வியாழன், 29 அக்டோபர், 2026

             
                                            

மௌனத்தின் உப்புப் படிவங்கள் 

மௌனம் ஏன் இத்தனை குரூரமாக இருக்கிறது மாயா?
ஒரு சொல்லுக்கும்
அதைப் பேசத் துணியாத ஒரு மனதுக்கும் இடையில்
நூற்றாண்டுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு சொல்லைச் சொல்லிவிடுவதற்கும்
ஒரு பெருங்கடலைக் கடப்பதற்கும் இடையில்
இவ்வளவு தூரம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
நீ கேட்பது ஒரேயொரு சொல்லைத்தான்.
ஆனால்
எனக்குள் உறைந்திருக்கும் மௌனத்தின் 
பெரும்பாறையை
எந்த மொழியால் பிளப்பது?

குண்டூசியின் நுனியில் ஒரு மலையைச்
சுமந்துகொண்டு நிற்கிறேன்.
மொழிக்கிடங்கில் தொலைந்துபோன 
அந்த ஒற்றைச் சொல்லை
அகராதியின் இருண்ட பக்கங்களிலிருந்து 
மீட்டெடுப்பது எப்படி?
அது நாவின் நுனியில் அமர மறுக்கிறது.
தொண்டைக்குள் இறங்கும்போது
ஒரு பெருங்கடலாக விரிகிறது.
பேசத் தொடங்கினால் கரைந்து காணாமல் போய்விடுமா?
எனது மௌனத்தின் ஆழத்தில்
அதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

உன்னிடம் திரும்பி வர முடியாத ஒரு நீண்ட பிரிவு
தன் கதவுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது.
எனது நாட்கள் கண்ணீரால் எழுதப்பட்டவை.
அவற்றின் மீது பிரிவின் வெம்மை 
தணியாமல் படர்ந்திருக்கிறது.
இரவுகளில் உன்னை நினைப்பதற்கும்
உன்னை மறப்பதற்கும் இடையில்
எவ்வளவு நேரம் விழித்திருக்கிறேன் என்பதை
என்னால் கணக்கிட முடியவில்லை.
வார்த்தைகளற்ற இந்த மௌனம்
உடைந்து சிதறிவிடாமல்
என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசிப் பிரயத்தனம்.
இந்தத் துயரத்தை
யாரிடம் சொல்லி என்னை ஆற்றிக் கொள்வது மாயா?
 
ஒரு சொல்லைச் சொல்லிவிடுவதற்காக
நான் எழுப்பிக்கொண்ட இந்தப் பாறையை
எந்தக் காலத்தால் உடைக்க முடியும்?
எனது நாட்கள்
கண்ணீரின் உப்புப் படிவங்களால்
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றின்மீது நீ இல்லாதிருத்தலின் வெம்மை
ஒரு கைவிடப்பட்ட நிலத்தின் வெயிலைப்போல
இரவும் பகலும் 
தணியாமல் எரிந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வதென்பது
உன்னை மறப்பதல்ல மாயா,
உன்னை நினைவுகூர்ந்தபடியே
உன்னிடமிருந்து விலகிச் செல்லும்
ஒரு நீண்ட தண்டனையை 
எனக்கு நானே வழங்கிக்கொள்கிறேன்.
இதை யாரிடம் சொல்வேன்?

மனிதர்களிடம் சொற்கள் இருக்கின்றன.
ஆறுதல்கள் இருக்கின்றன.
எல்லாத் துயரங்களுக்கும் பெயர் சூட்டிவிட முடியும் எனும்
சிறிய ஆணவமும் இருக்கிறது.
ஆனால் 
பெயரிட முடியாத இந்தத் துயரத்தை
அவர்களிடம் எப்படிக் கொண்டுசெல்வது?

நான் இந்தக் கடலிடம் வந்தமர்கிறேன்.
இரவு கடலைப் போர்த்தியிருக்கிறது.
இரவின் மீது குளிர் அப்பியிருக்கிறது.
நான் சொல்லாமல் விழுங்கிய சொற்களை
அலைகளாக மாற்றி
எனக்குத் திருப்பித் தருகிறது.
நீயும் அப்படித்தான் மாயா.

என் நினைவுகளுக்குள் நீ வருகிறாய்.
எந்த அலையும்
தான் கொண்டு வந்த கடலைக்
கரையில் விட்டுவிட்டுச் செல்வதில்லை.
நானும் அப்படித்தான்.
மாயா,

இந்தக் கடலுக்கும் 
எனக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது.
எத்தனை முறை கரையை அடைந்தாலும்
கடலால் கரையாகிவிட முடிவதில்லை.
எத்தனை முறை உன்னை நினைத்தாலும்
என்னால் உன்னிடம் திரும்பிவிட முடிவதில்லை.
இருவரும் அவரவர் எல்லைகளுக்குள் 
முடிவற்றுக் கிடக்கிறோம்.

இப்போது நீ மீண்டும் கேட்கிறாய்.
‘ஒரேயொரு வார்த்தையாவது பேசேன்’.
என்ன பேசுவது மாயா?
நீ இல்லாத நாட்களில் 
காலம் நகரவில்லை என்று சொல்வதா?
உனது பெயரை உச்சரிக்காத இரவுகளில்கூட
எனது கனவுகள் 
உனது குரலால் நிரம்பியிருக்கின்றன
என்று சொல்வதா?
அல்லது
மௌனத்தின் கண்ணீரால் உன்னிடம்
பேசிக்கொண்டிருப்பதைச் சொல்வதா?
எனக்குத் தெரியவில்லை.

