இழுக்க வேண்டும். அதற்கு இருபது நிமிடம் காத்திருக்கச் சொல்வது ஏன் எனப் புரியாமல் இருந்தது.

ஏற்கனவே பதினைந்து நிமிடம் சொன்னிங்க. இன்னும் வெயிட் பண்ண சொன்னால் என்ன அர்த்தம் மேடம். கொஞ்சம் அவசரம் என்று தான் கேட்கிறேன். நீங்க கொடுத்துவிட்டால் உங்களை ஏன் கேட்கப் போகிறேன் என்றேன். எவ்ளோ போடனும். எவ்வளவு என்று சொன்னேன்.

அந்த மாதிரி  போடமுடியாது. ரவுண்டா ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு, இரண்டாயிரம் இப்படித்தான் போடமுடியும் என்றார். அதெப்படி மேடம், எனக்கு அனுப்ப வேண்டிய அமவுண்ட் தானே அனுப்ப முடியும், வெறும் ஐந்நூறு ஆயிரம் மட்டும் தான் அக்சப்ட் பண்ணும் என்றால் அது என்ன மெஷின் என்றேன் கோபத்தை அடக்கிக் கொண்டு. என் வார்த்தைகளைக் காதில் வாங்காதது போல அலட்சியமாக அமர்ந்திருந்தார். சரி நான் பார்த்துக்கறேன் சேஞ்ச் மட்டும் கொடுங்க மேடம் என்றேன். ஆறாவது கவுண்ட்டரில் ஃபார்ம் ஃபில் பண்ணிக் கட்டுங்க. பேலன்ஸ் தருவார் என்றார். ஃபார்ம் ஃபில் பண்ணால் அறுபது ரூபாய் கமிஷன்னு சொன்னாங்க என்று சொல்லி முடிப்பதற்குள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஸ்லிப் ஃபில் பண்ணிக் கொண்டு ஆறாவது கவுண்ட்டர் போனால் ஒரு தாத்தா கியூவில் வாங்க என்றார் அடித்தொண்டையில். அவரும் ஏதோ கடுப்பில் இருந்திருப்பார் போல. பத்தாவது நபராக மீண்டும் வரிசையில் நின்றேன். எனது வரிசையில் நான் நான்காவது நபராக நான் நின்று கொண்டிருந்தபோது ஒரு போலிஸ்காரர் வந்தார். ஃபில் பண்ண ஸ்லிப்பையும் பணத்தையும் கொடுத்தார். இரண்டு நிமிடத்தில் ரசீதைப் பெற்றுக் கொண்டு புன்னகையோடு போய்விட்டார். அந்தத் தாத்தா அவரை கியூவில் வாங்க என்று சொல்லவில்லை. அவர் பாட்டுக்கு நின்று கொண்டிருந்தார். நான் அவர் பின்னால் நின்றிருந்தேன்.

என்முறை வந்ததும் ஃபில் பண்ண ஸ்லிப்பையும் பிங்க் நோட்டையும் கொடுத்தேன்.  இரண்டு நிமிடத்தில் வேலை முடிந்தது. நன்றி சார் என்று சொல்லிவிட்டு பணம் அனுப்பியதற்கான ரசீதை வாங்கிக் கொண்டு திரும்பினேன். இன்னமும் அந்த உம்மனாமூஞ்சி அக்கா எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தார்.

மேடம், ஒன்னும் சொல்லட்டுமா, நீங்க அழகா இருக்கிங்க. ஆனால் சிடுசிடுனு இருக்காங்க. கொஞ்சம் சிரிங்க. இன்னும் அழகா இருக்கும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

ஏசியால் குளிர்ந்திருந்த அந்த இடம் எனக்கு அவ்வளவு வெப்பமாக இருந்தது.

புதன், 9 ஜனவரி, 2019

அப்பா : நினைவும் - புனைவும் நூல் பற்றி


அப்பா எனும் சொல்லுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி உண்டு. திரைப்படங்களிலும் நாவல்களில், சிறுகதைகளில் வருகின்ற அப்பாக்களைத்தான் எனக்குத் தெரியும். அப்பா எனும் சொல்லுடன் உணர்வு ரீதியாக பொருந்திப் போவது எனக்குச் சற்றே சிரமம் தான். எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவமாக அது இருப்பது ஒரு காரணம். ஆனால், ஒரு கட்டத்தில், அப்பா குறித்த சித்திரிப்புகளில் நான் என் அம்மாவைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பிறகு, சினிமாவிலும் இலக்கியத்திலும் வருகின்ற அப்பாக்கள் எனக்கு நெருக்கமாகத் தொடங்கினர்.

மயிலாடுதுறையில் #வாகை_இலக்கியக்_கூடல் நிகழ்வின் #அப்பா_ நினைவும்_புனைவும் நூல் குறித்துப் பேச வேண்டும் என துவாரகா சாமிநாதன் தோழர் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். அதற்கு முக்கியக் காரணம் ஏற்கனவே Shruthi Tv காணொளி வழியாக இந்நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா, சப்தரிஷி சார் போன்றோர் பேச்சின் வழியே அப்பாக்களின் வெவ்வேறு நிறங்களை வாசித்து அறிந்து கொள்ளும் ஆவல். அத்தனை சுவாரஸ்யமான நினைவுப் பகிர்வுகள் அவை.

