பாறை நின்றிருந்த தோற்றம், காளி கோவிலுக்குச் செல்லும் பாதையை பாதியாக அடைத்தபடி இருந்தது. லாவகமற்ற வகையில் பிரம்மாண்டமானத் தோற்றம் அது. எவ்வளவோ முயன்றும் முழு ஓவியத்தைப் படமாக எடுக்க முடியவில்லை. அதனால் காளியின் முகத்தில் இருக்கின்ற கம்பீரத்தை இரு கண் கொண்டு தான் பார்க்க வேண்டும்.
வெள்ளி, 21 செப்டம்பர், 2018
கோல்கொண்டா கோட்டையும் காளி ஓவியமும்
பாறை நின்றிருந்த தோற்றம், காளி கோவிலுக்குச் செல்லும் பாதையை பாதியாக அடைத்தபடி இருந்தது. லாவகமற்ற வகையில் பிரம்மாண்டமானத் தோற்றம் அது. எவ்வளவோ முயன்றும் முழு ஓவியத்தைப் படமாக எடுக்க முடியவில்லை. அதனால் காளியின் முகத்தில் இருக்கின்ற கம்பீரத்தை இரு கண் கொண்டு தான் பார்க்க வேண்டும்.
வெள்ளி, 14 செப்டம்பர், 2018
ஹேங் ஓவர் கதை
வெள்ளி, 29 ஜூன், 2018
பெருநகரத்தின் மேகி
அண்ணா நகருக்கு ஒரு வேலையாகச் சென்றபோது பசி வயிற்றைக் கிள்ளியது. மெட்ரோ ஸ்டேஷன் அருகில் சாப்பிட கடைகள் இருக்குமா என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை . காஃபி ஷாப் (கொஞ்சம் காஸ்ட்லி ஷாப்), கேக் ஷாப், செப்பல் கடை, ஆண்ட்டிக் ஷாப், துணிக்கடை என வரிசையாக இருந்தன. அதில் ஒரு சின்ன கடை. ரெஸ்ட்டாரண்ட் என்று சொன்னால் கொஞ்சம் கெத்தா இருக்கும். எனவே ரெஸ்டாரண்ட் என்றே வைத்துக் கொள்ளலாம்.
அங்கே சிம்பிளா ஏதாவது சாப்பிடலாம் என்று போனேன். பசி ஒரு பக்கம் என்றாலும் போனில் 2% தான் சார்ஜ். சாப்பிடுகிற சாக்கில் போன் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதுதான் முதன்மை நோக்கம்.
போனதும் சாப்பிட என்ன இருக்கு என்றேன். மெனு கார்டை எடுத்துக் கொடுத்தார் அந்த நண்பர். மெனு கார்டைப் பார்த்துக் கொண்டே போன் சார்ஜ் பண்ணிக்கலாமா என்றதும் ம் கொடுங்க என்று மொபைலை வாங்கி சார்ஜ் போட்டார்.
அந்தக் கடையில் இருந்ததே மொத்தம் மூன்றே மூன்று டேபிள் & சேர்கள் தான். அதில் ஒரு டேபிளில் அமர்ந்து மெனு கார்டை ஒருமுறைக்கு நான்கு முறை படித்தேன். பசிக்குச் சாப்பிடுவது போல எதுவுமில்லை. பிரட் டோஸ்ட் இருக்கா என்றேன். 4 மணிக்கு மேல தான் மேடம் என்றார். பிறகு மீண்டும் மெனு கார்டை ஒரு ரவுண்டு பார்த்து விட்டு ஃப்ரன்ச் ஃப்ரைஸ் 🍟 என்றேன். ஃப்ரை ஐட்டம் எல்லாமே 4 மணிக்கு மேல தான் மேடம் என்றார். சரி இப்போ சாப்பிடற போல என்ன தான் இருக்கும் என்றேன். இதை முன்னாடியே கேட்டிருக்கலாம் என்றது என் மைண்ட் வாய்ஸ். மேகி, பாஸ்தா, சமோசா இதான் மேடம் இப்போ கிடைக்கும் என்றார்.