சொற்கள் எப்போதும்
பேசுவதற்காக மட்டுமே பிறப்பதில்லை மாயா.
சில சொற்கள் ஒருவரை இழந்த பிறகு
அவருக்குள் தொடர்ந்து வாழ்வதற்காகப் பிறக்கின்றன.
சில சொற்கள்
எப்போதும் உச்சரிக்கப்படாமல் இருப்பதன் வழி
தமது முழுமையை அடைகின்றன.
எனக்குள் அப்படியொரு சொல் இருக்கிறது.
கடலின் அடியில் வெளிச்சம் நுழையாத இடத்தில்
தனது கடைசித் துடிப்பையும்
யாருக்கும் கேட்காமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும்
ஒரு சிறிய உயிரைப் போல.

நான் வாழ்ந்து முடிக்காத வாழ்க்கை
எனது நாட்களின்மீது 
சொற்களற்றுக் கிடக்கிறது மாயா.
சொற்களற்ற வெளியில்
இப்போதும் அமர்ந்திருக்கிறேன் நான்.
கடல் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
நீ எங்கிருந்தோ 
எனது மௌனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறாய்.

- மனுஷி

புதன், 28 அக்டோபர், 2026


 பழைய நினைவின் வாசனை

உன்னைச் சந்திக்கக் காத்திருக்கும்

இந்தக் காலைப்பொழுது

ஏன் இத்தனை மெதுவாய் நகர்கிறது?

விடியலுக்கும் சூரியன் உதிப்பதற்கும் இடையில்

இவ்வளவு நீண்டதொரு காலம் ஒளிந்திருக்குமென

இதுவரை நான் அறிந்திருக்கவில்லை.

உன்னைச் சந்திக்கவென

இந்த விடியலின் முன்பு 

மூவாயிரம் வருடங்களாகக் காத்திருப்பதுபோல் இருக்கிறது.

ஆதி மனுஷியின் காலத்திலிருந்து

என்னைச் சந்திக்க வருவதாய்

இரும்புக் கதவில் வந்தமர்ந்த காகம் சொல்கிறது.

அதன் கரிய அலகில்

எந்தக் காலத்தின் செய்தி இருக்கிறது?

எந்தப் பிறவியின் நினைவைச் சுமந்து

என் வாசலில் வந்து அமர்ந்திருக்கிறது?

மாயா,

உன்னை இதற்கு முன்பு எங்கேனும் சந்தித்திருக்கிறேனா?

குகையின் இருளில்

நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்களின் முகங்களுக்கிடையே 

உன் முகம் இருந்திருக்குமா?

நிலவொளியில்

குழந்தையைத் தோளில் சுமந்தபடி

வீடு திரும்பிய பெண்ணின் கண்களில்

உன் சாயல் படிந்திருக்குமா?

தெரியவில்லை.

ஆனால்,

உன்னைச் சந்திக்கப்போகும் இந்தக் காலையில்

என் உடல் முழுவதும்

பழைய நினைவின் வாசனை

தேன்சிட்டு போல் சிறகடித்துக் கொண்டிருக்கிறது.

கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்.

உன் பார்க்கும்போது எப்படிப் புன்னகைப்பேன் என

ஒத்திகை செய்து கொள்கிறேன்.

பூவில் அமர்ந்து தேனருந்தும் பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்

படபடக்கிறது என் இதயம்.

என் கண்களுக்குள்

ஆயிரமாண்டுகளைக் கடந்து ஒரு பெண்

இப்போதுதான் விழித்தெழுகிறாள்.

கூந்தலை வாரிக்கொள்கிறேன்.

அகல்விளக்கு ஒன்றினை ஏற்றி வைக்கிறேன்.

சாம்பிராணி புகையினால் வீட்டை மணக்கச் செய்கிறேன்.

இன்னும் என்ன செய்வது மாயா,

முதன்முதலாக உன்னைச் சந்திக்கப்போகும் எனக்கு

உன்னைப் பற்றிய பழைய நினைவுகள் நிறைய இருக்கின்றன.

அந்திவானில் கூடடையும் இளஞ்சூரியனைப் போல

ஒரு வெளிர் மஞ்சள் ஆடையில் நீ வந்து சேர்ந்துவிட்டாய்.

நெருஞ்சி மலரின் நிறத்தில்

எத்தனை எளிதாக என் காத்திருப்புக்குள் நுழைந்துவிட்டாய்!

உன் காலடி அரவம் கேட்டதும் தாழ்ப்பாளைத் திறக்கும் ஓசையை

நீ கேட்கும் முன்

என் இதயத்தின் ஓசையைக்  கேட்டிருக்க வேண்டும்.

மஞ்சள் எனக்கு விருப்பமான நிறம் என்பதை எப்படி அவதானித்தாய் மாயா?

நான் அடிக்கடி அணியும் ஆடை, எனக்குப் பிடித்த பூக்கள்,

நான் அனுப்பும் இதய ஸ்மைலி

இவற்றுக்கிடையே நான் ஒளித்து வைத்திருந்த

என் மஞ்சள் நிறத்தின் ரகசியத்தை

உன் கண்கள் எப்படிக் கண்டடைந்தன?