மயிலாடுதுறை வாகை இலக்கியக் கூடல் நிகழ்வில் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, ரண்டொரு நாளில் அப்பாவை அனுப்பி வைத்தார்கள். முதல் கட்டுரையாக எழுத்தாளர் ஆத்மார்த்தி, தன் அப்பா குறித்து எழுதிய தந்தைப் பறவை கட்டுரையை வாசித்து முடித்துக் கதறி அழுதேன். அந்த அழுகை அவரது அப்பாவின் இறுதிநாட்களின் வலியை எனக்குள் முழுமையாகக் கடத்தியதால் வந்த அழுகை. என் அம்மாவின் உயிர் பிரியும் கடைசி கணங்களை ஒரு காட்சியாக என் கண்முன் கொண்டு வந்தது. நான் மறந்துவிடத் தவிக்கும் துயரச் சித்திரம் அது. ஆத்மார்த்தியை போனில் அழைத்துப் பேசி என் அழுகையை ஆற்றிக் கொண்டேன்.

அதன்பின் ஒரு கட்டுரையையும் வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்தேன். அன்றைய இரவில் மீண்டும் எடுத்து வாசிக்கத் துவங்கினேன்.

அடுத்து சப்தரிஷியின் கட்டுரை. அதில் புதிதாக லா.ச.ரா. எனும் அப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள எதுவுமில்லை. ஏனெனில், சப்தரிஷி அவர்களுடன் பேசும்போதெல்லாம் எழுத்தாளர் லா.ச.ரா.வின் பிம்பம் மறைந்து அற்புதமான அப்பாவைத்தான் நான் தரிசித்தேன். அப்பாவைச் சிலாகித்துக் கொண்டாடும் மகன் அவர். பல நேரங்களில் இப்படியொரு அப்பா ஏன் எனக்கு வாய்க்கவில்லை என ஏங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் லா.ச.ரா எனும் எழுத்தாளரை விட லா.ச.ரா எனும் அப்பாவின்பால் ஈர்ப்பு அதிகமானது.

பெயர் எழுதப்படாத மொட்டைக் கடுதாசியில் கூட மகனது அடையாளத்தைக் கண்டுபிடித்து, மகனைத் தோழனைப் போல் பாவித்த அமிர்தம்சூர்யாவின் அப்பா ஒரு கவித்துவம். தன் நண்பர்களிடன் உரையாடுவதை காதல் உட்பட  ‘எல்லாவற்றையும்’ பகிர்ந்து புரிந்துகொள்ள அப்பா மகன் உறவில் வாய்க்கிறது எனில் அது வரம். காதலைப்பற்றிச் சொல்லும்போது, முட்டை உடைந்து குஞ்சு வெளிவருவது போல ஈகோ உடைந்து காதல் வெளிவர வேண்டும் என மகனிடம் சொன்ன தருணம் கூட கவித்துவம் தான். அமிர்தம் சூர்யாவும் தன் மகன்களுக்கு ‘நல்ல அப்பா’வாக, தோழனாக இருக்கிறார். அது அவர் அப்பாவிடமிருந்து பெற்ற பிரியத்தின் நீட்சி.

முரண்பாடுகளின் சந்திக்க முடியாத புள்ளியாக எதிரெதிர் துருவங்களில் பயணித்த அப்பா மகனை பாரதி கிருண்ஷகுமார் அவர்களின் அப்பா கட்டுரையில் தரிசிக்க முடியும். அப்பாவின் கனவு எதையும் நிறைவேற்ற முடியாத மகனாக அவர் இருந்திருந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான மகன்கள் / மகள்கள் அப்படியே. ஏனெனில் அப்பாவுக்கும் மகனுக்கும் அப்பாவுக்கும் மகளுக்கும் வேறுவேறு கனவுகள் இருக்கின்றன. ஒருவருடைய கனவுக்காக இன்னொருவர் பலியாகிவிட முடியாத எதார்த்தம் பலநேரங்களில் அப்பாக்களுக்குப் புரிவதில்லை. அல்லது புரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள். ஆனால், கடைசிக் காலத்தில், கடைசித் தருணத்தில்  என்னால தனியா இருக்க முடியாது என்னை உன்னோடு அழைத்துச் சென்றுவிடு, பழைய கோபத்துல என்னை விட்டுட்டுப் போயிடாத என்று அப்பா சொன்னார் என்ற வரிகளை வாசிக்கும்போது கண்கள் நிறைந்துவிட்டன. அப்பாவின் அன்பைப் புரிந்து கொள்வதற்கென்று ஒரு காலம் வரும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.