அவசரத்துக்கு மேகி சாப்பிடுவோம் என நினைத்தேன். மெனு கார்டில் மேகியில் 5 வகைகள் இருந்தன. நமக்குத் தெரிந்ததெல்லாம் 10 ரூபாய் மேகி வாங்கி கொதிக்க வைத்த தண்ணீரில் கொட்டி கிளறி ஆவிபறக்கத் தட்டில் பரப்பி சாப்பிடுவது. அல்லது கொஞ்சம் நல்ல மனநிலை இருந்தால் கேரட் பீன்ஸ் வெங்காயம் போட்டு வதக்கி கலர்ஃபுல்லாகச் செய்வதுண்டு. அதுவும் இல்லாமல் நான் முதல் முதலில் சமைக்கக் கற்றுக் கொண்டது மேகி தான். அதனாலேயே மேகி எனக்குப் பிடித்த உணவாக இருந்தது.
மெனு கார்டில் இருந்த 5 வகை மேகியில் கார்ன் ச்சீஸ் மேகி வித்தியாசமாகத் தெரிந்தது. ஸ்வீட் கார்ன் பிரியை என்பதால் அதை முயற்சி செய்வோம் என்று கார்ன் ச்சீஸ் மேகி என்றேன். மெனு கார்டை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
எதிரில் சுவரில் மாட்டியிருந்த எல்ஈடி டீவியில் ப்ரேக் ஃப்ரீ சாங்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. மத்தியன வெயில் பல்லை இளித்துக் கொண்டிருந்தது. உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் லவ்வு ஒரு ஃபீலு அட சொல்லுறத கேளு என பொம்மலாட்ட பொம்மைகள் போல கையைக் காலை ஆட்டி நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. அதற்கடுத்து வந்த பாடலும் அதே வகையறா பாடல்கள் என்பதால் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது மொபைலில் சார்ஜ் ஏறுகிறதா என்று பார்த்துக் கொண்டேன். 2%லிருந்து 30% சார்ஜ் ஏறியிருந்தது. 5 நிமிடத்தில் ரெடியாகியிருக்க வேண்டிய மேகி அரை மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை. மெனு கார்டை கொண்டு போன அண்ணாவைக் காணவில்லை. இதற்கு மேல் காத்திருக்க முடியாது எனப் பொறுமையிழந்து மேகி கேன்சல் எனச் சொல்வதற்கு எழுந்து போனேன். சமைக்கும் பகுதியில் இருந்து வந்தவர் இன்னும் 5 நிமிடத்தில் உங்க மேகி ரெடி ஆகிடும் மேம் என்றார். இருக்கிற உணவு வகையிலேயே மேகி தான் குறைவான நேரத்தில் தயாராகக் கூடியது. ஏற்கனவே அரை மணி நேரம். இதில் இன்னும் 5 நிமிடமா என்று சலிப்பாக இருந்தது.
அவர் சொல்லிவிட்டுப் போய் பத்து நிமிடம் கழித்து மேகி வந்தது. பார்த்ததும் பயங்கர அதிர்ச்சி. பத்து ரூபாய் மேகியை தண்ணீரில் வேக வைத்து, எண்ணி 15 சோளப் பற்கள் போட்டு, கொஞ்சம் சீஸை மேலே தூவி இருக்கிறார்கள். இதற்குப் பெயர் கார்ன் ச்சீஸ் மேகி. விலை 80/- தயாராகி வருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் 40 நிமிடங்கள்.
இதானா சார் உங்க டக்கு என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்போதைய பசிக்குக் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் சாப்பிட்டுவிட்டு பில் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.
டீவியில் போ நீ போ... போ நீ போ... தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ என தனுஷ் சோகமாகப் பாடிக் கொண்டிருந்தார். கிளம்பும் நேரத்தில் எனக்குப் பிடித்த பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் போய்த்தான் ஆக வேண்டும் அன்பே.