அல்லது, நிறங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே

நாம் ஒருவரையொருவர் அறிந்திருந்தோமா?

மூவாயிரம் வருடக் காத்திருப்புக்குப் பிறகு

உன்னிடம் பேசுவதற்கு என்னிடம் இருப்பதெல்லாம்

சில வெட்கங்களும்

சில புன்னகைகளும்

சொல்லத் தொடங்கினால் அழுதுவிடக்கூடிய சில சொற்களும்தான்.

மாயா, நீ வந்துவிட்டாய்.

நீ என் முன்னால் நிற்கும்போது

முதன்முறையாகச் சந்திப்பதைப் போல் இல்லை.

நீண்ட பிரிவுக்குப் பின்பு திரும்பிய

நேசத்தின் வாஞ்சையைத்தான் தரிசித்தேன்.

இன்றைய கணத்தில்

காலத்தைச் சந்தித்துக் கொண்டோம் மாயா.

- - மனுஷி

ஞாயிறு, 25 அக்டோபர், 2026


 சந்திப்பின் தேவ கணங்கள்

- மனுஷி

பரிசு பெறக் காத்திருக்கும் பள்ளிச் சிறுமி போல

உனக்காகக் காத்திருக்கிறேன் மாயா.

என் வாசல் கதவைத் திறந்து

நீ உள்நுழைகையில்

எதைக் கொடுத்து

உன்னை வரவேற்பது?

பூங்கொத்து உன்னை வரவேற்கப் போதுமா?

புத்தாடை

புத்தகம்

பேனா

புத்தர் சிலை

அல்லது

ஒரு கோப்பைத் தேநீர்

எதைத் தர?

நீயும் நானும்

ஆதிப் பழைய ஆன்மாக்கள்.

என் பழைய ஆன்மாவைத்தானே

நான் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

எனது காத்திருப்பின் பேருவகையை

பூங்கொத்தின் மலர்கள் உணர்த்தி விடுமா?

ஆவி பறக்கும் தேநீரின் மென்சுவை கடத்திவிடுமா?

அல்லது வேறு பொருட்கள் சொல்லிவிடுமா?

அன்றொரு நாள் நீ கேட்டது போல்

இருகரம் நீட்டி,

 

உலகத்தை ஒரு போர்வையாக்கி

என் உடலைப் போர்த்திக் கொள்வது போல்

அள்ளியெடுத்து, இறுக்கி

உன்னை அணைத்துக் கொள்ள வேண்டும்.

ஆம்.

என் அணைப்பின் வழியாக

என்னையே பரிசுப் பொருளாய் உனக்களித்து

உன்னை வரவேற்க விரும்புகிறேன்.

மிக நீண்ண்ண்ண்ட அந்த அணைப்பின்வழியாக

உன்னைச் சந்தித்த

அக்கணத்தை அப்படியே உறைய வைக்க விரும்புகிறேன்.

மேலும்,

உன் கண்களைப் பார்த்தபடி

உன்னை முத்தமிடவும் விரும்புகிறேன்.

என் முத்தத்தின் வழியாக

உனக்குள் ஊடுருவி

நான் நீயாகவும்

நீ நானாகவும்

நம் ஆன்மாவை இடம் மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.

ரோமங்கள் அடர்ந்த உன் மார்பின்மீது

முகம் புதைத்தபடி

இருண்ட என் இரவை

விடியலின் ஒளிக்கீற்றுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.

நமது சந்திப்பின் தேவ கணங்களை

இப்படியாகச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன் மாயா.

வனக்கிளியே, மீண்டும் வராதே...

- மனுஷி

வனக்கிளியே பாடலைக் கேட்ட தருணத்திலிருந்து

நாய்க்குட்டியைப் போல 

எனைப் பின்தொட.ர்ந்தபடியே இருக்கிறது அது.. 

காலையில் நான் எழுவதற்கு முன்பே

அது விழித்துக் கொள்கிறது. 

இரவு விளக்கை அணைத்த பிறகு

எனக்குத் தாலாட்டாகிறது.

என் அறைக்குள் அமர்ந்து 

இளையராஜா பாடிக் கொண்டே இருக்கிறார்.

அந்தக் குரல் உன்னை நினைவூட்டுகிறது. 

பாடல் முடிந்தபிறகும்

அந்தக் குரல் என்னைவிட்டு வெளியேற மறுக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு 

நீ என் அருகில் அமர்ந்திருந்தாய். 

அப்போது 

நமக்கிடையில் மௌனித்துக் கிடந்த மாலைப்பொழுதை

பாடலின் இசைக்குறிப்புகள் மெல்ல நினைவூட்டுகிறது

மூடிவைத்த கடிதத்தின் மடிப்புகளுக்குள் இருந்து 

யாரும் எதிர்பாராத நேரத்தில்

உலர்ந்த பூவொன்று

தன் பழைய வாசனையை மீட்டெடுப்பதைப் போல.

உன்னை மறந்துவிட்டதாக 

நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். 

நீ இல்லாத வாழ்க்கைக்கு மெல்லப் பழகிவிட்டதாக

என்னையே நம்ப வைத்திருக்கிறேன்.