பிரபஞ்சன் சாருக்கு அப்பாதான் கதாநாயகன். அவரது அப்பாவின் வேட்டி சிறுகதையை வாசிக்கின்றபோது அதை உணர முடியும். கூடுதலாக எனக்கொரு அதிர்ஷ்டம், கதையில் இருக்கின்ற சம்பவம் அவர் அப்பா பற்றி நிறைய அனுபவங்களை அவர் என்னோடு பேசி இருக்கிறார். சினிமாவில்  கதாநாயகன் அறிமுகக் காட்சியில் பாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேமரா மேலே போய் அவரது முகத்தைக் காட்டுமே அதுபோல அப்பாவை ஒவ்வொரு அணுவாக ரசித்துக் காட்சிப் படுத்திச் சொல்வார். அவர் சொல்வதைக் கேட்கையில் அவரது அப்பாவைச் சந்தித்து வணக்கம் சார் என்று சொல்ல வேண்டும் போல் இருக்கும். வாழ்வின் மீது எந்தப் புகார்களற்று, விமர்சனங்களுக்கு வாழ்ந்த மனிதரைப் பிரபஞ்சன் அப்பாவாகப் பெற்றிருக்கிறார். எளிமை, நேர்மை, அறவுணர்வு, அன்பு, மிடுக்கான உடை, புன்சிரிப்பு, அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கழிவிரக்கத்தோடு இல்லாமல் நகைச்சுவையாகச் சொல்லிக் கடந்து போகிற பண்பு, எதையும் மற்றவர் இடத்திலிருந்து புரிந்து கொள்ளும் பண்பு, இரக்க குணம் – பிரபஞ்சன் சாரைப் பற்றி நினைத்தால் இவையெல்லாம் நினைவுக்கு வரும். இதையெல்லாம் அவர் தன் அப்பாவிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். நான் பிரபஞ்சனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருவாயில்தான் பிரபஞ்சன் இனி நம்மோடு இல்லை எனும் கொடுஞ்செய்தி வந்து சேர்ந்தது என் துரதிஷ்டம். சுக்குநூறாய் உடைந்துவிட்டேன். அழுகையோடு தொடங்கிய எனது வாசிப்பு பேரழுகையுடன் தொடர்கிறது. தன் சினேகிதிகளை மகள்களாக நேசித்த மனிதர். சினேகிதிகளால் நேசிக்கப்பட்டவர். எப்போதும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் / மனுஷிகள் பக்கம் நின்று பேசியதும், எழுதியதும் தான் அவருக்கான கம்பீரம்.  

ஒரு மூட்டை புத்தகம் கிடைக்குமெனில் தன் பிள்ளையைக் கூட விற்றுவிடத் தயங்காத புத்தகப் பிரியர் ந.முத்துக்குமாரின் அப்பா. மகன், மலையாள பிட்டுப் படம் பார்த்துவிட்டு வருவதை அறிந்தும் கோபப்படாமல் அடிக்காமல் குணமாக எடுத்துச் சொல்லும் அப்பாவை, மிதிவண்டியின் பின்னால் அமர வைத்து ஊர் சுற்றிக் காட்டும் அப்பாவை,  யாருக்குத்தான் பிடிக்காது.

கை வாதம் மகனுக்குப் பத்தியச் சாப்பாடு தான் இனி என்றானபின், தண்ணீரே குடிக்கக் கூடாது என வைத்தியர் சொல்லிவிட, தெரியாமல் ஒரு வாய் தண்ணீர் குடித்தால் உலக்கையாலே அடிச்சு மண்டையைப் பேத்துடுவேன் எனச் சொல்லும் ஜெயமோகனின் கோவக்கார அப்பா, மகன் பத்தியமிருந்த நாட்களில் தானும் பத்தியச் சாப்பாடு சாப்பிடுபவராக இருந்தார். மகனைக் குணப்படுத்திய வைத்தியரின் பாதத்தில் உதடுபட விழுந்து வணங்கி நன்றி சொல்பவராகவும் இருந்தார். அவர் சொல்வது போல தெய்வ மிருகம். அன்பு செய்யும் மிருகம் அந்த அப்பா.

அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார், ஜெயமோகன், பாமரன், பவா செல்லதுரை, மதுமிதா, தமிழச்சி தங்கபாண்டியன், இசை, கீரனூர் ஜாகிர் ராஜா, சப்தரிஷி, சுமதிஸ்ரீ, இசை, தி.பரமேஸ்வரி, அமிர்தம் சூர்யா, கவிதைக்காரன் இளங்கோ, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன், கலாப்ரியா, கண்மணி குணசேகரன், ஆயிஷா நடராஜன், நா. முத்துக்குமார், நாராயணி கண்ணகி, வண்ண நிலவன் இப்படி வாசித்து வாசித்து இரண்டு நாட்கள் அப்பாக்களின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தேன்.

சமீபத்தில் நான் அவதானித்த ஒரு விடயம். முகநூலில் தனது மகள்களை இளவரசிகளாகக் கொண்டாடும் அப்பாக்கள் சிலரைப் பார்க்கிறேன். தங்கள் மகளதிகாரத்தை அவர் எல்லையற்ற அன்புடன் பதிவிடும் போது என்னையறியாமல் அந்த மகளையும் அப்பாவையும் நான் நேசிக்கத் தொடங்கிவிடுகிறேன். மகள்களின் உலகத்தை அவர்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்ள வழிவிடும் அப்பாக்கள் ஆண் தேவதைகள் தான்.