வியாழன், 21 ஜூன், 2018
மழையும் நானும்
ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் தொடங்கும்போதெல்லாம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மழையில் நனைந்து மகிழ்ந்துவிட்டு அடுத்து நனையாமல் போய் வர வேண்டும் என குடை வாங்குவேன். குடை வாங்கிய கொஞ்ச நேரத்தில் அல்லது மாலைக்குள் மழை நின்று விடும். மழைதான் நின்றுவிட்டதே என குடையை யாருக்காகவது தானம் கொடுத்துவிடுவேன். பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த காலங்களில் ஹாஸ்டலில் வேலை செய்யும் அக்காக்களில் யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன். அந்தக் குடைக்காக வாரத்தின் இரண்டு நாட்கள் மீன் குழம்பு கொண்டு வருவார்கள். அடிக்கடி வீட்டு சாப்பாடு சாப்பிடும் யோகம் கிடைக்கும். மீண்டும் மழை கொட்டத் துவங்கும். மழை பெய்யத் தொடங்கியதும் கொடுத்த குடையைத் திருப்பிக் கேட்பது நியாயமில்லை தானே.
மழை பெய்வதும் குடை வாங்குவதும் குடை வாங்கியதும் மழை நிற்பதும் தற்செயலாக நடக்கிறது என விட்டுவிட்டேன்.
இப்போது எனது சிறிய கேரளப் பயணத்தில் வந்திறங்கிய நிமிடத்திலிருந்து மழை. (ஏற்கனவே பெய்து கொண்டு தான் இருக்கிறது.) மழையில் நனைந்தபடியே நேற்று கொச்சின் கடற்கரை பயணம் மனதுக்கு நிறைவாக அமைந்தது.
இரண்டாம் நாளான இன்று காலை அதிரப்பள்ளி அருவியைத் தரிசிக்கக் கிளம்பினால் மழையோ மழை அப்படியொரு மழை. மழைக்காக ஒதுங்கி நிற்க முடியாது என நனைந்து கொண்டே கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு குடை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கினால் அது வரை அடித்துப் பெய்த மழை தூறலாக மாறிவிட்டது. சாலக்குடி போகும் பேருந்தில் ஏறி அமர்ந்து டிக்கட் எடுப்பதற்குள் மழை மொத்தமாக நின்றுவிட்டது.
பேருந்தில் போகும்போது வழியில் கொஞ்சம் மீண்டும் மழை. போகும் வழியெல்லாம் மழை தான். குடைக்கு வேலை வந்துவிட்டது என்று நினைத்தேன். அதிரப்பள்ளி அருவி நிறுத்தத்தில் இறங்கிய ஐந்து நிமிடத்தில் மீண்டும் மழை நின்று விட்டது.
என்னடா என் குடைக்கு வந்த சோதனை??
ஒரு டைம் மெஷின் இருந்தால் குடை வாங்காமல் போயிருப்பின் என்ன நடந்திருக்கும் எனப் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். தற்செயலாக மழைச் செயலா எனத் தெரிந்திருக்கும்.
திங்கள், 21 மே, 2018
கொழுக்கட்டை நினைவுகள்
திண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவரிடமிருந்து விடை பெற்ற பின், சூடாக ஒரு தேநீர் அருந்தலாம் என்று கிளம்பினேன். ஒரு ஸ்வீட் ஸ்டாலில் தேநீர் மற்றும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் புகைப்படங்கள் கடைக்கு உள்ளே வாங்க என அழைக்காமல் அழைத்தன.
ப்ளாக்.ஃபார்ஸ்ட் கேக் இருக்கா என்று விசாரித்தால் இல்ல மேடம் என்றார்கள். அப்புறம் வெளியில் போட்டோ இருக்கு என்றேன். சங்கோஜமாகச் சிரித்தார்.
விசாரித்ததற்காக ஏதாவது வாங்க வேண்டும் என கண்ணாடி வழியாக ஸ்வீட் வகையறாக்களை நோட்டமிட்டேன். எனக்குப் பிடித்த வெள்ளை ரசமலாய் கண்களை ஈர்த்தது. நாக்கில் எச்சில் ஊறியது. ஒரேயொரு பீஸ் சாப்பிடக் கொடுக்கச் சொல்லிவிட்டு, கால் கிலோ பார்சல் செய்யச் சொன்னேன்.
அந்தக் கடையில் பத்தே பத்து டேபிள். ஒவ்வொரு டேபிள் முன்பும் இரண்டு இரும்பு இருக்கைகள். ஃபேன் சத்தம் வெளியில் இருக்கும் வெயிலின் உஷ்ணத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியது.