ஆனால்,

நீ என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாளின் 

வானம் எப்படி இருந்தது?

இப்போது நினைவில் இல்லை. 

நாம் கடைசியாகப் பேசிய சொற்கள் 

நினைவில் இல்லை.

நீ சிரித்தபோது உன் கண்களில் நிரம்பித் தளும்பிய

மகிழ்ச்சியை

இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.

நினைவுகளுக்கு 

எதைப் பாதுகாக்க வேண்டும் என்று 

 தெரிந்திருக்கிறது.

எதை மறந்துவிட வேண்டும் என்பதுதான் 

தெரிவதில்லை.

ஒருநாள்

சிறகுகளை விரித்தபடி 

உனக்கான வானத்தைத் தேடிப் பறக்க எத்தனித்தபோது

உன்னைத் தடுக்கவில்லை நான். 

காதல் என்பது 

ஒருவரை நம்மோடு இருத்தி வைப்பது மட்டுமல்ல

என்று எனக்குத் தெரியும். 

நீ பறந்து சென்ற திசையை 

இத்தனை காலமும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். 

இசை என்பது

முடிந்து போன வாழ்க்கையின்

மிகச்சிறிய சாட்சியாக இருக்கிறது. 

நீ விட்டுச் சென்ற வாழ்க்கையை

இந்தப் பாடலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நாம் சினேகித்த காலத்தில் 

நமக்குப் பிடித்த மழை, 

நாம் சேர்ந்து நடந்த சாலைகள், 

நாம் பேசித் தீராத தேநீர்க் கதைகள், 

வீடு திரும்பிய பிறகும் முடியாமல் தொடர்ந்த உரையாடல்கள் 

எல்லாவற்றையும் 

இந்தப் பாடல் ஒவ்வொன்றாய்த் திறக்கிறது.

நீயும் நானும் பிரிந்துபோனது

பனிக்காலத்தின் தொடக்கத்தில்தான்.

எத்தனை பருவங்களைக் கடந்துவிட்டேன்.

மரங்கள் இலைகளை உதிர்த்து

புதிய இலைகளை அணிந்துகொண்டன. 

வெயில், புயல், மழை, பனி – எல்லாமும்

வந்து சென்றன. 

பிரிவின் வெம்மையிலிருந்து நான்

இன்னும் வெளியேறவில்லை. 

நம்பிக்கை தகர்ந்துபோன  

எந்தக் காதலும் திரும்பி வருவதில்லை.

அவை ஒரு பழைய பாடலின் குரலாகவும், 

நள்ளிரவில் திடீரென விழித்துக் கொள்ளும் 

ஒரு நினைவாகவும், 

யாரிடமும் பகிரமுடியாத  பெருமூச்சாகவும் 

தங்கிவிடுகின்றது. 

இப்போது 

இந்தப் பாடல் முடிந்துவிட்டது.

அறை அமைதியாக இருக்கிறது. 

கடிகாரம் வழக்கம்போல ஓடுகிறது. 

அண்டைவீட்டார் 

இரவின் மீது கதவைத் தாழிட்டுச் சாத்துகிறார்கள்.


எல்லாமே இயல்பாக இருக்கின்றன.

என்னைத் தவிர.

எனக்குள் இன்னும் இந்தப் பாடல் முடியவில்லை. 

வனக்கிளியே, 

இனி என் நினைவுகளுக்குள் நீ வரவேண்டாம்.

மீண்டும் ஒருமுறை உன்னை இழக்க என்னால் முடியாது.

 

 


எந்த 
இருள் அவளை ஒளித்து வைத்திருக்கிறது?

- மனுஷி

ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய்

பதினோரு  நாட்களாகின்றன.

தெருவில் பள்ளிப் பேருந்து

வழக்கம்போல வீட்டைக் கடந்து செல்கிறது.

போர்கள் தொடங்கிய தேதியை

வரலாறுப் பதிவு செய்கிறது.

சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான நாளை

பதிவு செய்கிறது.

ஏழு வயது சிறுமியைத் தேடும் நகரம்

பதினோரு நாட்களைக் கடந்து கொண்டிருக்கிறது.

காணாமல் போன சிறுமியின் நாட்களை

வரலாற்றின் பக்கங்களில் என்னவென்று எழுதுவது?

பதினோரு நாட்களாகச் சிறுமியின் அம்மா

கதவைத் திறக்கிறாள்.

காற்றும் வெளிச்சமும் இருளும்

உள்ளே வருகிறது

போகிறது.

தெருவின் மரங்கள்

இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கின்றன.

பதினோரு நாட்களாக

வீடு உறக்கமற்றுக் கிடக்கிறது.

இருட்டின்மீது பயம் கொண்ட சிறுமியின் படுக்கையருகே

மின்விளக்கை ஏற்றி வைப்பாள் அவளது தாய்.

இந்தப் பதினோரு இரவுகளுக்கு

எந்த விளக்கை ஏற்றிவைப்பது?

எந்தத் திசையில் வெளிச்சத்தை அனுப்புவது?

பதினோரு நாட்களாக

அவளது அம்மா

எந்தக் கடவுளிடம் வேண்டுதலைச் செய்து கொண்டிருப்பாள்?

வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி

எந்தக் கடவுளிடம் சிறுமி முறையிடுவாள்?