பெரும்பாலும் மகன்களின் அப்பாக்கள் மகன்களுக்கு ஆகச்சிறந்த கதாநாயகனாகவே இருந்திருக்கிறார்கள். மகள்களின் அப்பாக்கள் அப்படித்தான். ஆனால், இந்தப் புத்தகத்தில் மகள்களின் அப்பாக்கள், மகள்களின் உலகத்திற்குள் அதிகம் பிரவேசிக்க முடியாத ஆண்களாக இருந்திருக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன், மதுமிதா ஆகியோரின் அப்பாக்கள் இதற்கு விதிவிலக்கு. தி. பரமேஸ்வரியும், சுமதிஸ்ரீயும் தங்கள் அப்பாக்களுடன் பேசிக் கொள்ளமுடியாத சொற்களை, ஆற்றாமையை, கண்ணீரை இதில் கட்டுரையாக மாற்றித் தந்திருக்கிறார்கள்.

இந்த அப்பாக்கள்வழி நான் அறிந்து கொண்டது, அப்பாக்கள் கொஞ்சம் கண்டிப்பானவர்கள். தன் கனவுச் சிலுவைகளைப் பிள்ளைகளைச் சுமக்கச் செய்ய எத்தனித்தவர்கள். மகன்மீதும், மகள்மீதும் கொண்ட அன்பை, அன்பாகக் காட்டத் தெரியாமல் கோபமாக, அதிகாரமாகக் காட்டியவர்கள். நண்பனைப் போல பிரியங்களைக் கையளித்தவர்கள். புறவுலக அழுத்தங்களைத் தனக்குள்ளாகப் புதைத்துக் கொண்டு புத்தக உலகத்திற்குள் தங்கள் பிள்ளைகளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்கள். இப்படியாக, இன்னும் இன்னுமாக அப்பாக்களின் நிறங்கள் வெவ்வேறானவை. முகங்கள் வேறானவை. அப்பாக்கள் எந்தவொரு ஒற்றைப் பிம்பத்திற்குள்ளும் அடங்கிப் போகாதவர்கள்.

அப்பா நூலை வாசித்து முடிக்கையில் இப்போது அப்பாக்களாக இருப்பவர்கள் தங்கள் மகன்களை, மகள்களை இன்னும் ஆழமாக நேசிக்கச் செய்வார்கள். மகன்கள், மகள்கள் தங்கள் அப்பாக்களை இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்வார்கள். அப்பாக்கள் கொண்டாடப்படுவார்கள். இனிமேல் அப்பாக்களாக ஆகப் போகிறவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நண்பனைப்போல மாறிவிடும் சூத்திரத்தைச் சொல்லித் தரும் இந்த அப்பா.
இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்த தோழர் இளம்பரிதிக்கு அப்பாக்களும் மகன்களும் மகள்களும் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அவருக்கு என் வாழ்த்துகளும் அன்பும். ஏனெனில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு கட்டுரைகளை வாங்கித் தொகுப்பது சாதாரணப் பணியன்று. ஆனால், அப்பாமீது கொண்ட அளப்பரிய பிரியம்தான் அரிய பணியைச் செய்து முடிக்க உடனிருந்து ஊக்குவித்திருக்கக் கூடும். புத்தகம் உருப்பெற மூலகாரணியாய் இருந்த அந்த அப்பாவுக்கு எனது அன்பும் பிரியங்களும்.

நூல் : அப்பா நினைவும் – புனைவும்
தொகுப்பாசிரியர் : ப. இளம்பரிதி
பதிப்பகம் : பரிதி பதிப்பகம், 56சி/128, பாரத கோயில் அருகில்,
                        ஜோலார் பேட்டை, வேலூர் – 635 851
விலை : 500/-

வெள்ளி, 4 ஜனவரி, 2019

துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை : நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து


துயரங்களைச் சுமந்தலையும் சிறுபறவை
நர்மியின் ‘பனிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து
-        மனுஷி