எதைப் பற்றிய கவனமும் இன்றி ஒரேயொரு ஃபலூடாவை பாதி சாப்பிட்டு விட்டு சூழல் மறந்து பேசிக் கொண்டிருந்தது ஒரு காதல் ஜோடி. ஃபலூடா உருகி ஜூஸ் ஆகி இருந்தது.
அவர்கள் பக்கத்தில் ஸ்மார்ட்டான ஒரு பையன் மசால் தோசையைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான்.
காலியாக இருந்த டேபிளில் உட்கார்ந்து டீ சொல்லும்போது தான் கவனித்தேன். கொழுக்கட்டை அங்கே கிடைக்கும் எனத் தெரிந்து கொண்டேன். ஒரு ப்ளேட் கொழுக்கட்டை கொடுக்கச் சொன்னேன். 5 நிமிடத்தில் சுடச் சுடக் கொழுக்கட்டை வந்தது. பெரிய சைஸ் பூண்டு போல இருந்தது. இனிப்புக் கொழுக்கட்டை. ஆளை அப்படியே விழுங்கிவிடும் போல சுவை. அம்மா செய்யும் கொழுக்கட்டையின் கைப்பக்குவம் அப்படியே இருந்தது.
ஊரில் இருக்கும்போது விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாட்களில் கொழுக்கட்டை செய்ய அம்மாவுக்கு உதவி செய்த ஞாபகங்கள் வந்து போயின.
காலையில் எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து சாணி போட்டு வீட்டை மெழுகி, பெருக்கி, வாசற்படி, கதவுகளில் பொட்டு வைத்து மங்களகரமாக வீடு மாறியிருக்கும். எத்தனை மணிக்கு எழுந்து வேலையைத் தொடங்குவார் என்று தெரியாது. தூக்கம் கலைந்து எழுந்து வரும்போது லட்சுமி கடாட்சமாக இருக்கும் வீடு.
இந்த வேலைகளுக்கு நடுவில் அம்மா பச்சரியை ஊரவைத்து இருப்பார். மதியம் சாப்பிட்டு முடித்த பின், ஊறவைத்த அரிசியைத் தண்ணீர் இல்லாமல் இறுத்து, வெள்ளைத் துணியில் உலர்த்தி, உரலில் போட்டு மாங்கு மாங்கென இடித்து மாவு சலித்து எடுப்பார்கள். பக்கத்து வீட்டு அக்கா யாராவது அம்மாவுக்கு உதவியாக மாவு இடித்துக் கொடுப்பார். அல்லது அம்மா மாவு இடிக்க, சலித்தெடுத்து பாத்திரத்தில் கொட்டுவார். மாவு ரெடி ஆனதும் இட்லி தட்டில் துணி பரப்பி, அரிசி மாவைப் பரப்பி அடுப்பில் வைத்துவிட்டு, கொழுக்கட்டைக்குத் தீனி ரெடி பண்ண ஆரம்பிப்பார் அம்மா. துருவிய தேங்காய், ஊறவைத்து வேகவைத்த பாசிப் பருப்பு, வெல்லம் மூன்றையும் சமபங்கு பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைப்பார். உடன் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் சாக்கில் ஒன்றிரண்டு உருண்டைகளை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். அம்மா திட்ட மாட்டார். சாமிக்குப் படைக்காமல் சாப்பிடக் கூடாதுமா என்றபடி ஒரு சின்ன தட்டில் ஒரு உருண்டையை வைத்து, சாமி பக்கத்தில் வைத்துக் கும்பிட்டு விட்டு வரச் சொல்வார். பவ்வியமாக வாங்கிக் கொண்டு சாமி அறைக்குள் போனதும் அந்த உருண்டையில் பாதியை வாயில் போட்டுக் கொண்டு, மீதியை உருட்டி உருண்டையாக்கிச் சாமி முன்பு வைத்துக் கும்பிட்டுவிட்டு வந்து மீண்டும் கொடுக்கட்டை செய்வதை வேடிக்கை பார்க்க ஆரம்பிப்பேன்.