அவளுடைய புத்தகத்தில்

நாளைக்கான வீட்டுப்பாடம் இருக்கிறது.

அவளுடைய  பென்சில்

முனைமழுங்கிக் கிடக்கிறது.

அவள் கடைசியாக வரைந்த பூவுக்கு 

இன்னும்  வண்ணம் தீட்டவில்லை.

ஏழு வயது என்பது உலகத்தின் வரைபடத்தில்

தனது தெருவைக்கூட முழுமையாக அறிந்திராத வயது.

தனது பெயரை அழகாக எழுதக்

கற்றுக் கொண்டிருக்கும் வயது.

ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தால்

அதைப் பின்தொடர்ந்து ஓடிவிடும் வயது.

தொலைந்துபோனால் யாராவது கையைப் பிடித்து

வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள் என்று

நம்பிக் கொண்டிருக்கும் வயது.

அந்த நம்பிக்கையை

எந்த இருள் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது?

எந்தச் சாலை

அவளது சின்னஞ்சிறு காலடிகளை விழுங்கிவிட்டது?

எந்தக் கதவு அவள் தட்டும் ஓசைக்காக

இன்னும் காத்திருக்கிறது?

இந்த நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும்

ஒரு குழந்தையின் சிரிப்பு இருக்கிறது.

அந்தச் சிரிப்புக்குப் பின்னால் பத்திரமாகத்

திரும்பிவர வேண்டும் எனும் பெற்றோரின் பிரார்த்தனை இருக்கிறது.

குழந்தைகள் வெளியே சென்று திரும்புவதற்காக

வீடுகள் கதவுகளைத் திறந்து வைக்கின்றன.

ஒரு குழந்தை திரும்பி வராதபோது

வீட்டின் கதவு அசைவற்று நின்றுவிடுகிறது.  

வீட்டின் காலமும்தான்.

காணாமல் போன சிறுமிக்காகக் காத்திருக்கும் வீட்டில்

பதினோரு நாட்கள் என்பது முடிவற்ற ஒரு கேள்வி.

அவள் எங்கே என்பதை

எந்தச் சுவர்களிடம் கேட்பது?

அவள் பார்த்த கடைசி வானம் எதுவாக இருக்கும்?

இந்தப் பதினோரு நாட்களில்

அவளுடைய நோட்டுப் புத்தகத்தில்

ஒரு பக்கம் காலியாக இருக்கிறது.

அவள் வரைய வேண்டிய சூரியனை யார் வரைவது?

வீட்டின் கதவு திறக்கும்போது

காற்றுக்குப் பதிலாக

காணாமல் போன சிறுமி வர வேண்டும்.

பென்சிலின் முனை முடிவதற்குள்

அவள் இன்னொரு பூவை வரைய வேண்டும்.

காலியான பக்கத்தில் சூரியன் கொஞ்சம் கோணலாகவும்

வீடு கொஞ்சம் சாய்வாகவும்

மனிதர்கள்

குச்சிக் குச்சியாகவும் இருக்கட்டும்.

அவளது கரங்களால் வரையப்படும் உலகத்தில்

எந்தச் சிறுமியும்

காணாமல் போகாமல் இருக்கட்டும்.

திங்கள், 19 அக்டோபர், 2026

சொர்க்கத்தின் சாயல் - மணப்பாடு கடற்கரை - மனுஷி


சொர்க்கத்தின் சாயல் - மணப்பாடு கடற்கரை



சில பயணங்களைப் பற்றி எழுதுவது என்பது அந்தப் பயணத்தைப் பதிவு செய்வதல்ல. ஓர் உணர்வை வார்த்தைகளில் அடைத்து வைப்பதற்கான முயற்சியே. மணப்பாடு கடற்கரைப் பயணம் அப்படிப்பட்ட உணர்வின் குவியல்தான்.

திருச்செந்தூரில் செந்தில்வேல் ஆண்டவரைச் சந்தித்த பிறகு அடுத்தநாள் ஆட்டோவில் மணப்பாடு கடற்கரைக்குக் கிளம்பினேன். 18 கி.மீ பயணம். மணப்பாடு செல்லும் சாலைகள் இருபுறமும் பெரும்பாலும் பனைமரங்களும் சில இடங்களில் தென்னைமரங்களும் அணிவகுத்து நின்றன. ரம்மியமான சாலையில் வேடிக்கை பார்த்தபடி சென்றேன். போகும் வழியில் குலசேகரப்பட்டினம் கோயிலைப் பார்த்துவிடுங்கள் என்று ஆட்டோ அண்ணா சொன்னதால் அங்கு சென்றேன்.


பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கடைகளைக் கடந்து ஒரு எலுமிச்சை மாலை வாங்கிக் கொண்டு முத்தாரம்மனைப் பார்க்கச் சென்றேன். மக்கள் வரிசை நீண்ண்ண்ண்ண்ண்டிருந்தது. இந்தக் கோவிலின் தசரா திருவிழாவைப் பற்றிப் படித்திருக்கிறேன். சில புகைப்பட நண்பர்கள் வழியாக வண்ணமயமான முகப்பூச்சுகளைக் கொண்ட சாமி வேடங்களைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். பக்தர்களின் நேர்த்திக்கடனாக இப்படி சாமி வேடமணிந்து செல்வார்கள் என்று சொன்னார்கள்.