வாழ்வின் இருள் சூழ்ந்த பக்கங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் சிறு அகல் விளக்கின் ஒளி தான் கவிதை.
பாறையைக் கடப்பாறை கொண்டு நகர்த்துவது போல இல்லாமல் ஒரு மலர் மலர்வது போலவோ, கடல் அலை கரை வந்து மோதி மீளச் செல்வது போலவோ, குழந்தைகளிடமிருந்து பெறும் முத்தம் போலவோ கவிதை எழுதுதலும் இயல்பானதாக இருக்கும்போது அது வாழ்வின் அண்மையில் வந்தமர்ந்து கொள்கிறது. கவிஞரின் கவிதை அனுபவம் வாசக அனுபவமாக மாறும் ரசவாதம் இங்கிருந்தே தொடங்குகிறது என நினைக்கிறேன்.
வாழ்வின் அனுபவங்களிலிருந்து கண்விழிக்கும் கவிதைகளே மொழி, நாடு, பாலின எல்லைகளைக் கடந்து மனித மனங்களோடு உரையாடுகின்றன. எதைக் கவிதையாக்கினால் பேசப்படுவோம் என்பதை விடவும், எதை நாம் உண்மையென நம்புகிறோமோ அதை எழுதுவதன்மூலம் நம்மைப் படைப்புக்குள் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். எழுத்துக்கான அறம் அதுவாகத்தான் இருக்க முடியும்.
வாழ்வின் மீதான தேடலுக்குப் பயணங்களே தீனியளிக்கின்றன. பயணங்களே நம் வாழ்வின் மீதான பார்வையைப் பக்குவப்படுத்தி நமக்குக் கையளிக்கின்றன. பெண்கள், ஊர்சுற்றிப் பறவைகளைப் போல பயணம் மேற்கொள்ளும்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறேன். ஆணின் பயண வாழ்க்கையைப் போல அத்தனை எளிதானல்ல பெண்ணின் பயண வாழ்க்கை. வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை பயண அனுபவங்கள் சொல்லித் தருவது போல வேறு யாரும் சொல்லித் தர முடியாது.
முகநூலில் நர்மி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், கவிதைகளில் வெளிப்படுத்திக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் வித்தியாசம் இருக்கின்றன. பயணத்தின்மீது பெருங்காதல் கொண்ட சிறு பறவையாகத்தான் நர்மியை நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால், நர்மியின் கவிதைகளை வாசிக்கும்போது, அன்புக்காக ஏங்கும் சிறு குழந்தையின் முகத்தைப் பார்க்க முடிந்தது. அன்பின் பெயரால் ஏமாற்றப்படும்போது, அந்த வலியிலிருந்து உயிர்த்தெழுந்த வருவதற்காகவே கவிதையைத் தேர்வு செய்து கொண்டார் என நினைக்கத் தோன்றுகிறது.
உறவுகளின்மீதான அதீத எதிர்பார்ப்பும், அந்த எதிர்பார்ப்பிலிருந்து கிடைத்த ஏமாற்றத்தினால் துவண்டு போகின்ற மனமும், காதலைத் தேடியலையும் சிறு பெண்ணின் சாயலுமாக நர்மியின் கவிதைகள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையை விட்டுத் திருப்பி அனுப்பிவிடும் தூரத்திலா நான் இருக்கிறேன் எனக் கண்ணீரோடு கேட்கும்போதும், விழக்கூடாத இடத்தில் எல்லாம் அன்பு எங்களை வீழ்த்தியது. போகட்டும் அன்பு தானே வீழ்த்தியது எனத் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ள முற்படும்போதும் அது நர்மியின் குரலாக மட்டும் இருக்கவில்லை. அன்புக்காக ஏங்கும் எல்லோருடைய விசும்பலாகத்தான் அதைப் பார்க்கிறேன்.
இந்த வாழ்க்கையில் உறவின் விலகலோ அல்லது நேசித்தவர்களின் மரணமோ மிக மிக இயல்பாக நிகழ்கிறது. நாம் அதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இயல்பாய் உதிர்ந்தாய் என்னும் கவிதையில் வெளிப்படுத்துகிறார் நர்மி.
இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதக் கூடும் என பாப்லோ நெரூடாவின் வரிகளில் பொதிந்து கிடக்கும் துயரத்தை நர்மியின் இறுதி யாசகம் கவிதையும் கொடுக்கிறது. அன்பினால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கணத்திலும், இந்த அன்பு துயரமானதுதான் எனினும் அந்தத் துயராமகவேனும் எஞ்சியிரேன் என்னும் கெஞ்சல் குரல் மனதை நெகிழச் செய்துவிடுகிறது.
நர்மியின் பனிப்பூ கவிதைத்தொகுப்பு அப்படித்தான் வாசகர்களோடு உரையாடுகின்றன. பனிப்பூ தொகுப்பை வாசித்து முடிக்கையில் துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும், அன்பின் பெயராலும் துண்டாடப்பட்ட எளிய மனதின் கண்ணீர்த் துளிகளின் ஈரத்தை வாசகர்கள் உணரக் கூடும்.