அரிசி மாவு வெந்ததும் இறக்கி, லேசாக ஆற வைத்து, கையளவு மாவு எடுத்து, தட்டி, உள்ளே தீனியை வைத்து மூடி, மீண்டும் இட்லி தட்டின்மீது அடுக்கி அடுப்பில் வைப்பார். தட்டையான வடிவில் கொஞ்சம், கும்பம் வடிவில் கொஞ்சம், உருண்டை வடிவில் கொஞ்சம் என ஒவ்வொரு ஈடாக வேகவைத்து எடுப்பார். சூடு ஆற ஆற கொழுக்கட்டையை இரண்டு கைகளில் எடுத்துக் கொண்டு தோழிகளைப் பார்க்கச் சிட்டாகப் பறந்து விடுவேன். இப்படியே எடுத்துட்டு போனா சாயந்திரம் என்னத்த வைச்சு படைக்கிறது என அம்மா கேட்டதே இல்லை. ஆனால் இந்தக் கேள்வி அம்மாவுக்கு உதவி செய்யும் அக்காவிடமிருந்து வரும். அடுத்து வந்து கையை வை. அவ்ளோ தான் என்பார். விடும்மா அவளுக்குத் தானே செய்யறேன் எப்ப சாப்பிட்டாலும் அவ தானே சாப்பிடப் போறா என்பார் அம்மா.
கொழுக்கட்டை சூப்பர்மா என ஒருமுறை கூட அம்மாவிடம் சொன்னதில்லை. கொழுக்கட்டை என்றில்லை. அம்மா எனக்காக செய்து கொடுத்த எந்தத் தின்பண்டங்கள் பற்றியும் எந்தக் கருத்தையும் நான் வெளிப்படுத்தியதில்லை. சாப்பிடக் கொடுப்பதை அம்மாவுக்குத் தெரிந்தும், சிலசமயம் தெரியாமலும் எடுத்துக் கொண்டு போய் தோழிகளுடன் பகிர்ந்து சாப்பிடுவதுதான் எனது ஒரே குறிக்கோள்.
இப்போதெல்லாம் தோழிகளின் வீடுகளுக்குப் போனால் குழந்தைகள், அவர்கள் செய்து கொடுக்கும் உணவைச் சாப்பிடும் போது அம்மா மீனு சூப்பர் மா. சிக்கன் டேஸ்ட்டா இருக்கு மா, சாம்பார் நல்லா இருக்குமா, கேரட் சாதம் யம்மி என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கையில் உள்ளூர ஏக்கமும் சிறு குற்ற உணர்வும் வந்து போகும்.
அப்போது அம்மாவிடம் சொல்லாமல் விட்டதற்காக, கடைகளில் அல்லது தோழி வீடுகளில் சாப்பிடும் போது மறக்காமல் உணவின் சுவையைப் பாராட்டி விடுவேன். அதுவும் தள்ளுவண்டி கடைகளில் சாப்பாடு நல்லா இருக்கு எனச் சொல்லும் போது அவர்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் இருக்கும். கொஞ்சம் நெருக்கமும்.
கொழுக்கட்டை, தேன் போல உள்ளிறங்கியது. சாப்பிட்டு முடித்து டீ கொண்டு வரச் சொன்னேன். பேப்பர் ப்ளேட்டை எடுக்க வந்த அக்காவிடம் கொழுக்கட்டை சூப்பர்க்கா. வீட்ல பண்ண மாதிரி இருந்தது என்றேன்.
அவ்வளவு நேரம் அடுப்பில் கொழுக்கட்டை வெந்து கொண்டிருப்பதை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அக்கா யோசனை களைந்து நிமிர்ந்து பார்த்தார்.
முகத்தில் பளிச்சென்ற புன்னகை.