திருச்செந்தூரில் வரிசையில் நின்று முருகனைப் பார்த்தது போல இங்கே வரிசையில் நின்று முத்தாரம்மனைப் பார்ப்பதற்கு அவ்வளவு நேரம் என்னிடம் இல்லை. அதனால் நூறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் வாங்கி இருபது நிமிடத்தில் அம்மனைப் பார்த்துவிட்டு, கருவறையின் வெளிப்புறம் இருந்த பெரிய அரசமரத்தின் அருகில் ஐந்து நிமிடம் அமர்ந்துவிட்டு மணப்பாடு கடற்கரை நோக்கிச் சென்றேன்.

அங்கிருந்து உடன்குடி அனல்மின் நிலையத்தைக் கடந்து ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இடது புறத்தில் கடலுக்குள் நீண்ட பாலமும் ராட்சத உயர் கோபுரங்களும் ஆச்சரியத்தைத் தந்தது. எப்போதோ செய்தியில் இந்த அனல்மின் நிலையம் குறித்துப் படித்திருக்கிறேன். ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பெரும் போராட்டத்தின் சாட்சியமாக இருக்கிறது. இந்த உடன்குடி அனல்மின் நிலையம் மனதுக்குள் பல கேள்விகளை எழுப்ப ஆட்டோ வேகமாகக் கடந்து சென்றது.


மணப்பாடு கிராமத்திற்குள் ஆட்டோ நுழையவும் அங்கங்கே சில திருமண பேனர்கள். தூரத்தில் ’தூதுவளை இலை அரைச்சு…’ பாடல் காற்றில் மிதந்து வந்தது. இரண்டு தெரு தாண்டியதும், ’உனக்கென பிறந்தவ றெக்கை கட்டி பறந்தவ இவ தான்…’ பாடல் இன்னொரு வீட்டில் ஒலித்தது. பாடல்கள் ஒலித்த அந்த வீடுகளின் முகப்பில் நான் கண்ட காட்சிகள் பால்யகாலத்தில் எனது கிராமத்தில் திருமண வீடுகளில் பார்த்த காட்சிகளை அச்சுபிசமால் நினைவூட்டின. இளையராஜா, ஏஆர்ரகுமான் பாடல்கள் தாண்டி, அனிருத், சாய் அபயங்கர் பாடல்கள் என ரீல்ஸ்கள் கலைகட்டிக் கொண்டிருக்க, தொண்ணூறுகளின் பாடல்கள் இன்னமும் கிராமப்புறத் திருமண வீடுகளில் காற்றில் அசைந்தாடுவது மனதுக்கு நெருக்கமாக இருந்தது.

பாடல்களைத் தாண்டி வளைவு நெளிவான மணல் மேட்டில் ஆட்டோ போய்க் கொண்டிருக்க, இடதுபுறம் மீன்பிடி படகுகள் கரையை முகாமிட்டிருக்கும் அலையற்ற கடல். நேர் எதிரே எழில்மிகு சிறு தேவாலயம் மேகத்தைத் தொட்டு விடும் எத்தனிப்புடன் செம்மாந்து நின்றிருந்தது. ஆலயத்திற்குள் நடந்து செல்லும்போது, அங்கிருந்த கடைகளில் இருந்து வறுத்த மீனின் வாசம் பசியைத் தூண்டியது. ஆனாலும் கால்கள் ஆலயத்தை நோக்கிச் சென்றது.

போர்த்துகீசியர் மிஷனரியால் கட்டப்பட்ட ஆலயத்தின் இடதுபுறத்தில் அலையற்ற கடல். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் உடன்குடி அனல்மின் நிலையம் தெரிந்தது. அந்த அனல்மின் நிலையத்தில் வால் போல் நீண்டு கடலுக்குள் வளர்ந்து நின்றது பாலம். சற்று தூரத்தில் திருச்செந்தூர் கோயில் கோபுரம் தெரிந்தது. திருச்செந்தூர் கடலின் கரையிலிருந்து பார்த்த பாலம் இந்த ஆலயத்தின் அருகில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஆலயத்தினுள் பிரார்த்தனை முடித்துப் பலர் இளைப்பாறிக் கொண்டும் மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆலயத்தினுள் ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை முடிந்து காலி நாற்காலிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைந்திருந்தன. ஆலயத்தினுள் இருந்த யாரும் அந்த நாற்காலிகளில் அமரவில்லை. தரையில் அமர்ந்திருந்தனர். சில குட்டிக் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த உடலும், உடலில் ஆங்காங்கே ஆணி அடித்ததால் வழியும் இரத்தமுமாக கண்களில் சிறு உயிரைத் தேக்கி வைத்தது போல் தோற்றத்துடன் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சிலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவரது பாதத்தின் கீழ்த் தலையில் முக்காடிட்டபடி, மண்டியிட்டு இரண்டு பெண்கள் தேவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென வேண்டிக் கொண்டேன். அவர்கள் அருகில் சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்தேன். குழந்தைகளின் கீச்சுக் குரல்களை, சிரிப்பலைகளைத் தாண்டி அங்கே பேரமைதியை உணர முடிந்தது.