பனிப்பூ தொகுப்பின் பலம் என நான் கருதுவது அந்தக் கவிதைகளின் மொழி. வலிந்து திணிக்கப்படாத உணர்வுகள். வாழ்வின் அனுபவங்களையும் கவிதைகளாக்கும்போது வார்த்தைகளைத் தேடி அலையாமல் இயல்பான எளிய மொழியில் எழுதியிருப்பது கவிதைகளின் பலம். ஏனெனில், முதல்முறையாகக் கவிதை வாசிப்பவர்களும்கூட, இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும்போது தனக்கான கவிதையாக, தன் அனுபவத்தைப் பேசும் கவிதையாக உணரச் செய்துவிடும்.
நர்மியின் கவிதைகளில் ஒரு பெண்ணின் குரல் என்று சொல்லும்படியாகச் சில கவிதைகளே உள்ளன. உதாரணமாக, ‘யட்சிகள்’ எனும் கவிதையைச் சொல்லலாம்.
‘தேவதைகள் வருவார்கள் போவார்கள்.
யட்சிகள் மாத்திரம்
தனித்தே நின்று விடுகிறார்கள்
இந்த வனாந்திரத்தில்’
எல்லா காலத்திலும் தேவதைகள் கொண்டாடப்படுகிறார்கள். வருணிக்கப்படுகிறார்கள்.இந்தச் சமூகம், பார்வதியை, மீனாட்சியைக் கொண்டாடுகிற அளவுக்குக் கொற்றவையை, காளியை, வனயட்சியைக் கொண்டாடுவதில்லை. வ வனயட்சிகள் தனது பாதையை, தனது பயணத்தை, தனது கனவுகளைச் சுயமாகத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, வனயட்சிகளின் உலகம் நிரப்பப்படாத தனிமையால் நிறைந்து கிடக்கிறது.
அதேபோல, மரணங்கள் என்னும் தலைப்பில் நர்மி எழுதிய கவிதை, காதலை யாசிக்கும் பெண்ணின் கையறு மனதை உணர்த்துவதாய் இருக்கிறது.
மரணிக்க முடியாத
காதலை உனக்கு
வழங்கிச் செல்லும்போது
எத்தனை தடவைகள் மரணித்திருப்பேன்?
நேசிக்கும் ஆணின் முன்னால் உன்னைத்தான் காதலிக்கிறேன் என்பதைச் சொல்லிச் சொல்லி நிரூபிக்கும் ஒவ்வொரு கணமும் மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பும் பெண்ணின் கையறுநிலையே இக்கவிதை.
அவமானக் குறிப்புகள், நன்றிக்கடன், புரிதல்கள், நம் பைத்தியங்கள், சிறு சஞ்சலம், என்னிடமே கொடுத்து விடுங்கள் முதலிய பல கவிதைகள்  மனதிற்கு நெருக்கமான உணர்வைத் தந்து செல்கின்றன. நாம் எல்லோரும் எங்கோ ஓரிடத்தில் இப்படியான மனநிலைகளைக் கடந்துதான் வந்திருப்போம். அந்த மனநிலையைப் பிரதிபலிக்கின்றன இக்கவிதைகள்.
கவிஞர் ச.விசயலட்சுமி அவர்கள் மொழிபெயர்த்த ‘லண்டாய்’ ஆப்கான் பெண்கவிதைகளின் தொகுப்பில் கடவுளே உன்னைக் கைத்தொழமாட்டேன் (கடவுளே நீ பெண்ணாக இருந்திருந்தால் என்னும் கவிதை) என ஒரு ஆப்கான் பெண்ணின் கலகக் குரல் பதிவாகியிருக்கிறது. அதேபோல பனிப்பூ தொகுப்பில், குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த பல கவிதைகள் இருப்பினும் கடவுள் இறந்துவிட்டார் எனும் நர்மியின் பிரகடனம் மிக முக்கியமானது. பெண் நிலையிலிருந்து கடவுளின் மரணசாசனக் குறிப்பை உலகிற்கு அறிவிப்பது தற்காலச் சூழலில் முக்கியமான கலகக்குரல். ஆனால், அக்கவிதையில் கடவுளை மறுதலித்துவிட்டு நாத்திகனின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் எனும்போது நாத்திகன் எனும் சொல்லினுள் புதைந்துள்ள ஆண்பிம்பம் சிறு உருத்தலாக இருந்தது.
ஆண்வயப்பட்ட மொழியில்தான் பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெண் என்ற நிலையிலிருந்தே மதத்தை, சாதியை, கடவுளை மறுதலிக்கும் அரசியலை நாம் பேச வேண்டியுள்ளது. பெண்ணின் காதலைப் பேசினாலும், சமூக அவலங்களை, அரசியல் சூழலை என எதைப் பேசினாலும் நமது படைப்பின் குரல் சுயமானதாக, தனித்த அடையாளம் கொண்டதாக, பெண்ணிருப்பின் அரசியல் பேசும் குரலாக இருக்க வேண்டும். அதிலிருந்துதான் பெண்ணுக்கான மொழியை நாம் மீட்டெடுக்க முடியும்.
எழுதி எழுதி நமது துயரங்களைக் கடந்து செல்வோம்.
எழுதி எழுதி நமக்கான மொழியைக் கண்டடைவோம்.
வாழ்த்துகளும் அன்பும் நர்மி.

நூல் : பனிப்பூ (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : ம. நர்மி
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை.
விலை : 100/-

புதன், 12 டிசம்பர், 2018

ஜிட்டு எனும் அன்பன்




கடைக்குப் போகிறேன் என்றாலே டைகர், மைக்கண்ணி கூடவே வருவார்கள். இப்போதெல்லாம் டைகர் - மைக்கண்ணியின் மகன் ஜிட்டுவும் கூடவே வரத் தொடங்கிவிட்டான். தெருவில் பாட்சா தீம் மியூசிக் போடாத குறையாக, புடைசூழத்தான் சென்று வருகிறேன். கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் அதுவே தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. டைகர், தெருவில் போகிற வருகிற பைக்குகளைத் துரத்திக் கொண்டோடுவதால் சிலர் நின்று திட்டிவிட்டுப் போவார்கள். வீட்டுக்குப் போடா என்று விரட்டினாலும் கேட்கவே மாட்டான். ஆனாலும், இரவில் கடைக்குப் போய் வருவதானால் டைகர் தான் எனது பாதுகாப்பாளன். அவன் கூட வந்தால் இரவு மனிதர்களின் பயமின்றி எந்த நேரத்திலும் வெளியில் நடக்கலாம். அவ்வளவு பாதுகாப்பு.