சனி, 21 ஏப்ரல், 2018
தியேட்டரில் படத்தின் பெயர்களைத் திரையில் பார்க்கும்போது நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், ஒளியமைப்பாளர் இவர்கள் பெயர்களை மட்டும் தான் பார்த்து மனதில் இருத்திக் கொள்வேன். அதைத்தாண்டி, கதையைக் கவனிப்பதுண்டு. சினிமாவை ரொம்ப தொழில்நுட்பம், குறியீடு, கோட்பாடு என்றெல்லாம் பார்க்கும் அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஒரு திரைப்படத்தில் மேலே சொன்னவர்களைத்தவிரவும் படத்தில் பங்காற்றுகின்ற கலைஞர்களை மிகச் சமீபமாகத்தான் கவனிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா இவர்கள் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் (2013) பெயர் போடும்போது கவனித்தேன். இரண்டு ஆச்சரியங்களும் அதிர்ச்சியும். ஒன்று தனுஷ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம். இரண்டாவது பாடலாசிரியர் வாலி, Poetu தனுஷ். படம் பார்ப்பதற்கு முன்பே எஃப் எம்மில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எதிர் நீச்சலடி, வென்று ஏத்துக் கொடி, அட ஜாலியா வாலி சொன்னபடி... என்ற பாடலும், ஓஹோ மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாயே என்ற பாடலும் அடிக்கடி கேட்டு வரிகள் எல்லாம் மனப்பாடம் ஆகியிருந்தது. ஜப்பானில் பிறந்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே.. என்ற வரியில் லயித்துப் போய் அமர்ந்திருந்தேன். சொல்லப் போனால் இந்த வரிக்காகத்தான் எதிர்நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும் என்று போனதே.
அந்தப் படம் பார்த்தபோது Poetu தனுஷ் என்பதைப் பார்த்து, தனுஷ் பாடல் எழுதுகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன்பே பாடல்கள் எழுதி அவர் பாடலாசிரியராக ஆகிவிட்டார் என்பது எனது கவனத்திற்கு வராமலே போய்விட்டது. அவரே படத்தைத் தயாரித்து, அவரே பாடல் எழுதி, அவரே பாட்டும் பாடி, அவரே வந்து ’சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ என்று ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிவிட்டும் போவதெல்லாம் சாதாரண விசயமல்ல.
ஆனாலும் கூட, நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே பாடலின் வரிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அதன்பிறகு தனுஷ் என்ன பாடல் எல்லாம் எழுதி இருக்கிறார் என்று ஒரு பட்டியல் எடுத்தேன்.
3 படத்தில் எனக்குப் பிடித்த கண்ணழகா காலழகா பாடல்,, போ நீ போ பாடல், நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் பாடல் என நான் மெய் மறந்து ரசிக்கும் பாடல் வரிகளை தனுஷ் தான் எழுதி இருக்கிறார். ’இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…இருளில் தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணும் விதி இல்லையா… என்ற வரியை மனதுக்குள் பலமுறை முணுமுணுத்திருக்கிறேன். ஒய் திஸ் கொலவெறி பாடலைக் கேட்கும்போது மனசுக்குள் இதெல்லாம் ஒரு பாட்டா என கொலவெறி வருவது தனிக்கதை.
வேலையில்லா பட்டதாரி படத்தில் அட ஊதுங்கடா சங்கு பாடலையும், ஹேய்.. இங்க பாரு கூத்து ஜோரு பாடலையும், ஏ சுட்ட வட போச்சு டா வாட் ய கருவாட் பாடலையும் ஒரு ஜாலி மனநிலையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒதுக்கித் தள்ளிவிடாதபடி ஏதோவொரு மேஜிக் இந்த மூன்று பாடல்களிலும் இருக்கிறது. அனிருத்தின் துள்ளல் இசை காரணமாக இருக்கலாம்.
அதே படத்தில் அம்மா அம்மா பாடல் பல நேரங்களில் என்னை நெகிழ்ந்து அழச் செய்திருக்கிறது. பகலும் இரவாகி பயமானதே அம்மா. விளக்குன் துணையின்றி இருளானதே என்ற வரிகளில் தான் எத்தனை உண்மை.
இப்படியே தனுஷ் எழுதிய பாடல்களின் பட்டியலில் பிறை தேடும் இரவிலே உயிரே எனைத் தேடி அலைகிறாய் பாடலும் இணைந்து கொண்டது ஆச்சரியம். நான் அடிக்கடி கேட்டும் பாடல்களில் ஒன்று இந்தப் பாடல். சைந்தவியின் குரலுக்காகவும் இந்த வரிகளுக்காகவும் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் இரவில் தூங்கச் செல்லும்போது கேட்கும்போது இருக்கும் சுகமே தனிதான்.
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்தச் சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
Pirai Thedum- MAYAKKAM ENNA HD - www.Tamilsweet.net
இப்படிச் சொல்லும் ஓர் இதயம் தானே காதலின் தொடக்கம்.
தனுஷை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராகவும் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது.