ஆலயப் படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது, கீ கொடுத்த பொம்மையைப் போல ஒரு கருப்புக் குட்டி வாலை ஆட்டிக்கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தது. முதலில் அதைப் பூனைக்குட்டி என்றே நினைத்தேன். உடலைக் குதித்துக் குதித்து படிக்கட்டுகளில் ஏறி அருகில் வந்த பிறகுதான் அது ஒரு நாய்க்குட்டி என்பது தெரிந்தது.

உப்புக் காற்றின் தாக்கத்தால் உடலின் சில இடங்களில் ரோமங்கள் உதிர்ந்திருந்தன. ஆனாலும், "அழகு" என்ற சொல்லே கருப்பு நிறத்தில் உருவெடுத்து, வாலாட்டியபடி என்னருகில் வந்து நின்றது போல அத்தனை வாஞ்சையும் பாசமும் அந்தக் குட்டியின் கண்களில் நிரம்பியிருந்தன.

தலையைத் தடவிக் கொடுத்ததும், எந்தத் தயக்கமும் இன்றி என் மடியில் வந்து படுத்துக்கொண்டது. எனக்குப் பின்னால் வளர்ந்த நாய்கள் நான்கு ஏற்கனவே என் கொஞ்சல்களை அனுபவித்துக் கொண்டு, விதவிதமான போஸ்களில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தன. ஆனால் இந்தக் கருப்புக் குட்டி மட்டும், அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையைப் போல என் மடியில் சுருண்டு படுத்துக்கிடந்தது.

நான் அதைத் தடவிக் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு சிறுவன், “ஹேய்!” என்று உச்சுக்கொட்டிக் கூப்பிட்டான். அவ்வளவுதான். மீண்டும் கீ கொடுத்த பொம்மையைப் போல துள்ளியோடி அவன் அருகே சென்று, சமத்துக் குழந்தையாய் அவன் முன் அமர்ந்துகொண்டது.


சிறிது தயக்கத்துடன் அந்தச் சிறுவன் குட்டியின் தலையைத் தடவிக் கொடுத்தான். அந்த ஒரு தொடுதலே போதுமானதாக இருந்தது. உடனே எழுந்து, பல நாட்களாக அறிந்த நண்பனைப் பின்தொடர்வது போல, அவன் பின்னாலேயே வாலாட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றது அந்தக் கருப்புக் குட்டி.

பின்பு ஆலயத்திலிருந்து வெளியே வந்து கோபுரத்தைப் பார்த்தேன். மத்தியான உச்சி வெயிலில் வெண்மேகங்களுக்குக் கீழே புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கோபுரம் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆலய வாசல் எதிரில் இருந்த மணல் மேட்டில் பெரிய சிலுவை ஒன்று நின்றிருந்தது. ஆலயத்தின் வாசலில் அமர்ந்து அந்தச் சிலுவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிலுவை யாருடைய கல்லறையாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். யோசனையைக் கலைத்து அங்கிருந்த ஒரு பெரியவரிடம் அந்தச் சிலுவை பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன கதையில் வரலாற்றுக் குறிப்புகள் / தரவுகள் இல்லை. ஆனால், மிகவும் பழமையான ஆலயம் இது என்றும், ஒரு கப்பல் கேப்டன் ஒருவர் புயலில் சிக்கிக் கொண்டபோது இயேசப்பாவிடம் வேண்டிக் கொண்டார். அவர் புயலிலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு அவரது கனவில் இயேசு தோன்றி, இந்த ஆலயத்தையும் சிலுவையையும் கட்டி வழிபாடு செய்யச் சொன்னார் என்றும் அவர் சொன்னார். இந்தச் சிலுவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வருவதாகவும் சொன்னார். ஆந்திராவில் ஒரு சிவன் கோவிலில் நந்தி சிலை ஒன்று ஆண்டுதோறும் வளர்ந்து வருவதாகப் படித்திருக்கிறேன். கிறித்தவ மதத்திலும் ஆண்டுதோறும் வளரும் சிலைகள் இருக்கிறது போலும்.


16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய கப்பல் மாலுமிகள் புயலில் சிக்கியபோது, உயிர்பிழைத்தால் கடற்கரையில் ஒரு சிலுவையை நிறுவவதாக வேண்டிக் கொண்டதாகவும், அவர்கள் வேண்டுதலின்படி பாதுகாப்பாகக் கரைசேர்ந்த இடம்தான் மணப்பாடு என்றும், வேண்டுதலுக்கான நேர்த்திக்கடனாகத்தான் அந்த மிகப்பெரிய சிலுவை நிறுவப்பட்டதாகவும் கூகுள் வரலாறு சொன்னது. மணப்பாடு கடற்கரையில் 1542இல் புனித சவேரியர் வந்து கிறித்தவ மதம் பரப்பும் பணியில் ஈடுபட்டார் என்றும், அவர் தங்கியிருந்த குகை ‘புனித சவேரியர் குகை’ என்று அங்கு வரும் மக்களால் தரிசிக்கப்படுவதாகவும் கூடுதல் தகவலை கூகுள் சொன்னது. மீண்டும் ஒருமுறை ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தேன். இந்தக் கதைகளின் அமைதி சாட்சியாக மௌனித்திருந்தது.