இரவு சமைப்பதற்கான மனநிலை இல்லாததால் ஆரோவில் பஸ் ஸ்டாப்
எதிரில் உள்ள பிரியாணி விலாஸில் பிரியாணி வாங்கக் கிளம்பினேன். தெருவில் நடக்கத் தொடங்கியதும் டைகர் பின்னாடியே வந்தான். அவ்வளவு ஒன்று நேரமாகிவிடவில்லை என்பதால் டைகரைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடியே நடந்து சென்றேன். பாதி தூரம் நடந்து சென்றபின் அவதானித்தேன். என் பின்னால் நிழலைப் போல ஜிட்டு நடந்து வந்தான். தெருமுனை வரை தான் அவன் பின் தொடர்ந்து வரப் பழகியிருந்தான். இப்போது பஸ் ஸ்டாப் வரை வர ஆரம்பித்துவிட்டான். ஐம்பதடி தூரத்தில் ஈசிஆர் பஸ் ஸ்டாப். டைகர் மெயின் ரோடு வரை வருவான். சாலையைக் கடக்க வேண்டும் என்றால் மனிதர்களைப் போல நின்று இருபுறமும் பார்த்துவிட்டு பஸ்ஸோ காரோ பைக்கோ வரவில்லை என்றால் தான் சாலையைக் கடப்பான்.

கதிர் கூட துருதுருவென்று சாலையைக் கடக்கப் போய் தான் விபத்தில் அடிபட்டுப் போனான். அவன் அடிபட்ட சாலையை இப்போது பார்க்க நேர்ந்தாலும் மனம் நடுங்கும். ஜிட்டு அத்தனை துருதுரு பையன் இல்லை. ஆனாலும், அவனும் கதிரைப் போலத்தான்.

ஜிட்டு, என்ன இது புதுப்பழக்கம். இவ்ளோ தூரம் நடந்து வர. இங்கல்லாம் வரக் கூடாது. வீட்டுக்குப் போ என்றேன். என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

சொல்றதைக் கேளு. பஸ், கார்லாம் போகும். உனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. வீட்டுக்குப் போ. நான் பிரியாணி வாங்கிட்டு வர்றேன் என்றேன் அதட்டலாக. அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.

சும்மா மிரட்டுவதற்காக ஒரு சிறு குச்சியை எடுத்து வீட்டுக்குப் போ என்றேன். திரும்பிப் போவது போல பாவனைக் காட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் என் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

நேரம் ஆகுது தம்பி. படுத்தாத. சரி. இந்த இடத்திலேயே நில்லு. நான் போய் பிரியாணி வாங்கி வர்றேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். ஐந்தடி போனதும் திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். என்னையே பார்த்தபடி. சின்ன அசைவு கூட இல்லை. நானும் அவன் அந்த இடத்திலிருந்து நகர்கிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

சாலையைக் கடந்து பிரியாணி விலாஸ் போய் பிரியாணி ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருந்தது. பிரியாணி வாங்கிய கையோடு பால் பாக்கெட் சர்க்கரை டீத்தூள் வாங்கிக் கொண்டு போகலாம் என அங்கிருந்து பத்து கடைகள் தள்ளி இருந்த மளிகைக் கடைக்குச் சென்றேன். பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து இன்னொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினேன்.

சட்டென்று மனம் நின்றது. ஜிட்டுவை அங்கே இருக்கச் சொன்னோமே கிளம்பியிருப்பானா இல்லை அங்கேயே இருப்பானா என்று ஒரு சிறு சந்தேகம். நிச்சயம் கிளம்பியிருப்பான் என்றது ஒரு மனம். ஒருவேளை அங்கேயே நின்றிருந்தால்..... அந்தக் கேள்வியில் அங்கேயே ஒரு கணம் நின்று எதற்கிந்த தயக்கம் என்றபடி வந்த சாலைவழியே திரும்பி நடந்தேன்.

நான் எங்கே காத்திருக்கச் சொன்னேனோ அங்கே ஓரமாக அதே போஸில் நின்றிருந்தான் ஜிட்டு வாலையை ஆட்டிக் கொண்டு.

ஜிட்டுக் குட்டி... என்றதும் என்னை நோக்கி ஓடிவந்தான்.

ஓடிப் போய் அள்ளி அணைத்துக் கொண்டேன்.

அன்பிற்கு மொழியில்லை. அது உணர்வுகளால் ஆனது.