நானும் அமைதியாகச் சற்றுநேரம் அமர்ந்திருந்து சிலுவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோ அண்ணா செல்போனில் அழைத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். அரைமணி நேரம் ஆகும் அண்ணா… பசிக்கிறது என்றால் நீங்க சாப்பிடுங்க என்றேன். குலசேகரன்பட்டினத்தில் குடித்த ஜூஸ் எவ்வளவு நேரம்தான் பசி தாங்கும்.? பரவாயில்லை மா என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தார்.

பெரிய சிலுவைக்கு இடதுபுறம் சொர்க்கத்தின் சிறு துண்டொன்று பூமிக்கு வந்துவிட்டதோ என்று மாயபிம்பம் காட்டியபடி பரந்து விரிந்திருந்தது கடல் சொர்க்கம். மயில் கழுத்து நிறத்தில் பேரலைகளுடன் வானத்திலிருந்து வந்து கடற்கரையைத் தொட்டுவிட்டுச் செல்லும் முனைப்புடன் அலைகள் பொங்கி எழுந்து தரை தொட்டுத் தழுவி கடலுக்குள் சென்றது.


வெண்மணல் மேட்டிலிருந்து ஆர்ப்பரிக்கும் கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினேன். காற்று தன் முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி என்னைப் பின்னுக்குத் தள்ளியது. இறக்கைகள் இருந்தால் மெல்ல மேலெழுந்து கடலின் மேற்பரப்பில் நான் இலகுவாகப் பறந்து விடுவேன் போலும். அப்படியொரு காற்று. காற்றை எதிர்த்துப் பறக்கும் பறவை போல் சிறு மணல் மேட்டிலிருந்து கீழிறங்கிச் செல்லச் செல்ல, அருகில் தெரிந்த கடல் விளையாட்டுக் காட்டுவது போல தள்ளித் தள்ளிச் சென்றது. அந்த விளையாட்டை ரசித்தபடியே கடலை நோக்கிச் சென்றேன். அங்கே பத்து பதினைந்து பேர் கடலலையில் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அலையின் ஆக்ரோஷம் கடலில் இறங்கிக் குளிக்கும் தைரியத்தைக் கொடுக்கவில்லையோ?

உச்சிவெயிலைச் சற்றும் உணரச் செய்யாத கடலின் குளுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவித்துவமான பெருங்கடல்பரப்பு, ஆக்ரோஷமாய் வெகுண்டெழுந்து அருகில் வேகம் குறைந்து கால்களைத் தழுவிச் செல்லும் அலைகள் நிச்சயமாய் இது சொர்க்கத்தின் சாயல் கொண்ட கடல் தான் என மீண்டும் மீண்டும் உணர வைத்தது.

இதுவரை நிறைய கடல்களைப் பார்த்திருக்கிறேன். நனைந்திருக்கிறேன். மௌனித்து அமர்ந்திருக்கிறேன். கடல்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறேன். இந்த மணப்பாடு கடல் மற்ற கடல்களைப் போல் அல்ல என்று தோன்றியது. இந்தக் கடலின் அலைகளுக்குத் தனி மொழி இருக்கிறது. இரகசியம் இருக்கிறது. ஏகாந்தம் இருக்கிறது. நிறைய கதைகள் இருக்கின்றன. தனிமையை உணரச் செய்யாத சினேகம் இருக்கிறது. வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத பெருங்கவிதையாய் என் முன் விரிந்திருந்த கடலின் முன் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் இந்தக் காலவெளியைக் கடந்து விட முடியுமா என்றெல்லாம் எண்ணம் எங்கெங்கோ அலையாடிக் கொண்டிருந்தது.

அங்கே கடலின் அலைகளிடம் பாதி உடல் நனைந்த ஒரு குடும்பம் வந்து ‘ஒரு போட்டோ எடுத்துத் தர்றிங்களா’ என்று கேட்டனர். பேரதிசயத்தைச் சிறிய செல்போனில் புகைப்படமாக எடுத்துவிட முடியுமா தெரியவில்லை. ஆனால், இந்த வியாக்கியானங்களையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடல் பின்புறத்தில் தெரிய அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன். நன்றி சொல்லிவிட்டு மேடேறிச் சென்றுவிட்டனர். ஒரு காதல் ஜோடியா இளம் திருமண ஜோடியா தெரியவில்லை. அவர்களும் என்னை நெருங்கி வந்து சிஸ்டர் ஒரு போட்டோ எடுத்துத் தர்றிங்களா? என்றனர். அவர்களுக்கும் எடுத்துக் கொடுத்தேன்.  

மணி மூன்றைத் தொட்டது. அப்போது நானும் அந்தக் கடலும் மட்டுமே இருந்தோம். அவ்வப்போது மேலே பறந்து சென்ற சில காகங்கள். கால் தழுவிச் சென்ற அலைகள். பசி மறந்த ஏகாந்த உணர்வு.

மீண்டும் இந்தக் கடற்கரையில் நாள்முழுவதும் வந்தமர்வேன் என்று கடலிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த சில பெரிய கற்களை எடுத்து வந்து மொபைல் ஸ்டேண்டாக மாற்றிச் சில செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு, விடைபெற மனமின்றிக் கிளம்பினேன்.

கண்களை விட்டு அகல மறுத்த மணப்பாடு கடற்கரையின் காட்சி சொர்க்கத்தின் சிறு துண்டுதான்.

 

புகைப்படங்கள் : மனுஷி