வியாழன், 6 டிசம்பர், 2018

அன்பின் உண்டியல்

உண்டியல் வாங்க வேண்டுமென
நானும் தோழியும் கிளம்பினோம்.
பாண்டிச்சேரியில் காலாப்பட்டு குளம் அருகில் உள்ள இரண்டு கடைகள், கோட்டக்குப்பத்தில் இருக்கும் இரண்டு கடைகள், அஜந்தா சிக்னல் அருகில் இருக்கும் ஒரு கடை இவைகள் தான் எனக்குத் தெரிந்தவை.
இது தவிர, மகாத்மா காந்தி சாலை, சிவன் கோவில் எதிரில் சிவராத்திரி சமயங்களில் பொம்மைக்கடையில் உண்டியல் விற்கும். கொலுவுக்கு வைக்கும் கலர்கலரான பொம்மைகளுடன், அரைடவுசரும் தொப்பியும் போட்ட குட்டிப் பையன் உண்டியல், மீன் உண்டியல், ஆப்பிள் உண்டியல், மாம்பழ உண்டியல், கப்பம் உண்டியல், ஆரஞ்சுப் பழ உண்டியல் என விதவிதமான உண்டியல் அங்கே இருக்கும்.
அஜந்தா சிக்னல் அருகில் உள்ள மண்பானைக் கடை மூடியிருந்தது. கோட்டக்குப்பத்தில் இருக்கின்ற இரண்டு மண்பானைக் கடைகளிலும் உண்டியல் தவிர பானை, சட்டி, தொட்டிச் செடிகள் என எல்லாமும் இருந்தன. அதைவிட்டால் பாண்டிச்சேரியில் முன்பு மத்தியச் சிறைச்சாலை இருந்த இடத்தில் சரியாகச் சொன்னால் கொசக்கடை வீதியில் நான்கைந்து மண் பானைக் கடையில் வாங்கலாமெனக் கிளம்பினோம். வார நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை.
முதல் கடையில் உண்டியல் இல்லை. அடுத்த கடையில் ஆப்பிள் உண்டியல் இரண்டு வைத்திருந்தார் கடைக்காரம்மா.
ஆரோவில் வீட்டுக்கு வந்த புதிதில் தொட்டிச் செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டபோது மொத்தமாகப் பத்துத் தொட்டிகள் வாங்கி எடுத்து வந்தேன். வெயில் காலத்தில் மண்பானை ஒரு முறை வாங்கியிருக்கிறேன். அதன்பிறகு தோழிகள் சட்டிப்பானை, தொட்டிச் செடிகள் வாங்க வேண்டும் என்று கேட்டால் இங்கே தான் அழைத்து வருவேன்.

வண்டியை நிறுத்திவிட்டு உண்டியல் விலை கேட்டோம். ஒரு உண்டியல் விலை முப்பது ரூபாய் என்றார். எங்களுக்கு நான்கு உண்டியல் வேண்டுமே என்றதும் கடைக்குள் போய் வைத்திருந்த எல்லா உண்டியல்களையும் எடுத்து வந்து காட்டினார். மொத்தம் எட்டு உண்டியல். எம்மா, உண்டியல் வாங்கினால் உள்ள உங்க கையால் காசு போட்டு விஷ் பண்ணிக் கொடுக்கனும் என்றோம். அவர் வைத்திருந்த கல்லாப் பெட்டியில் இருந்து சில்லறையை எடுத்து நான்கு உண்டியலிலும் காசைப் போட்டுக் கையில் கொடுத்தார். விளையாட்டுக்குத்தான் சொன்னோம்மா என்றதும் பரவால்ல எங்க ஊட்டுப் புள்ளைங்க மாதிரி தான் என்று சிரித்துக் கொண்டே உண்டியல் போனி பண்ணார்.
உண்டியல்தான் வாங்குவது திட்டம். கூடவே, மீன்குழம்பு வைக்க ஒரு சட்டியும், கீரைக் கடைய ஒரு சட்டியும் எடுத்து விலை கேட்டோம். ஒரு சட்டி நாப்பது ரூபாம்மா. உண்டியல் வேற வாங்குறிங்க. ஒரு சட்டிக்கு முப்பது ரூபாய் கொடுங்க போதும் என்றார். அதெல்லாம் குறைக்க வேண்டாம். நீங்க என்ன விலை வைச்சிங்களோ அதையே சொல்லுங்க என்று, சட்டியைத் தட்டிப் பார்த்து இரண்டு சட்டி எடுத்து வைத்தோம். நான்கு உண்டியல் வாங்கும் திட்டத்தைக் கொஞ்சம் நீட்டித்து மீதி இருக்கும் நான்கு உண்டியலையும் எடுத்துக் கொள்கிறோம் என்று எட்டு உண்டியலையும் எடுத்து வைத்துக் கொண்டோம். அந்த உண்டியலிலும் சில்லறை காசைப் போட்டு போனி செய்து ஒரு மஞ்சள்நிறச் சாக்குப் பையில் சட்டியையும் உண்டியல்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கட்டிக் கொடுத்தார்.
அங்கே குட்டி குட்டி அகல் விளக்குகள் குவியல் இருந்தது. அதன் விலையைத்தான் கேட்டோம். கை நிறைய விளக்கை அள்ளி இந்தாம்மா இந்தக் குட்டிப் பொண்ணுக்கு இது என பத்து அகல்விளக்குகளை என் கையில் கொடுத்தார். இது உனக்கு என என் தோழிக்கு ஆறு விளக்குகளைக் கொடுத்தார். எவ்ளோமா என்றேன். வச்சிக்கம்மா. நீ அந்த அகலை வைச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டே இருந்தல்ல. அம்மா கொடுக்கிறேன் வச்சிக்க என்றார்.

ம்மா, உங்க கடையோட சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றேன். நல்லா எடுத்துக்க என்று சேலையைச் சரி செய்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தார். தேங்க்ஸ் மா என்று சொல்லிவிட்டு, கட்டி வைத்த மூட்டையை வண்டியின் முன்பு வைத்துக் கொண்டு கிளம்பினோம். எம்மா, அடுத்தமுறை வரும்போது இந்தப் போட்டோவை ஒரு காப்பி எடுத்து வந்து கொடுக்கனும் என்றார்.

அவசியம்மா என்றபடி  பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
அந்த எளிய அன்பு மனதைச் சிலிர்க்கச் செய்தது.
மனித வாழ்வின் ஆணிவேர் எளிய அன்பன்றி வேறென்ன.